Thursday, January 28, 2010

இன்னொரு "பசுமைப் புரட்சி" சதி

பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் என்பதால் அவரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட மரியாதை கொடுக்க வேண்டும். மரபுக்கு விரோதம் என்பார்கள். ஆனால் அவர் பேசியதைப் பற்றி எழுதலாம்.

பசுமைப் புரட்சி என்கிற ஆங்கிலேயச் சதி இந்திய அரசியல்வாதிகளாலும் இன்றைக்கும் சமூகத்தில் பெரிய சாதனையாளராகக் கருதப்படும் ஒரு விஞ்ஞானியாலும் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டது என்பது பழைய சங்கதி. அப்போது கூறப்பட்ட காரணம் நாட்டில் உணவுப் பொருள் இல்லையென்பது. இப்போதும் அதுபோலவே நிலைமை மாறிவிட்டதால், இன்னொரு பசுமைப் புரட்சியை நடத்திவிட ஒரு கூட்டம் தயாராகிவிட்டது.

ஒவ்வொருத்தராகப் பேசிவந்த இரண்டாம் பசுமைப் புரட்சி என்கிற மயக்கும் சொற்கள், கடைசியாக நாட்டின் குடியரசுத் தலைவரின் வாய்வழியாகவே வரவைக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் பேச்சுக்கு நாடெங்கும் பலத்த வரவேற்பு. பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன.

முதலாவது பசுமைப் புரட்சியால் இந்தியாவுக்குள் நுழைந்த உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்ற வியாபாரத் தந்திரங்களையே இன்னும் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றி எதையெதையோ விற்றார்கள். இப்போது விவசாயிகள் கம்பெனிகளையும் கடன்காரர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சி. இதற்கு ஏன் அவசரம்? காரணம் இருக்கிறது. இப்போதுதான் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுக்குள் நுழையத் தொடங்கியிருக்கின்றன. இதை முடிந்த வரை விற்பதற்குத்தான் இந்த இரண்டாவது பசுமைப் புரட்சி சதி.

ஜிஎம் விதைகளை  விற்பதற்கு பலவகையிலும் முயன்றுவரும் கார்ப்பரேட் இந்திய அரசின் புதுவிதமான அணுகுமுறைதான் இது. முதலில் பி.டி. கத்தரிக்காய். அப்புறம் பி.டி.விவசாயம்.

......
.
.

Saturday, January 23, 2010

பாதை திரியுது காம்ரேட்!

வெனிசூலா அதிபர் ஹுகோ சாவேஸுக்கு கடந்த ஆண்டும் இந்தப் புத்தாண்டும் மகிழ்ச்சிகரமாக இல்லை. அவரைச் சுற்றியுள்ள பிரச்னைகள் நாள்தோறும் முற்றிக்கொண்டே போகின்றன. லத்தீன் அமெரிக்கா முழுவதையும் செங்கொடி ஆக்கிரமித்திருக்கும் என்கிற கர்ஜனையுடன் இந்த நூற்றாண்டைத் தொடங்கியவருக்கு, இப்போது சொந்த நாடான வெனிசூலாவே கைநழுவிப் போய்விடுமோ என்பது மாதிரியான அச்சம் ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. சிலகாலமாக அவர் வெளியிட்டு வரும் அறிவிப்புகளும் அதிரடி நடவடிக்கைகளும் அதைத்தான் காட்டுகின்றன.


தென் அமெரிக்காவிலேயே மிக மோசமான பொருளாதாரம் வெனிசூலாவுடையது. 25 சதவீத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். வறட்சியின் காரணமாக கோகா உள்பட எதுவுமே போதுமான அளவு விளையவில்லை. மின்உற்பத்தித் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக தலைநகர் கராகஸ் முழுவதும் நாள்தோறும் 4 மணி நேரம் மின்தடை அறிவிப்பு வெளியானதை பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை இந்த மின்தடை உலகுக்கே எடுத்துக் காட்டியது.

இப்படியொரு சூழலில் நாட்டின் நாணயமான பொலிவரின் மதிப்பைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எண்ணெய் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சாவேஸ் கூறியுள்ளார். அந்தவகையில் அமெரிக்க டாலருக்கு நிகராக இருவேறு மாற்று மதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கார் போன்ற இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைவாகவும், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு அதைவிட உயர்வாகவும் பொலிவரின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த மாற்று மதிப்புக் குழப்பத்தால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பொலிவருக்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பொலிவரின் மதிப்புக் குறைக்கப்பட்டதையடுத்து, வெனிசூலாவில் கடை விரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகப் பொருள்களின் விலையைக் கடுமையாக உயர்த்திவிட்டன. மாற்று மதிப்புக் குறைவு தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களெல்லாம் புரியாத மக்களுக்கு, இந்த விலையேற்றம்தான் உண்மையை உணர வைத்தது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பை சாவேஸின் அரசியல் எதிரிகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

தனது 12 ஆண்டுகால ஆட்சியில் அதிரடி முடிவுகள் பலவற்றை எடுத்த சாவேஸ், நாணய மதிப்புக் குறைப்பு தொடர்பாகவும் சில துணிச்சல் முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் ஒருகட்டமாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்ததையும் மீறி அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்திய பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனமான எக்ஸிடோவை தேசியமயமாக்கிவிட்டார். பிரெஞ்சு-கொலம்பியக் கலப்பு நிறுவனமான எக்ஸிடோ, இப்போது வெனிசூலா அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

பதவியேற்றது முதலாக, எண்ணெய், சுரங்கம், வங்கி, தொலைத் தொடர்பு போன்ற துறைகளை தேசியமயமாக அறிவித்த சாவேஸ், தற்போது புதிதாக சூப்பர் மார்க்கெட்டையும் கையில் எடுத்திருக்கிறார். நாடு முழுவதும் அரசு சார்பில் சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு மானிய விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது என்பதை அரசே இந்த நடவடிக்கையின் மூலமாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரம் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையாகக் கூறப்பட்டாலும், வெனிசூலாவை பொதுவுடைமை நாடாக மாற்றுவதற்கான சாவேஸின் அடுத்த நிலை முயற்சி இதனுள் பொதிந்திருப்பதையும் மறுக்க முடியாது. சாவேஸின் இந்த முயற்சி சரியானதா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் கூறுவதற்கில்லை. அதே நேரத்தில், இதே நோக்கத்துக்காக மக்களின் அடிப்படைப் பிரச்னைக்குத் தொடர்பே இல்லாத விஷயங்களில் அதிரடி அறிவிப்புகளையும் கருத்துகளையும் வெளியிடுவது தேவையற்றதாகத் தோன்றுகிறது.

வெனிசூலாவை பொதுவுடைமைப் பாதையில் அழைத்துச் செல்லும் சாவேஸின் முயற்சிகளைக் குறை சொல்ல முடியாது. அதற்காக ஏஞ்சல் நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மொழியில் பெயர் வைப்பதும் விடியோ கேம்களுக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவிப்பதும் எந்த வகையில் பொதுவுடைமைக்கு உதவும் என்பது தெரியவில்லை.

அதேபோல, பார்பி பொம்மைகள் நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அவற்றுக்குப் பதிலாக உள்நாட்டுப் பொம்மைகளை உற்பத்தி செய்வதும் இப்போது தேவையற்றது. அது மக்களின் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே, சாவேஸின் காலை வாரிவிடச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியப் பத்திரிகைகள், இந்த மாதிரியான விஷயங்களில்தான் சாவேûஸ நையாண்டி செய்து கொண்டிருக்கின்றன.

1998-ல் சாவேஸ் ஆட்சிக்கு வந்தபோது லத்தீன் அமெரிக்காவில் இருந்த நிலை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது. வெனிசூலாவில் சாவேஸýம், பொலிவியாவில் அவரது தோழர் ஈவோ மாரல்ஸýம் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்ததால் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அணி வலுப்பெற்றது. பிரேசில், சிலி, ஈக்வடார், உருகுவே, பராகுவே என எல்லோருமாகச் சேர்ந்து சாவேஸின் கரத்தை வலுப்படுத்தினர்.

இப்போதைய நிலை வேறு. சிலியின் மிச்சல் பேக்லெட்டுக்குப் பதிலாக முதலாளித்துவக் கொள்கை கொண்ட புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வளரும் நாடுகளின் முன்னோடியாகக் கருதப்படும் பிரேசிலிலும் இதுபோன்றதொரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொலம்பியா போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளின் கூட்டணியும் லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. இது சாவேûஸ நிச்சயமாகப் பலவீனமடையச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

நிலைமை தலைகீழாக மாறியிருப்பதால், ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய நிலையில் சாவேஸ் இருக்கிறார். இதை மறந்து அமெரிக்க எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்பதற்காக தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு உள்நாட்டு மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தால், சாவேஸை தோழர்களே புறக்கணித்தாலும் ஆச்சரியமில்லை...
.


Monday, January 11, 2010

முகப்பேரில் சமத்துவப் பொங்கல்

முகப்பேர் பேட்மின்டன் கழகம் என்பது சென்னை முகப்பேர் ஜஸ்வந்த் நகர் இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. நாள்தோறும் காலை 5 மணிக்கெல்லாம் ராக்கெட்டும் கையுமாக ஜஸ்வந்த் நகர் பூங்காவை ஆக்கிரமித்திருப்பார்கள்.
நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து முகப்பேரில் இணைந்திருக்கும் இவர்கள் வெவ்வேறு மொழி பேசும், பல்வேறு மதங்களையும் இனக் குழுக்களையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இணைந்து, அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை கடந்த ஜனவரி 10-ம் தேதி சமத்துவமாய்க் கொண்டாடினார்கள்.
அதிகாலையிலேயே பூம் பூம் மாடு ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டியது. பின்னர் மாட்டு வண்டியில் வேட்டி, சட்டையுடன் முண்டாசு கட்டிய இளைஞர்கள் தெருக்களை வலம் வந்தனர்.

பெண்கள் கோலமிட்டனர். இதற்கான போட்டியும் விறுவிறுப்பாக இருந்தது.  கிராமிய மணம் கமழும் வகையில் பெண்கள் குலவைக்கிடையே,  அனைவரும் அரிசியிட்டு பொங்கல் வைத்தனர்.மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என தமிழகக் கிராமங்களைக் கண்முன் நிறுத்தினர். நாட்டுப் புறப்பாடல்களைப் பாடல்களைக் கேட்டபோது என்போன்ற இடம்பெயர்ந்தோருக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பானை உடைக்கும் உறியடி நடந்தது. சிறுவர்கள் ஆடிய கரக ஆட்டம் சிலிர்க்க வைத்தது.

நானும் இந்த அணியில் உண்டு.

..
.

Friday, January 08, 2010

குறும்புக்கார பிரதமரும் எரிச்சலடைந்த மக்களும்
இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி எப்போதுமே பரபரப்பாகப் பேசப்படுபவர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவர் சர்வதேச ஊடகங்களை எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார். இப்போது அவரது பெயர் பரபரப்பாகியிருக்கும் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது.

அண்மையில் மிலன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மக்களோடு மக்களாகக் கலந்திருந்த பெர்லுஸ்கோனியின் முகத்தில் இளைஞர் ஒருவர் சர்ச் போன்ற வடிவத்தைக் கொண்ட கரடுமுரடான பொருளைக் கொண்டு தாக்கிவிட்டார். இதில் நிலைகுலைந்துபோன பெர்லுஸ்கோனியின் மூக்கு உடைந்தது. வாயில் இரு பற்கள் பெயர்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தாலி மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியொரு சம்பவத்துக்கு இத்தாலி முழுவதுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருக்க வேண்டும். நாடே ஒன்றிணைந்து பிரதமர் விரைவாகக் குணமடைந்து வர பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். பிரதமருக்கான பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி விவாதம் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் நடக்கவில்லை.


இத்தாலியின் ஒரு பிரிவினர் பெர்லுஸ்கோனியின் மீதான தாக்குதலை வரவேற்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அவரைத் தாக்கிய இளைஞரை ஹீரோவாக்கினர். மூக்கிலும் வாயிலும் ரத்தம் சொட்டும் பெர்லுஸ்கோனியின் பொம்மைகள் கடைகளில் விற்றுத் தீர்ந்தன. ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பெர்லுஸ்கோனிக்கு எதிரான கருத்துகளால் நிரம்பின. அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியின் மீது வெறுப்புக் கொண்ட மக்கள்கூட்டம் இத்தாலியில் இருக்கிறது. தேசம் பிளவுபட்டுக் கிடப்பதும் வெளிப்படையாகி இருக்கிறது.
 

நாட்டின் தலைவருக்கு விபத்து ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அந்த நாடே அவருக்காக அனுதாபப்படுவதுதான் இயல்பு. எதிர்க்கட்சியினர்கூட இந்த மாதிரியான சூழலில் விமர்சனத்தைத் தவிர்ப்பார்கள். பெர்லுஸ்ú கானி மீது மட்டும் ஏனிந்த வெறுப்பு? அதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

அண்மையில் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது. பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக பல நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், தன்னிடமிருந்த படத்தை, பக்கத்து மேஜைக்குத் தள்ளிக் கொண்டிருந்தார். பல்வேறு கால கட்டங்களில் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் என அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. அதை வாங்கிய சிலர் பார்த்தனர். சிலர் முகம் சுளித்தனர். சிலர் கண்டுகொள்ளவில்லை.


பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெüன், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி போன்ற பெருந்தலைகளும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் பரோனஸ் ஆஷ்டன் போன்ற பெண் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இவ்வளவு மலிவான செயலைச் செய்த அந்த நபர், இத்தாலியின் பிரதமர் பெர்லுஸ்கோனிதான் எனப் பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இடம் பொருள் தெரியாமல் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்த மனிதருக்கு வயது 73.


இதுபோன்ற நகைப்புக்கிடமான செயல்களுக்குப் பெயர் பெற்றவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். உலக நடப்புகள் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்குக்கூட ஏடாகூடமாகப் பதில் சொல்லி பத்திரிகையாளர்களின் கேலிக்கு ஆளானவர் அவர். இவரது பொது அறிவையும் நிர்வாகத் திறனையும் கிண்டல் செய்யாதவர்களே இல்லை.


ஊடகங்களின் கேலிக்கு ஆளான இன்னொருவர் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி. ஆனால், இவரது நிர்வாகத்திறனைப் பற்றி யாரும் கேலி செய்யவில்லை. கேலிக்குள்ளானது இவரது தனிப்பட்ட வாழ்க்கைதான். இரண்டாவது மனைவியுடன் ஊர் சுற்றிய கதைகள் பத்திரிகைகளில் வெளியானதால் சர்கோஸியின் மரியாதை கிழிந்து போனது. மனைவியுடன் தனது உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்காக எக்கி நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களெல்லாம் இன்றைக்கும் இணையத்தில் ஹாட். பதவிக்கு வந்த காலத்தில் மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடப்பட்ட சர்கோஸி, இப்போது கேலிப் பொருளாகியிருக்கிறார்.


இந்த இருவரையும் விஞ்சி நிற்கிறார் பெர்லுஸ்கோனி. மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் இவர், அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே இளம் பெண்களுடன் வாழ்ந்து வருவதாகவும் பத்திரிகைகள் எழுதுகின்றன. விலைமாது ஒருவர், தனது சுயசரிதையில் பெர்லுஸ்கோனி பற்றி தாறுமாறாகக் குறிப்பிட்டிருக்கிறார்


இதேபோல, பொது நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிறத்தைக் குறிப்பிட்டு, கேலி வெளிப்படும் தொனியில் பேசியுள்ளார் பெர்லுஸ்கோனி. அத்துடன் விடாமல், ஒபாமாவின் மனைவியையும் அதேபோல் குறிப்பிட்டுள்ளார். பெர்லுஸ்கோனியின் இந்தப் பேச்சால், இத்தாலியின் எதிர்காலத்துக்குச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நாட்டின் மூத்த தலைவர்கள் ஒபாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று. இதையெல்லாம் பெர்லுஸ்கோனி பொருள்படுத்துவதில்லை. இதைக்கூட ஒபாமாவுக்கு ஜாலியாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா, எனக் கேட்பார். 


இன்னொரு நிகழ்ச்சியின்போது, உலகத் தலைவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்த மிச்சேல் ஒபாமா, பெர்லுஸ்கோனியிடம் மட்டும் கைகுலுக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இது இத்தாலிக்கு நேர்ந்த அவமானமாகச் சுட்டிக்காட்டப்பட்டது


இப்படித் தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும், செயல்களாலும் ஒரு பிரிவு மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் பெர்லுஸ்கோனி, இத்தாலிய ஊடங்களில் பெரும்பான்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரர். சிறந்த தொழிலதிபரும்கூட. அரசியல் ரீதியான எதிர்ப்புகளையெல்லாம் திறம்படக் கையாண்டவர். ஆனாலும், தனிப்பட்ட வாழ்க்கையால் தற்போது அவரது புகழுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவிலிருந்து அவர் மீண்டு வருவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.

பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் தனிப்பட்ட வாழ்வைக் கிளறிப்பார்ப்பது நியாயமாகுமா என அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு. பெர்லுஸ்கோனியின் விவகாரத்தை மாதிரியாக எடுத்துப் பார்த்தால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிறது. நாட்டுத் தலைவரின் தனிப்பட்ட குறும்புகளாலும், நகைப்புக்கிடமான செயல்களாலும் உலக அரங்கில் அந்த நாட்டின் மரியாதை சரிந்து போகும், அரசு முறை உறவுகள் சிக்கலாகும் என்றால், அந்தத் தலைவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தான் ஏற்படும். அதற்காக, பெர்லுஸ்கோனியைத் தாக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இந்தக் காயங்கள் அவருக்கு உதவக்கூடும்.

....
.


Friday, January 01, 2010

மூலிகைப் பொக்கிஷம்: நிலவேம்புக் குடிநீர்

மர்மக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என பல பெயர்களில் தமிழகத்தில் காய்ச்சல்கள் நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில், பெரும்பாலும் அலோபதி மருந்துகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. உடனடியாக நிவாரணம் தேடும் மக்களும் அதையேதான் நாடுகிறார்கள். அந்தக் காலத்தில் மூலிகை ரகசியங்கள் காக்கப்பட்டதுபோல இந்தக் காலத்தில், மாத்திரைகளின் ரகசியங்கள் காக்கப்படுகின்றன. பெரும்பாலான மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளிலேயே இந்த ரகசியக் காப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தக் கால நவீன மருத்துவர், மருந்துச் சீட்டு எழுதித் தருவார். ஓவர்டோஸ் எடுத்துக் கொண்டாலோ அல்லது ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என பெரும்பாலான மருத்துவர்கள் தெரிவிப்பதேயில்லை. பக்கவிளைவுகளைவுகளும் பரம ரகசியம்தான். இணையம் வந்துவிட்ட பிறகு, மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளின் பக்கவிளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிவதால், அலோபதி மருந்துகளை உபயோகிப்பவர்கள் அதன் பக்கவிளைவுகளைப் பற்றி மருத்துவரிடம் விவாதிப்பது நல்லது.

வீட்டிலும், பயணம் செய்யும்போதும் பாரசிட்டமால் மாத்திரைகளைப் பத்திரமாய் வைத்திருக்க வேண்டும் என்கிற உலகளாவிய அறிவுரையைக் கேட்டு வளர்ந்தவன்தான் நானும். டோலோ 650 மாத்திரைகள் இல்லாமல் காய்ச்சலையும் தலைவலியையும் குறைக்கவே முடியாது எனத்தான் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நானும் நம்பிக் கொண்டிருந்தேன்.  பாரசிட்டமால் தொகுப்பாக வரும் நீண்ட, வட்ட வடிவமான விதவிதமான மாத்திரைகளை இப்போதெல்லாம் நான் தொடுவதேயில்லை.

காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண பிரச்னைகளுக்கு அவசரப்பட்டு பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்க்க முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் நிலவேம்புக் குடிநீர் கஷாயம் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.  பாக்கெட்டுகளில் கிடைக்கும் இந்த உலர வைக்கப்பட்ட மூலிகையை ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால், எப்பேர்ப்பட்ட வைரஸ் காய்ச்சலும் குணமாகும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட இந்த மூலிகையை, நானே பல முறை பயன்படுத்தியிருக்கிறேன். முழுமையாகத் தெரிந்து கொள்ள அருகிலுள்ள, நம்பிக்கையான சித்த மருத்துவரை அணுகலாம்.  கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டுடன் இந்த மூலிகையும் சேர்ந்தால், பாராசிட்டமால் இல்லாமலேயே காய்ச்சலை விரட்ட முடியும் என நான் நம்புகிறேன்.

.