Tuesday, April 27, 2010

அழகிரியும் "கார்ப்பரேட் மக்களாட்சியும்"

இந்தியாவின் மக்களாட்சி கொஞ்சம் கார்ப்பரேட்தனமானது. நாடாளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்ல வேண்டியவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், பிரதமரோ மற்ற அமைச்சர்களோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் "நியமிக்கப்"படுகிறார்கள். தேர்தலில் அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சி, தனக்குப் பிடித்தமானவர்களை இந்தப் பதவிகளில் அமர்த்திக் கொள்ள முடியும். தற்போதைய நிலவரப்படி, பிரதமரும் இன்ன பிற முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களும் இப்படிப் புறவாசல் வழியாக வந்தவர்கள்தான். இதுபோக, நாட்டின் தலைவரும், துணைத் தலைவரும்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் இது எந்த வகையான மக்களாட்சி? முழுமையான நாடாளுமன்ற நடைமுறையுமல்ல, முழுமையான அதிபராட்சி நடைமுறையுமல்ல.

பெரும்பாலான நாடுகள், இதுபோன்ற காலாவதியான நடைமுறைகளை மாற்றத் துணிந்திருக்கின்றன. சில நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இன்னும் எத்தனை காலம்தான் நியமிக்கப்படுவோரைத் தலைவர்களாகக் கொண்டு நம் நாடு இயங்க வேண்டுமோ தெரியவில்லை?ஆனாலும் குடியரசாகி இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவிலான ஜனநாயக நெருக்கடி ஏற்படவில்லை என்பதால், இந்த நடைமுறையை வேறு வழியில்லாமல் நாம் புகழ வேண்டியிருக்கிறது.

நமது மக்களாட்சி நடைமுறையில் உள்ள இன்னொரு மிகப்பெரும் பலவீனம் அழகிரி விவகாரத்தில் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்களாட்சி என்பதன் அடிப்படையே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, காபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சராக இருப்பதற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

அழகிரி எப்படி வெற்றி பெற்றார், அவர் எப்படிப்பட்டவர், அவரது பின்புலம் என்ன என்பன போன்ற ஆராய்ச்சியெல்லாம் இங்கு தேவையில்லை. ஆங்கில அறிவு குறைவு என்கிற ஒரே காரணத்துக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமைச்சர் பதவிக்குத் தகுதியானவரில்லை என்று ஏளனம் செய்வது எந்த விதத்தில் நியாயமாக முடியும்?

வட மாநிலங்களில் இருந்து அமைச்சர்களாக்கப்பட்ட எத்தனையோ பேர் ஆங்கில வாசனையே இல்லாமல், "திறம்பட" செயல்பட முடிகிறது என்றால், அழகிரியால் செயல்பட முடியாதா? அல்லது அழகிரிக்கு நிர்வாகத் திறன் இல்லையென்று கூறிவிட முடியுமா? அவருடைய ஒரே பிரச்னை ஆங்கிலம்தான் என்றால், அதைச் சரிப்படுத்த முனையாமல் தொடர்ந்து ஏளனம் செய்வதிலேயே வடநாட்டுக்காரர்கள் குறியாக இருப்பதன் மர்மம் என்ன? நாம் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் தமிழ்நாட்டுக்காரர்களும் அவர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதுவது அப்பாவித்தனம் இல்லையா?

கார்ப்பரேட் எண்ணம் கொண்டவர்கள் அமைச்சர்களாக இருப்பதால்தான் நாட்டில் நக்சலைட் எண்ணம் பரவத் தொடங்கியிருக்கிறது. தற்காலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர், நாட்டை ஒரு கம்பெனி மாதிரி நடத்துவதால்தான், புள்ளிவிவரப்படி நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையிலும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். இந்தக் "கார்ப்பரேட் மக்களாட்சி" கலாசாரம் முடிவுக்கு வர வேண்டுமானால், அமைச்சராவதற்கு, ஆங்கிலம் அவசியம் என்கிற சதியை முறியடிக்க வேண்டும். இது அழகிரிக்கு வக்காலத்து வாங்கும் முயற்சியல்ல. அடிப்படை மாற்றத்துக்கான முயற்சி.

இதில் விரிவாக விவாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

..
.

5 comments:

bandhu said...

அழகிரிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று ஏளனம் செய்வது மிகவும் தவறு. அது யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட
வேண்டியது தான். ஆனால் இப்போது பிரச்சனை அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பது இல்லை. நாடாளு மன்றத்திற்கு வருவதில்லை என்பதுதான். அது தவறு தானே?

Anonymous said...

பாராளுமன்றத்தில் வினாக்களுக்கு அமைச்சர்கள் விடை அளிப்பது ஹிந்தியில் அல்லது ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டி உள்ளது; பிற அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் பேச இப்போது கட்டமைப்பு இல்லை. கட்டமைப்பு கொண்டு வர வேண்டும். அது வரையில் விரும்புகிறோமோ இல்லையோ ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ பேச முடிந்தவர் தான் அமைச்சர் ஆக வேண்டும். அஞ்சா நெஞ்சரும் மனது வைத்தால் கூடிய விரைவில் பயிற்சியுடன் பேச முடியும். அப்படி முடியாத பட்சத்தில் பாராளுமன்றத்துக்கு வருவதில்லை என்ற அவப் பெயரை தாங்கிக்கொள்ள த்தான் வேண்டும்.
எருக்களுக்கு மானியம் என்ற விஷயம் விவாதிக்கும் அமைச்சரவை கூட்டத்தில் உர அமைச்சர் கலந்து கொள்ளாதாதது வேதனைப் படக்கூடிய விஷயமே

Anonymous said...

அழகிரிக்கு ஆங்கிலம் தெரியவில்லையென்பது குறையல்ல. ஆனால் ஒரு நாட்டின் பாரளுமன்றத்திற்கு செல்பவர் அந்நாட்டின் தேசிய மொழியை அறிந்திருக்க வேண்டும். இவரது தந்தையார் மற்ற பிள்ளைகளை நன்றாக ஆங்கிலமும் ஹிந்தியும் படிக்கவைத்துவிட்டார். ஆனால் தமிழ்நாட்டு மக்களை தமிழைத்தவிர மற்ற மொழிகளை படிக்க விடாமல் செய்துவிட்டார்.

தந்தையாருக்கு மக்கள் விட்ட சாபம் இப்போது மகனுக்கு பலிக்கிறது. அதற்குள்ள ஒரே விமர்சனம் ஹிந்தி படிப்பதுதான்.

புளியங்குடி said...

அழகிரி நாடாளுமன்றத்துக்கு வராதது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும், அதற்கெல்லாம் அடிப்படை ஆங்கிலம்தானே? இது தவிர, அழகிரியை ஒதுக்குவதில் வேறு சில தமிழக அறிவாளிகள் சதி செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

Unknown said...

சுதந்திர இந்தியாவில் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று வறையறுத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் ஆட்சிமொழி என்று அறிவித்துவிட்டு, அதைப் பிறர் மேல் திணிப்பதற்குப் பெயர் என்ன சுதந்திரமோ? ஆங்கிலேயரிடம் சுதந்திரம் வாங்கியது, இந்தி மொழியைக் கட்டாயம் படிக்கத்தானா? இதன் பொருள் என்ன? அடிமைகள் இன்னொருவருக்கு அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள்.ஆங்கிலமும் இந்தியும்தான் பேசவேண்டும் என்றால்,பிற மாநிலத்தவர்களில் படித்தவர்கள்தான் அமைச்சராக முடியும்.ஆனால் இந்தி பேசும் மானிலத்தவர்கள் அமைச்சராவதற்கு படிக்க வேண்டியது இல்லை அதற்குப் பதில் பிற மானிலத்தவர்களில், படிக்காதவர்களுக்கு வாக்குறிமையை பறித்துவிடலாமே.பிறகு என்ன சமத்துவம்,சுதந்திரம் வேண்டிக் கிடக்கிறது.