Tuesday, April 20, 2010

ஊடகங்களின் வசூல் வேட்டை

ஊடக சுதந்திரமும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் தனிமனித உரிமையும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆரோக்கியமான சமூகத்தில் இவ்விரண்டும் சமநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். தற்கால அரசியல், பொருளாதார, நாகரிக, தொழில்நுட்ப வளர்ச்சிகளால் இந்தச் சமநிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இதே நிலைமை தொடர்வது ஜனநாயக அமைப்பைக் குலைத்துவிடக்கூடும்.

அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களிடையே மட்டும்தான் அவை அதிகச் செல்வாக்குச் செலுத்தின. கல்வியறிவு பெறாத பின்தங்கிய மக்களிடம் கருத்துகளை உருவாக்குவதில் அவற்றின் பங்கு மிகக் குறைவாகவே இருந்தது.

நுகர்பொருள்களை வாங்குவது முதல் அரசியல் முடிவு எடுப்பதுவரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அப்போதிலிருந்தே தனிமனித உரிமைக்கும் ஊடகசுதந்திரத்துக்கும் இடையேயான சமநிலை குறித்த விவாதம் உலகமெங்கும் நடந்து வந்திருக்கிறது.

இப்போது மின்னணு யுகத்துக்குள் நுழைந்திருக்கிறோம். ஊடகத்துறையில் தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது. போட்டிகள் பெருகியிருக்கின்றன. அரசியல் சார்பு ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக ஊடகங்கள் நசுக்கப்படுவதும், அதேபோன்ற காரணங்களுக்காக அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி ஊடகங்கள் எதிர்த்தாக்குதல் தொடுப்பதும் வழக்கமான நிகழ்வுகளாகியிருக்கின்றன. பரபரப்பு ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்வதற்காக உண்மை உறுதிசெய்யப்படாத செய்திகள் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் பற்றி உரக்க விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஊடகங்கள் மத்தியில் கிஸ் அண்ட் டெல் என்பது பிரசித்தம். பிரபலமான ஒருவரிடம் நெருக்கமாகப் பழகி, அவரது தவறான நடத்தை, மோசடி, ரகசியங்கள், அந்தரங்க நடவடிக்கைகள் போன்றவை பற்றிய ஆதாரங்களைச் சேகரித்து ஊடகங்களிடம் விற்றுப் பணம் பெறுவதுதான் கிஸ் அண்ட் டெல். பாலியல் ரீதியான ஆவணங்கள் என்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்.

விற்பனை அதிகரிப்பு ரேட்டிங்கில் முதலிடம் போன்றவற்றுக்காக இதுபோன்ற விடியோ, ஆடியோ, புகைப்பட ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் தருவதை உலகின் பல பத்திரிகைகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆதாரங்களை வெளியிட்டால் லாபம்.  வெளியிடாவிட்டால் அதைவிட அதிகமான லாபம் என்பதுதான் கிஸ் அண்ட் டெல் உத்தியின் சூட்சுமம். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் முதல் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி வரை கிஸ் அண்ட் டெல் வலையில் சிக்கிய பிரபலங்கள் பட்டியல் மிக நீளமானது.

இதுபோல, அப்ரூவராக மாறிய குற்றவாளிகள் என்றால் சில ஊடகங்களுக்கு பொக்கிஷம் கிடைத்த மாதிரி. ஏதோ ஒரு காரணத்தால் கூட்டாளியைக் காட்டிக்கொடுக்க முன்வந்த குற்றவாளிகளைக் கொண்டு, பரபரப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்.

முன்னாள் கூட்டாளிகளைப் பற்றியும், சதிச் செயல்கள் மற்றும் அந்தரங்கங்கள் பற்றியும் அவர்கள் கட்டுரை எழுதுவார்கள் அல்லது பேட்டியளிப்பார்கள். தேவைப்பட்டால் டேப் ஆதாரங்களைக்கூட வழங்குவார்கள்.

இதையெல்லாம் வெளியிட்டால் ஓரிரு வாரங்கள் நாடே அச்சத்துடன் கவனிக்கும் .  கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் கருத்துச் சொல்வார்கள். இந்தப் பரபரப்பில் விலைவாசி உயர்வையும், வேலையின்மையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.

அப்ரூவராக மாறியவருக்கு போதுமான புகழ் கிடைப்பதுடன், கணிசமான வருமானத்துக்கும் வழி ஏற்படும். இதுவும் கிஸ் அண்ட் டெல் வகைதான்.

பிரபலங்களை விவாகரத்து செய்தவர்களும், நட்புடன் இருந்து பிரிந்து போனவர்களும்கூட ஊடகங்களின் தேடல் பட்டியலில் உண்டு. அவர்களது முன்னாள் கணவர், மனைவி, நண்பர் பற்றிய அந்தரங்கங்களை வெளியிட்டு சர்ச்சை உருவாக்கப்படும். பின்னர் அதையொட்டிய ஊடக வியாபாரம் அமோகமாக நடக்கும்.

இதற்காக சில ஊடகங்கள் பெரும் பணம் கொடுக்கின்றன. கொடுத்த பணம் ஒன்றுக்குப் பத்தாக கண்டிப்பாக வசூலாகிவிடும். மேலை நாடுகளில் மட்டுமே இருந்த இதுபோன்ற அநாகரிகங்கள், இப்போது இந்தியாவிலும் அவ்வப்போது நடக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதுதாம் நாம் விழித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

அண்மையில் இதுபோன்ற கிஸ் அண்ட் டெல் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. பிரிட்டனின் நியூஸ் ஆஃப் வேர்ல்டு பத்திரிகையால் பாதிக்கப்பட்ட ஒருவர், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனிமனித அந்தரங்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதுபற்றி முன் அனுமதி பெறும் வகையில் சட்டம் இயற்றலாம் என்கிற அளவுக்கு விவாதம் நடந்திருக்கிறது.

அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் பணம் கொடுத்து அந்தரங்கங்களை விலைக்கு வாங்குவது குறையக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இதுபற்றிய பெரிய விவாதம் இன்னும் எழவில்லை.

கிஸ் அண்ட் டெல் உத்தி, ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பரப்புவதற்கும் உதவக்கூடியதுதான் என்றாலும், வருமானத்தைப் பெருக்குவதற்காக மட்டுமே இப்போது இது பயன்படுத்தப்படுகிறது. எந்த வகையிலும் மக்களுக்குப் பயனளிக்காத அடுத்தவரின் அந்தரங்கத்தை வெளியிடுவதும், அதைக் கொண்டு பேரம் பேசுவதும் ஊடக தர்மத்துக்கு  முற்றிலும் எதிரானது.

அதுவும் திருமண பந்தத்துக்கு மதிப்பளிக்கிற இந்தியா போன்ற நாடுகளில் அடுத்தவரின் அந்தரங்கங்களை வெளியிடுவது, மக்கள் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கும் மேலான பணியைச் செய்ய வேண்டிய ஊடகங்கள், இப்படி அந்தரங்கங்களை வெளியிட்டுச் சம்பாதிக்கும் நிலைக்குத் தாழ்ந்திருப்பது, ஜனநாயகத்துக்கே ஓர் அபாய எச்சரிக்கை.
..
..

Saturday, April 10, 2010

வலையில் சிக்கும் தலைமுறை!

ஆடுகளை வளர்த்ததற்காக ஓர் ஊழியரை,​​ அமெரிக்க நிறுவனம் அண்மையில் பணி நீக்கம் செய்தது.​ இதென்ன கொடுமை;​ ஆடு வளர்த்தது எப்படிக் குற்றமாகும் என்று எண்ணத் தோன்றும்.​ ஆனால்,​​ அந்த ஊழியர் வளர்த்தது உண்மையான ஆடுகளை அல்ல.​ அவை பொய்யானவை.​ ஆடுகள் வளர்க்கப்பட்டது அலுவலகக் கம்ப்யூட்டரில்.

விஷயம் இதுதான்.​ விடியோ கேம்களின் அடுத்தநிலை இணையத்தில் ஆடப்படும் ஆன்லைன் விளையாட்டுகள்.​ 'விர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் உண்மை போன்ற மாயைதான் இன்றைய ஆன்லைன் விளையாட்டுகளின் மையக் கரு.

விவசாயம் செய்வது,​​ ஆடு வளர்ப்பது,​​ காட்டு விலங்குகளைப் பராமரிப்பது,​​ ஹோட்டல் நடத்துவது என எல்லாமே ஆன்லைனில் சாத்தியம்.​ ஒரு மணி நேரம்,​​ இரண்டு மணி நேரம் அல்ல,​​ ஆண்டுக்கணக்கில்கூட இந்த ஆட்டங்களை ஆடிக்கொண்டே இருக்க முடியும்.

இந்த ஆட்டங்களில் மூழ்கித் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை.​ இவர்கள் ஓடி விளையாடுவதில்லை.​ உட்கார்ந்து கொண்டோ,​​ படுத்துக் கொண்டோதான் விளையாடுவார்கள்.

'பேஸ்புக்' எனப்படும் சமூக வலைத்தளத்துடன் இணைந்த 'பார்ம் வில்லா' என்ற ஆட்டம்தான் ஆன்லைனில் இப்போது மிகவும் பிரசித்தி.​ விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆட்டம்.​ இதுவும் ஆண்டுக்கணக்கில் ஆடக்கூடிய ஆட்டம்தான்.​ விதை விற்பனை,​​ மகசூல் அறுவடை,​​ பால் உற்பத்தி,​​ தோட்டப் பராமரிப்பு என உண்மையான விவசாயி செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் இந்த ஆட்டத்தில் உண்டு.​ அடிப்படையில் இதெல்லாம் இலவசம்தான் என்றாலும்,​​ நம்முடைய தகவல்களை வணிகரீதியாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும்,​​ விளம்பரங்கள் ​ வழியாகவும் இணையதளத்துக்கு வருவாய் கிடைக்கிறது.

தற்போதைய மதிப்பீட்டின்படி,​​ கோடிக்கணக்கானோர் பார்ம் வில்லாவில் விவசாயம் செய்வதாக பேஸ்புக் சொல்கிறது.​ அலுவலக வேலை நேரத்தில் இப்படி விவசாயம் செய்ததால்தான் மேற்சொன்ன நபருக்கு வேலை போனது.

இதுபோன்ற வேறொரு ஆன்லைன் ஆட்டத்தில் மூழ்கி,​​ குழந்தைக்குப் பால் கொடுக்காமல் சாகடித்த தம்பதியைப் பற்றி அண்மையில் செய்தி வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் பிரியஸ் ஆன்லைன் என்ற தளத்தில் மாயக் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி வளர்த்திருக்கின்றனர்.​ நாள்தோறும் பல மணி நேரம் இண்டர்நெட் மையங்களில் நேரத்தைப் போக்கியிருக்கிறார்கள்.​

அந்த நேரத்தில் 3 மாதமே ஆன அவர்களது சொந்தக் குழந்தை உணவில்லாமல் இறந்து போயிருக்கிறது.​ இது அசாதாரண சம்பவம்தான்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் ஆட்டங்கள் மக்களை எந்த அளவுக்கு மாயையில் மூழ்கச் செய்யக்கூடிய வலுக்கொண்டவை என்பதைப் புரிந்து கொள்ள இது நல்ல உதாரணம்.

எல்லா ஆன்லைன் ஆட்டங்களுமே மோசமானவை அல்ல.​ கல்விக்காகவும்,​​ மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும் நேரங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு சில மணித்துளிகளிலேயே முடிந்துவிடக்கூடிய சில ஆன்லைன் ஆட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.​ அறிவியல்,​​ கணிதம்,​​ சமூகம் தொடர்பான அறிவை வளர்ப்பதற்குப் பயன்படும் இணைய விளையாட்டுகளும் நிறையவே இருக்கின்றன.

ஆனால்,​​ அவையெல்லாம் மக்களைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.​ நாள் கணக்கில்,​​ ஆண்டுக்கணக்கில் அடிமைப்படுத்தக்கூடிய விளையாட்டுகளுக்கும் பாலியல் ரீதியான,​​ வன்முறையைத் தூண்டும் சில விளையாட்டுகளுக்கும்தான் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது.​ இணையத்தின் மற்ற உள்ளடக்கங்களைப்போல மொழி ரீதியான தடையும் ஆன்லைன் ஆட்டங்களுக்கு இல்லை என்பதால்,​​ மிகவேகமாகவே இவை பிரபலமடைந்து விடுகின்றன.

குழந்தைகள்,​​ இளைஞர்கள்,​​ முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.​ நவீன விளையாட்டுகளில் உலகமெங்கும் இருப்பவர்கள் இணைந்து ஆட முடிகிறது.​ கூடவே அரட்டையடிக்கவும் முடியும்.​ வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.​ வெற்றி பெற்றவற்றைப் பிறருக்குப் பரிசளிக்கவும்(..?!)​ வசதியிருக்கிறது.​ இவையெல்லாம் மக்களைக் கவர்வதற்கான உத்திகள்.

ஆன்லைன் விளையாட்டுகளை ஆடும் அனைவரும் அவற்றுக்குள் மனதை முடக்கி அடிமையாகப் போய்விடுகின்றனர் எனக் கூற முடியாது.​ ஆனால்,​​ பெரும்பாலான ஆட்டங்களில் அடிமைப்படுத்தும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கிறது.​ அது ஒரு போதை மாதிரி.

ஆட்டத்தைத் தொடங்கிய பெரும்பாலானோர் அவற்றை விட்டுவிட முடியாமல் திணறுகின்றனர்.​ இந்த ஆட்டங்களால்,​​ நேரம் விரையமாகிறது என்பதுடன்,​​ மணிக் கணக்கில் அசைவற்று ஒரே இடத்தில் இருப்பதால் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் வேறு எத்தனையோ மோசமான அம்சங்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.​ கவனத்தைக் கவர்ந்து,​​ இழுத்துச் செல்லக்கூடியவை இங்கு அதிகம்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் விளையாட்டுகள்தான் மக்களின் அடிப்படை மனநிலையையே மாற்றக்கூடிய சக்தி கொண்டவையாக இருக்கின்றன.​ நல்லவை என்கிற போர்வையில் வருவதால் மற்றவற்றுக்கு ஈடான ஆபத்து இதிலும் இருக்கிறது.

இளம் வயதிலேயே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள்,​​ பொறுப்பான விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்களாகவும் நடைமுறையில் நட்பை உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாகவும் மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.​ ​

இந்த ஆபத்தை உணர்ந்துதான்,​​ பெரும்பாலான பள்ளிகள்,​​ கல்லூரிகளில் இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.​ பணிகளில் சுணக்கம் ஏற்படுவதால் பல நிறுவனங்களும் இவற்றைத் தடை செய்திருக்கின்றன.​ ஆனாலும்,​​ இவைகளால் மட்டுமே ஆபத்தை முழுமையாகப் போக்கிவிட முடியாது.

இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவது குறித்தும்,​​ இணையத்தில் செய்ய வேண்டிய பணிகளை உரிய முக்கியத்துவத்துடன் முடிப்பது குறித்தும் கல்வி நிறுவனங்களிலும்,​​ ஊழியர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.​ அரசே இதைச் செய்தால் இன்னும் நல்லது.​ ஏனெனில் இது தனிநபரின் பிரச்னையல்ல,​​ தலைமுறையின் பிரச்னை.
..
.