Sunday, December 18, 2011

கூடங்குளம் போராட்ட வெற்றி, தற்காலிக தமிழர்களுக்குத் தெரியுமா?



ஒரு மாபெரும் வெற்றி, ஒற்றை வரிச் செய்தியாகக் கடந்து போயிருக்கிறது. என்னவென்று யோசிக்கிறீர்களா? கிரெம்ளினில் மெத்வதேவும் மன்மோகனும் நீண்டநேரம் பேசினார்கள். இங்கிருந்து சென்ற பல தொழிலதிபர்களின் நிறுவனங்கள் தொடர்பான தரகு வேலை கச்சிதமாக முடிக்கப்பட்டது. இங்குள்ள ஆளை அங்கும், அங்குள்ள ஆளை இங்கேயும் கோர்த்து விடுவதற்கு கொஞ்சம் நேரம். அதன் பிறகு, கூடங்குளத்தில் தற்போதிருக்கும் அணு உலைகளில் மின்னுற்பத்தியைத் தொடங்குவது, இன்னும் 2 அணு உலைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வது போன்றவை பேசப்பட்டன.

3, 4-வது அணு உலைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவதாக இருந்தது. எல்லா அம்சங்களும் பேசப்பட்டன. இருதரப்பும் ஓகே. இந்தியாவும் இதற்குத் தயாராக இருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் கூடங்குளம் மக்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷியா மறுத்துவிட்டது. அதன் பிறகு தொங்கிய தலையுடன் செய்தியாளர்களைச் சந்தித்த நமது பிரதமர், வீராவேசமாகப் பேசினார். இன்னும் இரு வாரத்தில் அணு உலை செயல்படத் தொடங்கும் என்றார். இது மாபெரும் பொய். கண்டிப்பாக அப்படித்தான் இருக்க வேண்டும்.

3,4-வது அணு உலை தொடர்பான ஒப்பந்தத்தில் ரஷியா கையெழுத்திடவில்லை என்கிற விரக்தியில் மன்மோகன் அப்படிப் பேசியிருக்கிறார். முதல் அணு உலை செயல்படத் தொடங்குவதற்கு மே மாதம்வரை ஆகலாம் என்று அங்குள்ளவர்களே சொல்வதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படியிருக்கையில் இன்னும் 2 வாரங்கள் என கெடு விதிப்பது நிச்சயம் பூச்சாண்டி காட்டும் வேலைதான்.

சரி இந்தப் பூச்சாண்டி வேலை எதற்கு? 3,4-வது அணு உலைகள் விஷயத்தில் தோற்றுப் போனதை மறைக்கவும், இதை வெற்றியாக கூடங்குளம்காரர்கள் கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காகவும், பத்திரிகைகளில் தனது தோல்வி தலைப்புச் செய்தியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான்.

மன்மோகன் அப்படிப் பேசியிருக்காவிட்டால், "3, 4-வது அணு உலை ஒப்பந்தத்துக்கு ரஷியா மறுப்பு" என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிருக்கும். ஆனால், மன்மோகன் தந்திரம்தான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. அவர் நினைத்தது போலவே நடந்திருக்கிறது. இத்தனை காலம் உறுதியாக நின்றவர்களைப் பார்த்து ரஷியா அஞ்சியிருக்கிறது. இந்த விஷயம் கண்டு கொள்ளப்படாமல், பிரதமர் சொன்ன ஒரு பொய்யை எதிர்த்து எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது, ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக்குவது, தமிழக மீனவர்களைக் காப்பாற்றுவது, மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வது, பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நியாயம் பெற்றுத் தருவது என்று ஒவ்வொரு பிரச்னைக்குப் பின்னாலும் பத்து இருபது நாள்கள் மட்டும் ஆட்டுமந்தை போல ஓடிய "தற்காலிகத் தமிழர்கள்" இப்போது கூடங்குளம்காரர்களே அவர்களது பிரச்னையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று தவிக்கவிட்டுவிட்டு தேனிப் பக்கம் ஓடிவிட்டார்கள்.






.


.