Thursday, April 29, 2010

என்ன ஆனார் புலிகளின் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்?

எழுந்திருக்கும் சந்தேகம் பெரும் விவகாரமானது என்பதால் கொஞ்சம் தயக்கத்துடனும் அச்சத்துடனுமே எழுதவேண்டியிருக்கிறது.

தற்கால அரசியல்வாதிகளில் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய தகுதி ஒருசிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1960-களிலேயே இந்தியாவைக் கலக்கியவர். அவரது தலைமையேற்கும் பண்பு பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பெருமை கொண்டது.மாணவர் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் தலைவராக இருந்து புரட்சி செய்திருக்கிறார்.

இந்திரா காந்தியை நடுநடுங்கச் செய்தவர். கோக கோலா மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்களை நாட்டைவிட்டு வெளியேறச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளையும் பர்மிய போராளிகளையும் வெளிப்படையாக ஆதரித்தவர்.

அப்படிப்பட்ட அரசியல்வாதி, அதுவும் கிறித்துவர், தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜகவுடன் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார். வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

"இந்தியாவின் எதிரி சீனா" எனத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டிய இரண்டாவது தலைவர் அவர். என்ன காரணத்தாலோ, அவர் மீது "சவப்பெட்டி ஊழல்" சுமத்தப்பட்டது. தெஹல்கா என்கிற "புலனாய்வுப்" பத்திரிகை இவர் மீது ஆயுதபேர ஊழலைச் சுமத்தியது. இந்திய மக்களும் அதை நம்பினார்கள். சவப்பெட்டியிலுமா ஊழல் என்கிற கவர்ச்சிகரமான கேள்வி மக்களைக் கிறங்கடித்தது. மக்களவையில் அவர் பேச எழுந்திருக்கும்போதெல்லாம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவகையான அரசியல்வாதிகளையும் கையாளத் தெரிந்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு தனக்கு எதிரான காங்கிரஸின் சதியை முறியடிக்க முடியவில்லை. அவர் பதவியில் இருக்கும்வரை ஒரு புழுவைப் போலத்தான் நடத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். அந்தத் துருப்புச் சீட்டை அவர் இன்று வரைக்கும் பயன்படுத்தவில்லை என்பதும் ஆச்சர்யம்தான்.

ஒருவேளை அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால், இலங்கையிலும், பர்மாவிலும் நிலைமை வேறு மாதிரியாகியிருக்கும். சீனாவும் வாலைச் சுருட்டிக் கொண்டிருக்கும்.


கடந்த தேர்தலின்போது, உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். சுயேச்சையாக நின்று தோற்றுப் போனார். அதன்பிறகு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் செய்திகள் வந்தன.

எல்லா அரசியல் கட்சிகளாலும் ஒருகாலத்தில் விரும்பப்பட்ட ஒரு மாபெரும் போராளி இப்படி முகவரி இல்லாமல் ஆக்கப்பட்டதற்கு பின்னணியில் சர்வதேசச் சதி ஏதும் இல்லாமலா இருக்கும்?
,,
..

Tuesday, April 27, 2010

அழகிரியும் "கார்ப்பரேட் மக்களாட்சியும்"

இந்தியாவின் மக்களாட்சி கொஞ்சம் கார்ப்பரேட்தனமானது. நாடாளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்ல வேண்டியவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், பிரதமரோ மற்ற அமைச்சர்களோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் "நியமிக்கப்"படுகிறார்கள். தேர்தலில் அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சி, தனக்குப் பிடித்தமானவர்களை இந்தப் பதவிகளில் அமர்த்திக் கொள்ள முடியும். தற்போதைய நிலவரப்படி, பிரதமரும் இன்ன பிற முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களும் இப்படிப் புறவாசல் வழியாக வந்தவர்கள்தான். இதுபோக, நாட்டின் தலைவரும், துணைத் தலைவரும்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் இது எந்த வகையான மக்களாட்சி? முழுமையான நாடாளுமன்ற நடைமுறையுமல்ல, முழுமையான அதிபராட்சி நடைமுறையுமல்ல.

பெரும்பாலான நாடுகள், இதுபோன்ற காலாவதியான நடைமுறைகளை மாற்றத் துணிந்திருக்கின்றன. சில நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இன்னும் எத்தனை காலம்தான் நியமிக்கப்படுவோரைத் தலைவர்களாகக் கொண்டு நம் நாடு இயங்க வேண்டுமோ தெரியவில்லை?ஆனாலும் குடியரசாகி இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவிலான ஜனநாயக நெருக்கடி ஏற்படவில்லை என்பதால், இந்த நடைமுறையை வேறு வழியில்லாமல் நாம் புகழ வேண்டியிருக்கிறது.

நமது மக்களாட்சி நடைமுறையில் உள்ள இன்னொரு மிகப்பெரும் பலவீனம் அழகிரி விவகாரத்தில் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்களாட்சி என்பதன் அடிப்படையே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, காபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சராக இருப்பதற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

அழகிரி எப்படி வெற்றி பெற்றார், அவர் எப்படிப்பட்டவர், அவரது பின்புலம் என்ன என்பன போன்ற ஆராய்ச்சியெல்லாம் இங்கு தேவையில்லை. ஆங்கில அறிவு குறைவு என்கிற ஒரே காரணத்துக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமைச்சர் பதவிக்குத் தகுதியானவரில்லை என்று ஏளனம் செய்வது எந்த விதத்தில் நியாயமாக முடியும்?

வட மாநிலங்களில் இருந்து அமைச்சர்களாக்கப்பட்ட எத்தனையோ பேர் ஆங்கில வாசனையே இல்லாமல், "திறம்பட" செயல்பட முடிகிறது என்றால், அழகிரியால் செயல்பட முடியாதா? அல்லது அழகிரிக்கு நிர்வாகத் திறன் இல்லையென்று கூறிவிட முடியுமா? அவருடைய ஒரே பிரச்னை ஆங்கிலம்தான் என்றால், அதைச் சரிப்படுத்த முனையாமல் தொடர்ந்து ஏளனம் செய்வதிலேயே வடநாட்டுக்காரர்கள் குறியாக இருப்பதன் மர்மம் என்ன? நாம் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் தமிழ்நாட்டுக்காரர்களும் அவர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதுவது அப்பாவித்தனம் இல்லையா?

கார்ப்பரேட் எண்ணம் கொண்டவர்கள் அமைச்சர்களாக இருப்பதால்தான் நாட்டில் நக்சலைட் எண்ணம் பரவத் தொடங்கியிருக்கிறது. தற்காலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர், நாட்டை ஒரு கம்பெனி மாதிரி நடத்துவதால்தான், புள்ளிவிவரப்படி நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையிலும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். இந்தக் "கார்ப்பரேட் மக்களாட்சி" கலாசாரம் முடிவுக்கு வர வேண்டுமானால், அமைச்சராவதற்கு, ஆங்கிலம் அவசியம் என்கிற சதியை முறியடிக்க வேண்டும். இது அழகிரிக்கு வக்காலத்து வாங்கும் முயற்சியல்ல. அடிப்படை மாற்றத்துக்கான முயற்சி.

இதில் விரிவாக விவாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

..
.