சமச்சீர் கல்வியா, சாதா கல்வி வேண்டுமா என்று இப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் போய்க்கேட்டால் வெறுத்துப் போய்... ஏதாவது ஒன்றைக் கொடு என்றுதான் கேட்பார்கள். ஆனால் இந்த இரண்டு மாதங்களும் எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று மாணவர்களையும், எதைச் சொல்லித் தருவது என்று ஆசிரியர்களையும் குழுப்பியது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் குழப்பத்துக்கும் தாமதத்துக்கும் ஜெயலலிதாவை மட்டும் குறை சொன்னால் ஏற்க முடியாது. ஜெயலலிதா பதவிக்கு வரும்போதே அனைவருக்கும் தெரியும் அவர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியை விட்டு வைக்கமாட்டார் என்று. அரசின் போக்கிலேயே விட்டிருந்தால் இந்நேரம் காலாண்டுப் பரீட்சை போர்ஷன் முடிந்திருக்கும்.
அண்மையில் சமச்சீர் கல்வி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் ஒருவர் பேட்டியளித்திருந்தார். சமச்சீர் கல்வியை ஏன் வலியுறுத்துகிறீர்கள் என்று நமது நட்புவட்டச் செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். "கல்வியில் எதிலுமே இல்லை, புத்தகத்திலாவது சமச்சீர்" இருக்கட்டுமே என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
இது நல்ல நகைச்சுவை. எல்லோரும் சொல்வது போல இது சமச்சீர் கல்வியல்ல சமச்சீர் பாடப்புத்தகங்கள் மட்டுமே. மற்றபடி கல்வியெல்லாம் சாதா கல்விதான். அதாவது அரசுப் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் சாதா கல்வியும் கிடைக்கும். மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் ஸ்பெஷல் சாதா கல்வியும் கிடைக்கும்.
சமச்சீர் கல்வி என்பதை பாடப்புத்தகத்தில் இருந்தான் தொடங்க வேண்டும் என்று யோசனை சொன்னவருக்கும் இப்போது அதற்காகப் போராடுவோருக்கும் உண்மையிலேயே "சமச்சீர்" அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.
அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இருக்க வேண்டும், அவர்கள் இப்போது இருக்கும் பாடத்தை சரியாக நடத்த வேண்டும். கட்டடங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட வேண்டும், கொடுக்கப்படும் மதிய உணவு தரமாக இருக்க வேண்டும், ஆசிரியர்கள் நேரந்தவறாமல் வகுப்புக்குச் செல்ல வேண்டும் இதெல்லாம் சரியாக இருந்தால்தான் பாடப்புத்தகத்தையே மாணவன் திறப்பான்.
இந்தக் கிராமப்புற மாணவனைப் பற்றியெல்லாம் சமச்சீர் கல்வி வேண்டும் என்போருக்கும், வேண்டாம் என்போருக்கும், போராட்டம் நடத்துவோருக்கும் எந்த அக்கறையும் இல்லை. சமச்சீர் கல்வியின் ஒரே நோக்கம் தனியார் பள்ளிகள் லாபமடைவதை தடுக்க வேண்டும் என்பதுதான். அதனால் ஏழை மாணவனுக்கு என்ன லாபம்?
இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் விற்பனை வரியின் சிறு பகுதியை கல்விக்காகத் திருப்பி விட்டாலே அரசுப் பள்ளிகள் அனைத்தையும் உலகத் தரத்துக்கு மாற்றிவிடலாம். பிறகு யார் தனியார் பள்ளியைத் தேடிச் செல்லப் போகிறார்கள். அடிப்படை அமைப்பிலேயே பிரச்னையை வைத்துக்கொண்டு, புத்தகத்தை மாற்றிக் கொடுத்தால் - அதுவும் மட்டமான - யாருக்கு என்ன பயன்?
இதற்காகச் ஜெயலலிதாவை எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டுவிட்டு எல்லோரும் கைவைக்கத் தயங்கும், கைநீட்டிப் பேசினாலே விமர்சனத்துக்குள்ளாக வேண்டிவரும் என்று அஞ்சும் பெருமதிப்புக்குரிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் "அதே தரத்துடன்" அப்படியே இருப்பார்களாம்... கட்டடங்கள் அப்படியே இருக்குமாம்... நிர்வாகமும் "அதே வேகத்துடன்" நடக்குமாம்... புத்தகத்தை மட்டும் மாற்றி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்துவிடுவார்களாம்... ஏனய்யா இந்த தலைகீழ் வளர்ச்சி?
சூ மந்திர காளி!
..
.
1 comment:
jink juck....
Post a Comment