உலகிலேயே அதிக அளவு பாசனப் பரப்பைக் கொண்டது சிந்து நதி. ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கண்டபோதே சிந்து நதிநீர்ப் பங்கீட்டில் மாகாணங்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு முக்கிய அணைக்கட்டுகள் அனைத்தும் இந்தியாவுக்குள் அமைந்துவிட்டதால் பாகிஸ்தானின் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படும் என அந்நாடு கருதியது.
இதனால் எழுந்த பிரச்சினையைத் தீர்க்க சிந்து நதிநீர்ப் பங்கீடு தொடர்பான இடைக்கால உடன்பாடு இவ்விரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டது. இதன்படி சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளில் பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரைக் குறைப்பதில்லை என இந்தியா உறுதியளித்தது. இந்தியா வழங்கும் நீருக்காக, பணம் கொடுத்துவிடுவதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. இதனை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை என்பது தனிப் பிரச்சினை.
இந்த உடன்பாடு காலாவதியானதைத் தொடர்ந்து 1948 ஏப்ரல் 1-ல் பாகிஸ்தானுக்குச் செல்லும் முக்கியக் கால்வாய்களை இந்தியா அடைத்து விட்டது. அதன் பிறகு இந்தப் பிரச்சினையை உலக வங்கியின் கவனத்திற்கு பாகிஸ்தான் கொண்டு சென்றதால், உலக நாடுகளின் கவனம் இப் பிரச்சினை மீது திரும்பியது.
அதன் பிறகு நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின், 1960-ல் இந்தியப் பிரதமர் நேரு, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் ஆகியோரின் ஒப்புதலுடன் "சிந்து நதிநீர் ஒப்பந்தம்' கையெழுத்தானது. இதன்படி சிந்து நதியின் கீழ்ப்பக்க கிளை நதிகளான பியாஸ், ரவி, சட்லெஜ் ஆகிய நதிகளின் நதிநீர் உள்பட எல்லா வளங்களும் இந்தியாவுக்குச் சொந்தம். சிந்து நதி, ஜீலம், சீனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்குச் சொந்தமாகின. இதில் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நதிகளில் நீர்மின் திட்டங்கள் போன்ற நதியின் போக்கை மாற்றாமல் நலத் திட்டங்களை உருவாக்கவும், குறிப்பிட்ட அளவு நீரைத் தேக்கவும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்பிறகு 1984 வரை இதில் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.
கோடைகாலங்களில் ஜீலம் நதியின் நீர்மட்டம் குறைந்து ஆற்றுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஊலர் ஏரியின் முகத்துவாரத்தில் ஜீலம் நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட 1984-ல் இந்தியா முடிவெடுத்தது. துல்புல் ஆற்றுப் போக்குவரத்துத் திட்டம் எனப் பெயரிடப்பட்ட இத் திட்டம், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் செயல் எனக் கூறி பாகிஸ்தான் எதிர்த்தது. ஆனால் நதி நீரை வேறு பாதைக்குத் திருப்பாமல் நலத் திட்டங்களை உருவாக்கலாம் என்ற சிந்து நதிநீர் ஒப்பந்த விதிமுறையைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தானின் ஆட்சேபத்தை நிராகரித்தது இந்தியா. எனினும் 1987-ல் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் அதிபர் பேநசீர் பூட்டோவைத் திருப்திபடுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தார். அதன்பிறகு பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இன்று வரை இத் திட்டத்தினைச் செயல்படுத்த முடியவில்லை.
ஜீனாப் நதியின் குறுக்கே அமைந்திருக்கும் பக்லிஹார் நீர்மின்சக்தி திட்டமும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்க்கப்படுகிறது.
கிஷன்கங்கா திட்டத்திற்காக ஜீலம் நதிகளின் கிளை நதிகளை இணைக்கும் பூமிக்கடியில் 21 கி.மீ நீளத்தில் கால்வாய் அமைப்பதற்கும் பாகிஸ்தான் ஆட்சேபித்து வருகிறது.
இந்த மூன்று திட்டங்களையும் பாகிஸ்தான் எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் நாட்டுப் பாதுகாப்புதான். போர்க் காலங்களில் அணைக்கட்டுகளில் இருந்து இந்தியா தண்ணீரைத் திறந்துவிட்டால் அது பாகிஸ்தானுக்குப் பெரும் பிரச்சினையாக அமைந்துவிடும் என பாகிஸ்தான் கருதுகிறது.
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்குச் செல்லும் கங்கையாற்றின் குறுக்கே இந்தியா கட்டியிருக்கும் பராக்கா தடுப்பணையும் வங்கதேச - இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆற்றுப்போக்குவரத்துக்காகவும், கொல்கத்தா துறைமுக வளர்ச்சிக்காகவும் இந்தத் தடுப்பணை பயன்பட்டு வருகிறது. இதனால் வங்க தேசத்தில் மூன்று கோடிப்பேர் பாதிக்கப்படுவதாக அந்நாடு கூறி வருகிறது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிடையே ஜோர்டான் நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்சினை, அப் பகுதியில் நடக்கும். போர்களுக்கு ஒரு முக்கியக் காரணமாகும். பாலஸ்தீனத்தின் மேற்கு மற்றும் காஸô துண்டுப் பகுதிகளுக்கு ஆற்று நீர் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. மேலும் அதி நவீன இயந்திரங்களைக் கொண்டு சட்டவிரோதமாக பாலஸ்தீனப் பகுதிகளில் இருக்க நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகவும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துருக்கி, சிரியா, இராக் வழியாகப் பாய்ந்து பாரசீக வளைகுடாவில் கலக்கும் யூப்ரடீஸ் மற்றும் அதன் இரு முக்கியக் கிளை நதிகளின் நீர்ப்பங்கீடு தொடர்பான இம் மூன்று நாடுகளும் பிரச்சினை இருந்து வருகிறது.
உலகிலேயே மிக நீளமான நதியான நைல் நதியின் நீரைப் பயன்படுத்தி எகிப்து, காங்கோ, புருண்டி, தான்சானியா, உகாண்டா, கென்யா, சூடான், எத்தியோப்பியா மற்றும் உகாண்டா ஆகிய 9 நாடுகள் பாசனம் செய்கின்றன. இந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சில நாடுகளிலிருந்தும், பாசன வசதிகளை மற்ற சில நாடுகளும் பயன்படுத்துவதால் நைல் நதிப் பிரச்சினை நெடுங்காலமாகவே இந்த நாடுகளுக்குத் தலைவலியாக இருந்து வருகிறது.
ஒரு நாட்டுக்குள் செல்லும் நதியை மற்றொரு நாடு அணைகள் கட்டித் தடுப்பதால், பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் நீருக்காகவே உலகில் பெரும் போர் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே இம்மாதிரியான அணைகள் கட்டுவதை முறைப்படுத்துவது அவசியமாகிறது.
Tuesday, December 12, 2006
Subscribe to:
Posts (Atom)