Sunday, April 25, 2010

பிரிட்டனின் ஒபாமா?

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒபாமாவைப் பற்றிக் கேட்டால் யாருக்காவது தெரிந்திருக்குமா? ஏதோ புதிய பெயர் என்றுதான் பெரும்பாலானோர் கூறியிருப்பார்கள். ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான போட்டியில் நின்றபோதுகூட அவர் வெற்றிபெறுவார் என்று யாரும் கருதவில்லை.

அமெரிக்கர்கள்கூட அவரைப் பற்றி மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டார்கள். ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அரசியல், பொருளாதார பின்புலம் இல்லாமலேயே உலக வல்லரசின் அதிபராக முடியும் என்று அவர் நிரூபித்தார். இதற்காக அவர் பயன்படுத்திய ஆயுதம் பிரசாரம். மாற்றம் தேவை என்கிற மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தி தம் பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்தார் அவர். மக்களை மட்டுமல்லாமல், கென்னடி குடும்பத்தையே கூட மந்திரத்தால் தம் பக்கம் கட்டி இழுத்தார். அவர் அதிபரானதற்கு பிரசார உத்தியைத் தவிர வேறெந்த உடனடிக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியொரு கவர்ச்சிப் பிரசார நட்சத்திரம் ஒன்று பிரிட்டன் தேர்தலிலும் களம் இறங்கியிருக்கிறது. அவரது பெயர் நிக் க்ளெக். லிபரல் டெமாக்ரேட் கட்சியின் தலைவரான இவருக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

க்ளெக்கின் வருகையால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பிரிட்டன் அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் லேபர் கட்சியும் ஆதிகாலத்து டோரி கட்சியின் மறுஉருவான கன்சர்வேடிவ் கட்சியும் அச்சத்தில் மூழ்கியிருக்கின்றன.

வரும் 6-ம் தேதி பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. கடந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கு இந்தத் தேர்தல் இன்னொரு வாழ்வா சாவா போராட்டம். பிரதமர் கார்டன் பிரெüனின் லேபர் கட்சிக்கு இதுவொரு அக்கினிப் பரீட்சை. பிளேரிடமிருந்து நேரடியாக பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட பிரெüனுக்கு தமது செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம். க்ளெக்கின் லிபரல் டெமாக்ரெட் கட்சியைப் பொருத்தவரை, வரலாற்றில் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பு. இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை வகிப்பது இதுதான் முதல் முறை என்பது இன்னொரு விசேஷம்.

தேர்தலையொட்டி, அண்மையில் மூன்று கட்சித்

தலைவர்களும் கலந்து கொண்ட தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் லேபர் கட்சித் தலைவரும் பிரதமருமான கார்டன் பிரெüனும், கன்சர்வேடிவ் கட்சியைத் தலைவர் ஜேம்ஸ் கேமரானும் லிபரல் டெமாக்ரேட் கட்சித் தலைவர் க்ளெக்கும் கலந்து கொண்டனர்.

இதில், பிரெüனையும், கேமரானையும் கிளெக் பின்னுக்குத் தள்ளினார். அதாவது, க்ளெக்கின் பேச்சுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரெüனும் கேமரானும்கூட தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பத்திரிகைகள் க்ளெக்கை, வின்ஸ்டன் சர்ச்சிலுடனும், ஜான் கென்னடியுடனும் ஒப்பிடத் தொடங்கிவிட்டன.

இந்த தொலைக்காட்சி விவாதத்தின் முடிவுகள், பிரிட்டன் அரசியலைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகளின்படி, மற்ற இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு க்ளெக் தலைமையிலான லிபரல் டெமாக்ரெட் கட்சி ஒட்டுமொத்தமாக அதிக வாக்குகளைப் பெறும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி நடந்தால், அது ஒரு நூற்றாண்டுச் சாதனையாகும்.

இராக் போர் மற்றும் அந்நாட்டில் துருப்புகளை நிலைகொள்ளச் செய்திருப்பது ஆகியவற்றுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே லேபர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள் கொண்டிருக்கின்றன.

 ஆனால், லிபரல் டெமாக்ரெட் கட்சி இதற்கு நேரெதிரானது. தொடக்கம் முதலே இராக் போரில் பிரிட்டன் ஈடுபடுவதை எதிர்த்து வருவது, அந்தக் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இராக் விவகாரத்தைப் போலவே, விகிதாசார வாக்குமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற யோசனையும் பிரசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. எல்லாக் கட்சிகளும் இதை வலியுறுத்தினாலும், பல ஆண்டுகளாகவே தேர்தல் சீர்திருத்தம் கோருவதில், முன்னோடியாக இருப்பதால் லிபரல் கட்சிக்கு இது கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தர உதவும் எனக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான எம்.பி.க்களின் அநாவசியச் செலவு விவகாரமும் லிபரல் கட்சிக்கு ஆதரவாகவே இருக்கிறது. சொந்தக் கடன்களை அடைப்பதற்கும், களியாட்டங்களில் கலந்து கொள்வதற்கும் அரசுப் பணத்தை எம்பிக்கள் செலவு செய்ததாக எழுந்த பிரச்னையை அடுத்து, மக்களவைத் தலைவரே ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

லேபர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் அதிக அளவில் இந்த விவகாரத்தில் சிக்கிய நிலையில், லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு பெரிய பாதிப்பில்லை. இது கட்சிக்கு நல்லபெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு இன்னொரு சாதகமான விவகாரம் பொருளாதார மந்தம். நாட்டின் பொருளாதாரம் சரிந்ததில் லேபர் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் பங்கிருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில் இருகட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் லிபரல் கட்சிக்குக் கிடைக்கும்.

எனினும், ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தைக் கொண்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூற முடியாது. பிரிட்டன் தேர்தல் இந்தியாவைப் போன்றதுதான். தொகுதிவாரியாக நிறுத்தப்படும் வேட்பாளர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த முறைப்படி, நாடு முழுவதும் பதிவாகும் வாக்குகளில் அதிக பங்கைப் பெற்ற கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதில்லை. அதேபோல் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற கட்சித் தலைவரின் கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்றும் கூறமுடியாது.

உதாரணமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லேபர் கட்சி 35.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. கன்சர்வேடிவ் கட்சி 32.3 வாக்குகளைப் பெற்றது இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் மூன்று சதவீதம்தான்.

ஆனால், நாடாளுமன்றத்தில் லேபர் கட்சிக்கு 356 இடங்கள் கிடைத்தன. கன்சர்வேடிவ் கட்சி வெறும் 198 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிக இடங்களைப் பெற வேண்டுமானால், நாடு முழுவதும் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு பரந்த செல்வாக்கு இல்லை எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தொங்கு மக்களவை அமைந்தால் தேர்தலுக்குப் பிறகு லேபர் கட்சியுடன் க்ளெக் கட்சி கூட்டணி வைக்கலாம் என்கிற சந்தேகமும் மக்களிடையே இருக்கிறது. அதுவும் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால், க்ளெக் பிரதமராவார் என்பது கொஞ்சம் அதிகப்படியான எதிர்பார்ப்பாகத்தான் தெரிகிறது.

ஆனால், பிரசார உத்திகளைக் கொண்டு கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலான இடங்களை க்ளெக்கின் கட்சி வெல்லக்கூடும் எனத் தெரிகிறது. அந்த வகையில் ஒபாமாவுடன் க்ளெக்கை ஒப்பிடலாம். ஒபாமாவின் பிரசாரத்தில் இருந்த துடிப்பையும் வேகத்தையும் க்ளெக்கிடம் காண முடிகிறது. மக்களவைக் கவரும் தீர்வுகளைத் தருவதில் இவர் ஒபாமாவேதான்.

ஆயினும், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், மூன்றாவது கட்சியைச் சேர்ந்த ஒபாமா தேவையா என முடிவு செய்ய வேண்டியது பிரிட்டன் மக்கள்தான்.

...
.

No comments: