Tuesday, April 20, 2010

ஊடகங்களின் வசூல் வேட்டை

ஊடக சுதந்திரமும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் தனிமனித உரிமையும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆரோக்கியமான சமூகத்தில் இவ்விரண்டும் சமநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். தற்கால அரசியல், பொருளாதார, நாகரிக, தொழில்நுட்ப வளர்ச்சிகளால் இந்தச் சமநிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இதே நிலைமை தொடர்வது ஜனநாயக அமைப்பைக் குலைத்துவிடக்கூடும்.

அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களிடையே மட்டும்தான் அவை அதிகச் செல்வாக்குச் செலுத்தின. கல்வியறிவு பெறாத பின்தங்கிய மக்களிடம் கருத்துகளை உருவாக்குவதில் அவற்றின் பங்கு மிகக் குறைவாகவே இருந்தது.

நுகர்பொருள்களை வாங்குவது முதல் அரசியல் முடிவு எடுப்பதுவரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அப்போதிலிருந்தே தனிமனித உரிமைக்கும் ஊடகசுதந்திரத்துக்கும் இடையேயான சமநிலை குறித்த விவாதம் உலகமெங்கும் நடந்து வந்திருக்கிறது.

இப்போது மின்னணு யுகத்துக்குள் நுழைந்திருக்கிறோம். ஊடகத்துறையில் தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது. போட்டிகள் பெருகியிருக்கின்றன. அரசியல் சார்பு ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக ஊடகங்கள் நசுக்கப்படுவதும், அதேபோன்ற காரணங்களுக்காக அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி ஊடகங்கள் எதிர்த்தாக்குதல் தொடுப்பதும் வழக்கமான நிகழ்வுகளாகியிருக்கின்றன. பரபரப்பு ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்வதற்காக உண்மை உறுதிசெய்யப்படாத செய்திகள் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் பற்றி உரக்க விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஊடகங்கள் மத்தியில் கிஸ் அண்ட் டெல் என்பது பிரசித்தம். பிரபலமான ஒருவரிடம் நெருக்கமாகப் பழகி, அவரது தவறான நடத்தை, மோசடி, ரகசியங்கள், அந்தரங்க நடவடிக்கைகள் போன்றவை பற்றிய ஆதாரங்களைச் சேகரித்து ஊடகங்களிடம் விற்றுப் பணம் பெறுவதுதான் கிஸ் அண்ட் டெல். பாலியல் ரீதியான ஆவணங்கள் என்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்.

விற்பனை அதிகரிப்பு ரேட்டிங்கில் முதலிடம் போன்றவற்றுக்காக இதுபோன்ற விடியோ, ஆடியோ, புகைப்பட ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் தருவதை உலகின் பல பத்திரிகைகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆதாரங்களை வெளியிட்டால் லாபம்.  வெளியிடாவிட்டால் அதைவிட அதிகமான லாபம் என்பதுதான் கிஸ் அண்ட் டெல் உத்தியின் சூட்சுமம். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் முதல் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி வரை கிஸ் அண்ட் டெல் வலையில் சிக்கிய பிரபலங்கள் பட்டியல் மிக நீளமானது.

இதுபோல, அப்ரூவராக மாறிய குற்றவாளிகள் என்றால் சில ஊடகங்களுக்கு பொக்கிஷம் கிடைத்த மாதிரி. ஏதோ ஒரு காரணத்தால் கூட்டாளியைக் காட்டிக்கொடுக்க முன்வந்த குற்றவாளிகளைக் கொண்டு, பரபரப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்.

முன்னாள் கூட்டாளிகளைப் பற்றியும், சதிச் செயல்கள் மற்றும் அந்தரங்கங்கள் பற்றியும் அவர்கள் கட்டுரை எழுதுவார்கள் அல்லது பேட்டியளிப்பார்கள். தேவைப்பட்டால் டேப் ஆதாரங்களைக்கூட வழங்குவார்கள்.

இதையெல்லாம் வெளியிட்டால் ஓரிரு வாரங்கள் நாடே அச்சத்துடன் கவனிக்கும் .  கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் கருத்துச் சொல்வார்கள். இந்தப் பரபரப்பில் விலைவாசி உயர்வையும், வேலையின்மையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.

அப்ரூவராக மாறியவருக்கு போதுமான புகழ் கிடைப்பதுடன், கணிசமான வருமானத்துக்கும் வழி ஏற்படும். இதுவும் கிஸ் அண்ட் டெல் வகைதான்.

பிரபலங்களை விவாகரத்து செய்தவர்களும், நட்புடன் இருந்து பிரிந்து போனவர்களும்கூட ஊடகங்களின் தேடல் பட்டியலில் உண்டு. அவர்களது முன்னாள் கணவர், மனைவி, நண்பர் பற்றிய அந்தரங்கங்களை வெளியிட்டு சர்ச்சை உருவாக்கப்படும். பின்னர் அதையொட்டிய ஊடக வியாபாரம் அமோகமாக நடக்கும்.

இதற்காக சில ஊடகங்கள் பெரும் பணம் கொடுக்கின்றன. கொடுத்த பணம் ஒன்றுக்குப் பத்தாக கண்டிப்பாக வசூலாகிவிடும். மேலை நாடுகளில் மட்டுமே இருந்த இதுபோன்ற அநாகரிகங்கள், இப்போது இந்தியாவிலும் அவ்வப்போது நடக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதுதாம் நாம் விழித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

அண்மையில் இதுபோன்ற கிஸ் அண்ட் டெல் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. பிரிட்டனின் நியூஸ் ஆஃப் வேர்ல்டு பத்திரிகையால் பாதிக்கப்பட்ட ஒருவர், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனிமனித அந்தரங்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதுபற்றி முன் அனுமதி பெறும் வகையில் சட்டம் இயற்றலாம் என்கிற அளவுக்கு விவாதம் நடந்திருக்கிறது.

அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் பணம் கொடுத்து அந்தரங்கங்களை விலைக்கு வாங்குவது குறையக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இதுபற்றிய பெரிய விவாதம் இன்னும் எழவில்லை.

கிஸ் அண்ட் டெல் உத்தி, ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பரப்புவதற்கும் உதவக்கூடியதுதான் என்றாலும், வருமானத்தைப் பெருக்குவதற்காக மட்டுமே இப்போது இது பயன்படுத்தப்படுகிறது. எந்த வகையிலும் மக்களுக்குப் பயனளிக்காத அடுத்தவரின் அந்தரங்கத்தை வெளியிடுவதும், அதைக் கொண்டு பேரம் பேசுவதும் ஊடக தர்மத்துக்கு  முற்றிலும் எதிரானது.

அதுவும் திருமண பந்தத்துக்கு மதிப்பளிக்கிற இந்தியா போன்ற நாடுகளில் அடுத்தவரின் அந்தரங்கங்களை வெளியிடுவது, மக்கள் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கும் மேலான பணியைச் செய்ய வேண்டிய ஊடகங்கள், இப்படி அந்தரங்கங்களை வெளியிட்டுச் சம்பாதிக்கும் நிலைக்குத் தாழ்ந்திருப்பது, ஜனநாயகத்துக்கே ஓர் அபாய எச்சரிக்கை.
..
..

No comments: