Thursday, November 18, 2010

செல்டிக் புலியின் வீழ்ச்சி!

சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும்.

 1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது கட்டுமானத்துறை.

 நவீனகால பொருளாதாரக் கொள்கைப்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு பெருகியது. வீடுகள், மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்தது.

 1995-ல் தொடங்கிய பொருளாதார ஓட்டம், 2000-க்குப் பிறகு உச்சநிலையை அடைந்தது. வழக்கம்போல மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, நுகர்வுச் சந்தையும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசியப் புலிகள் என்கிற பெயரைப் போன்று "செல்டிக் புலி' என்கிற பெயரை தமது பொருளாதார ஓட்டத்தைப் பிரதிபலிப்பதற்காக அயர்லாந்து வைத்துக் கொண்டது.

 ஆனால், 2007-க்குப் பிறகு சரிவு தொடங்கியது. அமெரிக்காவில் உலகப் பொருளாதார மந்தத்தின் அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே அயர்லாந்தின் பொருளாதார மகிழ்ச்சிக் காலம் முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவை ஏமாற்றிய அதே கட்டுமானத்துறை அயர்லாந்தையும் ஏமாற்றியது. வீடுகள், மனைகளின் விலைகள் சரிந்தன. கடன் கொடுத்த முக்கியமான 9 வங்கிகள் திவாலாகின. உதவி கேட்டு அரசிடம் கையேந்தின. அவ்வளவுதான் செல்டிக் புலியின் பாய்ச்சல் நின்று போனது.

 இப்போது நிலைமை இன்னும் மோசம். கடன் பத்திரங்களுக்கு உரிய வட்டியையும் அசலையும் அரசால் திருப்பித் தர முடியுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. நாளுக்குநாள் கடன்பத்திரங்களின் விலை சரிந்து, அதற்கான வட்டிவிகிதம் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க வேண்டுமென்றால் வெளிநாடுகளில் கையேந்துவதைத் தவிர வேறு வழியேயில்லை.

 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பியக் கூட்டமைப்பிலும், 16 நாடுகள் அடங்கிய "யூரோ ஸோன்' எனப்படும் யூரோவை நாணயமாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பிலும் அயர்லாந்து அங்கமாக இருக்கிறது.

 யூரோஸோன் உறுப்பினர் என்பதால் நினைத்த மாத்திரத்தில் அயர்லாந்தால் தன்னிச்சையாக பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து நெருக்கடியைச் சமாளிக்க முடியாது. யூரோஸோன் பொருளாதாரக் கொள்கைகளுடன் இசைந்துதான் செயல்பட முடியும்.

 அதேபோல், யூரோஸோன் நாடுகளும், அதில் அங்கம் வகிக்காத பிற ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும் நமக்கென்ன என்று ஒதுங்கியும் இருந்துவிட முடியாது. ஒரு நாட்டை பாதிக்கும் பொருளாதாரப் பிரச்னைகளை ஒரே நாணயத்தையும் இணையான பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றும் அடுத்தடுத்த நாடுகளையும் பாதிக்கும் என்பதால், அயர்லாந்தை நெருக்கடியிலிருந்து மீட்கவே மற்ற நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

 சில மாதங்களுக்கு முன்பு கிரேக்கம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலாகும் தருணத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கூட்டமைப்பும், யூரோஸோன் நாடுகளும் உதவிக்கு வந்தன. பன்னாட்டு நிதியத்திடமும் உதவி கோரப்பட்டது. நெருக்கடியிலிருந்து கிரேக்கம் முழுமையாக மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்று கருதப்படும் நிலையில், அடுத்ததாக அயர்லாந்து அதே நிலைக்கு வந்திருக்கிறது.

 கிரேக்கம் வீழ்ந்தபோதே, அடுத்ததாக பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நாடுகளை மீட்பதற்காக ஐஎம்எஃப் நிதியுதவியுடன் ஐரோப்பிய நிதிநிலைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஐரோப்பாவில் கடைநிலை பொருளாதாரத்தில் இருக்கும் அயர்லாந்து போன்ற நாடுகளைக் காப்பாற்றும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. யூரோஸோனில் இல்லாத பிரிட்டன் கூட உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி பெருமளவு நிதியுதவி செய்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஆனால், அயர்லாந்துதான் உதவி பெறும் மனநிலையில் இல்லை. இந்த நெருக்கடியை நாங்களே சமாளித்துக் கொள்கிறோம் என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. சுயமரியாதையைக் காப்பாற்றுவதே அயர்லாந்துக்கு முதல் குறிக்கோள் என்பதுதான் அவர்களது நிலை.

நிதியுதவியை ஏற்றுக்கொண்டால், ஆளும் கூட்டணி மீது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கக்கூடும் என்பது போன்ற அரசியல் காரணங்களும் இதற்குப் பின்னணியில் இருக்கின்றன. இதனால் நிதி உதவி செய்ய விரும்பும் அமைப்புகள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன.  அதேநேரத்தில், பிற நாடுகளின் உதவியில்லாமல் அயர்லாந்தால் நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஒருவேளை உதவியே வேண்டாம் என்பதில் அயர்லாந்து உறுதியாக இருந்துவிட்டால், அடுத்த ஆண்டில் சில லட்சம் கோடி வரைக்கும் பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். வரி வருவாயை பலமடங்கு உயர்த்த வேண்டும். ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான அறிவிப்புகளை வரும் 7-ம் தேதி தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும். அந்த வகையில், அயர்லாந்து வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வரி விதிப்பு பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும்.

 ஏற்கெனவே, நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வோர் அதிகரித்திருக்கும் நிலையில், கடுமையான வரிவிதிப்பு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

 அயர்லாந்துடன் பிரச்னை முடிந்துவிடவில்லை. அடுத்ததாக போர்ச்சுகல் இருக்கிறது. அயர்லாந்தில் ஏற்பட்டிருக்கும் அதே நெருக்கடி அங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி நெருக்கடியில் சிக்கும் யூரோஸோனில் உள்ள நாடுகள் யூரோ நாணயத்தைக் கைவிட்டு சொந்த நாணயத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால் பிரச்னையிலிருந்து கொஞ்சம் மீள முடியும். அப்படி ஒவ்வொரு நாடும் யூரோவைத் துறந்து வெளியேறினால், டாலருக்கு எதிரான கரன்சி யுத்தத்தில் யூரோ தோற்றுப் போகும். ஏஞ்சலா மெர்கல் கூறுவதைப் போல, யூரோவுக்குத் தோல்வி என்றால் அது ஐரோப்பாவுக்கே தோல்விதான்!

..
..
.

Wednesday, November 17, 2010

யுவராஜ் சிங்குக்கு முடிவுரை!

கிரிக்கெட்டில் நிரந்தரப் புகழுடன் இருக்கும் பெருமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சச்சின் மாதிரி மிகச் சிலர்தான் அதைப் பெற முடிகிறது. இன்றைய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்துக்கு ஒரு காலத்தில் அடிதடி வரவேற்புக் கிடைத்திருக்கிறது. இன்று வர்ணணையில் வீரர்களை விமர்சனம் செய்யும் ரவி சாஸ்திரிக்கு செருப்பு மாலையே கிடைத்திருக்கிறது. கபில்தேவ் ஒரு தொடரில் தேவையேயில்லை என்று வெளியே வைக்கப்பட்டார். அதெல்லாம் அவர்களது அஸ்தமனத்தின் அறிகுறிகளாக அறியப்பட்டன.

இப்போது இந்த நிலைமை யுவராஜ் சிங்குக்கு வந்திருக்கிறது. 20 ஓவர் போட்டிகளின் முக்கியத்துவம் உணராத அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட்  முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தார். யாரை கேப்டனாக்கலாம் என்கிற கேள்வி. முறைப்படி அந்தப் பதவி யுவராஜ் சிங்குக்குதான் வந்திருக்க வேண்டும். ஆனால் தோனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு யுவராஜ் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவரது தந்தை மீடியாவிடம் கோபத்தைக் காட்டினார். ஒன்றும் பலனளிக்கவில்லை.

அன்றைக்கே தொடங்கிவிட்டது யுவராஜின் அஸ்தமனம். தலைமைப் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் அவர் தோனியுடன் பனிப்போரைத் தொடங்கினார். அதன் விளைவைத்தான் அவர் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் சென்னை அணியின் தோஸ்துகளான ரெய்னா, முரளி விஜயையும் டெஸ்ட் அணியில் இருக்கும்போது யுவராஜுக்கு இடம் மறுக்கப்பட்டது. அதற்கு முந்தைய இலங்கையுடனான தொடரில் யுவராஜ் மோசமாக ஒன்றும் ஆடவில்லை. அதையெல்லாம் கேட்டுப் பயனில்லை. சீனிவாசனும் தோனியும் யுவராஜைப் பழிவாங்கவில்லை என்று சொன்னால் அதை நம்ப முடியாது.

இதிலேயே யுவராஜ் நொறுங்கிப் போனார். ஏற்கெனவே, ஐபிஎல் அரசியல் படுத்தும்பாட்டுடன், தோனியுடனான பனிப்போரில் அவரது கடைசி அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. அணியின் ஏ கிரேடு மெம்பரான அவர் பி கிரேடுக்கு இறக்கப்பட்டிருக்கிறார். சம்பளம் பாதியாகியிருக்கிறது.

யுவராஜ் கொஞ்சம் மோசமான பார்மில் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் அற்புதமான ஆட்டக்காரர். அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இப்போது கிரிக்கெட்டை விட்டே ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது யாரென்பது புரிந்துகொள்ள முடியாததல்ல.
..

..
.

Wednesday, November 10, 2010

எம்ஜிஆர் ஹீரோ, நம்பியார் வில்லன், மோகன்ராஜை என்ன சொல்லலாம்?

மக்களின் மனத்திசையில் நம்மூர் ஊடகங்கள் செல்கின்றனவா அல்லது  ஊடகங்கள் காட்டும் வழியில் செல்ல மக்கள் முடிவெடுக்கிறார்களா என்கிற விவாதத்துக்கு இதுவரை முற்றுப்புள்ளி இல்லை. இரு குழந்தைகளை திட்டமிட்டுக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட கோவை மோகன்ராஜ் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதும் இந்த விவாதம்தான் நினைவுக்கு வந்தது. கொடூரமாக் கொலை செய்த மோகன்ராஜ் என்று பெரும்பாலான ஊடகங்கள் எழுதின; பேசின. வழக்கு விசாரணையே முடியவில்லை. என்ன நடந்தது, பின்னணி என்பன போன்ற கேள்விகள் விடையளிக்கப்படாமல் இருக்கின்றன. இந்த தருணத்தில் முக்கியக் குற்றவாளி கொல்லப்பட்டுவிட்டது ஏன் என்ற எந்த ஊடகமும்  கேள்வி எழுப்பவில்லை. 1500 பேர் பின்னூட்டங்களில் காவல்துறையைப் பாராட்டினார்கள் என்று ஒரு பத்திரிகை தன்முதுகையே சொறிந்து கொண்டது.

எத்தனையோ கல்லூரிகளில், பள்ளிகளில் அவ்வப்போது மர்ம மரணங்கள் நடக்கின்றன. பலசம்பவங்களில் சந்தேகத்தின் பேரில்கூட நமது காவல்துறை யாரையுமே கைது செய்ததில்லை. பத்திரிகை அலுவலக எரிப்பிலும் கல்லூரி வாகன எரிப்பிலும் யாருமே இப்படிக் கொல்லப்படவில்லை. அவையெல்லாம் ஹை புரொபைல் வன்முறைகள் போல நாசூக்காகக் கையாளப்பட்டன.

லட்சம் கோடி அலைக்கற்றை ஊழலை மறந்து கொண்டிருக்கிறோம். சேது சமுத்திரம் கப்பல் கணக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. காமன்வெல்த் ஊழல் சுபமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.  கேமரா முன்னால் நன்கொடை வாங்கிய கல்லூரிக்காரர்கள் அதிகாரத்தில் தொடர்கிறார்கள். ஆண்டர்சன் ஆட்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பல்லிளித்தோம். லட்சம் பேரைக் கொன்றவனுக்கு கார் கதவைத் திறந்து விடுகிறோம். தேடும் குற்றவாளியை உள்துறை அமைச்சர் கட்டித் தழுவுகிறார். இப்படி பெரும்பாலான நிகழ்வுகளில் நாமெல்லாம் வேடிக்கை பார்க்கும் கும்பலாகத்தான் இருந்து வந்திருக்கிறோம்.

இப்போது ஏன் திடீர் கொந்தளிப்பு?

கெட்டவர்கள் ஒழிக்கப்பட்டதால் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு நேர்ந்தால் இப்படி மனித உரிமை வியாக்கியானம் பேசுவீர்களா என்றும் கேட்கிறார்கள். இந்த அபவாதங்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

இன்னொரு குரூப் இருக்கிறது. இந்த என்கவுன்டரை மோடிக்கும் அமீத் ஷாவுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்கிறது.  அதாவது சொராபுதீன் மாதிரி ஆட்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது மட்டும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறதென்றால், மோகன்ராஜ் கொல்லப்பட்டதற்கும் சிபிஐ விசாரணை தேவையாம். ஓஹோ...

இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். ஊடகங்கள்.... செய்திகளில் கருத்துகளைத் திணித்து துப்பும் வேலையைச் செய்யும் ஊடகங்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பு. அரசு ஜோடிக்கும் பொம்மையை நிஜமென்று ஒத்து ஊதுவது ஊடகங்களே.  இந்த ஊடகங்களின் உதவியுடன் அரச சர்வாதிகாரத்துக்கு ஆதரவாக,  உணர்ச்சி வசப்பட்ட மக்கள் செல்வாக்கும் திரட்டப்பட்டிருக்கிறது.

பிராய்டு விதிப்படி நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாய் ஆக்கப்பட்டிருக்கிறோம். வழக்கம்போல் தேர்தல் வருகிறது.

...

...
..

Tuesday, July 27, 2010

கொரியாவுக்கு குறி!

நீண்ட காலமாகவே போக்குக் காட்டிவரும் வடகொரியாவுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தேதி குறித்து விட்டது போலத் தெரிகிறது. அண்மையில் உலகப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இதற்கான திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

 தென்கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில் வடகொரியாவுக்குத் தொடர்பிருப்பதாக அவரது தென்கொரியப் பயணத்தின்போது குற்றம்சாட்டப்பட்டது.

 இதைத் தொடர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு தென்கொரிய மற்றும் அமெரிக்கப் படைகளின் கூட்டுப் பயிற்சி தொடங்கியிருக்கிறது. இது பசிபிக் பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

 பின்னணி இதுதான். கடந்த மார்ச்சில் தென்கொரிய மற்றும் வடகொரிய கடல் எல்லைப் பகுதியில் தென்கொரியாவுக்குச் சொந்தமான செவ்னன் என்கிற கப்பல் சென்று கொண்டிருந்தது.  இதில் பணியாளர்கள் உள்பட 104 பேர் இருந்தனர். கப்பல் சென்று கொண்டிருந்த மஞ்சள் கடல் பகுதி, தென்கொரிய எல்லைக்குள்தான் வருகிறது என்றாலும், அது வடகொரிய கடற்கரைப் பகுதியிலிருந்து வெறும் 10 கி.மீ. தொலைவுதான்.

 மார்ச் 26-ம் தேதி இந்தக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது. இரு துண்டுகளாகப் பிளந்த கப்பல் சில மணி நேரங்களில் முழுவதுமாக மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த 46 பேர் பலியாகினர். 58 பேர் காப்பாற்றப்பட்டனர். இவர்களை மீட்கும் பணியிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

 வழக்கம்போலவே, இந்தத் தாக்குதலின்போதும், முதல் சந்தேகப் பார்வை வடகொரியா மீதுதான் விழுந்தது. கடல் கண்ணிவெடி மூலமாக வடகொரியாவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தென்கொரியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டின. தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து சற்றுத் தொலைவில் வடகொரிய நீர்மூழ்கிக் கப்பல் மையமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. பிறகு பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஸ்வீடன், அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

 அண்மையில் ஹிலாரி கிளிண்டன் தென்கொரியாவுக்குச் சென்றிருந்தபோது, இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. பல தரப்பினரும் எதிர்பார்த்தபடியே வடகொரியாதான் தாக்குதல் நடத்தியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. கடல் கண்ணிவெடித் தாக்குதலில் பயன்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டின் சிதறிய பாகங்கள் செய்தியாளர்களுக்குக் காட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 இந்த அறிக்கையை வடகொரியா திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. வெடிகுண்டின் முக்கியப் பாகங்கள் இன்னும் சேதமடையாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் அந்த நாட்டு அதிகாரிகள், இந்த அறிக்கையை திட்டமிட்ட சதி எனக் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவின் நவீன கண்ணிவெடிகளின் காரணமாகவே நடந்த விபத்து என சீனா கூறியிருக்கிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட நாடுகளை சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

 கப்பல் மூழ்கடிப்பு, அதையடுத்த போர் ஒத்திகை ஆகியவற்றுக்குப் பின்னணியில் வேறு சில அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது.  இந்தச் சந்தேகத்தை தென்கொரிய எதிர்க்கட்சிகளே எழுப்பியிருக்கின்றன. செவ்னன் கப்பலில் இருந்த 46 பேரின் மரணத்தைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே விசாரணை அறிக்கை போலியாகத் தயாரித்திருப்பதாக தென்கொரிய அதிபர் லீ மியூங்-புக் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

வடகொரியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் போரின் மூலமாக நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி அதன் மூலம் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.

 சில தென்கொரிய நிபுணர்களும் இந்தச் சம்பவம் ஒரு விபத்தாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர். கண்ணிவெடி அல்லது வேறு வகையான வெடிகுண்டுத் தாக்குதலாக இருந்தால் பலியானவர்களின் உடலில் அதற்குண்டான தடயம் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். முழு அறிக்கை தாக்கல் செய்யப்படாதது குறித்தும் அவர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பன்னாட்டுக் குழுவினரின் விசாரணை முடிவை இறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. அதைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமாவதும் தவறானது.

 ஆனால், இதையெல்லாம் லீ பொருள்படுத்தவில்லை. அமெரிக்காவும் பிடிவாதமாக இருக்கிறது. அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஓரளவு சமாளித்துக் கொண்டிருக்கும் வடகொரியாவை போரைக் காட்டி அச்சுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் இப்போது போர் அச்சத்தை உருவாக்கத் துணிந்திருக்கிறது. அவசர அவசரமாகப் போர் ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 20 போர்க் கப்பல்கள், 200 விமானங்கள், 8 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஆனால், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்று வடகொரியாவை மிரட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டை தனிமைப்படுத்தினால் கூட வெற்றிகொள்ள முடியாது. ஏராளமான அணு ஆயுதங்கள் வடகொரியாவிடம் இருக்கின்றன என்பதை அமெரிக்காவே ஒப்புக் கொண்டிருக்கிறது. இது தவிர பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளும் அந்த நாட்டிடம் இருக்கின்றன.

 சீனாவின் நேரடி ஆதரவும் வடகொரியாவுக்கு இருக்கிறது. போர் மூண்டால் ரஷியாவும் ராஜதந்திர அடிப்படையில் ஆதரவு தர வாய்ப்பிருக்கிறது. அந்தத் துணிச்சலில்தான் புனிதப் போர் அறிவிப்பை வடகொரியா வெளியிட்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் போரை நோக்கி எடுத்துச் செல்லப்படுவது ஏனோ?
...
.
.

Monday, July 26, 2010

நமக்கென ஒரு பிரௌசர்- எபிக்


கடைசியாக அது வந்தேவிட்டது. நமக்கென ஒரு பிரௌசர் வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இந்திய இணையப் பயனர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. "மேட் இன் இந்தியா' என்ற அடைமொழியுடன், இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எபிக்' என்கிற இணைய உலவி இப்போது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதை உருவாக்கியிருப்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.

எத்தனையோ பிரௌசர்கள் அவ்வப்போது வருகின்றன, போகின்றன; இதுவும் பத்தோடு பதினொன்றாகக் காணாமல் போய்விடும் என்று எண்ணியவர்கள் இப்போது கொஞ்சம் திகைத்து நிற்கிறார்கள். வெளியான முதல் வாரத்திலேயே இந்தியர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.  மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா பயர்ஃபாக்ஸ் போன்ற முன்னணி பிரௌசர்களைக் கடந்து, இந்தியர்களைக் கவர்வதற்கு இந்தப் புதிய வரவில் நிறையச் சங்கதிகள் இருக்கின்றன.

முதலாவதாக எபிக் பிரௌசர், உலகளாவிய பொதுச் சந்தைக்கான மென்பொருள் அல்ல. அது இலவசமானது; இந்தியர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதனால், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருடனோ மோசில்லா பயர்ஃபாக்ஸýடனோ போட்டியிடவேண்டிய அவசியம் இதற்கு இல்லை. இந்த ஒன்றே இந்தியர்களைப் பற்றி இழுப்பதற்குப் போதுமானது. இரண்டாவதாக, இது மோசில்லா பயர்ஃபாக்ஸ் பிரௌசரின் நீட்சிதான். அதனால், கூடுதல் வசதிகள் இருக்கும் என்பது அடிப்படையான விஷயம்.

இணையத்தில் நுழைவோரைச் சிரமப்படுத்தும் முதல் பிரச்னை வைரஸ், மால்வேர், ஸ்பேம்வேர் போன்ற நச்சு நிரல்கள்தான். நச்சு நிரல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறமையான ஆன்டி-வைரஸ் மென்பொருள் இல்லாவிட்டால் கணினியில் உள்ள முக்கியக் கோப்புகளை இந்த நச்சு நிரல்கள் தாக்கி அழிக்கும். சில நேரம் நமது ரகசியத் தகவல்களைத் திருடி, இணையத் திருடர்களுக்கு உதவி செய்யும்.

 இந்தப் பிரச்னைக்கு எபிக் தீர்வு கண்டிருக்கிறது. எபிக்குடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் இùஸட் நோட்32 என்கிற ஆன்டிவைரஸ் தொகுப்பு, நச்சு நிரல்களைக் தேடிக் களைகிறது.

 இந்த வசதியைத் தரும் உலகின் முதல் பிரௌசர் என்கிற பெருமையும் எபிக்குக்கு கிடைத்திருக்கிறது. இணையத்தில் இருந்து வரும் நச்சு நிரல்கள் மட்டுமல்லாமல், நமது கணினியில் ஏற்கெனவே இருக்கும் நச்சு நிரல்களையும் இந்த ஆன்டி-வைரஸ் மென்பொருள் கொண்டு அழிக்க முடிகிறது.

 இதுவரை எந்த பிரௌசரிலும் இல்லாத அளவுக்கு 1500-க்கும் அதிகமான "சைட் பார் அப்ளிகேஷன்ஸ்' எனப்படும் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் எபிக்கில் இருக்கின்றன. பின்னணி வண்ணங்கள், புகைப்படங்கள் என எல்லாவற்றையும் ஒற்றை க்ளிக்கில் மாற்றும் வசதி இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய்ந்தபடியே மற்ற பணிகளைச் செய்வதற்கும், கணினியில் உள்ள கோப்புகளைக் கையாள்வதற்கும் முடிகிறது.

 இதேபோல, ஜிமெயில், யாஹு மெயில் போன்ற சேவைகளின் மின்னஞ்சல்களையும் இந்தப்  பயன்பாடுகள் மூலமாகவே படிக்கலாம். இவைதவிர, உடனடி கிரிக்கெட் ஸ்கோர், தொலைக்காட்சி சேனல்கள், இசை, விளையாட்டு, வேலைவாய்ப்பு,விடியோ போன்றவற்றுக்கான பயன்பாடுகளும் எபிக்கில் இருக்கின்றன.

 தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வதற்கான வசதி மிக எளிமையான முறையில் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. தனி மென்பொருளை நிறுவுவது அல்லது பிற இணையதளங்களில் சென்று தட்டச்சு செய்து எடுத்து வருவது போன்ற தொல்லைகளுக்கு இது நல்ல தீர்வு.

 இந்தியாவிலிருந்து வெளியாகும் செய்தி இணையத் தளங்களின் முக்கியச் செய்திகளை திரட்டித் தரும் வசதியும் எபிக்கில் இருக்கிறது. இப்போதைக்கு மிகச் சாதாரணமான இணையத் திரட்டிகள் போன்ற இந்த வசதி, வருங்காலத்தில் இது கூகுள் நியூஸ் போன்று மிகப் பிரபலமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிராந்திய மொழி வசதிகளில் உள்ள சில பிழைகளைச் சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினால், அனைவராலும் விரும்பப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

மைக்ரோசாஃப்டின் எம்எஸ் வேர்டு, ஓபன் ஆபிஸ் ரைட் போல எளிய வடிவிலான வேர்ட் பிராசசர் எனப்படும் சொற் செயலியும் எபிக் இணைத்துத் தருவது மிகச் சிறப்பு. தட்டச்சு செய்வது, பிற இணையத் தளங்களில் இருந்து பிரதி எடுப்பது போன்ற பணிகளைச் செய்வதற்கு இது உதவும். மற்ற முன்னணி இணைய உலவிகளில் இல்லாத வசதி இது.

 "பேக்கப்' எனப்படும் கோப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும். மைக்ரோசாஃப்டின் ஸ்கைடிரைவ் போல ஜிமெயில் வழியாக இந்த வசதியை எபிக் வழங்குகிறது. ஜிமெயிலை கிட்டத்தட்ட ஒரு எஃப்.டி.பி. போல பயன்படுத்த முடிகிறது.

 இத்தனை வசதிகளையும் கொண்டிருப்பதால் எபிக் இயங்கும் வேகம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. உண்மையில், மற்ற இணைய உலவிகளை விட கூடுதல் வேகத்துடன் இயங்குவதாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 இப்போதைய கணிப்புப்படி, இதுவரை வெளிவந்திருக்கும் மோசில்லா பயர்ஃபாக்ஸ் நீட்சிப் பதிப்புகளில் எபிக் பிரௌசர்தான் சிறந்தது என பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், பிராந்திய மென்பொருள் சந்தையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தப் போகிறது என்பதே எபிக்கின் உண்மையான வெற்றி.

...

..

Tuesday, July 20, 2010

இஸ்ரேலுக்கு இன்னொரு வாய்ப்பு!

போர், அமைதிப் பேச்சு, பயங்கரவாதத் தாக்குதல் போன்றவை மத்திய கிழக்கில் சுழற்சி முறை நடப்புகள். ஒன்றையடுத்து மற்றொன்று நடக்கும். இவற்றில் ஏதாவது  ஒரு காரணத்துக்காக உலகச் செய்திகளில் அடிக்கடி மத்திய கிழக்கு நாடுகளின் பெயர்கள் அடிபடும். இது இஸ்ரேல் - சிரியா இடையேயான அமைதிப் பேச்சுக்கான முறை போலத் தெரிகிறது. இப்போது அமைதிக்கான மறைமுக அழைப்பை விடுத்திருப்பது சிரியாவின் அதிபர் பஷார் ஆஸாத். பாலஸ்தீனப் பிரச்னையில் தவிர்க்க முடியாத வேண்டிய நாடு என்கிற முறையில் சிரியாவின் சமிக்ஞைகளை இஸ்ரேல் நிராகரிக்க முடியாது.

 அதே நேரத்தில், அமைதிப் பேச்சை சிரியா உண்மையிலேயே விரும்புகிறதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. நாட்டின் பின்னணி அப்படி. இஸ்ரேலுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஸ்கட் போன்ற ஏவுகணைகளை சிரியா விநியோகித்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல பாலஸ்தீனத்தின் காஸô பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தையும் அந்த நாடு ஆதரித்து வருகிறது.

 அதிபர் பதவியில் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பஷாருக்கு வாழ்த்துத் தெரிவித்து டமாஸ்கஸ் நகரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் ஹமாஸ் தலைவருக்கும், ஹிஸ்புல்லா தலைவருக்கும் நடுவில் பஷார் சிரித்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாத இயக்கங்களாக மேற்கு நாடுகள் முத்திரை குத்தியிருக்கும் அமைப்புகளுடன் அவ்வளவு நெருக்கம். போதாக்குறைக்கு முரட்டு நாடு என்கிற பெயரெடுத்திருக்கும் ஈரானுடனான தொடர்பு வேறு. பயங்கரவாதத்தின் முதுகெலும்புகள் என்று இரண்டாவது ஜார்ஜ் புஷ் பட்டியலிட்டாரே, அதிலும் சிரியாவுக்கு இடமிருக்கிறது.

 இத்தனை முரண்பாடுகளுக்கும் காரணம் இஸ்ரேலுடனான பகை. அந்தப் பகை தொடங்கியது 1967-ல்.  அப்போது நடந்த ஆறு நாள் போரில் மத்திய கிழக்கின் பல இடங்களைக் கைப்பற்றிய இஸ்ரேல், சிரியாவிடமிருந்து கோலன் பீடபூமிப் பகுதியையும் கைப்பற்றியது.  சிரியாவைச் சேர்ந்தவர்களைக் கேட்டால் கோலன் பீடபூமியை இஸ்ரேல் திருடியது என்பார்கள். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியை இழந்த வருத்தமும் அதனால் எழுந்த சினமும் சிரியாவுக்கு இன்னமும் இருக்கிறது. நாற்பதாண்டுகளைக் கடந்துவிட்ட இந்தப் பகை அவ்வப்போது தணிவதும் அவ்வப்போது கடுஞ்சீற்றம் கொண்டு எழுவதுமாக இருக்கிறது.

 கடந்த 2007-ல் சிரியாவில் இருந்த அணு உலை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியதால் பகை இன்னும் அதிகமானது. என்றாலும் இதன் பிறகு இரு தரப்பும் அமைதிப் பேச்சுக்குத் தயாராகின. துருக்கி மத்தியஸ்தம் செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால், கடந்த 2008-ல் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதலுக்குப் பதிலடி தருவதாகக் கூறி காஸô பகுதி மீது கடுமையான தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்த இந்தத் தாக்குதலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அரபு உலகத்தால் காஸô படுகொலை என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வால் அமைதிப் பேச்சு ரத்தானது. பழையபடி பகை தலைதூக்கியது. வழக்கம்போல மேற்கத்தியப் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 இப்போதும் மத்தியஸ்தம் செய்ய துருக்கி தயாராக இருக்கிறது. ஆனால், நிலைமை முன்புபோல இல்லை. அண்மையில் காஸôவுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கப்பல்களை இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலில் இருந்த துருக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட கசப்புணர்வு துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், ஒரு வேளை பேச்சு நடத்த ஒப்புக் கொண்டாலும் துருக்கி மத்தியஸ்தம் செய்வதை இஸ்ரேல் விரும்பாது எனக் கருதப்படுகிறது.

 துருக்கி மத்தியஸ்தம் செய்வதையே சிரியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இரு நாடுகளுடனும் நட்புறவைக் கொண்டிருக்கும் நாடு மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கூறி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் ஏதாவது மேற்கத்திய நாடுதான் மத்தியஸ்தம் செய்ய முடியும்.
 இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சு என்றால் கோலன் பீடபூமியைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்பதுதான் சிரியாவின் நிலை. கோலன் பீடபூமியை கெüரவத்தின் அடையாளமாகப் பார்க்கிறது. எந்த அரசு வந்தாலும், யார் அதிபராக இருந்தாலும் சிரியாவின் கோரிக்கைப் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கப் போவது கோலன்தான். ஆனாலும், அமெரிக்க பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும், நிதியுதவியைப் பெறுவதும்கூட அந்நாட்டின் கோரிக்கையாக இருக்கக்கூடும்.

 இஸ்ரேலின் முதல் நிபந்தனை, சிரியாவின் எல்லையில் கூடுதல் ராணுவத்தைப் பரப்புவதாகத்தான் இருக்கும். இதுபோக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்ரேல் கறாராகக் கேட்கும். இஸ்ரேல்-சிரியா இடையேயான பேச்சுகள் மறைமுகமாக பாலஸ்தீன அமைதிப் பேச்சுகளை விரைவுபடுத்தும் என்பதாலும், இராக்கை மறுநிர்மாணம் செய்வதில் சிரியா உதவும் என்பதாலும் அமெரிக்காவும் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டிவருகிறது.

 சிரியாவுடனான பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கிடைத்த பல வாய்ப்புகளை இஸ்ரேல் தவற விட்டிருக்கிறது. அவ்வளவு ஏன், பாலஸ்தீனப் பிரச்னையை ஒட்டுமொத்தமாகவே தீர்ப்பதற்கான வாய்ப்புகள்கூடத் தவறவிடப்பட்டிருக்கின்றன. இப்போது இன்னொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதை ஆக்கப்பூர்வமாகவும் தொலைநோக்குடனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இஸ்ரேலின் கடமை. அதைவிட்டுவிட்டு, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை ஒடுக்குவதற்காகவும் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காகவும் இந்தப் பேச்சுகள் பயன்படுத்தப்படுமானால், மத்திய கிழக்கு சுழற்சியில் அடுத்து வருவது போராகத்தான் இருக்கும்.

...
..
.

Saturday, July 10, 2010

ஸ்பெயினின் வெற்றி ரகசியம்!


கால்பந்து ஆட்டம் உணர்வுகளால் நிரம்பியது. ஆனந்தமும் துக்கமும் வந்து வந்து போகும். ஸ்பெயின் இப்போது ஆனந்த உணர்வில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த ஆனந்தம் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்துவிடவில்லை. அதற்குப் பின்னால் அவர்களது மிகப் பெரிய உழைப்பும் கண்டுபிடிப்பும் இருக்கின்றன.

 வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் ஆகிய இரண்டுமே ஸ்பெயின் அணியின் பலம். ஆனால் இந்த இரண்டையும் செயல்படுத்துவதில் ஒரு அடிப்படையான தத்துவத்தைக் கொண்டே ஸ்பெயின் அணி இந்தக் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆடி வருகிறது. அதுதான் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி.

 "பந்து உனது கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி உன்னைத் தேடிவரும்' என்பதுதான் ஸ்பெயின் கால்பந்து அணி வீரர்கள் ஆடுகளத்தில் இயங்குவதற்காக வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாடு. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

 மைதானத்தில் இந்த உத்தியைச் செயல்படுத்துவதற்குப் பல திறன்கள் தேவை. குறுகிய தூரத்தில் அடுத்தவருக்குப் பந்தைக் கடத்துதல், வியூகம் அமைத்தபடியே முன்னோக்கி நகர்வது போன்றவை இதற்கு மிகவும் அவசியம். இவை ஸ்பெயினுக்கு அத்துப்படி. இந்த உலகக் கோப்பை போட்டியில், ஸ்பெயினைத் தவிர வேறு எந்த அணிக்கும் பந்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரம் தெரியவில்லை என கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஒரேயொரு கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரேயொரு கோல்தான் என்பதால் அது ஒன்றும் பெரிய வெற்றியில்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில், இந்த வெற்றி ஸ்பெயினின் பிரத்யேகத் திறமைக்கும் திட்டமிடலுக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்ஜென்டினாவை 4 கோல் அடித்து வெற்றி பெற்ற அணியா இது என்று ஜெர்மனியைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த நாட்டு வீரர்களை முடக்கிப் போட்டது, ஸ்பெயின் வீரர்களின் ஆட்டம்.

 ஸ்பெயினின் நடுக்கள மற்றும் முன்கள வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே ஆட்டம் முழுவதும் இருந்தது. சேவி, இனியெஸ்டா, பெட்ரோ ரொட்ரிகோ, அலோன்சோ ஆகியோர்தான் எந்த வழியாக, எந்த நேரத்தில் எதிரணியின் பாதுகாப்பு அரணைத் தகர்ப்பது என்பதை முடிவு செய்தார்கள். அதற்கேற்றபடி மற்ற முன்கள வீரர்களை தொடர்ச்சியாக நகரச் செய்வதும், எதிரணியினர் ஊகிக்க முடியாத அளவுக்கு திடீர் தாக்குதல் நடத்துவதும்தான் ஸ்பெயினின் உத்தியாக இருந்தது.

 உண்மையில் ஸ்பெயினின் பந்து கடத்தும், மற்றும் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன்களைக் கண்டு ஜெர்மனி வீரர்களே அதிர்ச்சியாகி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டம் முடிந்த பிறகு ஜெர்மன் பயிற்சியாளரும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் பாணி ஆட்டத்தை வேறு நாடுகள் காப்பியடிப்பதெல்லாம் அத்தனை எளிதானதல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

 அதே நேரத்தில், பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தந்துவிடாது. யார் அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. எத்தனை கோல் அடிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். பந்தைக் கடத்திக் கொண்டுபோய் கோல் போட முடியாமல் போனால் தோற்றுப் போக வேண்டியதுதான்.

இதற்கு நல்ல உதாரணம் ஜெர்மனி - ஆர்ஜென்டினா இடையிலான காலிறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவசம்தான் பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால், ஜெர்மன் தடுப்பாட்டக்காரர்களை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெர்மனியின் திடீர் தாக்குதல் ஆட்டத்தையும் தடுக்க முடியவில்லை. அதனால்தான்  அவர்கள் அவமானகரமாகத் தோற்றார்கள்.  ஸ்பெயினுக்கும் இந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த அணி வீரர்கள் பந்தைக் கடத்திச் சென்று கடைசிவரை கோல் எதுவும் அடிக்கவில்லை. அவர்கள் பந்தைக் கடத்தி ஜெர்மனியின் கோல் நோக்கி வந்தபோதெல்லாம், வலைக்கு மேல்புறத்திலும் இரு பக்கங்களிலும்தான் பந்து சென்றது. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி வேறு வகையில் ஸ்பெயினுக்கு உதவியது.

 முற்பாதி ஆட்டத்தின் போதும், பிற்பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் வரையிலும் பெரும்பான்மை நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தார்கள். எப்போதும் ஜெர்மனியின் கோல் கம்பத்தைச் சுற்றியே பந்து வந்து கொண்டிருந்தது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

 தற்காப்பு ஆட்டத்திலேயே ஜெர்மனி வீரர்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், தங்களது பாணி ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியாமலேயே போனது. இப்படி எதிரணியை முடக்குவதில்தான் ஸ்பெயினின் "பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்' உத்தியின் வெற்றி அடங்கியிருக்கிறது.

 இந்த ஆட்டத் திறன்களெல்லாம் கிளப் ஆட்டங்களில் பரிசோதனை செய்யப்பட்டவைதான் என்றாலும் ஸ்பெயின் மட்டும்தான் இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஸ்பெயின் வீரர்களைக் கேட்டால், எங்களுக்கு "வேறு எந்த வகையாகவும் ஆடத் தெரியாது' என்கிறார்கள் மிக அடக்கமாக. அப்படியென்றால், இறுதிப் போட்டியிலும் இதை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.

..
.

.

Thursday, July 01, 2010

கெட்ட சொற்களஞ்சியமாகும் பதிவுலகம்!

மொழியில் நல்ல சொல் கெட்ட சொல் என்கிற பேதமில்லை. நமது மொழியாற்றலை அடுத்தவரைக் காயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும்போதுதான் சில சொற்கள் கெட்ட சொற்களாகிப் போகின்றன எனக் கருதுகிறேன்.

எதை வேண்டுமானாலும் இணையத்தில் எழுத முடிகிறது. இப்போதைய பாணி திட்டுவது. புரட்சிகரமாக எழுதுவது என்பதற்கு பதிவுலக அகராதியில் திட்டுவது என்று பொருள் போலிருக்கிறது. பதிவு எழுதுவோரும் அதற்கு பதில் எழுதுவோரும் பின்னூட்டுகளை விட்டுச் செல்வோரும் ஒருவரையொருவர் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொற்களையும் வாக்கிய விளையாட்டுக்களையும் பார்த்தால் தமிழ் கிட்டத்தட்ட செம்மொழியாகவே மாறிவிட்டது போலத் தெரிகிறது. திட்டுவது என்று பொதுவான முடிவுக்கு வந்தபிறகும் பதிவு என்றோ, கட்டுரை என்றோ, எதிர்வினை என்றோதான் அவற்றை வகைப்படுத்திக் கொள்கிறார்கள்.

மயக்கும் சொற் பிரயோகங்கள் மூலம் சிலர் இலக்கியவாதிகளாகத் தெரிகின்றனர். ஆனால் அவர்களும் மற்றவர்களைத் திட்டுவதைத்தான் முனைப்போடு செய்கின்றனர்.

பதிவர் ஒருவரை பொறுக்கி என்கிற அடைமொழியுடன் தலைப்பிட்டு ஒரு பதிவு எழுதப்பட்டிருந்தது. அந்தப் பதிவு முழுவதுமே வெற்றுத் திட்டுக்களால்தான் நிரம்பியிருந்தது. இப்படிப் புதிய சொற்களும் வாக்கிய அமைப்புகளும், புனைவுகளும் தோன்றுவது இணையமொழிக்கு நல்லதா? அதைப் புரட்சி அல்லது கட்டவிழ்ப்பு என்று கூறுவது எந்த வகையான நியாயம்?

அண்மையில் நண்பர் மூலம் இன்னொரு பதிவைப் படிக்க நேர்ந்தது. அந்தப் பதிவில் திட்டு வாங்கியவர் கீழ்கண்டவாறு அறிமுகப்படுத்தப்பட்டார்.

//
நாயகன் என்ற உரல் முகவரியுடன், சிதைவுகள் என்ற வலைப்பூ தலைப்புடன், தோழமையுடன் பைத்தியக்காரன் என்ற புனைப்பெயருடன், பூக்கோ, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் என தம்மை ஒரு உலக இலக்கிய ஆர்வளராகவும், பார்பனர்கள் என அறியபட்டவர்கள் செய்ததாக, நினைத்தையெல்லாம் பதிவாக எழுதி தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டும் மற்றொரு பார்பன புற்றுநோயே தோழர்!?(வெட்கக்கேடு)....//


இதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவரைப் பற்றியோ அல்லது அவரது கருத்தைப் பற்றியோ ஆக்கப்பூர்வமாக எப்படி விமர்சித்துவிட முடியும்?  இத்தகைய தனிநபர் தாக்குதல்கள், சம்பந்தப்பட்டவரை நேரடியாகக் காயப்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், கருத்துக்களையும், விவாதம் செல்ல வேண்டிய திசையையும் திரித்துவிடக்கூடும்.

தமயந்தி நிழல்வலையில் பின்னூட்டங்கள் தணிக்கையில்லாமல் வெளியாகின்றன. இது முகமூடிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது. சுதந்திரமும் ஒரு அனானி வசதியும் கொடுத்துவிட்டால் நம் நண்பர்களே நம்மைத் திட்டுவார்கள் என்பதற்கு நல்ல சான்று இது.

முட்டாள் என்று திட்டினாலே சிலருக்கு உயிரை அறுப்பது போன்ற வலி பிறக்கும். அப்படியிருக்கையில் நாய், பரதேசி, பொறுக்கி என்று திட்டுவதெல்லாம் எந்த வகையான நாகரிகமோ? கோபத்தை பொறுப்பான வாக்கியங்களால் உண்மையான அக்கறையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதை மொழி வல்லுனர்களும், இலக்கியவாதிகளும், அறிவு ஜீவிகளும், கட்டுரையாளர்களும், பதிவர்களும் வலியுறுத்த வேண்டும். ஆஃப்டர் ஆல் ஆனாலும் இது நமக்கு நண்பர்களையும், புகழையும், பணத்தையும், உணர்ச்சியையும் கொடுத்த மொழியல்லவா?

---------------------------------------------------------------------------------

அண்மையில் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். தங்கை, அக்கா என கூகுளில் தேடினால் ஏன் பாலியல் மற்றும் தகாத உறவுகள் பற்றிய கதைகள் வருகின்றன என்பதே அவரது கேள்வி. தங்கை எனத் தேடியதும் விக்கிபீடியாவில் இருந்து தங்கை என்ற உறவு பற்றி விளக்கங்கள் வந்தால் பரவாயில்லையே என்று சொன்னார். இது பழைய பிரச்னைதான் என்றாலும் மற்ற மொழியில் இது எப்படி என்பதற்காக மலையாளி நண்பர் ஒருவர் உதவியுடன் மலையாளத்தில் தேடினோம். விக்கிபீடியாவும் இன்னபிறவும் வந்தன. கன்னடமும் பரவாயில்லை. மற்ற மொழிகள் பற்றித் தெரியவில்லை.
..

..

.

Tuesday, June 08, 2010

தமிழினிமை அக்காவுக்கு: சண்டை போட்டு நாளாச்சு!

பதிவுலகில் சண்டைகள் ஓய்ந்து போய்விட்டதாகக் கருதப்படுகிறது. இப்போதைக்கு புதிதாகச் சண்டைகள் ஏதும் எழுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிகிறது. ஒருவழியாக இந்தப் பிரச்னையிலிருந்து பத்திரிகை தர்மம் பற்றி தெரிந்து கொண்டாயிற்று. ஊடகங்கள் தங்கள் சோர்ஸ்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பலர் பாடம் எடுத்தார்கள்.

போன வருஷம் ஏப்ரல் மேயில்கூட இந்த மாதிரி நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் மத்தியில் இந்த அளவுக்கு உணர்ச்சி இருந்ததா எனத் தெரியவில்லை.  பலர் தீக்குளித்துச் செத்த போதும் வாக்குப் பதிவு பொத்தான்களை அழுத்திய போதும் இப்படியொரு ஆவேசம் எழுந்த மாதிரியாக நினைவில்லை.


-------------------------

தமிழினி அல்லது தமிழினிமை என்ற பெயரைக் கொண்ட அக்காதான் வலைப்பதிவில் நான் நுழைந்த முதல் நாளில் இருந்து என்னுடன் சண்டை போட்டவர்கள். இப்போது சண்டை போட ஆளில்லாமல் பதிவுலக வாழ்க்கை சுவாரசியமற்றுக் கிடக்கிறது.
.
..
...

Monday, June 07, 2010

காஸா விடுதலைக் கனவு!

 பூமியின் புனிதமான பகுதி பாலஸ்தீனம் என்பார்கள். அந்தப் பகுதி இன்றைக்கு உணவுக்காகக் கையேந்தும் நிலையில் இருக்கிறது. ஓயாத போர்களும், அரசியலும் சேர்ந்து மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது. சர்வதேசச் சட்டங்கள் அனைத்தும் வல்லரசுகளுக்கு ஆதரவாக வளைக்கப்பட்டிருக்கின்றன. மத ரீதியாகப் பொது முத்திரை குத்தப்பட்டு, அப்பாவிகள்கூட பயங்கரவாதிகளாகப் புனையப்பட்டிருக்கிறார்கள். யார் உரிமையாளர், யார் ஆக்கிரமிப்பாளர் என்ற உண்மைகள் திரிந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மற்ற இனங்களைப் போல பாலஸ்தீனர்கள் ஆதரவற்றவர்களாக இல்லை என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதல்.

பாலஸ்தீனத்தைப் பற்றிச் சொல்லும்போது, 2006-ம் ஆண்டுத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட முடியாது. பாலஸ்தீனத்தின் இரு பகுதிகளான மேற்குக் கரை மற்றும் காஸô துண்டுப் பகுதி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து நடந்த தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது.

ஃபதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஹமாஸின் வெற்றியை இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹமாஸ் தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்த முடியாது எனப் பின்வாங்கின.

கூட்டணி அரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,மேற்குக் கரையை விட்டு ஹமாஸ் வெளியேற்றப்பட்டது. இப்போது காஸô பகுதியில் மட்டும் ஹமாஸ் ஆட்சி செய்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதால், காஸô துண்டுப் பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்துவிட்டது. அத்தோடு நில்லாமல், கடல்வழியான போக்குவரத்துத் தடையும் விதித்திருக்கிறது.

இஸ்ரேலின் இந்தக் கட்டுப்பாட்டால், உணவு மற்றும் மருந்துப் பொருள்களைத் தவிர வேறெதையும் கடல்வழியாக காஸôவுக்குள் கொண்டு செல்ல முடியாது. கட்டுமானத்துக்குப் பயன்படும் சிமென்ட் மற்றும் இரும்புச் சட்டங்கள்கூட தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது நடக்கும் ராக்கெட் தாக்குதலுக்கு சிமென்டும் இரும்புச் சட்டங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது இஸ்ரேலின் குற்றச்சாட்டு.

அது சரி, காஸôவுக்குள் இதைக் கொண்டு செல்லலாம், இதைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்க இஸ்ரேலுக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். அதற்கும் இஸ்ரேல் தரப்பில் பதில் இருக்கிறது. அதாவது, போர் தொடுப்பதற்காக எதிரிக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சர்வதேசச் சட்டங்கள் அனுமதி வழங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறிக் கொள்கிறது.

இஸ்ரேலின் தடைகளால், காஸô மிகப்பெரிய சிறை போல மாறியிருக்கிறது. உணவுப் பொருளும் எரிபொருளும் போதிய அளவு இல்லை. தேவையான அளவு மின்சாரம் தயாரிக்கவும் வழியில்லை. கடந்த ஆண்டில் எகிப்தின் ரஃபா எல்லையை மக்கள் ஆவேசமாகக் கடந்து சென்றதே காஸôவின் நிலைமைக்குச் சாட்சி. மண்ணெண்ணெய் மற்றும் ரொட்டியைத் தேடி பெண்களும் குழந்தைகளும் நாடு கடந்து போனதை அவ்வளவு எளிதாக நினைவிலிருந்து அகற்றவிட முடியாது.

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் கடல் போக்குவரத்துத் தடைகளை மீறி உதவிப் பொருள்களைக் கொண்டு செல்ல பல்வேறு அமைப்புகளும் பல முறை முயற்சி செய்திருக்கின்றன. காஸô விடுதலை இயக்கம் என்கிற அமைப்பு இதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இதுவரையில் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேசக் குழுவினரை ஏற்றிக்கொண்டு 8 கப்பல்கள் காஸô நோக்கி கடந்தமாத இறுதியில் புறப்பட்டன. இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட சிமென்ட் போன்ற பல்வேறு பொருள்களும் இந்தக் கப்பல்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர், பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அணியில் சென்றனர். துருக்கியிலிருந்து செயல்படும் ஐஎச்எச் என்கிற அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் அதிகமானோர் இதில் அடங்குவர்.

இந்தக் கப்பல்களில் காஸôவை மறுநிர்மாணம் செய்வதற்கான பொருள்கள் இருப்பதாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூறினர். சர்வதேச கடல் பரப்பு வழியாக காஸôவை அடைவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர். ஆனால், வழக்கம்போல இஸ்ரேல் தரப்பிலிருந்து எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டது.

இஸ்ரேலில் உள்ள ஆஸ்தோத் துறைமுகத்தை நோக்கி வருமாறு கப்பல்கள் அறிவுறுத்தப்பட்டன. கப்பல்களில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்குப் பிறகு காஸôவுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், "எங்கள் இலக்கு காஸôதான்' என்ற கோஷத்துடன் கப்பல்கள் தொடர்ந்து முன்னேறியதால், உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேல் கப்பல்கள் சுற்றி வளைத்தன. சண்டை மூண்டது. அப்போது மவி மர்மரா என்கிற கப்பலில் இஸ்ரேலிய வீரர்கள் ஏறி அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் துருக்கியைச் சேர்ந்தவர்கள். கப்பல்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்படியாக, இஸ்ரேலின் தடையை மீறி காஸôவுக்குள் நுழைவதற்கான இன்னொரு முயற்சியும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இஸ்ரேலுக்கு எதிரான இரண்டு விளைவுகள் இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் என்கிற நாட்டை அங்கீகரித்த முதல் பெரிய இஸ்லாமிய நாடான துருக்கியுடனான உறவில் இப்போது விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது இஸ்ரேலின் வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும்.

அடுத்ததாக, காஸôவின் விடுதலைக்கு ஆதரவாக உலகின் பல நாடுகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடப்பதற்கு இந்தச் சம்பவம் காரணமாக அமைந்திருக்கிறது. இஸ்ரேலுக்கு நெருக்கமான நாடுகளாகக் கருதப்படும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

இஸ்ரேலிய கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஸ்வீடன் துறைமுக ஊழியர்கள் அறிவித்திருக்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கலந்து கொள்ள இருந்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கை நார்வே ரத்து செய்திருக்கிறது.

ஆனால், அமெரிக்க ஆதரவு என்கிற பெரும் பலம் இருக்கும்வரை இஸ்ரேல் எதற்கும் கவலைப்படப் போவதில்லை. எல்லா நாடுகளையும் விட கூடுதல் ராணுவ பலத்தை இஸ்ரேலுக்கு அளித்திருப்பது அமெரிக்காதான். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைக் காப்பதும் அந்த நாடுதான்.

ஒபாமா அதிபரான பிறகு, இஸ்லாமிய நாடுகளை அரவணைத்துச் செல்லும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது முடிவுப்படி, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன; ஆப்கனிலிருந்து கூட்டுப் படைகள் அடுத்த ஆண்டில் வெளியேறத் தொடங்கும். அந்த வரிசையில், காஸôவுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமானால், இஸ்ரேல் பற்றியும் முடிவெடுப்பாரோ என்னவோ?

.

.
.

Wednesday, May 26, 2010

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அஸ்தமனம்?

கணினித் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன.​ இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் காலாவதியாகாமல் இருக்கும் என்பதைக் கணிக்கக்கூட முடியாத அளவுக்கு இந்த மாற்றங்கள் வேகம்பிடித்திருக்கின்றன.​ மாற்றங்களைத் தாங்காத சில தொழில்நுட்பங்கள் நாள் கணக்கிலேயே காணாமல் போய்விடுகின்றன.​ மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தொழில்நுட்பங்களுக்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் சரியாகக் கணித்து தொழில் உத்திகளை வகுத்துக் கொள்ளும் நிறுவனங்கள்தான் தொழில்நுட்பத்துறையில் நீடித்திருக்கின்றன.​ அப்படியொரு தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய நுணுக்கங்களைக் கொண்டிருக்கும் நிறுவனம்தான் மைக்ரோசாஃப்ட்.

தொழில் தந்திரங்களை வகுத்துக் கொள்வதில் மைக்ரோசாஃப்டின் பாணி வியக்கத்தக்கது.​ ஒரு மென்பொருளை விற்கும்போது,​​ அதனைச் சுற்றிய வேறு பல மென்பொருள்களையும் திணித்துவிடுவதுதான் மைக்ரோசாஃப்டின் வழக்கம்.​ அப்படித் திணிக்கப்பட்ட ஒரு மென்பொருள்தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.​ கணினி வழியாக இணையத்துக்குள் நுழைவதற்கான இணைய உலவி இது.

இயக்க அமைப்பு மென்பொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மைக்ரோசாஃப்ட்,​​ தனது விண்டோஸ் இயக்க அமைப்புடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரையும் நுழைத்துவிடுகிறது.​ இதனால்,​​ இணையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே சில ஆண்டுகளுக்கு முன்புவரை எழுதப்படாத விதியாக இருந்தது.​ அதாவது இணையம் என்பதும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்பதும் வெவ்வேறல்ல என்பது போன்ற மாயை இருந்தது.​ இணையத்தில் கரைகண்டவர்கள்தான் வேறுவகையான உலவிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்.​ ​

தொழில் தந்திரங்களின் மூலம் முன்னணியிலிருந்த நெட்ஸ்கேப் நேவிகேட்டர் போன்ற உலவிகளைப் பின்னுக்குத் தள்ளியது மைக்ரோசாஃப்ட்.​ இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 95 சதவீதம் பேருக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தவிர வேறு எந்த உலவியையும் பயன்படுத்தும் தெளிவில்லை என்று ஆய்வுகள் கூறின.

ஆனால் கணினித் தொழில்நுட்ப உலகின் காலச் சக்கரம் நிபுணர்களின் கணிப்பை விடவும் மிக வேகமாகச் சுழல்கிறது.​ ஆறேழு ஆண்டுகளுக்கு முன்புவரை கணினி மென்பொருள் உலகில் ஏகபோகமாக இருந்த ​ மைக்ரோசாஃப்டுக்கு ஐரோப்பிய யூனியன் வடிவில் சோதனை வந்தது.​ உலகின் மற்ற பகுதிகளெல்லாம் மைக்ரோசாஃப்ட் கொடுப்பதை கேள்விகேட்காமல் வாங்கிக் கொண்டிருந்த நிலையில்,​​ மீடியா ப்ளேயர்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்றவற்றை விண்டோஸýடன் இணைத்துக் கொடுப்பது பற்றி ஐரோப்பிய யூனியன் சந்தேகம் எழுப்பியது.

மற்ற நிறுவனங்களின் மென்பொருள்களைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்தச் செருகல் உத்தியை மைக்ரோசாஃப்ட் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.​ இதனால்,​​ மீடியா ப்ளேயர் இல்லாத விண்டோஸ் இயக்க அமைப்பை ஐரோப்பிய யூனியனுக்காகத் தயாரித்து வழங்க வேண்டிதாயிற்று.​ பல ஆயிரம் கோடி அபராதம் வேறு.​ மைக்ரோசாஃப்டின் வியாபாரத் தந்திரத்துக்கு வைக்கப்பட்ட அதிரடியான முதல் குட்டு இதுதான்.

கடந்த ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கும் சோதனை வந்தது.​ கூகுள் க்ரோம்,​​ பயர்ஃபாக்ஸ் போன்ற உலவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல்லாத விண்டோûஸ வழங்குமாறு மைக்ரோசாஃப்டுக்கு உத்தரவிடப்பட்டது.​ அதன்படி விண்டோஸ்-7 ஐரோப்பிய பதிப்பில் மட்டும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கிடையாது.​ தேவைப்படுவோர் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே போட்டி உலவிகளால் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு ஐரோப்பிய யூனியனின் முடிவு பேரிடியாக அமைந்துவிட்டது.​ அண்மையில் வெளியான கணிப்புப்படி,​​ உலக அளவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்துவோரின் அளவு 60 சதவீதத்துக்கும் கீழே சரிந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.​ அதே நேரத்தில் பயர்ஃபாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் ஆகியவை முறையே சுமார் 25 மற்றும் சுமார் 10 சதவீத பயனாளர்களை ஈர்த்திருக்கின்றன.​ இது அதிரடியான மாற்றம்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வீழ்ச்சிக்கு,​​ பாதுகாப்புக் குறைபாடு ஒரு முக்கியக் காரணமாகும்.​ இது தவிர,​​ அலட்சியம் காரணமாக மேம்பாட்டுப் பணிகளுக்குக் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.​ இதனால்,​​ நாள்தோறும் புதுமைகளைப் புகுத்திவரும் பயர்ஃபாக்ஸ் மற்றும் க்ரோம் ஆகியவற்றைத் தேடி விவரம் தெரிந்தவர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர்.​ இதே வேகத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வீழ்ச்சி தொடருமானால்,​​ இன்னும் ஆறேழு ஆண்டுகளில் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் போல முற்றிலுமாக ஒழிந்துவிடும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஆனால், ​​ இந்த விவரமெல்லாம் மைக்ரோசாஃப்டுக்குத் தெரியாதவையல்ல.​ தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் அந்நிறுவனம்,​​ அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் -​ 9 பதிப்பை எச்டிஎம்எல்5 என்கிற வெகுநவீனத் தொழில்நுட்ப வசதியுடன் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது.​ ப்ளாஷ் விடியோவுக்கு மாற்றாக இந்தத் தொழில்நுட்பம் இருக்கும் என்பதால்,​​ மக்கள் மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்குத் திரும்புவார்கள் என மைக்ரோசாஃப்ட் நம்புகிறது.​ இது ஒருவேளை ஓரளவு சாத்தியமாகலாம்.​ ஆனால்,இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஏகபோகம் என்பதெல்லாம் நடக்காது.​
..
..
..

Monday, May 17, 2010

இணையத்தில் தொலையும் பொழுது!

வீட்டுச் சாவியைத் தெருவில் தொலைத்துவிட்டு கூகுளில் தேடும் காலம் இது. நமது இருப்பைக்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வலைப்பூக்களும் அவற்றுக்கான பின்னூட்டங்களும்தான் பலருக்கு முகவரியே.

இன்னும் பலருக்கு வேலையே இணையத்தில்தான். அந்தக் காலம் போல வழக்கமான 8 மணி நேர வேலை என்றில்லாமல், வீட்டிலிருந்தபடியே இணையத்தில் வேலை செய்ய முடிகிறது.  அந்த அளவுக்கு இணையம் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அங்கேயிங்கே சுற்றாமல் நல்ல பிள்ளையாக இருக்கும்வரை எல்லாம் சரிதான். இல்லாவிட்டால் நேரமும் வேலையும் கெட்டுப் போகும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் "யூ ட்யூபிலும்' "ஆன்லைன்' ஆட்டங்களிலும் நேரத்தைத் தொலைத்துவிட்டு மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒன்று அவர்கள் வேலையிழப்பார்கள் அல்லது பொருளைத் தொலைப்பார்கள். இந்த மாதிரியான வலிகளையும் இதர அழுத்தங்களையும் தவிர்ப்பதற்கு, இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவதே சரியான வழி.

நேரத்தை நிர்வகிக்கும் உத்திகளில் இன்றைக்கு மொபைல் போனும் இணையமும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில தகவல்கள் நம்மைத் தேடி வருகின்றன. இ-மெயில் வழியாகவும், வலைப்பூக்கள் உள்ளிட்ட இன்னபிற விவாத மேடைகள் வழியாகவும் தேவையான, தேவையற்ற தகவல்கள் நம்மைக் கடந்து போகின்றன. ஒரு இ-மெயில் சுவையான, பரபரப்பான, சுண்டி இழுக்கும் தலைப்புடன் வருகிறதென்றால், அதைத் திறந்து பார்க்காமல் நம்மால் இருக்க முடிவதில்லை.

தேவையானதா, தேவையற்றதா என்பது நமது புத்திக்கு எட்டும் முன்பே இ-மெயிலைத் திறந்து விடுகிறோம். கண்ணைக் கவரும் படங்கள், இழுத்துச் செல்லும் நகைச்சுவை, அனாவசியத் தகவல்கள், மொக்கைக் கதைகள் என நேரம் போகிறது. இதுபோதாதென, நாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற  அதைப் "பார்வார்ட்'  செய்வது வேறு.

இ-மெயில் சேவை மற்றும் சமூக வலைச் சேவை செய்யும் நிறுவனங்களெல்லாம் இப்போது இலவச இணைப்பாக அரட்டைப் பெட்டி வசதியையும் தந்திருக்கின்றன. இதனால், ஆன்லைனில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறிந்து அரட்டை தொடங்கிவிடும். எதிரே இருப்பவர் ஏதாவது முக்கிய அலுவலில் இருக்கிறாரா, இல்லை ஆனந்த சயனத்தில் இருக்கிறாரா என்பதெல்லாம் இந்த அரட்டைக்குப் பொருட்டேயில்லை.

ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது அரைமணி நேரம் வெட்டியாகக் கழிந்துவிடும். வேலை நெருக்கடிகள் வரும்போதுதான் இதெல்லாம் நம் மூளைக்கு உரைக்கும்.

இணையதளங்களில் மேயும்போதும், பல சுவாரசியமான விஷயங்கள் நம்மைக் கடந்து செல்லும். பாப் அப் எனப்படும் திடீர் விரிவுத் திரைகள் மூலமாகவோ, கவர்ச்சி விளம்பரங்கள் மூலமாகவோ அவை வரலாம். உண்மை என்னவென்றால் கவர்ச்சியாக வரும் இவையெல்லாம் பெரும்பாலும் போலியானவைதான்.

ஏதோ கெட்ட உள்நோக்கத்துடன் வரும் இவற்றையெல்லாம் தொடர்ந்து செல்வதைப்  போல முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதுபோன்ற இழுத்துச் செல்லும் இணைப்புகளைத் தொடர்ந்து செல்வது நேரம் விரையத்துடன், தகவல் திருட்டுக்கும் வழி வகுக்கும்.

"மல்டி டாஸ்கிங்' எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது இன்னும் ஆபத்து. நண்பர்களுடன் அரட்டை, வலைப்பூக்களை வாசிப்பது, குழு விவாதங்களில் பங்கேற்பது, இணைய விளையாட்டுக்களை ஆடுவது என மூளை குழம்பிப் போகும் அளவுக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு பணி செய்யலாம் என்று எண்ணும்போது, கண்களும் மூளையும் ஒத்துழைக்காது. நேரமும் இருக்காது.

இணையத்தில் தேவையில்லாமல் நேரத்தைத் தொலைப்பது என்பது, பணிகளை மட்டுமல்ல குடும்பத்தையும் பாதிக்கும். எந்நேரமும் கணினியும் இணையமுமாக இருக்கும் தந்தையையும் தாயையும் பார்த்துக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். கணவன் - மனைவிக்கு இடையே நெருக்கம் குறையும். உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க வேண்டியிருக்கும். 

இணையம் என்பது நேரம் கொல்லும் கண்டுபிடிப்பல்ல. எண்ணற்ற பயன்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன. தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எது, எப்போது அவசியம் என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.

..
.
.

Tuesday, May 11, 2010

ஆட்சி மாறினாலும்...!

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த நாடுகளில் வண்ணப் புரட்சிகள் மிகப் பிரபலம்.​ ஜார்ஜியாவின் ரோஸ் புரட்சியும்,​​ உக்ரைனின் ஆரஞ்சுப் புரட்சியும் அந்தந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தின.​ ஆசியாவுக்கு வெளியே செக்கோஸ்லாவியாவில் நடந்த வெல்வெட் புரட்சியும் இந்த வரிசையில் சேரும்.​ பொதுவாக அமைதியாகத் தொடங்கும் இந்தப் புரட்சிகள் சில நேரங்களில் வன்முறையாகவும் உருமாறியிருக்கின்றன.​ ஆயினும் பொதுமக்களின் பேராதரவு இந்தப் புரட்சிகளுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது.

கிர்கிஸ்தானிலும் இப்படியொரு புரட்சி கடந்த 2005-ம் ஆண்டில் நடந்தது.​ அப்போதைய அதிபர் அஸ்கார் அகயேவ் மீதான ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள்தான் புரட்சிக்கு அடிப்படைக் காரணம்.​ அது தேர்தல் ஆண்டு என்பதால்,​​ எப்படியும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது.​ ஆனால்,​​ தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன.​ பெரும்பாலான தேர்தல் கணிப்புகளுக்கு மாறாக மீண்டும் அகயேவே வெற்றி பெற்றார்.​ தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்தார் என எதிர்க்கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் குற்றம்சாட்டின.​ இப்படிப்பட்ட அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஏற்பட்டதுதான் ட்யூலிப் புரட்சி.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களான ரோஸô ஒடுன்பேவா,​​ குர்மன்பேக் பாகியேவ் ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தப் புரட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாத அகயேவும் அவரது குடும்பத்தினரும் அண்டை நாடான கஜகஸ்தானுக்குப் பறந்தனர்.​ அதே ஆண்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.​ புரட்சியை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவரான பாகியேவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ "மக்களாட்சி மீட்டெடுக்கப்பட்டுவிட்டது;​ ​ இனியெல்லாம் சுபமே' என்று அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல,​​ உலகமே நம்பியது.​ ஆனால் அந்த நம்பிக்கையை நீண்டகாலம் நீடிக்கவிடும் நல்ல அரசியல்வாதிகள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என்ன?

ஒரே ஆண்டுதான் அந்த ஆட்சிக்குத் தேனிலவு.​ அதன் பிறகு,​​ யார் புரட்சியாளராளராகவும் ஜனநாயகப் பாதுகாவலராகவும் கருதப்பட்டாரோ,​​ அதே தலைவரின் ஆட்சி மக்களுக்குக் கசக்கத் தொடங்கியது.​ எதிர்க்கட்சித் தலைவர்களையும்,​​ அரசியல் கைதிகளையும் படுகொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.​ மகனுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியதும்,​​ பினாமிகளின் பெயரில் சொத்துகளைக் குவித்ததும் அவருக்கு இருந்த நல்ல பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தின.​ முன்பிருந்ததைவிட நிர்வாகம் சீர்கெட்டது.​ வேலையில்லாத் திண்டாட்டமும்,​​ உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்தன.​ இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆட்சியைக் குறைகூறிய ஊடகங்கள் தடை செய்யப்பட்டன.

2009-ல் அடுத்த அதிபர் தேர்தல் வந்தது.​ அதிருப்தியடைந்திருந்த மக்கள்,​​ ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.​ ஆனால்,​​ வழக்கம்போலவே அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.​ 78 சதவீத வாக்குகளைப் பெற்று பாகியேவ் மீண்டும் வெற்றிபெற்றார்.​ வெற்றி பெற்ற கையுடன்,​​ பெட்ரோல்,​​ டீசல் விலையையும் மின் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார்.​ அதுவரை உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த மக்களை இந்த விலையேற்றம் போராடத் தூண்டியது.​ இந்த ஆண்டின் தொடக்கம் முதலே,​​ அரசுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின.​ படிப்படியாகச் சில ஆயுதக் குழுக்களும் களத்தில் இறங்கின.​ மார்ச் இறுதியில் இந்தப் புரட்சி இறுதிக் கட்டத்தை எட்டிய ஒரு சில நாள்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த முறை புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் ரோஸô ஓடுன்பேவா.​ 5 ​ ஆண்டுகளுக்கு முன் பாகியேவுடன் சேர்ந்து புரட்சி செய்தாரே அதே தலைவர்தான்.​ இப்போது பாகியேவுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.​ அரசுக் கட்டடங்கள் அனைத்தும் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும்.​ வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட பாகியேவ்,​​ வழக்கம்போல கஜகஸ்தானுக்குப் பறந்தார்.​ இப்போது ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது.​ நாட்டின் தலைமைப் பொறுப்பை ரோஸô ஏற்றிருக்கிறார்.

இப்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம்,​​ ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிரந்தரமான வெற்றி என உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு முந்தைய கால அரசியல் மாற்றங்கள் அமைந்திருக்கின்றன.​ அந்நாட்டு மக்கள் ​ கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய,​​ புதிய ஆட்சியாளர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்று கருத முடியாது.

இதுபோன்ற அரசியல் சூழலை மத்திய ஆசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடலாம்.​ ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள்தான் இந்த நாடுகளின் அடையாளம்.​ குடும்ப உறுப்பினர்களை அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதுடன்,​​ முக்கியத் தொழில்களையும் கைப்பற்றுவது தங்களது பிறப்புரிமை என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.​ ஒருங்கிணைக்கப்பட்ட வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் ஆட்சியாளர்களைத் தட்டிக்கேட்கவும் ஆளில்லாமல் போகிறது.

இவற்றால் விரக்தியடையும் மக்கள்,​​ தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்.​ இதெல்லாம் மத்திய ஆசியா முழுமைக்கும் பொருந்தும் என்பதால்,​​ கிர்கிஸ்தானின் இப்போதைய அரசியல் புரட்சிகூட துர்க்மெனிஸ்தான்,​​ கஜகஸ்தான்,​​ உஸ்பெகிஸ்தான்,​​ தாஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பரவக்கூடும் என அரசியல் நிபுணர்கள் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிர்கிஸ்தானின் ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் பரபரப்பாகியிருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு.​ ஆப்கானிஸ்தான் போருக்கான அமெரிக்க விமானப்படைத்தளம் கிர்கிஸ்தானில் இருப்பதுதான் அந்த முக்கியக் காரணம்.​ ஆப்கன்போர் முடிந்துவிட்ட பிறகும்,​​ ரஷியா,​​ சீனாவின் எதிர்ப்பையும் மீறி இந்தத் தளம் தொடர்ந்து இயங்கி வருவதும்,​​ ​ ஆட்சிகள் பல மாறினாலும் இந்த படைத்தளத்துக்கான வாடகை ஒப்பந்தத்தை மட்டும் தடைபடாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதும்தான் உலக அரசியலில் சாமான்யர்களுக்குப் புரியாத ரகசியங்கள்.
..

.

Monday, May 10, 2010

பிரிட்டன்: திரும்பும் வரலாறு!


1970-களின் தொடக்கத்தில் பிரிட்டனின் தொழில்துறை முடங்கிப் போயிருந்தது. இதனால்,  வேலை வாய்ப்பில்லாத ஜனத்தொகை பெருகியது. வாரத்துக்கு 3 நாள்கள் வேலை கிடைப்பதே பெரும் பாக்கியம் என்கிற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.

அந்தச் சூழலில் 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொழிலாளர் கட்சியும் டோரி கட்சியும் பெரும்பான்மைக்குப் பக்கத்தில் இருந்தன. அப்போது பிரதமராக இருந்த டோரி கட்சியின் எட்வர்ட் ஹீத், சிறுபான்மை அரசை அமைத்தார்.

கூட்டணிப் பேரமும், குதிரைப் பேரமும் படியாததால் அந்த அரசு சில நாள்களிலேயே கவிழ்ந்தது. பிறகு லேபர் கட்சி தலைமையில் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்டு அதுவும் ஓரிரு மாதங்களிலேயே கவிழ்ந்ததால் நாடு இன்னொரு தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தல் லேபர் கட்சிக்கு ஒற்றை இலக்கப் பெரும்பான்மையைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டில், வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் போன்ற பிரச்னைகளில் பிரிட்டன் சிக்கியிருக்கிறது.

1974-ல் இருந்ததைப் போலவே இரு பெரிய கட்சிகளின் மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அந்த ஆண்டைப் போலவே மூன்றாவது கட்சி வாக்குகளைப் பிரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டுத் தேர்தல் 1974-ம் ஆண்டை ஒத்திருக்கிறது.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று எல்லோரும் கணித்திருந்தார்கள். அது நடந்திருக்கிறது. மக்கள் தெளிவான முடிவைத் தரவில்லை. பெரும்பான்மைக்குத் தேவையான 326 இடங்களை எட்டுவதற்கு டோரி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 20 இடங்கள் தேவை.

மொத்தமுள்ள 650 இடங்களில் அந்தக் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்திருக்கின்றன. ஆளும் லேபர் கட்சி 257 இடங்களில் வென்றிருக்கிறது, ஒன்றுக்கு மேற்பட்டோரைக் கூட்டுச் சேர்த்தால் தான் கார்டன் பிரெüன் மீண்டும் டவுனிங் தெருப்பக்கம் போக முடியும்.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட லிபரல் டெமாக்ரெட் கட்சி 57 தொகுதிகளில்தான் வென்றிருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பிரெüனையும், கேமரூனையும் பின்னுக்குத் தள்ளி, ஹீரோவாக வலம் வந்த லிபரல் டெமாக்ரேட் கட்சியின் தலைவர் க்ளெக்,  தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்.

இருந்தாலும், தமது தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்கிற பெருமையுடன், இரு அணிகளுடனும் பேரம் பேசுவதில் இப்போது மும்முரமாகியிருக்கிறார்.

க்ளெக் எந்தப் பக்கம் சாய்கிறாரோ அந்தக் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கேமரூன், அமைச்சரவையில் இடம்தருவதாகக் கூறி க்ளெக்கை அழைத்திருக்கிறார். க்ளெக்கும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், லேபர் கட்சியுடன் பேசப்போவதில்லை எனவும் அவர் கூறிவிடவில்லை. இந்த விஷயத்தில் அவர் பக்குவமாகக் காய் நகர்த்துகிறார். டோரிக்கள் என்ன தருகிறார்கள் என்பதைப் பார்த்த பிறகு, பிரெüன் அணியுடன் பேசலாம் என்பதே அவருடைய திட்டம்.

பிரசாரத்தில் கூறியபடி, தேர்தலில் விகிதாசார வாக்கு முறையை அமல்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை க்ளெக் முன்வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கன்சர்வேட்டிவ்  எம்பிக்களில் பெரும்பாலானோர் இதை ஏற்க மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. இதனால், குறைந்தபட்சம், விகிதாசார வாக்கு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்தறியும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதிலாவது க்ளெக் கடைசிவரை உறுதியாக இருப்பார்.

ஆனால் ஒப்பந்தம் என்னவாக இருந்தாலும், க்ளெக்கும் கேமரூனும் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுத்து விடமுடியாது. மேம்பட்ட ஜனநாயகவாதிகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பிரிட்டனில் கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோரால் ஒப்புக் கொள்ளப்படும் முடிவையே எடுக்க முடியும். அதற்கென பிரத்யேகமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுபோக, விகிதாசார வாக்கு முறையை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த லிபரல் கட்சியை மக்கள் புறக்கணித்திருக்கும்போது, அதே விஷயத்தை ஏற்கலாமா எனவும் டோரிக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆக, லிபரல் டெமாக்ரெட் - கன்சர்வேட்டிவ் இடையே இணக்கம் ஏற்படுவது என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுபோல மிக எளிதானது அல்ல.

பிரிட்டன் மரபுப்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சியில் இருக்கும் கட்சியைத்தான் மீண்டும் அரசமைக்கும்படி அரசி அழைப்பு விடுப்பார்.

தங்களால் முடியாது என்று அந்தக் கட்சி கூறினால்தான் அடுத்த கட்சிக்கு வாய்ப்பு. பிரெüனுக்கு அப்படியொரு வாய்ப்பு வழங்கப்பட்டால், ஆட்சி அமைத்துக் கொண்டு வேறு சில கூட்டல் கழித்தல் கணக்குகளுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவர் முயற்சிக்கூடும்.

ஆனால், இதற்கெல்லாம் வெகு முன்பாகவே, டோரி கன்சர்வேட்டிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரேட் கட்சியும் இறுதி ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டால், தார்மிக அடிப்படையில் பிரெüன் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்தக் கணிப்புகளையெல்லாம் தாண்டி, பெரிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, லிபரல் டெமாக்ரெட் கட்சியே ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனநாயகத்தில் நடக்க முடியாததென்றோ ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றோ ஏதாவது இருக்கிறதா என்ன?

..
..

கிருபாநந்தினியின் அதிர்ச்சிப் பதிவு!

கிருபாநந்தினி எழுதியிருக்கும் அதிர்ச்சிப் பதிவு, பலருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியவில்லை.

http://padithurai.blogspot.com/2010/05/blog-post.html

...

Tuesday, May 04, 2010

பார்வதியம்மாளைத் தீண்டும் அரசியல்!

அரசியல் என்பது வேறுவகையான ஆட்டக்களம். வழக்கமான ஆட்ட விதிகள் அங்கு செல்லுபடியாகா. ஒருவருக்குப் பொருந்தும் விதி மற்றவருக்குப் பொருந்தாது. ஒரு ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சட்டம், எல்லா ஆட்டத்துக்கும் பொருந்த வேண்டும் என வியாக்கியானம் பேச முடியாது. இங்குள்ள நியாங்களே வேறு. குற்றவாளிகளெல்லாம் சேர்ந்து குற்றவியல் சட்டத்தை எழுதுவதும் இங்குதான். ஊதிய உயர்வு கேட்கும் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் அரசியல்வாதி, அடுத்த ஆண்டிலேயே அந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு உத்தரவு போடுவார். இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்று பிரித்துக் கூறமுடியாது. அந்த மாதிரியான பகுப்பே இங்கு கிடையாது. அப்படிப் பகுத்துக்கொள்வது நம் முட்டாள்தனம். இது காலம்காலமாக இருக்கும் நியதி.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம்தான் பிரபாகரன் சிக்கியிருந்தார். அவரைக் கொண்டு பலவகையான ஆட்டங்களை தமிழக அரசியல்வாதிகள் ஆடிக் களைத்துவிட்டனர். இப்போது அவரது தாயாரைக் கொண்டு புதிய ஆட்டம்.

பார்வதியம்மாளுக்குச் சிகிச்சையளிப்பதோ அல்லது அவரைத் தமிழகத்தில் வைத்துப் பத்திரமாகப் பாதுகாப்பதோதான் நம்மவர்களின் நோக்கம் என்று யாராவது கூறினால், அவர் வேற்றுக் கிரகவாசியாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் இலவசங்களில் மயங்கி புத்தியை அடகு வைத்தவராக இருக்க வேண்டும்.

அந்த அம்மையாருக்குச் சிகிச்சையளிப்பது என்பது மிகவும் நேர்மையாகச் செய்ய வேண்டிய விஷயம். தமிழகத்தில்தான் சிகிச்சையளிக்க வேண்டும் என்று உறுதியான பிறகு, இப்போதிருக்கும் அரசியல் சூழலில், முதல்வரிடம் மட்டும் அனுமதி கேட்டாலே போதும். ஆனால், அது செய்யப்படவில்லை. சரி, இலங்கையிலிருந்து நேரடியாகவே இந்தியாவுக்கு வந்திருக்கலாம். அதுவும் இல்லை.

மலேசியாவில் இருந்து தமிழக அரசுக்கு தற்போது மெயில் அனுப்பியதாகக் கூறப்படுகிறதே, அந்த மெயிலை அப்போதே அனுப்பியிருக்கலாம். ஆனால், டீக் குடித்தாலும், தீக்குளித்தாலும் வீராவேசம் பேசித் திரிவோரின் கையில் விவகாரம் போயிருக்கிறது. அதுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம்.

உண்மையிலே, சிகிச்சை மட்டுமே நோக்கமென்றால், தற்போது தமிழக அரசு செலவிலேயே தரப்படும் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு தரப்பு அரசியலும் எதிர்தரப்பு அரசியலும் எந்த வகையிலும் குறைந்ததில்லை. முதல்பத்தியில் கூறப்பட்ட எல்லா இலக்கணங்களும் இருதரப்புக்குமே பொருந்தும். ஆனால், இப்போதைய உடனடித் தேவை சிகிச்சைதான்.

உண்மையிலேயே அந்த அம்மையாரின் மேல் அக்கறைகொண்டிருப்போர் இந்த வழிகாட்டுதலைத்தான் அவருக்குத் தருவார்கள். இல்லையென்றால், சில அரசியல்வாதிகளின் தொலைந்துபோன புகழை மீட்பதற்கும், தமிழகப் புலனாய்வுப் பத்திரிகைகளில், உணர்ச்சி மயமான கண்ணீர்க் கட்டுரைகளை எழுதுவதற்கும் மட்டும்தான் அந்த அம்மாளின் பெயர் பயன்படும்.

....
..
..

Thursday, April 29, 2010

என்ன ஆனார் புலிகளின் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்?

எழுந்திருக்கும் சந்தேகம் பெரும் விவகாரமானது என்பதால் கொஞ்சம் தயக்கத்துடனும் அச்சத்துடனுமே எழுதவேண்டியிருக்கிறது.

தற்கால அரசியல்வாதிகளில் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய தகுதி ஒருசிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1960-களிலேயே இந்தியாவைக் கலக்கியவர். அவரது தலைமையேற்கும் பண்பு பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பெருமை கொண்டது.மாணவர் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் தலைவராக இருந்து புரட்சி செய்திருக்கிறார்.

இந்திரா காந்தியை நடுநடுங்கச் செய்தவர். கோக கோலா மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்களை நாட்டைவிட்டு வெளியேறச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளையும் பர்மிய போராளிகளையும் வெளிப்படையாக ஆதரித்தவர்.

அப்படிப்பட்ட அரசியல்வாதி, அதுவும் கிறித்துவர், தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜகவுடன் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார். வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

"இந்தியாவின் எதிரி சீனா" எனத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டிய இரண்டாவது தலைவர் அவர். என்ன காரணத்தாலோ, அவர் மீது "சவப்பெட்டி ஊழல்" சுமத்தப்பட்டது. தெஹல்கா என்கிற "புலனாய்வுப்" பத்திரிகை இவர் மீது ஆயுதபேர ஊழலைச் சுமத்தியது. இந்திய மக்களும் அதை நம்பினார்கள். சவப்பெட்டியிலுமா ஊழல் என்கிற கவர்ச்சிகரமான கேள்வி மக்களைக் கிறங்கடித்தது. மக்களவையில் அவர் பேச எழுந்திருக்கும்போதெல்லாம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவகையான அரசியல்வாதிகளையும் கையாளத் தெரிந்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு தனக்கு எதிரான காங்கிரஸின் சதியை முறியடிக்க முடியவில்லை. அவர் பதவியில் இருக்கும்வரை ஒரு புழுவைப் போலத்தான் நடத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். அந்தத் துருப்புச் சீட்டை அவர் இன்று வரைக்கும் பயன்படுத்தவில்லை என்பதும் ஆச்சர்யம்தான்.

ஒருவேளை அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால், இலங்கையிலும், பர்மாவிலும் நிலைமை வேறு மாதிரியாகியிருக்கும். சீனாவும் வாலைச் சுருட்டிக் கொண்டிருக்கும்.


கடந்த தேர்தலின்போது, உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். சுயேச்சையாக நின்று தோற்றுப் போனார். அதன்பிறகு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் செய்திகள் வந்தன.

எல்லா அரசியல் கட்சிகளாலும் ஒருகாலத்தில் விரும்பப்பட்ட ஒரு மாபெரும் போராளி இப்படி முகவரி இல்லாமல் ஆக்கப்பட்டதற்கு பின்னணியில் சர்வதேசச் சதி ஏதும் இல்லாமலா இருக்கும்?
,,
..

Tuesday, April 27, 2010

அழகிரியும் "கார்ப்பரேட் மக்களாட்சியும்"

இந்தியாவின் மக்களாட்சி கொஞ்சம் கார்ப்பரேட்தனமானது. நாடாளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்ல வேண்டியவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், பிரதமரோ மற்ற அமைச்சர்களோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் "நியமிக்கப்"படுகிறார்கள். தேர்தலில் அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சி, தனக்குப் பிடித்தமானவர்களை இந்தப் பதவிகளில் அமர்த்திக் கொள்ள முடியும். தற்போதைய நிலவரப்படி, பிரதமரும் இன்ன பிற முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களும் இப்படிப் புறவாசல் வழியாக வந்தவர்கள்தான். இதுபோக, நாட்டின் தலைவரும், துணைத் தலைவரும்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் இது எந்த வகையான மக்களாட்சி? முழுமையான நாடாளுமன்ற நடைமுறையுமல்ல, முழுமையான அதிபராட்சி நடைமுறையுமல்ல.

பெரும்பாலான நாடுகள், இதுபோன்ற காலாவதியான நடைமுறைகளை மாற்றத் துணிந்திருக்கின்றன. சில நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இன்னும் எத்தனை காலம்தான் நியமிக்கப்படுவோரைத் தலைவர்களாகக் கொண்டு நம் நாடு இயங்க வேண்டுமோ தெரியவில்லை?ஆனாலும் குடியரசாகி இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவிலான ஜனநாயக நெருக்கடி ஏற்படவில்லை என்பதால், இந்த நடைமுறையை வேறு வழியில்லாமல் நாம் புகழ வேண்டியிருக்கிறது.

நமது மக்களாட்சி நடைமுறையில் உள்ள இன்னொரு மிகப்பெரும் பலவீனம் அழகிரி விவகாரத்தில் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்களாட்சி என்பதன் அடிப்படையே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, காபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சராக இருப்பதற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

அழகிரி எப்படி வெற்றி பெற்றார், அவர் எப்படிப்பட்டவர், அவரது பின்புலம் என்ன என்பன போன்ற ஆராய்ச்சியெல்லாம் இங்கு தேவையில்லை. ஆங்கில அறிவு குறைவு என்கிற ஒரே காரணத்துக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமைச்சர் பதவிக்குத் தகுதியானவரில்லை என்று ஏளனம் செய்வது எந்த விதத்தில் நியாயமாக முடியும்?

வட மாநிலங்களில் இருந்து அமைச்சர்களாக்கப்பட்ட எத்தனையோ பேர் ஆங்கில வாசனையே இல்லாமல், "திறம்பட" செயல்பட முடிகிறது என்றால், அழகிரியால் செயல்பட முடியாதா? அல்லது அழகிரிக்கு நிர்வாகத் திறன் இல்லையென்று கூறிவிட முடியுமா? அவருடைய ஒரே பிரச்னை ஆங்கிலம்தான் என்றால், அதைச் சரிப்படுத்த முனையாமல் தொடர்ந்து ஏளனம் செய்வதிலேயே வடநாட்டுக்காரர்கள் குறியாக இருப்பதன் மர்மம் என்ன? நாம் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் தமிழ்நாட்டுக்காரர்களும் அவர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதுவது அப்பாவித்தனம் இல்லையா?

கார்ப்பரேட் எண்ணம் கொண்டவர்கள் அமைச்சர்களாக இருப்பதால்தான் நாட்டில் நக்சலைட் எண்ணம் பரவத் தொடங்கியிருக்கிறது. தற்காலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர், நாட்டை ஒரு கம்பெனி மாதிரி நடத்துவதால்தான், புள்ளிவிவரப்படி நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையிலும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். இந்தக் "கார்ப்பரேட் மக்களாட்சி" கலாசாரம் முடிவுக்கு வர வேண்டுமானால், அமைச்சராவதற்கு, ஆங்கிலம் அவசியம் என்கிற சதியை முறியடிக்க வேண்டும். இது அழகிரிக்கு வக்காலத்து வாங்கும் முயற்சியல்ல. அடிப்படை மாற்றத்துக்கான முயற்சி.

இதில் விரிவாக விவாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

..
.

Sunday, April 25, 2010

பிரிட்டனின் ஒபாமா?

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒபாமாவைப் பற்றிக் கேட்டால் யாருக்காவது தெரிந்திருக்குமா? ஏதோ புதிய பெயர் என்றுதான் பெரும்பாலானோர் கூறியிருப்பார்கள். ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான போட்டியில் நின்றபோதுகூட அவர் வெற்றிபெறுவார் என்று யாரும் கருதவில்லை.

அமெரிக்கர்கள்கூட அவரைப் பற்றி மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டார்கள். ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அரசியல், பொருளாதார பின்புலம் இல்லாமலேயே உலக வல்லரசின் அதிபராக முடியும் என்று அவர் நிரூபித்தார். இதற்காக அவர் பயன்படுத்திய ஆயுதம் பிரசாரம். மாற்றம் தேவை என்கிற மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தி தம் பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்தார் அவர். மக்களை மட்டுமல்லாமல், கென்னடி குடும்பத்தையே கூட மந்திரத்தால் தம் பக்கம் கட்டி இழுத்தார். அவர் அதிபரானதற்கு பிரசார உத்தியைத் தவிர வேறெந்த உடனடிக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியொரு கவர்ச்சிப் பிரசார நட்சத்திரம் ஒன்று பிரிட்டன் தேர்தலிலும் களம் இறங்கியிருக்கிறது. அவரது பெயர் நிக் க்ளெக். லிபரல் டெமாக்ரேட் கட்சியின் தலைவரான இவருக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

க்ளெக்கின் வருகையால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பிரிட்டன் அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் லேபர் கட்சியும் ஆதிகாலத்து டோரி கட்சியின் மறுஉருவான கன்சர்வேடிவ் கட்சியும் அச்சத்தில் மூழ்கியிருக்கின்றன.

வரும் 6-ம் தேதி பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. கடந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கு இந்தத் தேர்தல் இன்னொரு வாழ்வா சாவா போராட்டம். பிரதமர் கார்டன் பிரெüனின் லேபர் கட்சிக்கு இதுவொரு அக்கினிப் பரீட்சை. பிளேரிடமிருந்து நேரடியாக பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட பிரெüனுக்கு தமது செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம். க்ளெக்கின் லிபரல் டெமாக்ரெட் கட்சியைப் பொருத்தவரை, வரலாற்றில் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பு. இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை வகிப்பது இதுதான் முதல் முறை என்பது இன்னொரு விசேஷம்.

தேர்தலையொட்டி, அண்மையில் மூன்று கட்சித்

தலைவர்களும் கலந்து கொண்ட தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் லேபர் கட்சித் தலைவரும் பிரதமருமான கார்டன் பிரெüனும், கன்சர்வேடிவ் கட்சியைத் தலைவர் ஜேம்ஸ் கேமரானும் லிபரல் டெமாக்ரேட் கட்சித் தலைவர் க்ளெக்கும் கலந்து கொண்டனர்.

இதில், பிரெüனையும், கேமரானையும் கிளெக் பின்னுக்குத் தள்ளினார். அதாவது, க்ளெக்கின் பேச்சுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரெüனும் கேமரானும்கூட தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பத்திரிகைகள் க்ளெக்கை, வின்ஸ்டன் சர்ச்சிலுடனும், ஜான் கென்னடியுடனும் ஒப்பிடத் தொடங்கிவிட்டன.

இந்த தொலைக்காட்சி விவாதத்தின் முடிவுகள், பிரிட்டன் அரசியலைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகளின்படி, மற்ற இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு க்ளெக் தலைமையிலான லிபரல் டெமாக்ரெட் கட்சி ஒட்டுமொத்தமாக அதிக வாக்குகளைப் பெறும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி நடந்தால், அது ஒரு நூற்றாண்டுச் சாதனையாகும்.

இராக் போர் மற்றும் அந்நாட்டில் துருப்புகளை நிலைகொள்ளச் செய்திருப்பது ஆகியவற்றுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே லேபர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள் கொண்டிருக்கின்றன.

 ஆனால், லிபரல் டெமாக்ரெட் கட்சி இதற்கு நேரெதிரானது. தொடக்கம் முதலே இராக் போரில் பிரிட்டன் ஈடுபடுவதை எதிர்த்து வருவது, அந்தக் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இராக் விவகாரத்தைப் போலவே, விகிதாசார வாக்குமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற யோசனையும் பிரசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. எல்லாக் கட்சிகளும் இதை வலியுறுத்தினாலும், பல ஆண்டுகளாகவே தேர்தல் சீர்திருத்தம் கோருவதில், முன்னோடியாக இருப்பதால் லிபரல் கட்சிக்கு இது கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தர உதவும் எனக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான எம்.பி.க்களின் அநாவசியச் செலவு விவகாரமும் லிபரல் கட்சிக்கு ஆதரவாகவே இருக்கிறது. சொந்தக் கடன்களை அடைப்பதற்கும், களியாட்டங்களில் கலந்து கொள்வதற்கும் அரசுப் பணத்தை எம்பிக்கள் செலவு செய்ததாக எழுந்த பிரச்னையை அடுத்து, மக்களவைத் தலைவரே ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

லேபர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் அதிக அளவில் இந்த விவகாரத்தில் சிக்கிய நிலையில், லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு பெரிய பாதிப்பில்லை. இது கட்சிக்கு நல்லபெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு இன்னொரு சாதகமான விவகாரம் பொருளாதார மந்தம். நாட்டின் பொருளாதாரம் சரிந்ததில் லேபர் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் பங்கிருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில் இருகட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் லிபரல் கட்சிக்குக் கிடைக்கும்.

எனினும், ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தைக் கொண்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூற முடியாது. பிரிட்டன் தேர்தல் இந்தியாவைப் போன்றதுதான். தொகுதிவாரியாக நிறுத்தப்படும் வேட்பாளர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த முறைப்படி, நாடு முழுவதும் பதிவாகும் வாக்குகளில் அதிக பங்கைப் பெற்ற கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதில்லை. அதேபோல் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற கட்சித் தலைவரின் கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்றும் கூறமுடியாது.

உதாரணமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லேபர் கட்சி 35.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. கன்சர்வேடிவ் கட்சி 32.3 வாக்குகளைப் பெற்றது இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் மூன்று சதவீதம்தான்.

ஆனால், நாடாளுமன்றத்தில் லேபர் கட்சிக்கு 356 இடங்கள் கிடைத்தன. கன்சர்வேடிவ் கட்சி வெறும் 198 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிக இடங்களைப் பெற வேண்டுமானால், நாடு முழுவதும் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு பரந்த செல்வாக்கு இல்லை எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தொங்கு மக்களவை அமைந்தால் தேர்தலுக்குப் பிறகு லேபர் கட்சியுடன் க்ளெக் கட்சி கூட்டணி வைக்கலாம் என்கிற சந்தேகமும் மக்களிடையே இருக்கிறது. அதுவும் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால், க்ளெக் பிரதமராவார் என்பது கொஞ்சம் அதிகப்படியான எதிர்பார்ப்பாகத்தான் தெரிகிறது.

ஆனால், பிரசார உத்திகளைக் கொண்டு கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலான இடங்களை க்ளெக்கின் கட்சி வெல்லக்கூடும் எனத் தெரிகிறது. அந்த வகையில் ஒபாமாவுடன் க்ளெக்கை ஒப்பிடலாம். ஒபாமாவின் பிரசாரத்தில் இருந்த துடிப்பையும் வேகத்தையும் க்ளெக்கிடம் காண முடிகிறது. மக்களவைக் கவரும் தீர்வுகளைத் தருவதில் இவர் ஒபாமாவேதான்.

ஆயினும், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், மூன்றாவது கட்சியைச் சேர்ந்த ஒபாமா தேவையா என முடிவு செய்ய வேண்டியது பிரிட்டன் மக்கள்தான்.

...
.

Tuesday, April 20, 2010

ஊடகங்களின் வசூல் வேட்டை

ஊடக சுதந்திரமும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் தனிமனித உரிமையும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆரோக்கியமான சமூகத்தில் இவ்விரண்டும் சமநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். தற்கால அரசியல், பொருளாதார, நாகரிக, தொழில்நுட்ப வளர்ச்சிகளால் இந்தச் சமநிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இதே நிலைமை தொடர்வது ஜனநாயக அமைப்பைக் குலைத்துவிடக்கூடும்.

அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களிடையே மட்டும்தான் அவை அதிகச் செல்வாக்குச் செலுத்தின. கல்வியறிவு பெறாத பின்தங்கிய மக்களிடம் கருத்துகளை உருவாக்குவதில் அவற்றின் பங்கு மிகக் குறைவாகவே இருந்தது.

நுகர்பொருள்களை வாங்குவது முதல் அரசியல் முடிவு எடுப்பதுவரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அப்போதிலிருந்தே தனிமனித உரிமைக்கும் ஊடகசுதந்திரத்துக்கும் இடையேயான சமநிலை குறித்த விவாதம் உலகமெங்கும் நடந்து வந்திருக்கிறது.

இப்போது மின்னணு யுகத்துக்குள் நுழைந்திருக்கிறோம். ஊடகத்துறையில் தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது. போட்டிகள் பெருகியிருக்கின்றன. அரசியல் சார்பு ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக ஊடகங்கள் நசுக்கப்படுவதும், அதேபோன்ற காரணங்களுக்காக அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி ஊடகங்கள் எதிர்த்தாக்குதல் தொடுப்பதும் வழக்கமான நிகழ்வுகளாகியிருக்கின்றன. பரபரப்பு ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்வதற்காக உண்மை உறுதிசெய்யப்படாத செய்திகள் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் பற்றி உரக்க விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஊடகங்கள் மத்தியில் கிஸ் அண்ட் டெல் என்பது பிரசித்தம். பிரபலமான ஒருவரிடம் நெருக்கமாகப் பழகி, அவரது தவறான நடத்தை, மோசடி, ரகசியங்கள், அந்தரங்க நடவடிக்கைகள் போன்றவை பற்றிய ஆதாரங்களைச் சேகரித்து ஊடகங்களிடம் விற்றுப் பணம் பெறுவதுதான் கிஸ் அண்ட் டெல். பாலியல் ரீதியான ஆவணங்கள் என்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்.

விற்பனை அதிகரிப்பு ரேட்டிங்கில் முதலிடம் போன்றவற்றுக்காக இதுபோன்ற விடியோ, ஆடியோ, புகைப்பட ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் தருவதை உலகின் பல பத்திரிகைகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆதாரங்களை வெளியிட்டால் லாபம்.  வெளியிடாவிட்டால் அதைவிட அதிகமான லாபம் என்பதுதான் கிஸ் அண்ட் டெல் உத்தியின் சூட்சுமம். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் முதல் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி வரை கிஸ் அண்ட் டெல் வலையில் சிக்கிய பிரபலங்கள் பட்டியல் மிக நீளமானது.

இதுபோல, அப்ரூவராக மாறிய குற்றவாளிகள் என்றால் சில ஊடகங்களுக்கு பொக்கிஷம் கிடைத்த மாதிரி. ஏதோ ஒரு காரணத்தால் கூட்டாளியைக் காட்டிக்கொடுக்க முன்வந்த குற்றவாளிகளைக் கொண்டு, பரபரப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்.

முன்னாள் கூட்டாளிகளைப் பற்றியும், சதிச் செயல்கள் மற்றும் அந்தரங்கங்கள் பற்றியும் அவர்கள் கட்டுரை எழுதுவார்கள் அல்லது பேட்டியளிப்பார்கள். தேவைப்பட்டால் டேப் ஆதாரங்களைக்கூட வழங்குவார்கள்.

இதையெல்லாம் வெளியிட்டால் ஓரிரு வாரங்கள் நாடே அச்சத்துடன் கவனிக்கும் .  கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் கருத்துச் சொல்வார்கள். இந்தப் பரபரப்பில் விலைவாசி உயர்வையும், வேலையின்மையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.

அப்ரூவராக மாறியவருக்கு போதுமான புகழ் கிடைப்பதுடன், கணிசமான வருமானத்துக்கும் வழி ஏற்படும். இதுவும் கிஸ் அண்ட் டெல் வகைதான்.

பிரபலங்களை விவாகரத்து செய்தவர்களும், நட்புடன் இருந்து பிரிந்து போனவர்களும்கூட ஊடகங்களின் தேடல் பட்டியலில் உண்டு. அவர்களது முன்னாள் கணவர், மனைவி, நண்பர் பற்றிய அந்தரங்கங்களை வெளியிட்டு சர்ச்சை உருவாக்கப்படும். பின்னர் அதையொட்டிய ஊடக வியாபாரம் அமோகமாக நடக்கும்.

இதற்காக சில ஊடகங்கள் பெரும் பணம் கொடுக்கின்றன. கொடுத்த பணம் ஒன்றுக்குப் பத்தாக கண்டிப்பாக வசூலாகிவிடும். மேலை நாடுகளில் மட்டுமே இருந்த இதுபோன்ற அநாகரிகங்கள், இப்போது இந்தியாவிலும் அவ்வப்போது நடக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதுதாம் நாம் விழித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

அண்மையில் இதுபோன்ற கிஸ் அண்ட் டெல் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. பிரிட்டனின் நியூஸ் ஆஃப் வேர்ல்டு பத்திரிகையால் பாதிக்கப்பட்ட ஒருவர், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனிமனித அந்தரங்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதுபற்றி முன் அனுமதி பெறும் வகையில் சட்டம் இயற்றலாம் என்கிற அளவுக்கு விவாதம் நடந்திருக்கிறது.

அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் பணம் கொடுத்து அந்தரங்கங்களை விலைக்கு வாங்குவது குறையக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இதுபற்றிய பெரிய விவாதம் இன்னும் எழவில்லை.

கிஸ் அண்ட் டெல் உத்தி, ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பரப்புவதற்கும் உதவக்கூடியதுதான் என்றாலும், வருமானத்தைப் பெருக்குவதற்காக மட்டுமே இப்போது இது பயன்படுத்தப்படுகிறது. எந்த வகையிலும் மக்களுக்குப் பயனளிக்காத அடுத்தவரின் அந்தரங்கத்தை வெளியிடுவதும், அதைக் கொண்டு பேரம் பேசுவதும் ஊடக தர்மத்துக்கு  முற்றிலும் எதிரானது.

அதுவும் திருமண பந்தத்துக்கு மதிப்பளிக்கிற இந்தியா போன்ற நாடுகளில் அடுத்தவரின் அந்தரங்கங்களை வெளியிடுவது, மக்கள் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கும் மேலான பணியைச் செய்ய வேண்டிய ஊடகங்கள், இப்படி அந்தரங்கங்களை வெளியிட்டுச் சம்பாதிக்கும் நிலைக்குத் தாழ்ந்திருப்பது, ஜனநாயகத்துக்கே ஓர் அபாய எச்சரிக்கை.
..
..

Saturday, April 10, 2010

வலையில் சிக்கும் தலைமுறை!

ஆடுகளை வளர்த்ததற்காக ஓர் ஊழியரை,​​ அமெரிக்க நிறுவனம் அண்மையில் பணி நீக்கம் செய்தது.​ இதென்ன கொடுமை;​ ஆடு வளர்த்தது எப்படிக் குற்றமாகும் என்று எண்ணத் தோன்றும்.​ ஆனால்,​​ அந்த ஊழியர் வளர்த்தது உண்மையான ஆடுகளை அல்ல.​ அவை பொய்யானவை.​ ஆடுகள் வளர்க்கப்பட்டது அலுவலகக் கம்ப்யூட்டரில்.

விஷயம் இதுதான்.​ விடியோ கேம்களின் அடுத்தநிலை இணையத்தில் ஆடப்படும் ஆன்லைன் விளையாட்டுகள்.​ 'விர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் உண்மை போன்ற மாயைதான் இன்றைய ஆன்லைன் விளையாட்டுகளின் மையக் கரு.

விவசாயம் செய்வது,​​ ஆடு வளர்ப்பது,​​ காட்டு விலங்குகளைப் பராமரிப்பது,​​ ஹோட்டல் நடத்துவது என எல்லாமே ஆன்லைனில் சாத்தியம்.​ ஒரு மணி நேரம்,​​ இரண்டு மணி நேரம் அல்ல,​​ ஆண்டுக்கணக்கில்கூட இந்த ஆட்டங்களை ஆடிக்கொண்டே இருக்க முடியும்.

இந்த ஆட்டங்களில் மூழ்கித் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை.​ இவர்கள் ஓடி விளையாடுவதில்லை.​ உட்கார்ந்து கொண்டோ,​​ படுத்துக் கொண்டோதான் விளையாடுவார்கள்.

'பேஸ்புக்' எனப்படும் சமூக வலைத்தளத்துடன் இணைந்த 'பார்ம் வில்லா' என்ற ஆட்டம்தான் ஆன்லைனில் இப்போது மிகவும் பிரசித்தி.​ விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆட்டம்.​ இதுவும் ஆண்டுக்கணக்கில் ஆடக்கூடிய ஆட்டம்தான்.​ விதை விற்பனை,​​ மகசூல் அறுவடை,​​ பால் உற்பத்தி,​​ தோட்டப் பராமரிப்பு என உண்மையான விவசாயி செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் இந்த ஆட்டத்தில் உண்டு.​ அடிப்படையில் இதெல்லாம் இலவசம்தான் என்றாலும்,​​ நம்முடைய தகவல்களை வணிகரீதியாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும்,​​ விளம்பரங்கள் ​ வழியாகவும் இணையதளத்துக்கு வருவாய் கிடைக்கிறது.

தற்போதைய மதிப்பீட்டின்படி,​​ கோடிக்கணக்கானோர் பார்ம் வில்லாவில் விவசாயம் செய்வதாக பேஸ்புக் சொல்கிறது.​ அலுவலக வேலை நேரத்தில் இப்படி விவசாயம் செய்ததால்தான் மேற்சொன்ன நபருக்கு வேலை போனது.

இதுபோன்ற வேறொரு ஆன்லைன் ஆட்டத்தில் மூழ்கி,​​ குழந்தைக்குப் பால் கொடுக்காமல் சாகடித்த தம்பதியைப் பற்றி அண்மையில் செய்தி வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் பிரியஸ் ஆன்லைன் என்ற தளத்தில் மாயக் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி வளர்த்திருக்கின்றனர்.​ நாள்தோறும் பல மணி நேரம் இண்டர்நெட் மையங்களில் நேரத்தைப் போக்கியிருக்கிறார்கள்.​

அந்த நேரத்தில் 3 மாதமே ஆன அவர்களது சொந்தக் குழந்தை உணவில்லாமல் இறந்து போயிருக்கிறது.​ இது அசாதாரண சம்பவம்தான்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் ஆட்டங்கள் மக்களை எந்த அளவுக்கு மாயையில் மூழ்கச் செய்யக்கூடிய வலுக்கொண்டவை என்பதைப் புரிந்து கொள்ள இது நல்ல உதாரணம்.

எல்லா ஆன்லைன் ஆட்டங்களுமே மோசமானவை அல்ல.​ கல்விக்காகவும்,​​ மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும் நேரங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு சில மணித்துளிகளிலேயே முடிந்துவிடக்கூடிய சில ஆன்லைன் ஆட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.​ அறிவியல்,​​ கணிதம்,​​ சமூகம் தொடர்பான அறிவை வளர்ப்பதற்குப் பயன்படும் இணைய விளையாட்டுகளும் நிறையவே இருக்கின்றன.

ஆனால்,​​ அவையெல்லாம் மக்களைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.​ நாள் கணக்கில்,​​ ஆண்டுக்கணக்கில் அடிமைப்படுத்தக்கூடிய விளையாட்டுகளுக்கும் பாலியல் ரீதியான,​​ வன்முறையைத் தூண்டும் சில விளையாட்டுகளுக்கும்தான் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது.​ இணையத்தின் மற்ற உள்ளடக்கங்களைப்போல மொழி ரீதியான தடையும் ஆன்லைன் ஆட்டங்களுக்கு இல்லை என்பதால்,​​ மிகவேகமாகவே இவை பிரபலமடைந்து விடுகின்றன.

குழந்தைகள்,​​ இளைஞர்கள்,​​ முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.​ நவீன விளையாட்டுகளில் உலகமெங்கும் இருப்பவர்கள் இணைந்து ஆட முடிகிறது.​ கூடவே அரட்டையடிக்கவும் முடியும்.​ வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.​ வெற்றி பெற்றவற்றைப் பிறருக்குப் பரிசளிக்கவும்(..?!)​ வசதியிருக்கிறது.​ இவையெல்லாம் மக்களைக் கவர்வதற்கான உத்திகள்.

ஆன்லைன் விளையாட்டுகளை ஆடும் அனைவரும் அவற்றுக்குள் மனதை முடக்கி அடிமையாகப் போய்விடுகின்றனர் எனக் கூற முடியாது.​ ஆனால்,​​ பெரும்பாலான ஆட்டங்களில் அடிமைப்படுத்தும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கிறது.​ அது ஒரு போதை மாதிரி.

ஆட்டத்தைத் தொடங்கிய பெரும்பாலானோர் அவற்றை விட்டுவிட முடியாமல் திணறுகின்றனர்.​ இந்த ஆட்டங்களால்,​​ நேரம் விரையமாகிறது என்பதுடன்,​​ மணிக் கணக்கில் அசைவற்று ஒரே இடத்தில் இருப்பதால் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் வேறு எத்தனையோ மோசமான அம்சங்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.​ கவனத்தைக் கவர்ந்து,​​ இழுத்துச் செல்லக்கூடியவை இங்கு அதிகம்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் விளையாட்டுகள்தான் மக்களின் அடிப்படை மனநிலையையே மாற்றக்கூடிய சக்தி கொண்டவையாக இருக்கின்றன.​ நல்லவை என்கிற போர்வையில் வருவதால் மற்றவற்றுக்கு ஈடான ஆபத்து இதிலும் இருக்கிறது.

இளம் வயதிலேயே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள்,​​ பொறுப்பான விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்களாகவும் நடைமுறையில் நட்பை உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாகவும் மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.​ ​

இந்த ஆபத்தை உணர்ந்துதான்,​​ பெரும்பாலான பள்ளிகள்,​​ கல்லூரிகளில் இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.​ பணிகளில் சுணக்கம் ஏற்படுவதால் பல நிறுவனங்களும் இவற்றைத் தடை செய்திருக்கின்றன.​ ஆனாலும்,​​ இவைகளால் மட்டுமே ஆபத்தை முழுமையாகப் போக்கிவிட முடியாது.

இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவது குறித்தும்,​​ இணையத்தில் செய்ய வேண்டிய பணிகளை உரிய முக்கியத்துவத்துடன் முடிப்பது குறித்தும் கல்வி நிறுவனங்களிலும்,​​ ஊழியர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.​ அரசே இதைச் செய்தால் இன்னும் நல்லது.​ ஏனெனில் இது தனிநபரின் பிரச்னையல்ல,​​ தலைமுறையின் பிரச்னை.
..
.

Tuesday, March 09, 2010

எம்.எஃப்.ஹுசைன், ஒரு டாக்டர், ஒரு இலக்கியவாதி

எஸ்.இ.ஓ. கீ வேர்ட்ஸ் போல தலைப்பு வைப்பதுதான் பதிவெழுதுவதில் இன்றைய பேஷன். இந்தத் தலைப்புக்கு இதுதான் முக்கியக் காரணம். மற்றபடி கூகுள் இந்தப் பக்கத்தை முதலில் காட்டுவதற்கு எந்தச் சிரமும் ஏற்பட்டுவிடக்கூடாது; தமிழ்மணம், தமிழிஷ் போன்றவற்றில் படிப்பவர்களுக்கு பதிவு யாரைப்பற்றியது என்பதில் தெளிவு கிடைக்க வேண்டும்; மக்களனைவரும் காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பன போன்ற உயர்ந்த லட்சிகளுக்காகவும் மேற்படி தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டாமை பண்ணியோ, கட்டப்பஞ்சாயத்து நடத்தியோ மொய் பெற வேண்டும் என்கிற எண்ணம் ஏதும் இல்லை. அதேபோல உளவுத்துறை ரேஞ்சுக்குக்கும் இங்கு ஒன்றுமில்லை. ஆகையால் சிக்கிட்டான்யா என்ற ஆர்வத்தில் படிக்க வந்த உளவுத்துறைக்காரர்கள் மேலே படிப்பதை விட்டுவிட்டு வேறு பதிவில் யாராவது எதையாவது பேசி சிக்குகிறார்களா என்று பார்க்கவும்.

-----------

ஹுசைன் சிறந்த ஓவியர். நவீன கால ஓவியங்கள் வரைவதில் கில்லாடி. மாதுரி, சரஸ்வதி எனப் புகழ்பெற்றவர். இவரைப் பற்றி மூத்த இலக்கியவாதி ஒருவரும், நம்மிடையே எந்தவித கெத்தும் பார்க்காமல் பின்னூட்டங்கள் மூலம் பேசும் டாக்டரும் பதிவெழுதியிருக்கிறார்கள். மேலோட்டமாக இருவரின் கருத்தும் கிட்டத்தட்ட ஒன்று. இது ஆச்சரியமான ஒற்றுமை. ஆழத்தில் என்ன உள்குத்து இருக்கிறது என்பது இங்கு தேவையற்றது. எனக்குப் புரிந்தவரையில், ஹுசைன் வேற்றுநாட்டுக்கு அனுப்பப்படுவதையும், நிர்வாண ஓவியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையும் முட்டாள்தனங்கள் என்று இருவருமே சொல்லியிருக்கிறார்கள்.


இந்த விவகாரத்தின் பின்னாலிருக்கும் அரசியலை இலக்கியவாதி தவிர்த்துவிட்டார். டாக்டர் கொஞ்சம் தொட்டார். தாமும் ஒரு ஓவியர் என்பதால் அவர் ஒரு சார்புநிலை எடுக்கச் சாத்தியமிருக்கிறது. அல்லது நான் ஒரு ஓவியனில்லை என்பதால் அவரது உக்கிரப் பார்வையிலுள்ள நியாயம் எனக்குப் புரியாமல் போகவும் சாத்தியமிருக்கிறது.  ஆனால் விவகாரத்தை முழுமையான அரசியல் ரீதியாக அணுகாமல் வெறும் கலை, மதம் என அணுகினால் ஒன்றுமே வெறும் ஆத்திரம் மட்டுமே மிஞ்சும்.

தமிழ்நாட்டில் முதல்வர் தலைமையில் நடந்த விழாவில் சொல்லிக் கொடுக்கப்பட்டவற்றைத் தாண்டி சிலவற்றை அஜீத்குமார் பேசினார். அவருக்கு என்னவாயிற்று. கண்டிப்பாக ஒரு வாரம் தூங்கியிருக்க மாட்டார். நடிப்பை வேண்டுமானாலும் விட்டுவிடுகிறேன் என்று அவர் கூறுமளவுக்கு நிலைமை போனது. கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் முதல்வரின் வாயில் மைக்கைத் திணித்து கேள்வி கேட்பார்கள்.

மகாராஷ்டிரத்தில் ஒரு நடிகரின் படத்தைத் திரையிடவிடமாட்டோம் என்று ஒரு கும்பல் சொல்லியது. ஆனாலும் அந்த நடிகர் தொடர்ந்து அந்தக் கும்பலை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் ஒரு நடிகர் இப்படி நடந்து கொள்ள முடியுமா? தமிழக அரசியல் மோசம், மற்ற மாநில அரசியல் நன்று என்று நான் ஒப்பிடவரவில்லை. ஆனால், இமேஜ் பாருங்கள். யாருக்கு நல்ல இமேஜ். யாருக்கு மோசமான இமேஜ். அதுதானே நுண்ணரசியல்.

தஸ்லிமாவையும் ஹுசைனையும் ஒப்பிடமுடியாது. தஸ்லிமாவின் எழுத்து அவ்வளவு சிறந்ததல்ல. ஆனாலும் வேற்று நாட்டிலிருந்து இங்கு வந்து ஒட்டிக் கொண்டவர். இந்திய விசா பெற்ற ஒருவரை இந்தியாவுக்குள் பாதுகாக்க முடிந்ததா? இதை ஒப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.

ஹுசைனுக்கு இப்போது கத்தார் குடியுரிமை வழங்கியிருக்கிறது. நிர்வாணப் படங்களுக்குத் தடை விதித்திருக்கும், அடுத்த மதங்களைத் தூற்றுவதைக் குற்றமாகக் கருதும் ஒரு நாடு, எப்படி ஹுசைனைக்கு விசா வழங்கியது? அல்லது இந்தப் படங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த அனுமதி வழங்கிவிடுமா? அங்குதான் நடக்கிறது சர்வதேச நுண்ணரசியல்.

கலை உரிமையையும், ஊடக சுதந்திரத்தைப் பேசுபவர்களெல்லாம் சாதாரண மக்களிடமிருந்து மிகத் தூரத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருப்பவர்கள். பின்னால் வரும் மக்களின் கையைப் பிடித்து அறிவுரை சொல்ல அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் சொல்லும் தூரத்தை வைத்து நாடு பொருளாதார, சமூக அடிப்படையில் முன்னேறிவிட்டது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் பொய். நம் மக்கள் பின்தங்கியிருப்பவர்கள். கொஞ்சமே புரிந்துகொள்ளும் திறனுள்ள இவர்களிடம், நீ கும்பிடும் தெய்வத்தை நிர்வாணமாக வரைகிறேன் என்று அதிரடியாகச் செயல்படுவது, மக்களாட்சி சமநிலையுடன் நடக்க உதவுமா? அதற்கெல்லாம் இன்னும் மக்கள் தயாராகவில்லையே. கத்தாரில்கூட இதுதான் நிலை. இந்த நிலையில் நம் மக்கள் எம்எஃப் ஹுசைனையும், தஸ்லிமா நஸ்ரினையும் இப்போதையச் சூழலில் ஏற்கவே மாட்டார்கள். அதனால் டாக்டரும் எழுத்தாளரும் சொல்லும் நியாயங்கள் வீண்.

-----------------

இதே போன்ற இன்னொரு விவகாரத்திலும் இந்த இருவரும் பதிவெழுதியிருக்கின்றனர். ஒருவருக்கொருவர் முரணாக. அது நித்தியானந்தர். இங்கும் எல்லாவற்றையும் அறம், துறவு எனப் பேசிய இவர்கள் அரசியலைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அல்லது இங்கும் தவிர்த்துவிட்டனர். அந்தப் பதிவுகளின் உஷ்ணத்தை இந்தப் பதிவு தாங்காது. அந்த உஷ்ணத்தைக் குறைத்திருக்கலாம்.

----------------

டாக்டர் ஒருபுத்தகத்தின் முதல்பக்கத்தில் சொல்வார். குமுதமும் ஆனந்தவிகடனும் சொன்னால்தான் உங்களுக்கெல்லாம் தெரியும் தாஜ்மஹாலின் அழகு என்று. அந்தமாதிரியான அறிவுப்படிதான் இதை எழுதியிருக்கிறேன்.

...
.

Monday, March 08, 2010

தகவல் வேணுமாம்ல... தகவலு!

தகவல் சட்டம்: மக்களுக்கு நல்லதா?

எவ்வளவு ஜாலியாக இருந்தது அந்தக் காலம், எங்களமாதிரி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும். இப்ப அப்படியா? நின்னது, நடந்தது, பிரெஞ்சு லீவு போட்டு மப்புல கிடந்ததையெல்லாம் ஒன்சைடு பேப்பர்ல எழுதித் தகவல்னு கேட்டுர்றாங்க. இவங்களுக்குப் பதில் சொல்லியே பேக்ல பலருக்குக் கொட்டிப்போச்சு. சொந்தக்காரனுக்கு வேலை போட்டுக் கொடுத்தாலும், வீடு வாங்கிக் கொடுத்தாலும் விலாவாரியாத் தெரிஞ்சு போகுது. நாடு இப்படிப் போனா, அரசியல்வாதியாவோ அதிகாரியாவோ இருந்து என்ன புண்ணியம்? படுத்தறாங்களே..!

மக்களுக்கு இது நல்லதாய்யா? சொல்லுங்கய்யா! குளம் வெட்டின கணக்கக் கேட்டு பெரிசு ஒன்னு மனுப்போட்டுது. அத்தோட போயிருக்கலாம்ல. குளத்தப் பாக்கணுமாம். ஊர் புல்லாத் தேடி... குளத்தையே காணாமா மாரடைப்பு வந்து தர்மாஸ்பத்திரில செத்துப் போச்சு.. இத மாதிரி அமைச்சர் சொத்து விவரம் வேணும்னு மதுரக்காரி ஒருத்தி மனுப்போட்டா. நாங்க அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது மீறியும் கேட்டா கையக்கால வாங்கிடுவோம்னு அடக்க ஒடுக்கமா பதில் சொன்னோம். இதவிட அஹிம்சையா எப்படிய்யா நடந்துக்கறது. அவ இதையெல்லாம் கேக்காமா கோர்ட்டுக்குப் போனா. எல்லாம் படிச்ச திமிர். போ... யார் வேண்டாம்னா. இப்ப என்னாச்சு உசிரு போச்சுல்லா. எல்லாத்துக்கும் இந்தச் சட்டம்தான காரணம். இப்பச் சொல்லுங்கய்யா மக்களுக்கு இது நல்லதாய்யா?


இன்னொருத்தன் ரொம்ப விவரமா, ஹவுசிங் போர்டுல எந்தெந்தவீடு அரசியல்வாதிக்கு கொடுத்திருங்கான்னு கேட்டான். முட்டாப்பய. என்னிக்காவது ஹவுசிங் போர்டுல உன்னமாதிரி ஆளுங்களுக்கு வீடு கொடுத்திருக்காங்களா? அப்புறம் என்னடா கேள்வி.  எல்லாவீடும் அரசியல்வாதிகளுக்குத்தான். என்ன பண்ணுவ. லைட்டா மண்ணு லாரிய விட்டு உரசிப் பாத்தோம். கால் ஒடிஞ்சதோட தப்பிச்சிட்டான். சரி இது ஏன் நடந்தது யார் செஞ்சிருப்பான்னு யோசிக்கணுமா இல்லியா. அந்த மரமண்டைல ஏறல. மண்ணு லாரியக் கொண்டு உங்க மாமன் மச்சானா விளையாடுவான். புரிஞ்சிக்கோடான்னு வீட்டுலேயே போய் சொல்லிப் பாத்தோம். கடைசில வேற வழியில்லாமா அவன் குடியிருந்த வீட்டயே வெளிவட்டச் செயலாளரோட அந்தரங்கச் செயலாளர் பேர்ல நாங்களே பத்திரம் தயாரிச்சிட்டோம். இப்ப அவன் வீட்டக் கேட்டு கோர்ட்டுல கெடக்கான். பொதுவா நாங்கள்லாம் நல்லவங்கதான். இப்படி அநியாயமாச் சீண்டினாத்தான் கோவம் வந்து போட்ருவோம்.


இந்தத் தகவல் சட்டத்தால பல பேரோடு உசிரு போயிருக்கு. பலர் நடுத்தெருவுக்கு வந்திருக்காங்க. வேலை பறிகொடுத்திருக்காங்க. சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமா ஆகியிருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு சட்டம் நல்லதாய்யா. நீங்களே யோசிங்கய்யா.

தகவல் சட்டத்தால பேப்பர் பேனா விலைஏறினது, டிடிபி சென்டர்ல பிரிண்டவுட் எடுக்க மதிய சோத்தக் கட்டிக்கிட்டுப் போயி வரிசையில நிக்கறது, டிடி கமிஷனுக்கே பெர்சனல் லோன் போட்டதுதாங்க நடந்திருக்கு. வேற உருப்படியா ஒன்னக் காட்டுங்க பாப்போம். இல்ல உருப்படியா ஒன்னு கெடச்சிருமா. நாங்க குடுத்திருவமா. அப்புறம் எதுக்குய்யா இந்தச் சட்டம்.

எங்களக் கேட்டா இந்தச் சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதுங்கய்யா . காத பக்கத்துல கொண்டுவாங்கய்யா... பாகிஸ்தான்காரங்க நம்ம நாட்டுத் தகவலையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நம்மேல போர் தொடுத்தா என்னய்யா பண்ணுவீங்க. ஆங்....இப்ப புரியுதா... நாங்க ஏன் தகவலத் தரமாட்டோங்கறது.... எல்லாம் நாட்டுப் பற்றுய்யா... நாட்டுப் பற்று....தகவல் வேணுமாம்ல. தகவலு...

...

..

மகளிர் மசோதாவுக்கு எதிராகக் கூட்டுச் சதி?

என் நண்பன் ஒருவன் சர்ச்சைகளை உருவாக்குபவன். அவன் என்னைச் சந்திக்க வருகிறான் என்றாலே லேப்டாப்பில் கூகுளை ஓபன் செய்து வைத்துக் கொள்வேன். அந்த அளவுக்கு என் மூளைக்கு எட்டாதவற்றை கேட்டு டப்பாவாக்குவான். இன்னைக்கு என்னவோ "எளவோ" என்று காத்திருந்தபோது, கேள் பிரண்டோடு வந்தான். அவன் வாசலுக்கு வரும்போதே, சேனலை சுட்டி டிவியிலிருந்து என்டிடிவிக்கு மாற்றினேன். அங்குதான் தொடங்கியது ஏழரை. டிவியில் ராஜ்யசபா அடிதடிக் கும்மியில் ஹமீத் அன்சாரி சிக்கியிருந்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

"என்னடா கருமம் இது. பொம்பளைங்களுக்கு எதுக்குடா இடஒதுக்கீடு" இது நானல்ல அவன்.

"..!" சர்ச்சை வேண்டாமென மௌனம் காத்தேன். "சன் நியூஸ்ல பாப்போமோ" பேச்சைத் திருப்ப முயன்றேன்.

அவன் விடுவதாக இல்லை. " பொம்பளைங்க எந்தக் காலத்துலடா நாட்ட ஒழுங்கா ஆண்டிருக்காங்க"

"..................!"    பெண்ணியவாதிகளை நினைத்து மனது படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

"ஏன்டா, எதாவது சொல்லுடா. உனக்கு தெரிஞ்ச பெண் அரசியல்வாதிங்க பேரெல்லாம் சொல்லு பாப்போம்"

".......................!"

" சரி நானே சொல்றேன்! இந்திரா காந்தி, பாகிஸ்தான்ல பெனாசிர், வங்கதேச ஷேக் ஹசீனாவும் அவரது எதிரி கலீதா ஜியாவும், பிலிப்பைன்ஸ்ல முன்னாள் இமெல்டாவும் இன்னாள் அரோயோவும், இங்கிலாந்து தாட்சர், இலங்கையில பண்டாரநாயகேகள், நம்மூர் ஜெயலலிதா, உ.பி. மாயாவதி, பிகார் ராப்ரி இப்படி நமக்கு ஓரளவுக்குத் தெரிஞ்ச எல்லோருமே நாட்டச் சீரழிக்கத்தான் பார்த்தாங்க. இதுல இன்னும் ஏண்டா இட ஒதுக்கீடு"


"...................!"

அவன்கூட வந்த பெண் ஆவேசமாக எழுந்தாள்.

"ஏய் என்ன ரொம்ப அடுக்கிக்கிட்டே போற. நான் இங்க இருக்கறத மறந்திட்டியா. ஜெர்மனி ஏஞ்சலா மெர்கல், சிலி பேக்லெட்டெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதோ. நீ சொன்னவங்களெல்லாம்கூட ஆம்பிளைங்களவிட கொஞ்சம் நல்லாத்தான் ஆட்சி பண்ணாங்க" சூடாகக் கொடுத்தாள்.  அவனுக்கு ஈக்வலாக இருப்பாள் போல.

"ஆமாமா நீ சொல்றது சர்தான்" வழிந்தான். நான் பொதுவாச் சொன்னேன். நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும். கரெக்ட்தான். புல்லா புரிஞ்சிடுச்சி. நாந்தான் தப்பாப் பேசிட்டேன். சாரி. நாங்க நாட்ட ஆண்டாலும் வீட்ல நீங்கதான் எஜமான். அப்படீன்னா நீங்கதான நாட்ட ஆளுறமாதிரி. இதுல இடஒதுக்கீடு வேற தேவையான்னு... அந்த டென்ட்ல சொன்னேன்" பேயடித்தது போலப் பேசினான்.

"புரிஞ்சா சரி" அவள் முகத்தைக் கோணிக்கொண்டு உட்கார்ந்தாள்.

"டேய்! லேடீஸுக்கு ரிசர்வேசன் கொடுக்க விடமாட்டாங்க போலிருக்கே" பல்டியடித்தான்.

"ஆமாடா. யாரோ நாலஞ்சு பேரு மட்டும்தான பிரச்னை பண்றாங்க. அவங்கள வெளிய தூக்கிப் போட்டுட்டு வேலையப் பாக்க வேண்டியதுதான" இப்பதான் எனக்கு வாய் திறந்தது.

"இந்த கவர்மெண்டு வேணும்னே இத வேடிக்கை பாக்கறாங்க போலடா"

"தெரியலடா"

"அந்தக் கட்சிக்காரன் சொன்னான்டா. வலியப் போயி ஆதரவு குடுத்தும், காலைலேருந்து அந்தக்கட்சிக்காரன் ஒருத்தனும் எங்களுக்கு போன் பண்ணலன்னு சொன்னான்டா. ஏதோ உள்குத்து இருக்கும்போல" 

"தெரியலடா"

"எல்லாரும் கூட்டுச் சேர்ந்து பண்றாங்க போலடா"

அப்போ அவள் குறுக்கிட்டாள்.

"அய்யா ரொம்ப யோசிக்காதீங்க. எப்படியும் நடக்கப்போறதில்ல. அப்படியே தந்தாலும்  இதென்ன வேலை வாய்ப்பிலயும் படிப்பிலயுமா கொடுக்கறாங்க. அரசியல்ல. இதனால என்ன ஆகப்போகுது. ஏற்கெனவே அரசியல்ல இருக்கற ஆம்பிளைங்கதான் பொண்டாட்டி புள்ளைங்கள பொம்மைகளா வெச்சு பயன்படுத்திக் போறாங்க.  அது இன்னும அசிங்கம். நாங்க சுயம்பாவே வந்துக்கறோம்."

"சர்தான்..!"

"சர்தான்..!"


.
..