Monday, March 05, 2012

தமிழினத்தின் துரதிருஷ்டம்!

தமிழர்கள் துரதிருஷ்டசாலிகள். இல்லையென்றால், ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் நேரத்தில், அந்நாட்டு ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய பிரிட்டன் பத்திரிகையாளர் மேரி கால்வின் நம்மிடையே இல்லாமல் போவாரா?

சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள், அப்பாவிகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது எப்படி என்பதையெல்லாம் தனது செய்திகளில் விவரித்தவர்தான் மேரி.

இறுதிக் கட்டப் போரின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் உள்ளிட்டோரை இலங்கை ராணுவத்தினர் ஈவிரக்கமில்லாமல் கொன்றனர் என்பதை தனது போர்ச் செய்தியில் அவர் பதிவு செய்திருக்கிறார்.

"துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்று கூறியபோதே, ராணுவத்திடம் சரணடைய விடுதலைப் புலிகள் தயாராகிவிட்டிருந்தனர் என்பது உலகறிந்த விஷயமாகியிருந்தது. அந்தப் பின்னணியில் புலிகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும், ராஜபட்ச அரசுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் மேரி ஈடுபட்டிருந்தார்.

"சரணடைகிறோம்' என்று நடேசனோ, புலிகளின் பிற தலைவர்களோ வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், ஆயுதங்களைக் போட்டுவிட்டு சரணடைவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது என்பதற்கு நேரடியான சாட்சியாக இருந்தவர் மேரி. நடேசன் உள்ளிட்டோரிடம் சாடிலைட் போனில் பேசுவது, குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களைப் பெறுவது என விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்தார்.

மேற்கத்திய ஊடகங்களின் வழக்கமான "நடுநிலை' பத்திரிகையாளராக இலங்கைக்கு வந்தவர்தான் மேரி. மேலை நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்கும் "மனித உரிமை' சாயம் பூசிய செய்திகளைத் திரட்டுவதுதான் அவரது முதல்நிலைப் பணியாக இருந்தது. ஆனால், விடுதலைப் புலிகள் என்பவர்கள், பயங்கரவாதிகள் என்கிற பலரது எண்ணத்தை மேரி தந்த செய்திகள் மாற்றின. புலிகளை "விடுதலைப் போராட்ட வீரர்கள்' என்று துணிச்சலாகக் குறிப்பிட்டார். ஏதோ ஒரு வகையில், தமிழினத்துக்கு அவர் பேருதவி புரிந்திருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. மறந்துவிடவும் கூடாது!

மேரி கால்வின் இன்றைக்கு உயிருடன் இல்லாவிட்டாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைப் போர், ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், அகதிகள் நடத்தப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து அவர் விட்டுச் சென்றிருக்கும் ஆவணங்கள் நமக்குப் பயன்படுகின்றன.

இன்றைக்கு ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா முன்னெடுப்பதற்கு மேரியின் "மனித உரிமை' செய்திகளும் ஒரு காரணம். ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மேலை நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான நிலை எடுத்திருப்பதும் மேரி கால்வின் போன்றவர்களால்தான்.

அவர் இன்று இல்லை என்பது தமிழர்களின் துரதிருஷ்டமே. ஆனால், அதைவிட மிகப்பெரிய துரதிருஷ்டம் என்ன தெரியுமா? தமிழர்களை அங்கமாகக் கொண்ட இந்தியா, தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாததுதான். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், அவர்களது சர்வதேச ராஜதந்திரத்தின் ஒரு பகுதிதான். அவர்களைப் பொருத்தவரை, லிபியா, ஈரான், இராக், சிரியா போன்ற நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தைப் போன்றதுதான் இதுவும். தமிழர்கள் மீது அவர்களுக்கு நேரடியான கரிசனம் ஏதும் இல்லை என்பதும் உண்மைதான். என்றாலும், இத்தகைய தீர்மானத்தால், இலங்கை இனப்படுகொலையில் உறவுகளை இழந்த தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.

இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றால், அதற்காக யாரைக் குறை சொல்வது? அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியையா அல்லது அதில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகளையா? இல்லை, அரசில் செல்வாக்குடன் வீற்றிருக்கும் அரசியல்வாதிகளையா?

47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் குழுவில் இந்தியாவுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ இருப்பதைத்தான் இந்தியா விரும்புகிறது என்பதை பிரதமர் உள்ளிட்டோரின் அசெüகரியமான மெüனம் நமக்கு உணர்த்துகிறது.

சிரியா உள்பட பல நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின்போது எடுக்கப்பட்ட நிலையைத்தான் இப்போதும் எடுக்கிறோம் என்று "சாக்கு' சொல்லப்படலாம். தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தும் அதை எட்டி உதைக்கப் போகும் மத்திய அரசின் இத்தகைய முடிவை "தமிழர்களின் துரதிருஷ்டம்' என்று கூறாமல் வேறென்ன சொல்ல?

இந்த இரண்டையும் விடப் பெரிய துரதிருஷ்டமும் தமிழர்களை இப்போது பீடித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்வதிலும், ஆதரவு திரட்டுவதிலும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதுதான் தாங்க முடியாத வேதனை.

படுகொலைகளையும் சித்திரவதைகளையும் நேரில் பார்த்தறிந்தவர்கள், இந்த விஷயத்தில் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஒருவேளை இலங்கையின் ஆதரவு திரட்டும் முயற்சிகளையும் மீறி, மனித உரிமைக் குழுவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும்கூட, அதனால், சிங்களர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிடுமோ, இப்போதைய அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் இழிநிலைதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவாக நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டால், மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும், அது உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசை நேரடியாக எதிர்த்தால், அது தமிழர்களுக்கு எதிராக இன்னொரு வன்முறைக்கு வழிவகுக்கும் என்று மற்றவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலைக்கு யாரைக் குறைசொல்ல?

எல்லோருக்கும் துரதிருஷ்டம் வரும். தமிழினத்துக்கு மட்டும் அது தொடர்கதையாகத் தொடர்கிறதே, என் செய்ய?
 
.
 
..

Monday, February 27, 2012

போர் என்றால் அமைதி!

ஈரான் என்றால் மத அடிப்படைவாதிகளின் நாடு என்கிற கருத்து உலகமெங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது. ரௌடி நாடு என்று மேல்நாட்டுப் பத்திரிகைகள் வெளிப்படையாகவே குறிப்பிடுகின்றன.

 இதற்கு ஏற்றாற்போல இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து அகற்றிவிடுவோம், ஹோமுஸ் நீரிணையை அடைத்து உலகத்துக்கே எண்ணெய் கிடைக்கவிடாமல் செய்துவிடுவோம் என்று ஈரான் தடாலடியாகப் பேசுகிறது. ஆனால் உண்மையில், இந்த இரண்டு செயல்களையும் ஈரானால் செய்யவே முடியாது.

 ஹோமுஸ் நீரிணையைத் தடுத்தால், அதைத் தகர்ப்பதற்கு அமெரிக்கக் கடற்படைக்கு சில மணி நேரங்கள் போதும். இஸ்ரேல் மீது நேரடியாகத் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால், ஈரான்தான் வரைபடத்திலிருந்து காணாமல் போகும். தடாலடியாகப் பேசுவதெல்லாம் ஈரானுக்கேயுரிய வாய்ச் சவடால்தான்.

 உறுதியான மக்களாட்சி அங்கு கிடையாது. தேர்தல் எப்படி நடக்கிறது என்பதற்கு டுவிட்டர் புரட்சியே ஆதாரம். அரசியல் கட்சிகளையும் பத்திரிகைகளையும் தடை செய்வதே அகமதிநிஜாத்துக்கு பகுதி நேர வேலை என்று கிண்டல் செய்கிறார்கள். இப்படிப்பட்டவரின் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் என்ன ஆகும் என்பதுதான் உலகின் இப்போதைய கவலை.

 அணு ஆயுதம் தயாரிப்பது என்பது இப்போது பிரச்னையில்லை. அணு ஆயுதப் பரவல் தடுப்பு, பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பு பற்றி முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் எல்லா நாடுகளும் எப்போதோ வசதியாக மறந்துவிட்டன. இப்போது உலகம் விவாதித்துக் கொண்டிருக்கும் பிரச்னை, யாரெல்லாம் அணுஆயுதத்தைத் தயாரிக்கலாம், வைத்திருக்கலாம் என்பதுதான். இஸ்ரேலை அழித்துவிடுவோம் என்று கூறும் ஒரு பொறுப்பற்ற நாடு யுரேனியத்தைச் செறிவூட்டிக் கொண்டிருப்பதுதான் பலருக்கு அச்சமாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போய்விடுமே என்கிற பதற்றம் வேறு.

 சரி, எந்தெந்த நாடெல்லாம் அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்பதை யார்தான் தீர்மானிப்பது? அமெரிக்காவும் பிரிட்டனும்தான் என்றால், வரலாற்றில் பலமுறை துரோகம் இழைத்திருக்கும் இந்த இரு நாடுகளையும் யார் நம்புவார்கள்? அதுவும் ஈரான் எப்படி இவர்களை மேற்பார்வையாளர்களா ஏற்கும்? "நீ எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை உனது எதிரிதான் தீர்மானிக்கிறான்' என்பார்கள். அந்த வகையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதற்கு முழுக்க முழுக்க அமெரிக்காவும் பிரிட்டனும்தான் காரணம்.

 இங்கே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்தியாக வேண்டும். இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாத நாடு என்று கேலியாகச் சித்திரிக்கப்படும் ஈரான், ஒரு காலத்தில் முழுமையான ஜனநாயக நாடாக இருந்தது.

 1950-களில் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சி நடந்து வந்தது. முகமது மொசாதே பிரதமராக இருந்தார். பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்குவது. ஈரானில் கிடைத்த எண்ணெயில் 80 சதவிகிதம்வரை உறிஞ்சிக் கொண்டிருந்த பிரிட்டனுக்கு மொசாதேயின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியாக இருந்தது.

 ஜனநாயகத்தின் காவலர்கள் என்று பல நூற்றாண்டுகளாகக் கூறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், பிரிட்டனும் அன்று ஓர் அற்பமான செயலைச் செய்தன. தங்களது நாடுகளின் உளவு அமைப்புகளை ஏவிவிட்டு, ஜனநாயக அரசுக்கு எதிரான குழுக்களைத் தூண்டின.

 "ஆபரேஷன் அஜாக்ஸ்' என்கிற பெயரில் சிஐஏ நடத்திய அந்த மாபெரும் அரசியல் மோசடியில், அரசியல்வாதிகள் முதல் உள்ளூர் ரெüடிகள் வரை பல தரப்பினருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அதிருப்தி குழுக்களுக்கு நிதியுதவி செய்தார்கள்.

 இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டமும் வன்முறையும் நடந்தன. அதைப் புரட்சி என்று ஊடகங்களில் எழுத வைத்தார்கள். முடிவில் மொசாதேவின் ஆட்சியை அகற்றி பிரிட்டனும் அமெரிக்காவும் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டன.

 இவையெல்லாம் வெறும் கற்பனையோ கதையோ கிடையாது. சிஐஏவின் ஆவணங்களிலும், பிற நூல்களிலும் இந்தச் சதித் திட்டம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

 ஈரானில் அகமதிநிஜாத்தை எதிர்த்து பச்சை இயக்கம் என்கிற பெயரில் போராடித் தோற்றுக் கொண்டிருக்கிறார்களே, அவர்களெல்லாம் மொசாதேவின் வழிவந்தவர்கள்.

 அன்றைக்கு மொசாதேவின் ஜனநாயக அரசை சதி செய்து தூக்கி எறிந்தவர்கள்தான், அகமதிநிஜாத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக பச்சை இயக்கத்துக்கு ஆதரவாக இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது என்று கூறுவது இதைத்தான்.

 மேற்கத்திய நாடுகள் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அணு ஆயுதம் தயாரிப்பது எங்கள் நோக்கமில்லை என்றுதான் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

 ஒருவேளை அணுஆயுதம் தயாரிக்க முயன்றாலும், இன்றைய சூழலில் அதற்கான முழு உரிமையும், தேவையும் ஈரானுக்கு இருக்கிறது என்பதை கடந்த காலச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

 அமெரிக்கா குற்றம்சாட்டியதைப்போல ரசாயன ஆயுதங்கள் இராக்கில் இருந்திருந்தால், சதாம் உசேனை இப்படித் தூக்கில் தொங்கவிட்டிருக்க முடியாது. அமெரிக்காவின் பேச்சுக்கு ஏமாறாமல், தனது அணு ஆயுதத் திட்டங்களைத் தொடர்ந்திருந்தால், கடாஃபிக்கு இப்படியொரு இழிநிலை நேர்ந்திருக்காது.

 லிபியா, இராக், ஆப்கானிஸ்தான் போன்றவற்றின் அழிவுக்குக் காரணம், அவற்றிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லாததுதான்.

 வடகொரியாவை நெருங்க முடியாததற்குக் காரணம் அவர்களிடம் அணு குண்டுகள் இருப்பதுதான். இப்படியொரு சூழலில், அமெரிக்காவுக்கு நேரடியாகச் சவால்விட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடு, பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூச்சலிடுவது, அந்த நாட்டை ஒழிப்பதற்கான சூழ்ச்சியல்லாமல் வேறென்ன?

 அணுஉலை, அணுகுண்டுகளுக்கு நாம் எதிரானவர்களாக இருக்கலாம். அதேநேரத்தில், லிபியாவுக்கும் இராக்குக்கும் ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்படாமல் இருக்க அணு ஆயுதம் அவசியம் என்று ஈரான் கருதுவதை எப்படித் தவறு என்று கூற முடியும்?

 புரட்சிகர பாடகர் டிரேசி சாப்மன் பாடல் வரிகளில் குறிப்பிடுவதைப்போல ஏவுகணைகளைக் கொண்டு மக்களைக் கொல்லும் படைகளைத்தான் நாம் அமைதி காக்கும் படைகள் என்கிறோம்.

 வல்லரசுகளின் தந்திர அரசியலில் சிக்கியிருக்கும் இந்த உலகில் வெறுப்புதான் அன்பு, பொய்தான் உண்மை, போர் என்றால் அமைதி, ஆம் என்றால் இல்லை. ஜனநாயகத்தின் காவலர்கள், அஹிம்சாவாதிகள், ரௌடி நாடு போன்றவையெல்லாம்கூட இவற்றைப் போன்ற பொருள் கொண்டவைதான்.
.

.