Sunday, July 31, 2011

எகிப்து புரட்சியும் மக்களாட்சியும்

எகிப்து மீண்டும் ஒரு குழப்பமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஹோஸ்னி முபாரக் தப்பி ஓடியதுமே வெற்றி கிடைத்ததாக முழங்கப்பட்டது. ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கு அவகாசம் கேட்டார்கள். அந்த அவகாசம் முடிவடையும் காலம் நெருங்கிவிட்டது.

இப்போது மீண்டும் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. தாஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மனிதத் தலைகள் நிரம்பியிருக்கின்றன. கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன.

சொகுசு மருத்துவமனையில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஹோஸ்னி முபாரக், அவரது இரு மகன்கள் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கைகளில் சுணக்கம் ஏன் என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தலை நடத்துவதில் என்ன தயக்கம் என்று கேட்கிறார்கள்.

நாசர் காலத்து வரலாற்றுப் பாடத்தை இது நினைவூட்டுகிறது. இப்போது ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைதான், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பரம்பரை மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய நாசருக்கும் ஏற்பட்டது. அவர் துணிச்சலாக முடிவெடுத்தார்.

தேர்தலை நடத்தினால் தம்மால் வெற்றி பெற முடியாது; ராணுவ ஆட்சியே தமது கனவுகளைச் செயல்படுத்தும் ஒரே வழி என்று தீர்மானித்தார்; அரசியல் கட்சிகளை ஒழித்தார்; தேர்தல் கூடாதென்றார்; அடிப்படை உரிமைகளை முடக்கினார். ஒரே நாளில் எகிப்து ராணுவ ஆட்சியின் கீழ் வந்தது. சாகும்வரை நாசர் அதிபராக இருந்தார்.

இப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் நாசரைப் போன்று தடாலடியான முடிவெடுக்கக்கூடியவர்கள் அல்லர். ஏற்கெனவே முடிவெடுத்தபடி இன்னும் ஓரிரண்டு மாதங்களில் தேர்தலை நடத்திவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், இந்தத் தேர்தல் மக்களாட்சி கோரி, போராட்டம் நடத்திய எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

மக்களாட்சி என்பதே 49 சதவீதம் பேரின் உரிமையை 51 சதவீதம் பேர் பறிப்பதுதான் என்பார் அமெரிக்காவின் தேசத் தந்தைகளுள் ஒருவரான தாமஸ் ஜெபர்சன். அந்த வகையில், போராட்டம் நடத்திய அனைவருமே தங்களுக்கு ஆதரவான அரசு அமையும் என்று எதிர்பார்க்கக்கூடாதுதான். ஆனால், போராட்டத்தை முன்னின்று நடத்திய எல்பரதே போன்றவர்களின் விருப்பத்துக்கு எதிரான அரசுதான் அமையக்கூடும் என்பது கொஞ்சம் நெருடலானது. அதிபராவார் என்று கருதப்பட்ட எல்பரதேக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

அண்மையில் அல்-ஜசீரா நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இப்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் "பிரதர்ஹுட்' அமைப்பின் சுதந்திர மற்றும் நீதிக் கட்சிக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. சலஃபி கட்சிக்கு 27 சதவீத இடங்கள் கிடைக்கலாம் என்றும் அல்-ஜசீரா கணித்திருக்கிறது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லை, வாக்குரிமை பெற்ற 34 சதவீதம் பேர் படிப்பறிவற்றவர்கள் என்பதெல்லாம் இவர்களுக்குச் சாதகம் என்று கூறப்படுகிறது.

பொதுவான கருத்துப்படி, இரண்டுமே பழமைவாதக் கட்சிகள்தான் என்பதால், கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது. எந்த வகையில் பார்த்தாலும் தேர்தல் நடந்தால், எகிப்தில் அமையப்போவது பழமைவாத அமைப்புகளின் ஆட்சிதான்.

இது மதச்சார்பற்ற இயக்கங்களுக்கு கசப்பான சேதி. மக்களாட்சி வேண்டும் என்று போராட்டம் நடத்திய அவர்கள், பழமைவாத அமைப்புகளின் கையில் ஆட்சிப் பொறுப்பு செல்வதை விரும்பவேயில்லை. இப்படியொரு நிலை ஏற்பட்டால், ஹோஸ்னி முபாரக்கே ஆட்சி செய்துவிட்டுப் போயிருக்கலாம் என்றுகூட அவர்கள் நினைப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இப்போது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தாஹ்ரீர் சதுக்கத்தை முற்றுகையிட்டிருப்போரில் மதச்சார்பற்ற இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரையும் காண முடியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

சலஃபி, நீதிக்கட்சியினர்தான் போராட்டத்தை நடத்துகிறார்களாம். அந்த அளவுக்குத் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளை நினைத்து மதச்சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்போதே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள் போலும்.

அவர்களது அச்சம் ஒருபுறம் இருக்கட்டும். எகிப்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்தால் வேறு மாதிரியான அடையாளச் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நான்காண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு தேர்தல் பாலஸ்தீனத்திலும் நடந்தது. பயங்கரவாதிகள் என்று மேற்கத்திய அரசுகளால் முத்திரை குத்தப்பட்ட "ஹமாஸ்' இயக்கம் அந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை எதிர்பாராத இஸ்ரேலும், அமெரிக்கா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்தை தீண்டத்தகாத நாடாகப் பார்க்கத் தொடங்கின. ஹமாஸ் இல்லாத பாலஸ்தீனத்துடன்தான் பேச்சு என்கிற சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்தன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு புறக்கணிக்கப்பட்டது. ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளெல்லாம் சேர்ந்து மக்களாட்சியைத் தோற்கடித்தன. இது பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. 1990-களின் தொடக்கத்தில் அல்ஜீரியாவிலும் இதுபோன்றே மேற்கத்திய நாடுகளால் மக்களாட்சி முடக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இதே நிலைதான் எகிப்திலும். அடிப்படைவாத அமைப்புகளாகக் கருதப்படும் பிரதர்ஹுட்டும், சலஃபியும் ஆட்சியமைத்தால், அந்த அரசுக்கு நிச்சயமாக மேற்கத்திய ஆதரவு கிடைக்காது. உள்ளூர் "மதச்சார்பற்ற' அமைப்புகளின் ஆதரவும் இருக்காது. ஈரான், வடகொரியா மாதிரியான தேசமாகப் பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

எது எப்படியோ, மக்களாட்சிக்கு வருவது என்பது தீர்மானித்தாகிவிட்டது. முடிவு எப்படியிருந்தாலும் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இன்னொரு சவூதி அரேபியாவோ, துருக்கியோ, இந்தோனேஷியாவோ உருவாவதில் தவறில்லை. ஆனால், அல்ஜீரியாவோ, பாலஸ்தீனமோ வேண்டாம்.

இப்போது மக்களாட்சி வேண்டும் என்று கோரும் பிரதர்ஹுட் அமைப்பு 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே எகிப்தில் தேர்தலை ரத்து செய்ய நாசருக்கு உதவியது. மேற்கத்திய நாடுகள்அல்ஜீரியாவிலும், பாலஸ்தீனத்திலும் இதைச் செய்தன. இன்னொரு முறை அதுபோன்ற வரலாற்றுப் பிழையைச் செய்தால் மக்களாட்சியின் காவலர்கள் என்று கூறிக் கொள்வதில் அர்த்தமேயில்லை.
..

..

No comments: