Sunday, December 18, 2011

கூடங்குளம் போராட்ட வெற்றி, தற்காலிக தமிழர்களுக்குத் தெரியுமா?ஒரு மாபெரும் வெற்றி, ஒற்றை வரிச் செய்தியாகக் கடந்து போயிருக்கிறது. என்னவென்று யோசிக்கிறீர்களா? கிரெம்ளினில் மெத்வதேவும் மன்மோகனும் நீண்டநேரம் பேசினார்கள். இங்கிருந்து சென்ற பல தொழிலதிபர்களின் நிறுவனங்கள் தொடர்பான தரகு வேலை கச்சிதமாக முடிக்கப்பட்டது. இங்குள்ள ஆளை அங்கும், அங்குள்ள ஆளை இங்கேயும் கோர்த்து விடுவதற்கு கொஞ்சம் நேரம். அதன் பிறகு, கூடங்குளத்தில் தற்போதிருக்கும் அணு உலைகளில் மின்னுற்பத்தியைத் தொடங்குவது, இன்னும் 2 அணு உலைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வது போன்றவை பேசப்பட்டன.

3, 4-வது அணு உலைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவதாக இருந்தது. எல்லா அம்சங்களும் பேசப்பட்டன. இருதரப்பும் ஓகே. இந்தியாவும் இதற்குத் தயாராக இருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் கூடங்குளம் மக்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷியா மறுத்துவிட்டது. அதன் பிறகு தொங்கிய தலையுடன் செய்தியாளர்களைச் சந்தித்த நமது பிரதமர், வீராவேசமாகப் பேசினார். இன்னும் இரு வாரத்தில் அணு உலை செயல்படத் தொடங்கும் என்றார். இது மாபெரும் பொய். கண்டிப்பாக அப்படித்தான் இருக்க வேண்டும்.

3,4-வது அணு உலை தொடர்பான ஒப்பந்தத்தில் ரஷியா கையெழுத்திடவில்லை என்கிற விரக்தியில் மன்மோகன் அப்படிப் பேசியிருக்கிறார். முதல் அணு உலை செயல்படத் தொடங்குவதற்கு மே மாதம்வரை ஆகலாம் என்று அங்குள்ளவர்களே சொல்வதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படியிருக்கையில் இன்னும் 2 வாரங்கள் என கெடு விதிப்பது நிச்சயம் பூச்சாண்டி காட்டும் வேலைதான்.

சரி இந்தப் பூச்சாண்டி வேலை எதற்கு? 3,4-வது அணு உலைகள் விஷயத்தில் தோற்றுப் போனதை மறைக்கவும், இதை வெற்றியாக கூடங்குளம்காரர்கள் கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காகவும், பத்திரிகைகளில் தனது தோல்வி தலைப்புச் செய்தியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான்.

மன்மோகன் அப்படிப் பேசியிருக்காவிட்டால், "3, 4-வது அணு உலை ஒப்பந்தத்துக்கு ரஷியா மறுப்பு" என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிருக்கும். ஆனால், மன்மோகன் தந்திரம்தான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. அவர் நினைத்தது போலவே நடந்திருக்கிறது. இத்தனை காலம் உறுதியாக நின்றவர்களைப் பார்த்து ரஷியா அஞ்சியிருக்கிறது. இந்த விஷயம் கண்டு கொள்ளப்படாமல், பிரதமர் சொன்ன ஒரு பொய்யை எதிர்த்து எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது, ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக்குவது, தமிழக மீனவர்களைக் காப்பாற்றுவது, மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வது, பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நியாயம் பெற்றுத் தருவது என்று ஒவ்வொரு பிரச்னைக்குப் பின்னாலும் பத்து இருபது நாள்கள் மட்டும் ஆட்டுமந்தை போல ஓடிய "தற்காலிகத் தமிழர்கள்" இப்போது கூடங்குளம்காரர்களே அவர்களது பிரச்னையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று தவிக்கவிட்டுவிட்டு தேனிப் பக்கம் ஓடிவிட்டார்கள்.


.


.


Sunday, October 30, 2011

போதிதர்மனுடன் பிரபாகரனையும் விற்றவர்கள்!

ரோஜா படத்தில் இந்தியனை விற்று வியாபாரம் செய்தார் மணிரத்னம். எரியும் தேசியக் கொடியை அணைப்பதாக ஒரு காட்சி வைத்தார். கல்லாகட்டியது. இப்போது அந்த சீனை நம்மூரில் போட முடியாது. அதனால் இவர்கள் வியாபாரத்துக்கு எடுத்திருப்பது தமிழை. கூடவே தமிழனையும். 

தமிழைப் பற்றி உனக்கு என்ன தெரியும், தமிழ்னா இளக்காரமா என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்ததைப் போன்றே கதாநாயகி வசனம் பேசினாலும்கூட தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது. அந்தக் கணத்திலேயே கொடுத்த காசுக்கான ஆத்ம திருப்தியடைந்து விடுகிறான் தமிழன். எட்டு நாடுகள் சேர்ந்து ஒருத்தனை கொன்றதுக்குப் பேர் துரோகம் என்று பல்லை நறநறவெனக் கடித்து கதாநாயகன் ஆவேசப்படும்போது, நக்சலாக மாறி அந்த எட்டு நாடுகளையும் அழித்துவிடலாமா என்று கூட சாதாரணத் தமிழனுக்குத் தோன்றும்.

 பொதுவாக மணிரத்னம், விஜயகாந்த் போன்றவர்கள் தங்கள் படங்களில் இந்தியாவை மட்டும்தான் விற்பார்கள். தேவைக்காகப் பாகிஸ்தானைக் கொஞ்சம் இழுப்பார்கள். அல்லது தமிழனைப் பற்றி மட்டும் பேசுவார்கள். அதைக் காசாக்கிக்கொள்வார்கள்.

ஆனால் ஒரேபடத்தில் இரண்டையும் காட்டி எனது 120 ரூபாய் உள்பட தமிழனின் கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கும் தந்திரம் இந்தப்படத்தை உருவாக்கியவர்களுக்குத்தான் வாய்த்திருக்கிறது. ஒருபக்கம் சீனா, போதி தர்மன் என தேசப்பற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குக் குறுக்கு நெடுக்காக தமிழன் என்கிற இனப்பற்றையும் ஓட்டுகிறார்கள். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு உணர்வும் எழுந்தால் அந்த எட்டு நாட்டு கணக்கை எங்கு போய் எழுதுவீர்கள் என்கிற கேள்வியை சத்யம் ஏசியில் நமக்குக் கேட்கத் தோன்றவில்லை.

தமிழில் உலக சினிமா என்று விளம்பரப்படுத்தினார்கள். அதை நம்பித்தான் மொழிமாற்ற டிவிடிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு கார்னர் சீட் வாங்கி போனோம். ஆனா அவங்க நோக்கு வர்மத்தை நம்மிடமே காட்டிவிட்டார்கள். இப்போதுதான் தெரிகிறது. தமிழில் இது உருப்படாத சினிமா என்று. 

ஒழுங்கா ஜட்ஜ்மென்ட் டே படத்தை ரீப்ளே பார்த்திருக்கலாம். அதிலாவது அர்னால்டு அழகா தமிழ்ல பேசுவான். வில்லன் இதைவிட வேகமான நடந்து போவான். டிரைலர் லாரி இதைவிட பிரமாண்டமாக இருக்கும்...

Friday, October 28, 2011

சகுனிகளின் நியாயத் தீர்ப்பு

நாட்டு மக்களைச் சித்திரவதை செய்தார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார், பத்திரிகைகளை முடக்கினார் என்றெல்லாம் கடாஃபி மீது குற்றம்சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றஞ்சாட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படிப்பட்டவை தெரியுமா? கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் விஞ்ஞானி ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை வந்த பிறகு, அணு ஆயுதத் தொழில் நுட்பம் என்பது கத்தரிக்காய் வெண்டைக்காய் போலக் கிடைக்கத் தொடங்கியிருந்தது. லிபியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை ஒரு விலை கொடுத்து "கள்ளத்தனமாக' வாங்கியது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தோரியம் போன்ற மூலப்பொருள்கள் கிடைத்தன. இரண்டையும் கொண்டு அணுஆயுதத்தை உருவாக்கிவிட கடாஃபி திட்டமிட்டிருந்தார். மூலப்பொருள்களைச் செறிவூட்டும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் ரகசியப் பேச்சு என்கிற பெயரில் பிரிட்டனும் அமெரிக்காவும் கடாஃபிக்கு வலை விரித்தன. 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு, கொஞ்சம் மேற்குப்பக்கம் கடாஃபி சாயத் தொடங்கியிருந்த காலம் அது. தனது அல்காய்தா விசுவாசத்தையும் அவர் குறைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து நாட்டுக் கலகக்காரர்களுக்கும் அவர் உதவுவதை நிறுத்திக் கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் மீதான ஆர்வத்தையும் கைவிட்டிருந்தார். அயர்லாந்து புரட்சிப் படைக்கு உதவி செய்து பிரிட்டனைச் சீண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரெüடி நாடு என்கிற பெயரைப் போக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. அதனால் மேற்கத்திய நாடுகளின் சதியைத் தெரிந்து கொள்ளவில்லை. பிரிட்டனும் அமெரிக்காவும் கேட்டுக் கொண்டபடி அணு ஆயுதத்தைக் கைவிடுவதாக கடாஃபி அறிவித்தார். ரசாயன ஆயுதங்கள், நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றை ஒப்படைத்தார். இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அணு ஆயுதக் கள்ளச்சந்தையை ஏ.க்யூ.கான் உருவாக்கியிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அமெரிக்காவிடம் கொடுத்தார் கடாஃபி. பூரித்துப் போன பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் நேரில் வந்து கடாஃபியைப் பாராட்டினார். அதன்பிறகு பல முக்கிய எண்ணெய் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கடாஃபியின் படைகளுக்கு பிரிட்டன் பயிற்சி அளித்தது. இப்படிப் பல வகையிலும் கடாஃபிக்கும் மேலைநாடுகளுக்குமான நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இந்த உறவு உண்மையானதல்ல என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

கடாஃபிக்கு வீசிய அதே வஞ்சக வலையைத்தான் வடகொரியாவுக்கும் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகள் வீசின. ஆனால் அந்த நாடுகள் மசியவில்லை. அணுஆயுத, அணுசக்தித் திட்டங்களைக் கைவிடுவதாக இல்லை. அதனால் இன்று வரைக்கும் பொருளாதாரத் தடைகள் போன்ற சாத்வீக வழியிலேயே அந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளை நம்பி, தம்மிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்த கடாஃபிக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகளை மட்டும் குறைகூறிப் பயனில்லை. வளரும் நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் சீனாவும் ரஷியாவும்கூட ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கின்றன. லிபியாவின் வான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு வந்தபோது, இந்த இரு நாடுகளும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடாஃபிக்கு இந்தக் கதி தேவைதான் என்று நியாயம் கூறப்படுகிறது.

கடாஃபி பல்வேறு வகையான குற்றங்களைப் புரிந்தவராக இருக்கட்டும். அதற்காக இன்னொரு நாட்டில் புகுந்து நாட்டின் தலைவரைக் கொடூரமாகக் கொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணு ஆயுதங்களைக் கைவிடுவோருக்கும், வைத்துக் கொள்ளாதவர்களுக்கும் இதுதான் நிலை என்றால், அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மீது உலக நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக மேற்கத்திய எதிர்ப்பு நாடுகளுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிடும். இதுவரை அணுஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை வைத்துக் கொள்ளாத நாடுகள்கூட அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சிகளைத் தேடக்கூடும். ஏ.க்யூ.கானின் ஆள்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இந்தக் காலத்தில் இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை.

லிபியாவிலேயே கடாஃபிக்கு கடும் எதிர்ப்பு இருந்தது என்பது உண்மைதான். தமக்கு எதிரான போராட்டங்களை ராணுவத்தின் மூலம் அடக்கினார் என்பதுதான், பாதுகாப்பு சபையில் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் முக்கிய அம்சம். ஆனால், அன்று தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றவர்கள், இன்று சிர்தே நகரையே தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். பல நூறுபேரைக் கொன்றிருக்கிறார்கள். கடாஃபியைப் பிடித்த இடத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் சிதறிக் கிடந்திருக்கின்றன. கடாஃபி எப்படிச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பதைச் சொற்களால் விவரிக்கவே முடியாது.

கடாஃபி கொடூரமான குற்றவாளியாகவே இருந்தாலும், அவரைச் சித்திரவதை செய்ததன் மூலம் மேற்கத்திய நாடுகளும் மாபெரும் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றன. ஒபாமா கொண்டுவரும் சட்டங்களைச் சொந்தக் கட்சியினரே மதிப்பதில்லை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் பெயர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கெட்டுப் போயிருக்கிறது. இப்படி எதிர்கால நம்பிக்கையை இழந்தவர்கள் "நியாயத் தீர்ப்பு' வழங்கும் நிலையில்தான் இன்றைய உலக அரசியல் இருக்கிறது.
.
.
.

Tuesday, August 16, 2011

ஊழலை ஒழித்தால் சரக்கு ரேட் குறையுமா?

ஊழல் என்பது என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமலேயே பலர் அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் சாரை சாரையாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழலை மருந்து அடித்து ஒழித்துவிட்டால் என்ன ஆகும் என்பதும் பலருக்குத் தெரியாது. நான் ஊழல்வாதியா, ஊழலுக்குத் துணை போகிறேனா என்று யாரும் தங்களைத் தாங்களே கண்ணாடி முன் கேட்டுக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஏதோ கண்ணுக்குத் தெரியாத, நம்மைத்தவிர பிறர் மட்டுமே செய்யக்கூடிய ஒரு மோசமான செயலாகத்தான் ஊழல் பார்க்கப்படுகிறது. அதனால்தான் போனால் போகட்டும் கொசுவை ஒழிப்பதுபோல ஊழலையும் ஒழித்துவிடலாம் என்று ஹசாரேவுக்குப் பின்னால் மக்கள் திரண்டு விட்டார்கள்.

 2ஜி ராசா ஊழல்வாதி என்றால் அம்பானிகளும் டாடாவும் மட்டும் சுத்தமானவர்களா? அவர்கள் மட்டும் ஏன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையை ஏதோ முப்பாட்டன் சொத்துப்போல வளைத்துப் போட்டிருக்கிறார்களே, அதில் ஏன் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம்?

நாம் மட்டுமல்ல ஊழல் ஒழிப்பு மிஸ்டுகால் அண்ணா ஹசாரேவும் இதில்தான் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை மட்டும் எதிர்க்கும் அவருக்கு பெரு முதலாளிகளெல்லோரும் உத்தமர்களாகத் தெரிகிறார்கள். லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் வர வேண்டும் என்று கேட்கும் அவர், டாடாவையும் அம்பானிகளையும் பற்றிப் பேசுவதில்லை. கார்ப்பரேட்களை மட்டுமே ஆதரிக்கும் மோடியை சிலாகித்துக் கொண்டிருக்கிறார்.

புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு ஊழல் என்பதே பெருமுதலாளிகளிடம் இருந்துதான் தொடங்குகிறது. கட்சி நிதி என்பதுதான் ஒழிக்க வேண்டிய முதலாவது லஞ்சப் பணம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்றால், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளையும் ஒடுக்க வேண்டும். அப்படி ஒடுக்கினால் என்ன ஆகும் தெரியுமா?

 எந்த வேலையும் செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெஞ்ச் தேய்க்கும் பலருக்கு வேலை இருக்காது. சாட்டர்டே பப்கள், பீசா கார்னர்கள் இயங்கும் அளவுக்கு அதீத பணப்புழக்கம் இருக்காது, கட்டட வேலை செய்பவரின் பிள்ளையும், ஐ.டி. அறிவாளியின் பிள்ளையும் ஒரே வகுப்பில் படிக்க வேண்டியிருக்கும், வீட்டில் 10 ஏசியையும் ஆளுக்கொரு காரையும் வைத்துக் கொண்டு  ஏழைகள் பிளாஸ்டிக் பைகள் செல்லக்கூடாது என்று போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வேலை இருக்காது, ஒருவேளை கார்களையும், ஏசிக்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஏழைகள் போராடினாலும் போராடுவார்கள். 

இது மட்டுமல்ல ஊழலை ஒழித்துவிட்டால், எதிர்பார்க்காத, பலருக்கும் கசப்பானதுமான இன்னும் பலதும் நடக்கக்கூடும். ஒன்று ஊழல் அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும், அல்லது ஊழல் ஒழிப்பு சித்துவிளையாட்டை அம்பானியில் இருந்து ஆரம்பியுங்கள். அதைவிட்டுவிட்டு ஊழலை ஒழித்துவிட்டால், இன்கிரீமென்ட் கிடைக்கும், சீஆஃப் கிடைக்கும், சரக்கு ரேட் குறையும் என்று எதிர்பார்த்து யாராவது அண்ணா ஹசாரே பின்னால் கிளம்பியிருப்பீர்கள் என்றால் மிஸ்டுகால் கொடுத்துவிட்டு தயவு செய்து சத்தம்போடாமல் வீட்டுக்கு வந்துவிடுங்கள். 

.
.
.

Sunday, July 31, 2011

எகிப்து புரட்சியும் மக்களாட்சியும்

எகிப்து மீண்டும் ஒரு குழப்பமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஹோஸ்னி முபாரக் தப்பி ஓடியதுமே வெற்றி கிடைத்ததாக முழங்கப்பட்டது. ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கு அவகாசம் கேட்டார்கள். அந்த அவகாசம் முடிவடையும் காலம் நெருங்கிவிட்டது.

இப்போது மீண்டும் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. தாஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மனிதத் தலைகள் நிரம்பியிருக்கின்றன. கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன.

சொகுசு மருத்துவமனையில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஹோஸ்னி முபாரக், அவரது இரு மகன்கள் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கைகளில் சுணக்கம் ஏன் என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தலை நடத்துவதில் என்ன தயக்கம் என்று கேட்கிறார்கள்.

நாசர் காலத்து வரலாற்றுப் பாடத்தை இது நினைவூட்டுகிறது. இப்போது ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைதான், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பரம்பரை மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய நாசருக்கும் ஏற்பட்டது. அவர் துணிச்சலாக முடிவெடுத்தார்.

தேர்தலை நடத்தினால் தம்மால் வெற்றி பெற முடியாது; ராணுவ ஆட்சியே தமது கனவுகளைச் செயல்படுத்தும் ஒரே வழி என்று தீர்மானித்தார்; அரசியல் கட்சிகளை ஒழித்தார்; தேர்தல் கூடாதென்றார்; அடிப்படை உரிமைகளை முடக்கினார். ஒரே நாளில் எகிப்து ராணுவ ஆட்சியின் கீழ் வந்தது. சாகும்வரை நாசர் அதிபராக இருந்தார்.

இப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் நாசரைப் போன்று தடாலடியான முடிவெடுக்கக்கூடியவர்கள் அல்லர். ஏற்கெனவே முடிவெடுத்தபடி இன்னும் ஓரிரண்டு மாதங்களில் தேர்தலை நடத்திவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், இந்தத் தேர்தல் மக்களாட்சி கோரி, போராட்டம் நடத்திய எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

மக்களாட்சி என்பதே 49 சதவீதம் பேரின் உரிமையை 51 சதவீதம் பேர் பறிப்பதுதான் என்பார் அமெரிக்காவின் தேசத் தந்தைகளுள் ஒருவரான தாமஸ் ஜெபர்சன். அந்த வகையில், போராட்டம் நடத்திய அனைவருமே தங்களுக்கு ஆதரவான அரசு அமையும் என்று எதிர்பார்க்கக்கூடாதுதான். ஆனால், போராட்டத்தை முன்னின்று நடத்திய எல்பரதே போன்றவர்களின் விருப்பத்துக்கு எதிரான அரசுதான் அமையக்கூடும் என்பது கொஞ்சம் நெருடலானது. அதிபராவார் என்று கருதப்பட்ட எல்பரதேக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

அண்மையில் அல்-ஜசீரா நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இப்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் "பிரதர்ஹுட்' அமைப்பின் சுதந்திர மற்றும் நீதிக் கட்சிக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. சலஃபி கட்சிக்கு 27 சதவீத இடங்கள் கிடைக்கலாம் என்றும் அல்-ஜசீரா கணித்திருக்கிறது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லை, வாக்குரிமை பெற்ற 34 சதவீதம் பேர் படிப்பறிவற்றவர்கள் என்பதெல்லாம் இவர்களுக்குச் சாதகம் என்று கூறப்படுகிறது.

பொதுவான கருத்துப்படி, இரண்டுமே பழமைவாதக் கட்சிகள்தான் என்பதால், கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது. எந்த வகையில் பார்த்தாலும் தேர்தல் நடந்தால், எகிப்தில் அமையப்போவது பழமைவாத அமைப்புகளின் ஆட்சிதான்.

இது மதச்சார்பற்ற இயக்கங்களுக்கு கசப்பான சேதி. மக்களாட்சி வேண்டும் என்று போராட்டம் நடத்திய அவர்கள், பழமைவாத அமைப்புகளின் கையில் ஆட்சிப் பொறுப்பு செல்வதை விரும்பவேயில்லை. இப்படியொரு நிலை ஏற்பட்டால், ஹோஸ்னி முபாரக்கே ஆட்சி செய்துவிட்டுப் போயிருக்கலாம் என்றுகூட அவர்கள் நினைப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இப்போது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தாஹ்ரீர் சதுக்கத்தை முற்றுகையிட்டிருப்போரில் மதச்சார்பற்ற இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரையும் காண முடியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

சலஃபி, நீதிக்கட்சியினர்தான் போராட்டத்தை நடத்துகிறார்களாம். அந்த அளவுக்குத் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளை நினைத்து மதச்சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்போதே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள் போலும்.

அவர்களது அச்சம் ஒருபுறம் இருக்கட்டும். எகிப்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்தால் வேறு மாதிரியான அடையாளச் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நான்காண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு தேர்தல் பாலஸ்தீனத்திலும் நடந்தது. பயங்கரவாதிகள் என்று மேற்கத்திய அரசுகளால் முத்திரை குத்தப்பட்ட "ஹமாஸ்' இயக்கம் அந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை எதிர்பாராத இஸ்ரேலும், அமெரிக்கா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்தை தீண்டத்தகாத நாடாகப் பார்க்கத் தொடங்கின. ஹமாஸ் இல்லாத பாலஸ்தீனத்துடன்தான் பேச்சு என்கிற சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்தன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு புறக்கணிக்கப்பட்டது. ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளெல்லாம் சேர்ந்து மக்களாட்சியைத் தோற்கடித்தன. இது பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. 1990-களின் தொடக்கத்தில் அல்ஜீரியாவிலும் இதுபோன்றே மேற்கத்திய நாடுகளால் மக்களாட்சி முடக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இதே நிலைதான் எகிப்திலும். அடிப்படைவாத அமைப்புகளாகக் கருதப்படும் பிரதர்ஹுட்டும், சலஃபியும் ஆட்சியமைத்தால், அந்த அரசுக்கு நிச்சயமாக மேற்கத்திய ஆதரவு கிடைக்காது. உள்ளூர் "மதச்சார்பற்ற' அமைப்புகளின் ஆதரவும் இருக்காது. ஈரான், வடகொரியா மாதிரியான தேசமாகப் பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

எது எப்படியோ, மக்களாட்சிக்கு வருவது என்பது தீர்மானித்தாகிவிட்டது. முடிவு எப்படியிருந்தாலும் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இன்னொரு சவூதி அரேபியாவோ, துருக்கியோ, இந்தோனேஷியாவோ உருவாவதில் தவறில்லை. ஆனால், அல்ஜீரியாவோ, பாலஸ்தீனமோ வேண்டாம்.

இப்போது மக்களாட்சி வேண்டும் என்று கோரும் பிரதர்ஹுட் அமைப்பு 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே எகிப்தில் தேர்தலை ரத்து செய்ய நாசருக்கு உதவியது. மேற்கத்திய நாடுகள்அல்ஜீரியாவிலும், பாலஸ்தீனத்திலும் இதைச் செய்தன. இன்னொரு முறை அதுபோன்ற வரலாற்றுப் பிழையைச் செய்தால் மக்களாட்சியின் காவலர்கள் என்று கூறிக் கொள்வதில் அர்த்தமேயில்லை.
..

..

Friday, July 29, 2011

சமச்சீர் கல்வியா, சாதா கல்வியா... குழப்பியது யார்?


 சமச்சீர் கல்வியா, சாதா கல்வி வேண்டுமா என்று இப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் போய்க்கேட்டால் வெறுத்துப் போய்... ஏதாவது ஒன்றைக் கொடு என்றுதான் கேட்பார்கள். ஆனால் இந்த இரண்டு மாதங்களும் எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று மாணவர்களையும், எதைச் சொல்லித் தருவது என்று ஆசிரியர்களையும் குழுப்பியது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் குழப்பத்துக்கும் தாமதத்துக்கும் ஜெயலலிதாவை மட்டும் குறை சொன்னால் ஏற்க முடியாது. ஜெயலலிதா பதவிக்கு வரும்போதே அனைவருக்கும் தெரியும் அவர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியை விட்டு வைக்கமாட்டார் என்று.  அரசின் போக்கிலேயே விட்டிருந்தால் இந்நேரம் காலாண்டுப் பரீட்சை போர்ஷன் முடிந்திருக்கும்.
அண்மையில் சமச்சீர் கல்வி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் ஒருவர் பேட்டியளித்திருந்தார். சமச்சீர் கல்வியை ஏன் வலியுறுத்துகிறீர்கள் என்று நமது நட்புவட்டச் செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். "கல்வியில் எதிலுமே இல்லை, புத்தகத்திலாவது சமச்சீர்" இருக்கட்டுமே என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

இது நல்ல நகைச்சுவை. எல்லோரும் சொல்வது போல இது சமச்சீர் கல்வியல்ல சமச்சீர் பாடப்புத்தகங்கள் மட்டுமே. மற்றபடி கல்வியெல்லாம் சாதா கல்விதான். அதாவது அரசுப் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் சாதா கல்வியும் கிடைக்கும். மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் ஸ்பெஷல் சாதா கல்வியும் கிடைக்கும்.

 சமச்சீர் கல்வி என்பதை பாடப்புத்தகத்தில் இருந்தான் தொடங்க வேண்டும் என்று யோசனை சொன்னவருக்கும் இப்போது அதற்காகப் போராடுவோருக்கும் உண்மையிலேயே "சமச்சீர்" அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இருக்க வேண்டும், அவர்கள் இப்போது இருக்கும் பாடத்தை சரியாக நடத்த வேண்டும். கட்டடங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட வேண்டும், கொடுக்கப்படும் மதிய உணவு தரமாக இருக்க வேண்டும், ஆசிரியர்கள் நேரந்தவறாமல் வகுப்புக்குச் செல்ல வேண்டும் இதெல்லாம் சரியாக இருந்தால்தான் பாடப்புத்தகத்தையே மாணவன் திறப்பான்.

 இந்தக் கிராமப்புற மாணவனைப் பற்றியெல்லாம் சமச்சீர் கல்வி வேண்டும் என்போருக்கும், வேண்டாம் என்போருக்கும், போராட்டம் நடத்துவோருக்கும் எந்த அக்கறையும் இல்லை. சமச்சீர் கல்வியின் ஒரே நோக்கம் தனியார் பள்ளிகள் லாபமடைவதை தடுக்க வேண்டும் என்பதுதான். அதனால் ஏழை மாணவனுக்கு என்ன லாபம்?

இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் விற்பனை வரியின் சிறு பகுதியை கல்விக்காகத் திருப்பி விட்டாலே அரசுப் பள்ளிகள் அனைத்தையும்  உலகத் தரத்துக்கு மாற்றிவிடலாம். பிறகு யார் தனியார் பள்ளியைத் தேடிச் செல்லப் போகிறார்கள்.  அடிப்படை அமைப்பிலேயே பிரச்னையை வைத்துக்கொண்டு, புத்தகத்தை மாற்றிக் கொடுத்தால் - அதுவும் மட்டமான -  யாருக்கு என்ன பயன்?

இதற்காகச் ஜெயலலிதாவை எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டுவிட்டு எல்லோரும் கைவைக்கத் தயங்கும், கைநீட்டிப் பேசினாலே விமர்சனத்துக்குள்ளாக வேண்டிவரும் என்று அஞ்சும் பெருமதிப்புக்குரிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் "அதே தரத்துடன்" அப்படியே இருப்பார்களாம்... கட்டடங்கள் அப்படியே இருக்குமாம்...  நிர்வாகமும் "அதே வேகத்துடன்" நடக்குமாம்... புத்தகத்தை மட்டும் மாற்றி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்துவிடுவார்களாம்... ஏனய்யா இந்த தலைகீழ் வளர்ச்சி?

சூ மந்திர காளி!
..
.

Thursday, July 14, 2011

சங்ககராவின் "இனப் படுகொலை'


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை எவ்வளவு கொடூரமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசிக் கொன்றது. பிடிபட்டவர்களையும் சரணடைய வந்தவர்களையும் சித்திரவதை செய்தது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். கண்களைக் கட்டி, நிர்வாணப்படுத்திக் கொன்றது, உடலெல்லாம் கத்தியால் கீறி கழுத்தை அறுத்தது என உச்சகட்ட மனிதஉரிமை மீறல் நடந்திருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் இலங்கை அரசும் அதன் ராணுவமும் தங்களது தவறுகளை நியாயப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.

ராஜதந்திர வளையங்களில் ஒருபக்கம் இவர்களது சதிவேலை நடந்து கொண்டிருக்க, இன்னொருபக்கம் சேனல்-4 தொலைக்காட்சியை மிரட்டுவது, எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது போன்ற பிறவற்றையும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.

எத்தனை ஆதாரங்களை வெளியிட்டாலும் அவையெல்லாம் போலி என்பது போலத் திரித்துப் பேசுகின்றனர். எல்லாம் தேச நலனுக்காகச் செய்யப்பட்டதுதான் என்பதுபோல புனையப்படுகிறது. தேச ஒருமைப்பாடு என்பதை இனப் படுகொலையை மறைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி.

இலங்கையின் இந்த முயற்சிக்கு கிரிக்கெட் வீரர் சங்ககராவும் உதவப் புறப்பட்டிருக்கிறார். அதுவும் சர்வதேச அரங்கில். கிரிக்கெட் தொடர்பான பேச்சு என்கிற போர்வையில். அண்மையில் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெüட்ரி நினைவு கிரிக்கெட் உரையில் தனது விஷமத்தனத்தை வஞ்சகமாக அரங்கேற்றினார் சங்ககரா.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீடித்த அவரது பேச்சு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை குறைகூறுவதாகவே கவனிக்கப்பட்டது. அதை மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் முன்னிலைப்படுத்தின. அதனால், அவரது பேச்சில் ஆங்காங்கே இலங்கை இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வசனங்கள் இருந்தது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றைப் பற்றிப் பேசிய சங்ககரா, கடந்த 30 ஆண்டுகளாக இருந்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது என்று கூறி இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஒரே வரியில் கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஏதோ நியாயமற்ற காரணங்களுக்காகவும் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கிலுமே இந்தப் போராட்டங்களெல்லாம் நடந்ததாகக் கூறுவது போல அவரது பேச்சு இருந்தது.

இலங்கையில் நடந்த உச்சகட்டப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ராணுவம் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்ததாகக் கூறிய அவர், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிடவேயில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை.

போர் நடந்து முடிந்த பிறகும் பல்லாயிரக் கணக்கானோர் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். உணவும், மருத்துவவசதியும் இல்லாமல் அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். மர்மமான வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

போரிலும் போருக்குப் பிந்தைய ராணுவ நடவடிக்கைகளாலும் சொந்தங்களை இழந்தவர்களின் நெஞ்சங்களில் ஆறாத வடு ஏற்பட்டிருக்கிறது. உடல் ஊனமாகி நடைபிணமாக வாழ வேண்டிய நிர்பந்தம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சங்ககராவின் நினைவில் இல்லை போலும்.

போர் நடந்த பகுதிகள் மட்டுமல்லாமல் கொழும்பு போன்ற போர்முனைக்குச் சம்பந்தமில்லாத நகரங்களிலும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; குண்டுகள் போடப்பட்டன என்றுதான் அவர் குற்றம்சாட்டினார்.

அதுபோலவே, பெரும்பாலான இடங்களில் பயங்கரவாதம், "பயங்கரவாதிகள்' என்கிற சொல்லையே இவர் பயன்படுத்தியிருக்கிறார்.

சரி, சங்ககராவிடம் இருந்து இதைத்தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று கேட்கலாம். எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவரது பேச்சுக்கு தமிழர்கள் மத்தியிலிருந்து சலசலப்புகூட கிளம்பவில்லை என்பதுதான் வேதனை.

சங்ககராவின் பேச்சுக்கு மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அவர்கள் கைதட்டியது, கிரிக்கெட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தம் பற்றிய கருத்துகளுக்காக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால், அந்தப் பேச்சில் கூறப்பட்ட தமிழர் இனப்படுகொலை தொடர்பான கருத்துகளுக்கும் கிரிக்கெட் உலகமே ஆதரவு தெரிவித்தது போலல்லவா ஆகியிருக்கிறது. இதுவே இனப் படுகொலைக்கு அங்கீகாரமாயிற்றே!

ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, உலகமே உற்று நோக்கக்கூடிய ஓர் உரையில் இந்த இடைச் செருகல்கள் எப்படி வந்தன? தனது கிரிக்கெட் வாரியத்தையே சர்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டி, இந்தப்பேச்சை சங்ககரா பரபரப்பாக்கியது ஏன் என்பதற்கெல்லாம், "இனப்படுகொலையை நியாயப்படுத்தும் திட்டமிட்ட முயற்சி' என்பதைத் தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும்? இலங்கை ராணுவத்தின் புகழை உயர்த்திவிட்டதாக கோத்தபய ராஜபட்ச பாராட்டியிருப்பதற்கும் அதுதானே காரணம்.

1980-களில் தாம் சிறுவனாக இருந்தபோது வன்முறைகள் நடந்ததாகவும், அதில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தனது வீட்டில் தங்குவதற்கு தனது தந்தை இடமளித்து வந்தார் என்றும் தனது பேச்சில் சங்ககரா குறிப்பிட்டார்.

அந்த மனிதாபிமானம்கூட உங்களிடம் இல்லையே சங்ககரா!

..
.

Saturday, July 09, 2011

சமச்சீர் பாடத்திட்டம்தான் வேண்டும்; இந்த ஜிகினா குப்பையல்ல!

ஜெயலலிதா நல்லவர், சுதந்திரப் போராட்டத் தியாகி. ஊழலைப் பொறுக்க மாட்டாதவர் என்று எழுதலாம். கருணாநிதி அப்பழுக்கற்றவர், மொழிப்போர்த் தளபதி. ஊருக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்றுகூட எழுதலாம். அதையெல்லாம் நாம் கேட்கப்போவதில்லை.  ஊடகங்களில் எழுதுவதைவிடவா பாடப்புத்தகங்களில் மோசமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் எழுதிவிட முடியும்?

பிஞ்சிலேயே நஞ்சை விதைக்கலாமா, மோசமானவர்களை நல்லவர்கள் போல பாடப்புத்தகங்களில் சித்திரிக்கலாமா என்று கூறும் வாதத்தைக்கூட நாம் முன்வைக்கபோவதில்லை. நம்முடைய வாதம், வைக்கப்பட்டிருக்கும் உள்ளடக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி மட்டுமே.

சமச்சீர் கல்வி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டால் வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் கூரைப் பள்ளியிலும் மரத்தடியிலும் போரடிக்கும் பாடத்தைப் படித்து வந்தவன்தான். அப்படியொரு மட்டமான பாடத்திட்டத்தை நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.

இப்போது, சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமாக இல்லை என்று ஒரு பிரிவினரும், தரமாக இருக்கிறது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். சிலர் தரமாக இல்லை என்று கூறுவதன் பின்னணி அதை முடக்கிவிடுவதாகக் கூட இருக்கலாம். அதேபோல் தரமாக இருக்கிறது என்று கூறும் சிலருக்கு அரசியல் சார்பு இருக்கலாம். நமக்கு இந்த இரண்டும் இல்லை. நமக்கு ஒரேயொரு நோக்கம் தரமான கல்வியும் பாடப்புத்தகமும் அரசுப் பள்ளிகளிலேயே இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி என்னதான் அந்தப் பாடப்புத்தகங்களில் சிறப்பாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தைப் புரட்டினேன். அட அசிங்கமே! குழந்தைகளுக்கான பாடப்புத்தகம் எப்படி இருக்கக்கூடாது என்று நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து இத்தனை காலமும் நினைத்து வந்தேனோ அதே புத்தகம்தான் கொஞ்சம் கலர் கலராக மீண்டும். ஜிகினா குப்பை

 ஏனோதானோவென்று வரையப்பட்ட மேப்களைப் பார்க்கும்போது பற்றிக் கொண்டு வருகிறது. அதே பேப்பர், அதே வண்ணங்களைக் கொண்டு,  கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தைகளுக்கு அருமையான மேப்பை தர முடியும் இதைக்கூட அந்தப் புத்தகத்தில் பார்க்க முடியவில்லை. ஒரு மேப் மட்டுமல்ல அந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மேப்களுமே தலைப்பை எந்த வகையிலும் வெளிப்படுத்தாத வகையில்தான் வரையப்பட்டிருக்கின்றன. அதை வரைந்த பிரகஸ்பதியைக் கூப்பிட்டு பெஞ்ச் மேல்தான் ஏற்ற வேண்டும். அல்லது முழங்கால் போடச் சொல்ல வேண்டும்.

 ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விப் பகுதி என்கிற ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் டிட்டோ. அந்தப் பாடத்தை பத்தி பத்தியாக மனப்பாடம் செய்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். பாடத்தை மாணவர்கள் ஆர்வமாகப் படித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருப்பது தெரிகிறது.

என்சிஇஆர்டி புத்தகம்

ஒவ்வொரு பாடமும் ஏதோ ஆய்வுக் கட்டுரை போல "தேமே" என்பது போன்ற தூக்கம்தரும் நடையில் எழுதப்பட்டிருக்கிறது. ரஷிய மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதைப் போன்ற ஒரு உணர்வு. கொஞ்ச நஞ்சம் வரலாறு படிக்கும் ஆர்வமுள்ள மாணவனைக்கூட இந்தக் கட்டுரை நடையிலான பாடங்கள் தடுத்துவிடும் என்பதில் துளிகூட சந்தேகமேயில்லை.

எடுத்துக் காட்டுக்கு ஜெர்மனியில் நாசிஸம் பரவுவதைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் வரும் பாடம். இந்தப் பாடத்தையும் என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு பாடத்தின் 3-வது பாடத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சமச்சீர் லட்சணம் புரியும்.  சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் தரமானவை என்று குரல் கொடுத்து வரும் அனைவரும் இந்த இரு பாடங்களையும் படிக்க வேண்டும். அப்புறம்தான் வினவ வேண்டும்.எவ்வளவு வேண்டுமானாலும் வினவுங்கள். போராடுங்கள்.


சமச்சீர் கல்வி சமூக அறிவியல் முதல் பாகம்

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு ஹிட்லர் பாடம்


திறமையே இல்லாத ஒருவர் ஐஐடியில் பணியாற்றலாம். குப்பம்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் காரிப் சுழற்சியை பிரித்து மேய்பவராக இருக்கலாம். அந்த வகையில், இப்போதிருக்கும் குழுவே கூட திறமையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால், அவர்களது திறமை சமூக அறிவியல் பாடத்தில் வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னொரு உறுத்தலும் இருக்கிறது. சமூக அறிவியலின் அனைத்துப் பாடங்களிலும் ஈ.வே.ரா. பெரியார் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். இது வெறும் எழுத்துப் பிழைதானே என்று எடுத்துக் கொண்டு போவோர்கள், இதே பாடப்புத்தங்களையே இன்னும் நூற்றாண்டுகளுக்கும் வைத்திருக்கட்டும். இப்போது மெட்ரிக் பள்ளிகள் வைத்திருப்போரெல்லாம் சிபிஎஸ்சிக்கும் ஐசிஎஸ்சிக்கும் மாறட்டும்.  ஜிகினா குப்பையில் இருந்து விடுபடுவதற்காகவும் தரமான கல்விக்காகவும் மாதச் சம்பளத்தையெல்லாம் தனியாரிடம்  கொட்டி, விதியே என நாம் அழுதிருப்போம்.

.

.
.

Sunday, July 03, 2011

பத்மநாபர் கோயில், ஆதிக்க சாதியின் சுவிஸ் வங்கி!

முன்குறிப்பு: இங்கே ஆதிக்க சாதி என்று குறிப்பிடப்படுவது அந்தக் காலத்தைப் பற்றி மட்டுமே. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது. 
 --------------

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள சுரங்க அறைகளின் மர்மம் விலக்கப்பட்டிருக்கிறது. தங்கம், வைரம் என என ரூ.50 ஆயிரம் கோடி அந்த அறைகளில் இத்தனை காலமும் பூட்டிக் கிடந்திருக்கிறது. நம் மக்கள் வழக்கம்போல் இன்னும் ஆச்சரியத்திலிருந்து விடுபடவில்லை.இது யாருக்குச் சொந்தம் என்று இப்போது கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை கோடியைக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிலர் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று "மதச்சார்பற்றவர்கள்" பேசுகிறார்கள். "மதவாதிகளுக்கு" கோயிலைப் பற்றிப் பேசினாலே கோபம் வரும். இந்தப் பணத்தைக் கொண்டு கோயிலை தங்கத்தால் இழைக்க வேண்டும் என்பார்கள். சர்ச்சுக்கும் மசூதிக்கும் ஒரு நியாயம் எங்கள் கோயிலுக்கு ஒரு நியாயமா என்று நடக்காத வேலைபற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். காசுள்ள கோயிலாகிவிட்டதால், ஏகே 4 சகிதம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுவிட்டது. இத்தனைகாலம் இத்தனை கோடிகளை பாதுகாத்து வந்த திருவிதாங்கூர் பரம்பரை பற்றியும் சிலர் சிலாகிக்கிறார்கள்.
 இந்த சிலாகிப்புகளால் அந்தப் பணம் திருவிதாங்கூர் பரம்பரைக்கே சொந்தம் என்கிற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மகாராஜாக்கள் தங்களது கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கி போலத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. திருவிதாங்கூர் ராஜாக்களின் காலத்தில் தாலிக்கு வரி, ஜாக்கெட்டுக்கு வரி, நின்றால் வரி, நடந்தால், வரி என மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை வரலாறு கூறுகிறது. தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டுமானால், மன்னருக்கு வரி செலுத்த வேண்டும். ஜாக்கெட் அணிய வேண்டுமென்றாலும் வரி உண்டு. இந்த வரிகளும் பொதுவானவையாக இருக்கவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு வரிவிலக்கும், ஒடுக்கப்பட்ட சாணார், பரவர், மூக்குவர் போன்ற 18 சாதிகளுக்கு கூடுதலாகவும் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

அய்யாவழிக்காரர்கள் கூறும் இந்தச் சொற்கள் அதற்கு ஒரு சாம்பிள்.

“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”

வரிகள் அனைத்தும் எப்படிக் கொடுமையாக வசூலிக்கப்பட்டன என்பதற்கும் பதிவுகள் இருக்கின்றன. இப்படி வசூலிக்கப்பட்ட வரிப்பணம்தான் கோயில்களிலும் அரண்மணைகளிலும் முடக்கிவைக்கப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பத்மநாபர் கோயிலும் அதில் ஒன்று. ஆதிக்க சாதியினரின் சுவிஸ் வங்கி போலச் செயல்பட்டது. இப்போது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுவோர், அந்தக் காலச் சுவிஸ் வங்கி பற்றி எதுவும் பேசுவதில்லை. சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று சொல்ல முடியும். ஆனால் பத்மநாபர் கோயிலில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசுக்கு சொந்தமானதில்லை. அந்தப் பணம் நம் அனைவருக்கும் பொதுவானதும் இல்லை. அது குமரி மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மூதாதையர் சொத்து. இதை மனதில் கொண்டு மேற்கொண்டு பேசலாம்.

..
..

..

Saturday, April 23, 2011

தந்திரமாக ஒடுக்கப்பட்ட புரட்சி

 அண்ணா ஹஸாரேவுக்குப் பின்னால் நாடே திரண்டது. சிலர் மெழுகுவர்த்தி ஏற்றினார்கள், சிலர் பேரணி நடத்தினார்கள், மிஸ்டுகால் கொடுத்தார்கள், எஸ்எம்எஸ் அனுப்பினார்கள், பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் பிரசாரம் செய்தார்கள். துனீஷியாவிலும், எகிப்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சிகளுடன் ஊடகங்கள் இதை ஒப்பிட்டன. நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மனநிலை இருக்கும் தருணத்தில் இப்படிப்பட்ட எழுச்சி அவசியமான ஒன்றுதான் எனப் பேசப்பட்டது. ஹஸôரேயின் விருப்பப்படி புதிய வடிவிலான லோக்பால் சட்டம் வந்துவிடும், ஊழலை ஓரளவுக்காவது ஒழித்துவிடலாம் என்று நாடே நம்பியது.

 செல்போன், இன்டர்நெட், 24 மணி நேர தொலைக்காட்சி என தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்டதால் ஊழலுக்கு எதிரான உணர்ச்சி நாடு முழுவதும் பரவியது. இதற்குப் பிறகுதான் லோக்பால் மசோதாவை உருவாக்கும் வரைவுக்குழுவில் ஹஸôரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்களைச் சேர்த்துக்கொள்ள அரசு ஒப்புக்கொண்டது. அவ்வளவுதான், எல்லாக் கோரிக்கைகளும் ஏற்கப்படும்வரை ஹஸôரேயின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனக் கூறி வந்தவர்கள், திடீரெனப் பின்வாங்கினர். அவ்வளவு ஏன், குறைந்தது 7 நாள்கள்வரை தம்மால் உடல்ரீதியாக எந்தப் பிரச்னையுமில்லாமல் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்ற கூறிவந்த ஹஸôரேகூட, போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

 ஒரு குழு அமைக்கப்பட்டது லட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஒரு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா? யார் யாரெல்லாம் இந்த ஊழல் கறைபடிந்த அரசைத் தாங்கிப் பிடிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களையே உறுப்பினர்களாகவும் தலைவராகவும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது எந்த வகையில் வெற்றியாகும்? யார்மீதெல்லாம் குற்றம்சாட்ட முற்பட்டோமோ அவர்களேதான் நீதிபதிகளாக அமர்ந்திருக்கிறார்கள். இதை எப்படி வெற்றியென்று கூற முடியும்?

 ஒரு வழக்கமான குழு அமைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். மக்கள் தரப்பிலிருந்து 5 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக ஹஸôரே விரும்பியபடியான ஜன் லோக்பால் மசோதா நிறைவேறிவிடும் என்று கனவு காண்பது முட்டாள்தனம். நமது அரசியல்வாதிகளின் தந்திரங்களைப் பற்றித் தெரிந்த யாரும் இப்படிக் கனவு காண மாட்டார்கள்.

 இப்படியொரு குழு அமைக்கப்படுவதற்கு நாடு முழுவதும் பரவிய எழுச்சி தேவையேயில்லை. இதை வெற்றி எனக் கொண்டாடுவதை உண்மையிலேயே ஊழலுக்கு எதிராகப் போராடும் மனநிலையில் இருக்கும் பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஹஸôரேயின் உண்ணாவிரதத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிகப்பெரிய மாற்றம் வரக்கூடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

 ஹஸாரேயையும் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேலி செய்வோருக்கும் இது வசதியாகப் போய்விட்டது. ஐபிஎல் போட்டிகளுக்கு டி.வி.பெட்டியின் முன்பு கூடும் கூட்டத்தையும், ஹஸôரேவுக்குப் பின்னால் திரண்ட கூட்டத்தையும் ஒப்பிட்டு இவர்கள் நையாண்டி செய்கிறார்கள். ஐபிஎல்லுக்கும் உலகக் கோப்பை போட்டிக்கும் இடையிலான இடைவேளை இது என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.

 ஹஸôரே, சாந்திபூஷண் உள்பட வரைவுக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. ஒருகட்டத்தில் எல்லோருமே இப்படித்தான் என்கிற தோற்றம்கூட உருவாக்கப்படலாம். இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பதுதான் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. ஒரு வழியாக தங்களுக்கு எதிரான போராட்டத்தை அரசியல்வாதிகள் நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள்.

 துனீஷியாவிலும், எகிப்திலும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தபோது, அவர்களை வழிநடத்த யாருமேயில்லை. ஆனாலும் இலக்கை நோக்கிப் போராட்டம் தொடர்ந்து முன்னேறியது. கடைசிவரை யாரும் ஓயவேயில்லை. அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்கிறோம், தேர்தலுக்குப் பிறகு பதவி விலகுகிறோம் என்று அரசியல்வாதிகள் தந்த போலியான உறுதிமொழிக்கு அந்த மக்கள் ஏமாறவில்லை. பதவி விலகும்வரை போராடினார்கள். இறுதியில் வெற்றியும் பெற்றார்கள்.

 இந்தப் போராட்டங்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்புதான். பணக்காரர் முதல் ஏழைகள் வரை, படித்தவர் முதல் எழுத்தறிவில்லாதவர் வரை அனைவரும் கலந்து கொண்டனர். ஏனென்றால், எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தனர். நாடு எந்தவகையில் சுரண்டப்படுகிறது என்கிற விவரம் எல்லா தரப்பினரிடமும் எடுத்துச் செல்லப்பட்டது.

 ஆனால், நமது நாட்டில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டம், அடித்தட்டு மக்களை எட்டவேயில்லை. இதனால்தான் மக்கள் கிளர்ச்சிக்கு இந்தப் போராட்டம் மிக மோசமான முன்னுதாரணமாகிப் போயிருக்கிறது. இதன் முடிவு அரசியல்வாதிகளுக்கு மிகவும் சாதகமாயிருக்கிறது. இதுதான் லோக்பால் மசோதா, இதை நிறைவேற்றுவதற்கு அரசு ஒப்புக்கொள்ளும்வரை போராடுவோம் என்கிற இலக்குடன் தொடங்கப்பட்ட உண்ணாவிரதமும் அதன் பின்னணியில் ஏற்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சியும், இலக்கை எட்டாமலேயே முடிவடைந்தன.

 ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தொடர்ச்சியான ஒன்று; ஒரே நாளில் வெற்றி கிடைத்துவிடாது என்பதெல்லாம் சரிதான். அதேசமயம், இப்போது நாம் போராடியதில் நமக்கு என்ன முன்னேற்றம் கிடைத்தது என்பதுதான் போராட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவும்.

 போராட்டம் வெற்றி பெற்றால் மீண்டும் அதேபோன்ற போராட்டம் நடத்த முடியும். மக்களும் ஆர்வமாகப் பங்கேற்பார்கள். போராட்டம் தோற்றுப்போனால்கூட, அதே நோக்கத்துக்காக மக்களை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். ஆனால், ஒரு போராட்டம் வெற்றியும் இல்லாமல், தோல்வியும் இல்லாமல் குழப்பமாக முடிந்தால், போராட்டத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையே போய்விடும். கிட்டத்தட்ட அப்படித்தான் முடிந்திருக்கிறது நமது ஊழலுக்கு எதிரான போராட்டம்.

 இத்தனை வயதான காலத்தில் ஹஸாரே தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படி வலியுறுத்துவது மனிதாபிமானமற்ற செயலாகத்தான் இருக்கும். ஹஸாரேயின் நோக்கத்தையும் அவரது செயல்பாட்டையும் யாரும் குறைகூறவும் முடியாது. நமது அரசியல்வாதிகள் மிகவும் தந்திரசாலிகள் என்பதை போராட்டத்தை வழிநடத்தியவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்பதுதான் நமது வருத்தம்.

..

Saturday, March 12, 2011

தினமலர் செய்திருக்கக் கூடாது!


ஜப்பானில் சுனாமியால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. சுனாமியின் பயங்கரத்தை நேரடியாக அறிந்தவர்கள் என்ற முறையில் ஜப்பான் சுனாமி காட்சிகளைப் பார்த்த தமிழகத்து மக்களுக்கு அனுதாபம் பிறந்திருக்கும். சுனாமியால் சொந்தங்களைப் பறிகொடுத்தவர்களுக்கு கண்ணீரே வந்திருக்கும். சுனாமியில் உயிர் பிழைத்தவர்களுக்கு பழைய பயங்கரமான மரண ஓலங்கள் நினைவுகள் வந்திருக்கும். சுனாமி செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு மார்ச்சுவரியில் கேட்ட அழுகுரல்கள் திரும்பவும் காதுகளில் ஒலித்திருக்கும். சுனாமியில் இறந்தவர்களை மொத்தமாக ஒரே குழியில் போட்டு புதைத்த படங்களை பத்திரிகையில் அப்போது பார்த்தவர்களுக்கு ஜப்பானின் சுனாமி அலைகள் மீண்டும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கும். நமது சொந்தங்களை கடல் அள்ளிச் சென்று 6 ஆண்டுகள்தானே ஆகியிருக்கிறது. அதற்குள் அதை எப்படி மறந்திருக்க முடியும்?

ஆனால், அதிகம் பேர் படிக்கும் ஜனரஞ்சகமான தினமலர் அதை மறந்துவிட்டது போலும். ஒரு இயற்கைச் சீற்றம் நடந்தால் அதை எப்படிச் செய்தியாக்க வேண்டும் என்பது ஒரு சுனாமி வந்து போனபிறகும் நமது பத்திரிகையாளர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்பது வேதனையளிக்கிறது. சுனாமி தாக்கிய நேரத்தில் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த பெண்களிடம் போய் மைக்கை நீட்டி "எப்படி உணர்ந்தீர்கள், இன்னொரு சுனாமி வந்தால் என்ன செய்வீர்கள்" என்று நமது தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் கேட்டார்களாம். அதை விட அருவெறுப்பாக கடந்த 12-ம் தேதியிட்ட தினமலர் முதல்பக்கம் இருந்தது.

சுனாமியால் பாதிக்கப்பட்டு குடிநீருக்காகவும், துணிகளுக்காகவும் கி.மீ. கணக்கில் வரிசையில் நிற்கும் ஜப்பானிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் இருக்கும் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. நெருக்கடியான தருணங்களைக் கடப்பதற்கு அவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"ஏன் இந்த மக்களையே மீண்டும் மீண்டும் தாக்குகிறாய் இயற்கையே" என்று உலகமே கண்ணீர் வடிக்கிறது.  சரி அந்த அளவுக்கு அனுதாபம் இல்லாவிட்டாலும், ஜப்பானில் உள்ள தமிழர்களுக்கு நிலையை நினைத்தாவது சுனாமி செய்தியை கவனமாக பிரசுரித்திருக்கலாம். ஆனால் முதல்வரின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையைும் சுனாமியையும் ஒப்பிட்டு எழுதியது பத்திரிகை தர்மத்தை மீறிய செயல்.

முதல்வரின் குடும்பம் சிபிஐ வளையத்துக்குள் வந்த செய்தி "இவர்களுக்கு நல்லா வேணும்" என்ற எண்ணத்தை பலருக்கு ஏற்படுத்தியிருக்கலாம். ஜப்பானியர்களை கொன்று குவித்த சுனாமி பற்றியும் தமிழன் அப்படித்தான் கேலியாக நினைக்கிறானா? நிச்சயமாக இருக்க முடியாது.  தினமலர் மட்டும்தான் அறியாமல் செய்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஜப்பானில் வசிக்கும் தமிழர்களும், தினமலர் செய்தியைப் படித்த தமிழ் தெரிந்த ஜப்பானியர்களும் இந்த செய்திக்காக நம்மை மன்னிக்க வேண்டும்.
..
.

Monday, February 07, 2011

ஆசிரியர்களை ஏன் அரசு மதிக்கிறது? ஒரு வயிற்றெரிச்சல்

"ஓ அவனா? என் ஸ்டூடன்ட்தான்" என்று பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்கள்தான் ஆசிரியர்கள். பெரிய பதவி ஏதாவது கிடைத்தால், தனக்கு பயிற்றுவித்த ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடித்து நன்றி தெரிவிக்கும் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். தமக்குக் கிடைக்கும் கௌரவத்தை தனது ஆசிரியருடன் பகிர்ந்துகொள்ள விரும்புவோர் மிக அதிகம். இது உண்மையான நன்றி நவிலலாகவோ, மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டியவரை வெட்கப்பட வைக்க வேண்டும் என்ற பழிவாங்கும் நடவடிக்கையாகவோ இருக்கலாம்.

ஆனால், ஏதோ ஒரு வகையில் ஆசிரியர் குலம் கவனிக்கப்படுகிறது. எல்லோருடைய செயல்களிலும் எழுத்திலும் பேச்சிலும் அவரவர்க்குப் பாடம் நடத்திய ஏதாவது ஒரு ஆசிரியரின் சாயல் இருக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு இந்த உலகத்தில் மிக மிக முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். அதுவும் பள்ளி ஆசிரியர்கள், நிச்சயமாக என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியவர்கள். ஒருவர் எவ்வளவு உயர் நிலைக்குச் சென்றாலும், பள்ளிக்கூட வாத்தியாரை மறந்திருக்க மாட்டார். அது நேர்மறை அல்லது எதிர்மறைக் காரணங்களுக்காக இருக்கலாம்.

இந்த ஆசிரியர்கள் பயின்ற மாணவர்கள் மட்டுமல்ல அரசும் மதிக்கிறது. அரசின் மரியாதை மாணவர்கள் தரும் மரியாதையைக் காட்டிலும் பன்மடங்கு பெரிது. அவன் என் மாணவன்தான் என்று கூறுவதில் அடையும் பெருமையைவிட, நான் ஒரு அரசுப் பள்ளியின் ஆசிரியர் என்று கூறுவதில்தான் இன்றைய ஆசிரியர் குலம் பெருமை கொள்கிறது.
ஒரு மாணவன் ஆசிரியரை மதிப்பதற்கு ஒரேயொரு காரணம், ஏதோ ஒருவகையில் இவன் வாழ்க்கையில் வெற்றிபெற அவர் உதவியிருக்கிறார் என்பதாகத்தான் இருக்கும். ஒரு ஆசிரியரை அரசு மதிப்பதற்கும் இதேபோன்றதொரு காரணம்தான்.

இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்தில் எந்த அளவுக்குப் பாடம் நடத்துகிறார்கள் என்பது அரசுப் பள்ளிகளைப் பார்த்தாலே தெரியும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பள்ளிகள் நல்லவிதமாக நடந்து கொண்டிருக்கலாம். பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகள் ஆசிரியர் அரட்டையடிக்கும் பொழுதுபோக்குக் கூடமாகவே இருக்கின்றன. ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளை செய்துவிட்டு எப்போதாவது நேரமிருந்தால்தான் பாடம் நடத்துவார்கள். பள்ளியே ஒரு ஆண்டில் 180 நாள்கள் செயல்படும் எனும்போது, இந்தச் செயல்படும் நாள்களிலும் மீதமுள்ள எல்லாவகையான விடுப்புகளையும் எடுத்துக் கொள்வார்கள். ஆண்டுக் கணக்கில்கூட அரசு விடுப்புத் தருகிறது.

சம்பளம் மற்றும் இதரப் படிகளைக் கேட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளக்கூடாது.  உலகிலேயே ஆள்குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரப் பெருமந்தத்தால் பாதிக்கப்படாத கம்பெனி நமது தமிழ்நாடு அரசும், இந்திய அரசும்தான். இங்கு யாரையும் அவ்வளவு எளிதாக டிஸ்மிஸ் செய்து விட முடியாது. இத்தனையும் பெற்றுக்கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்தச் சமூகத்துக்குத் திருப்பிச் செய்வது பூஜ்ஜியம் மட்டுமே. இதில் ஒன்றிரண்டு விலக்குகள் இருக்கின்றன. இங்கு சொல்லப்படுவது பெரும்பான்மைக் கணக்கு மட்டுமே.

சரி இப்படி எந்த வகையிலும் சமூகத்துக்குப் பயன்படாமல் போய்விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏன் இவ்வளவு மரியாதையை அரசு தர வேண்டும்? அங்குதான் இருக்கிறது சூட்சுமம். தேர்தலில் வாக்களிப்பது யார் என்று நமக்குத் தெரியும். வேறு யார் வாக்காளர்கள்தான். தேர்தலை நடத்துவது, பெரும்பாலான இடங்களில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்தான்.

ஒரு வாக்குச் சாவடிக்கு காவல் இருக்கும் போலீஸ்காரர், வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாகவே வாக்குச் சாவடிக்கு வந்துவிடுவார். வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்வரை அவர் காவல் பணியில் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு நாள் பேட்டா அதிகபட்சம் ரூ.100 (நம்மூர் சிக்கன் பிரியாணியே ரூ.120 ). இந்த காசைக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் யாரையாவது பார்த்துக் கையேந்துவார் இந்த போலீஸ்காரர். எந்தக் காரணம் கொண்டும் வாக்குப் பதிவு நடக்கும் சாவடிக்குள் இவர் செல்லவே முடியாது.

ஆனால், வாக்குச் சாவடி அதிகாரிகளாகப் பணியாற்றும் ஆசிரியர் குலத்துக்கு சிக்கன் பிரியாணி மேஜைக்கே வரும். குறைந்தபட்சம் ரூ.850 முதல் ஆயிரத்து 500 வரை பேட்டா கிடைக்கும். சிக்கன் பிரியாணி எதற்காகக் கொடுக்கப்படுகிறதோ அதற்காகவேதான் இந்த பேட்டாவும் கொடுக்கப்படுகிறது என்பதை வெகுஜனம் புரிந்து கொள்ள வேண்டும். 2006 தேர்தலில் வெறும் 45 ஓட்டுகள்தான் போட்டேன் என்று எனக்குத் தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பீற்றிக் கொண்டது எனக்கு இங்கே நினைவுக்கு வருகிறது.

அரசு ஊழியர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஓட்டுப் போட்டால்கூட வெறும் 10 சதவீத வாக்குக்கூட தேறாது. இது எந்த வகையிலும் ஆட்சி மாற்றத்துக்கு உதவவே உதவாது. ஆனால், வாக்குச் சாவடிக்குள்ளே அவர்கள், "பணி"யாற்றுகிறார்களே அதற்காகத்தான் இந்த மரியாதையெல்லாம். ஆனால் ஆசிரியர்களுக்கே இது தெரியாது. ஏதோ நமது பணியைப் பாராட்டித்தான் அரசியல்வாதிகளுக்கு நமக்கு சலுகைகளை அள்ளிவீசுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்செஸ் கணக்கெடுக்க செல்ல மாட்டோம் என்று ஆசிரியர்கள் போராடுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கச் செல்ல மாட்டோம் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். தைரியமிருந்தால், அனைத்து ஆசிரியர் யூனியன்களும் சேர்ந்து "வாக்குச் சாவடிப் பணியைச் செய்யமாட்டோம்" என்று போராட்டம் நடத்தட்டுமே பார்க்கலாம். அதன் பிறகு தெரியும் இந்த அரசியல்வாதிகள் தரும் உண்மையான மரியாதை.

.

..
...

Wednesday, February 02, 2011

பிசிசிஐ அணி, இந்தியாவின் அணியா?


இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்வதற்கு பிசிசிஐ என்கிற தனியார் அமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி அண்மையில் பரபரப்பை எழுப்பியது. இந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாருமில்லை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்தான். இது ஏதோ விவரம் தெரியாமல் கேட்கப்பட்ட கேள்விபோலத் தோன்றினாலும், இந்திய விளையாட்டுத் துறையின் பல்வேறு அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கு இந்தக் கேள்வி பயன்பட்டிருக்கிறது.

 ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளைக் கண்காணிக்கும் அமைப்பு. எந்த நாட்டு அரசுக்கும் தனியாகப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத தன்னிச்சையான நிர்வாகத்தைக் கொண்டது. வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வரி செலுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் லிமிடெட் கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் சொர்க்கபூமியான, மொனாக்கோ என்கிற குட்டிதேசத்தில்தான் இந்த நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. இப்போதும் அதே காரணத்துக்காக துபையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.


 இந்தக் கிரிக்கெட் அமைப்பின் அங்கம்தான் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற பிசிசிஐ. இதுவும் முழுக்க முழுக்கத் தனியார் அமைப்பு. கூட்டுறவு சங்கச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதால், இந்த அமைப்பின் லாப நஷ்டக் கணக்கை பொதுவில் வெளியிடுமாறு கோர முடியாது. அதாவது, சட்ட விதிகளின்படி கிட்டத்தட்ட இது ஒரு தொண்டு நிறுவனம். காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் நடந்தால் கேட்பதைப்போல கிரிக்கெட்டில் ஊழல் நடந்தால் கேட்க முடியாது.


 கிரிக்கெட் விளையாடுவதும் அதைப் பிரபலப்படுத்துவதும் சேவை என்பதாகக் கூறி பிசிசிஐ அமைப்புக்கு முழு வரி விலக்கு வழங்கப்பட்டிருந்தது. சில அரசு மைதானங்கள் அடிமாட்டு வாடகைக்கு பிசிசிஐக்குத் தரப்படுகின்றன. இந்திய இளைஞர்களுக்கு உதாரண புருஷர்களாகத் திகழும் பல வீரர்களும் வரிவிலக்கைப் பயன்படுத்தி விதவிதமான சலுகைகளை அனுபவித்திருக்கிறார்கள். சொகுசு கார்களுக்கு வரிவிலக்கு கோரி, சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் அரசுக்குக் கடிதம் எழுதிய கதைகளும் உண்டு.


 ஆனால், கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல செயல்படும் பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகள் மூலமாகவும், பயிற்சி மையங்கள் மூலமாகவும், வேறு பலவகைகளிலும் கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு செய்வது முழுக்க முழுக்க வியாபாரம் மட்டுமே.


 இந்தியா ஒரு வளரும் நாடு. ஏழைகள் நிறைந்த நாடு. ஆனால், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அப்படிச் சாதாரணமானதல்ல. தனது பண பலத்தால், உலகின் மற்றக் கிரிக்கெட் வாரியங்களுக்கு உத்தரவிடும் அளவுக்கு அதிகாரம் கொண்டது.


பிசிசிஐ நினைத்தால் எந்த நாட்டில் வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம், அல்லது நிறுத்தலாம், மாற்றி அமைக்கலாம். எந்த அணியை வேண்டுமானலும் நசுக்கலாம். மேலே கொண்டு வரலாம். அந்த அளவுக்கு இந்திய மக்களின் தலைகளையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் சந்தைப்படுத்தி பிசிசிஐ செல்வாக்குப் பெற்று வந்திருக்கிறது.


 இந்தியாவில் போட்டியாக உருவாகும் எந்த அமைப்பையும் பிசிசிஐ வளரவிட்டதில்லை. வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தால், இந்திய அணியில் ஆட முடியாது என்று வீரர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். கபில்தேவ் தலைமையில் உருவான ஐசிஎல் நசுக்கப்பட்டது இப்படித்தான். அந்த அளவுக்குக் கிரிக்கெட்டை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறது பிசிசிஐ.


 இந்தியாவின் எண்ணெய் வளம், 2ஜி அலைக்கற்றை போன்றவையெல்லாம் இயற்கை வளங்கள் என்றால், கிரிக்கெட்டும்கூட தேசத்தின் சொத்துதான். 2ஜி, 3ஜிக்கெல்லாம் ராயல்டி கேட்கும் இந்திய அரசு, எந்த ராயல்டியும் இல்லாமல் ஒரு தனியார் அமைப்பு இந்தியாவின் வளத்தை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை எப்படி அனுமதிக்கிறது? இந்தக் கேள்வியைத்தான் அமைச்சர் எம்எஸ் கில் கேட்டார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் தலைமை அமைப்பு என்கிற அங்கீகாரத்தையும் பிசிசிஐயிடம் இருந்து பறித்தார்.


 இப்போது விழித்துக் கொண்டிருக்கும் வருமான வரித்துறை பிசிசிஐ என்பது சேவை நிறுவனமல்ல, அது செய்வது பொதுநலப் பணியுமல்ல எனக் கூறிவிட்டது. லாபம் ஈட்டும் வியாபாரத்தை மேற்கொண்டிருக்கும்  பிசிசிஐ இனி வரி செலுத்த வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.


 இந்த ஐசிசியும், பிசிசிஐயும் இணைந்துதான் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகளுடன் வேறு 4 அணிகளும் பங்கேற்கின்றன.


200-க்கும் மேற்பட்ட இறையாண்மை கொண்ட நாடுகள் இருக்கும் உலகில், வெறும் 10 நாடுகளுக்குத்தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடத் தெரிந்திருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் ஐசிசியால் இதைத்தான் சாதிக்க முடிந்திருக்கிறது. கிரிக்கெட்டுக்கு இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் மவுசைக்காட்டி கிட்டத்தட்ட 90 நாடுகளில் ஒப்புக்குச் சப்பாணியாக அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.


 முழுமையாகக் கிரிக்கெட் ஆடத் தெரிந்த வெறும் 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒரு போட்டியை உலகக் கோப்பைப் போட்டி என்று கூறுவதே அபத்தம் இல்லையா?இதைக் கேட்டால், கால்பந்தைப்போல் நாங்களும்தான் தகுதிச் சுற்றுகள் நடத்துகிறோம் என்பார்கள். ஆனால், அதெல்லாம் ஒரு கணக்குக்காக மட்டும்தான் என்பது அந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

 சாமான்ய இந்தியன் இதையெல்லாம் பார்ப்பதில்லை. தேசப்பற்று பணமாக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் அவன் கவலைப்படுவதில்லை. அவனுக்குத் தேவை இந்தியா என்கிற பெயரில் எந்த அணி ஆடினாலும் அது ஜெயிக்க வேண்டும். இதனால், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அசாருதீன் எம்.பி. ஆகிறார்; பிசிசிஐ பற்றி கேள்வி எழுப்பிய கில் பதவியிலிருந்து மாற்றப்படுகிறார். இதுதான் இந்தியா.
..


Monday, January 31, 2011

இதை வினவு, அதை வினவாதே!

தமிழ்நாட்டில் மிக சென்சிட்டிவான பிரச்சனை மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றியது. ட்விட்டரும் பேஸ்புக்கும் இதுபற்றிய செய்திகளால்தான் இப்போது நிரம்பியிருக்கின்றன. ஆனாலும் மிகச் சொற்ப அளவிலேயே பிரச்னையின் மையம் பற்றி பேசப்படுகிறது. இந்தியா என்பது மிக மோசமான நாடு என்பதைச் சித்தரிக்கும் போக்கைக் காண முடிகிறது. இந்தியா என்பது தற்போதிருக்கும் இந்திய அரசா அல்லது மொத்தமாகவே இந்தியா என்கிற நாடா என்பது பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போக்குத் தொடர்ந்தால் கொஞ்சநாள் கழித்து இந்தியா என்கிற நாடு தமிழர்களின் எதிரி நாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. 

விநாயக் சென் உள்பட புரட்சி சித்தாந்தம் கொண்டவர்கள் கூட இந்தியா என்கிற நாட்டை எதிர்க்கவில்லை. இப்போதிருக்கும் பொருளாதார நிர்வாகக் கொள்கைகளையும் அரசியல் சட்டத்தின் ஓட்டைகளையும் போலி அரசியலையும்தான் எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழர் பிரச்னை பற்றிப் பேசுவோர், இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று சரளமாக எழுதுகிறார்கள். இந்தியாவை துரோகியாகச் சித்திரிக்கிறார்கள். 


எங்கள் துப்பாக்கிகளை மௌனத்தில் ஆழ்த்துகிறோம் என்று புலிகள் இயக்கம் கூறியதுகூட, இந்தியா மீதான நம்பிக்கையின்பேரில்தான். அவர்கள் நினைத்தபடி நாம் வாக்களிக்கவில்லை, அதனால் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. அதனால்தான், எல்லாம் முடிந்து போயிற்று. புலிகள் இயக்கத்துக்கு இருந்த நம்பிக்கைகூட இன்று மீனவர்கள் பிரச்னை பற்றிப் பேசும் தமிழர்களுக்கு இல்லை என்பதுதான் வேதனை. பிரச்னைக்குக் காரணம் இப்போதைய சுயநலமான அரசாக இருக்கலாமே ஒழிய, இந்தியா என்கிற தேசமாக இருக்க முடியாது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் மறந்துபோவது சிலருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் ஜனநாயக ஒரு அரசியல் சூழலில் இருக்கும் நமக்கு நல்லதல்ல. கையில் வாக்கு எனும் ஆயுதத்தை வைத்துக் கொண்டு வேறு ஆயுதங்களைத் தேடுவதும் சரியல்ல.

நம்பர் ஒன் தளம் ஒன்றில் காணக் கிடைத்த சில ட்விட்டர் செய்திகள். மீனவர்களுக்கு ஆதரவாக எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி இவை வெளியிடப்பட்டிருக்கின்றன.


    வட இந்தியாவின் காசி ஒரு புனித நகரம். தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் ஒரு கொலை நகரம். பக்தர்களுக்கு  இரத்த்தீர்த்தம் நிச்சயம் 


    இராமேஸ்வரம் இராமநாதனுக்கு தினமும் மீனவர் ரத்த அபிஷோகம், காசி விசுவநாதனுக்கு பாலாபிஷேகம், இந்து  பக்தர்கள் அறிவார்களா? 


    காசிக்கு போனா புண்ணியம் கிடைக்குமாம். இராமேஸ்வரம் வந்தா சுடுகாட்டு ஓலம் நிச்சயம். மீனவர் சுடுகாடு பராமரிப்பு இந்திய அரசு


    காசி முதல் ராமேஸ்வரம் பாரத ஒற்றுமையாம். செத்து விழும் மீனவனுக்கு உதவாத அந்த ஒட்டுமை – அழகா, அருவெறுப்பா, அலட்சியமா?


    அமர்நாத்துல 5லட்சம் பக்தர்களுக்கு 5லட்சம் இராணுவம் பாதுகாப்பு! இராமேஸவரத்துல ஐநூறு மீனவர்களப் செத்ததுக்கு யார் பொறுப்பு?


    எல்லை தாண்டுற மீனவரை கைது செய்யுது பாக் அரசு. எல்லை தாண்டுற தமிழ் மீனவரை கொல்லுது இலங்கை அரசு!  பதில் சொல் இந்தியஅரசு!


    காஷ்மீரில கல்லெறியும் சிறுவர்களை கொல்வது இந்திய அரசு! வங்க கடலில் மீன்படிக்கும் மீனவரை கொல்வது இலங்கை அரசு!


    காஷ்மீரை சுடுகாடாக்குனது இந்திய இராணுவம். வங்க்கடலை குருதிக்கடலாக்குனது இலங்கை கடற்படை! ஸ்ரீநகர் முதல் குமரி வரை ஓலம்! 


    காஷ்மீருக்கு ஆசாதின்னு அருந்ததிராய் சொன்னா கைது செய்வான்! பாம்பனில் மீனவர் ஆயுதம் ஏந்துனா என்ன செய்வான்?


    சென்னையில் கடலோரகாவல் படை சாகசத்தை நாம் வேடிக்கை பாக்கலாம். வங்ககடலில் மீனவர் சடலத்தை அந்த வீரர்கள் வேடிக்கை பார்ப்பர்!


    கொல்லப்படும் மீனவர்களுக்கு, கொல்லும் இலங்கைக்கு, வேடிக்கை பார்க்கும் இந்தியாவுக்கு – அடையாளமில்லையா? மிஸ்டர் செட்டிநாடு? 


    தப்பு செய்யுற மீனவர்கள கொல்லக்கூடாதாம், கைது செய்யணுமாம்-பிரணாப் முகர்ஜி. எங்க மீனவர்கள் என்ன சாராயமா காய்ச்சுராங்க?


    எல்லை தாண்டிபோறதுனாலாதான் இந்த பிரச்சினையாம்-இந்தியன் நேவி. மீன்பிடிக்கிற மீனவருக்கு எல்லை எப்படி தெரியும் முட்டாள் நேவி?


    ராமன் பாலம் கட்டுனான்ற புளுகு மூட்டைக்கு சேது திட்டத்தை நிறுத்துன உச்சிகுடுமி மன்றம் 500 மீனவர்களுக்கு என்ன பிடுங்கியது? 


    நிரூபமா விஜயம்! கொலைகார ராஜபக்சேவுக்கு உதவும் இந்தியாவுக்கு அங்கீகரிக்கும் உலகத்துக்கு ஒரு நாடக விஜயம்!


    ரஜினி எந்திரனுக்கு பீராபிஷேகம் செய்த ரசிகனே, எம் மீனவர் இரத்தம் சிந்தியபோது உன் சூப்பர்ஸ்டார் எங்கே, சரக்கு அடிக்கிறானோ!


    காவலன் படம் ரீலீசாகவில்லை என்று பொங்கிய இளையதளபதி நம் மீனவர் வீழும்போது அடுத்த பட ஷூட்டிங்கில் பொங்குகிறாரா?


    சீதையை இராவணன் தூக்கியதாக இராமன் தொடுத்தான் யுத்தம். 500 மீனவர் செத்தாலும் இங்கே ஒன்றுமேயில்லை என வெறும் நிசப்தம்!


    ஸ்ரீநகருல கொடி ஏத்த துடிச்ச குரங்கு கூட்டம், சேது திட்டத்தை நிறுத்துன வானரக் கூட்டம் மீனவர் சாகும் போது நல்லா நாடகமாடும்


    தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பலி என்று கொன்னவனை மறைத்து செய்தி போடும் இந்துராம்- லங்காரத்னாராம்- வெட்கம் கெட்டவராம்!


    செத்து விழும் மீனவரை காப்பாற்றவோ, தடுக்கவோ  வக்கில்லாத இந்திய அரசுக்கு, ஐ.நா சபையில் வல்லரசு தகுதி ஒரு கேடா?


    காஷ்மீரை விடமாட்டோமென கொக்கரிக்கும் தேசபக்த குஞ்சுகளே, எம் மீனவரை காப்பாற்றாத இந்தியாவில் நாங்கள் ஏன் இருக்க வேண்டும்?

இந்த ட்விட்டர் செய்திகள் மீனவர்களுக்கு ஆதரவாக அனைவரையும் இணைத்துவிடும்தானே?

..

..