Sunday, July 03, 2011

பத்மநாபர் கோயில், ஆதிக்க சாதியின் சுவிஸ் வங்கி!

முன்குறிப்பு: இங்கே ஆதிக்க சாதி என்று குறிப்பிடப்படுவது அந்தக் காலத்தைப் பற்றி மட்டுமே. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது. 
 --------------

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள சுரங்க அறைகளின் மர்மம் விலக்கப்பட்டிருக்கிறது. தங்கம், வைரம் என என ரூ.50 ஆயிரம் கோடி அந்த அறைகளில் இத்தனை காலமும் பூட்டிக் கிடந்திருக்கிறது. நம் மக்கள் வழக்கம்போல் இன்னும் ஆச்சரியத்திலிருந்து விடுபடவில்லை.இது யாருக்குச் சொந்தம் என்று இப்போது கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை கோடியைக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிலர் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று "மதச்சார்பற்றவர்கள்" பேசுகிறார்கள். "மதவாதிகளுக்கு" கோயிலைப் பற்றிப் பேசினாலே கோபம் வரும். இந்தப் பணத்தைக் கொண்டு கோயிலை தங்கத்தால் இழைக்க வேண்டும் என்பார்கள். சர்ச்சுக்கும் மசூதிக்கும் ஒரு நியாயம் எங்கள் கோயிலுக்கு ஒரு நியாயமா என்று நடக்காத வேலைபற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். காசுள்ள கோயிலாகிவிட்டதால், ஏகே 4 சகிதம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுவிட்டது. இத்தனைகாலம் இத்தனை கோடிகளை பாதுகாத்து வந்த திருவிதாங்கூர் பரம்பரை பற்றியும் சிலர் சிலாகிக்கிறார்கள்.
 இந்த சிலாகிப்புகளால் அந்தப் பணம் திருவிதாங்கூர் பரம்பரைக்கே சொந்தம் என்கிற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மகாராஜாக்கள் தங்களது கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கி போலத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. திருவிதாங்கூர் ராஜாக்களின் காலத்தில் தாலிக்கு வரி, ஜாக்கெட்டுக்கு வரி, நின்றால் வரி, நடந்தால், வரி என மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை வரலாறு கூறுகிறது. தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டுமானால், மன்னருக்கு வரி செலுத்த வேண்டும். ஜாக்கெட் அணிய வேண்டுமென்றாலும் வரி உண்டு. இந்த வரிகளும் பொதுவானவையாக இருக்கவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு வரிவிலக்கும், ஒடுக்கப்பட்ட சாணார், பரவர், மூக்குவர் போன்ற 18 சாதிகளுக்கு கூடுதலாகவும் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

அய்யாவழிக்காரர்கள் கூறும் இந்தச் சொற்கள் அதற்கு ஒரு சாம்பிள்.

“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”

வரிகள் அனைத்தும் எப்படிக் கொடுமையாக வசூலிக்கப்பட்டன என்பதற்கும் பதிவுகள் இருக்கின்றன. இப்படி வசூலிக்கப்பட்ட வரிப்பணம்தான் கோயில்களிலும் அரண்மணைகளிலும் முடக்கிவைக்கப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பத்மநாபர் கோயிலும் அதில் ஒன்று. ஆதிக்க சாதியினரின் சுவிஸ் வங்கி போலச் செயல்பட்டது. இப்போது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுவோர், அந்தக் காலச் சுவிஸ் வங்கி பற்றி எதுவும் பேசுவதில்லை. சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று சொல்ல முடியும். ஆனால் பத்மநாபர் கோயிலில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசுக்கு சொந்தமானதில்லை. அந்தப் பணம் நம் அனைவருக்கும் பொதுவானதும் இல்லை. அது குமரி மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மூதாதையர் சொத்து. இதை மனதில் கொண்டு மேற்கொண்டு பேசலாம்.

..
..

..

11 comments:

Robin said...

//ஆனால் பத்மநாபர் கோயிலில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசுக்கு சொந்தமானதில்லை. அந்தப் பணம் நம் அனைவருக்கும் பொதுவானதும் இல்லை. அது குமரி மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மூதாதையர் சொத்து. // உண்மை.

Karikal@ன் - கரிகாலன் said...

சிந்தனைக்குரிய பதிவு்.

பகிர்ந்தமைக்கு நன்றி!

புதிய பாமரன் said...

அன்று ஆண்ட பழைய பன்னாடைகள், ஆயம் விதித்து, ஆற்றலைச் சுரண்டி, கடவுளின் கல்லரையில் பதுக்கிவைத்தன.
இன்றைய பன்னாட்டுக் கொள்கை பன்னாடைகளால், 'ஆன்டிக்' மோகத்தில், அத்தனையும் பிர்லா அம்பானி மணவாட்டிகளின் மார்புக்குள் பதுக்கப்பட்டுவிடும்!

புதிய பாமரன் said...

அன்று ஆண்ட பழைய பன்னாடைகள், ஆயம் விதித்து, ஆற்றலைச் சுரண்டி, கடவுளின் கல்லரையில் பதுக்கிவைத்தன.
இன்றைய பன்னாட்டுக் கொள்கை பன்னாடைகளால், 'ஆன்டிக்' மோகத்தில், அத்தனையும் பிர்லா அம்பானி மணவாட்டிகளின் மார்புக்குள் பதுக்கப்பட்டுவிடும்!

Anonymous said...

இக்கோயிலின் மகிமை. சட்டையை கழட்டி வைத்துவிட்டுத்தான் உள்ளே செல்லவேண்டும். ஏன்? பூணூல் தெரியவேண்டுமா? பூணூல் இருந்தால் சிறப்பு வழிபாடா?

நண்பன் said...

மிக நல்ல சிந்தனை. எத்தனை பேரை பட்டினி போட்டு சேர்த்து வைத்த
சொத்தோ அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு போய் சேர வேண்டும்
அரசியல் வாதிகளின் கைகளுக்கு போனால் என்னவாகும் சுவிஸ் வங்கிக்கு தான் போகும் .

ravi said...

Super
!!!!

rajaram said...

திருவிதாங்கூர் மன்னர்களின் சொத்து என்று மட்டுமே கருதலாகாது. இமயம்வரை சென்று கொடி நாட்டிய சேர மன்னர்களின் வழி வழி வந்த சொத்தாககூடஇருக்கலாம்.

marthandan said...

எங்க தாத்தா வுக்கு பங்கு நிறைய உண்டு

Anonymous said...

ithai arasu gazanavil serka vendum

Selvaraj said...

உண்மையை சொல்லியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள். இன்னும் திறக்கப்படாத அறை சித்திரவதைக் கூடமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.