Tuesday, March 09, 2010

எம்.எஃப்.ஹுசைன், ஒரு டாக்டர், ஒரு இலக்கியவாதி

எஸ்.இ.ஓ. கீ வேர்ட்ஸ் போல தலைப்பு வைப்பதுதான் பதிவெழுதுவதில் இன்றைய பேஷன். இந்தத் தலைப்புக்கு இதுதான் முக்கியக் காரணம். மற்றபடி கூகுள் இந்தப் பக்கத்தை முதலில் காட்டுவதற்கு எந்தச் சிரமும் ஏற்பட்டுவிடக்கூடாது; தமிழ்மணம், தமிழிஷ் போன்றவற்றில் படிப்பவர்களுக்கு பதிவு யாரைப்பற்றியது என்பதில் தெளிவு கிடைக்க வேண்டும்; மக்களனைவரும் காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பன போன்ற உயர்ந்த லட்சிகளுக்காகவும் மேற்படி தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டாமை பண்ணியோ, கட்டப்பஞ்சாயத்து நடத்தியோ மொய் பெற வேண்டும் என்கிற எண்ணம் ஏதும் இல்லை. அதேபோல உளவுத்துறை ரேஞ்சுக்குக்கும் இங்கு ஒன்றுமில்லை. ஆகையால் சிக்கிட்டான்யா என்ற ஆர்வத்தில் படிக்க வந்த உளவுத்துறைக்காரர்கள் மேலே படிப்பதை விட்டுவிட்டு வேறு பதிவில் யாராவது எதையாவது பேசி சிக்குகிறார்களா என்று பார்க்கவும்.

-----------

ஹுசைன் சிறந்த ஓவியர். நவீன கால ஓவியங்கள் வரைவதில் கில்லாடி. மாதுரி, சரஸ்வதி எனப் புகழ்பெற்றவர். இவரைப் பற்றி மூத்த இலக்கியவாதி ஒருவரும், நம்மிடையே எந்தவித கெத்தும் பார்க்காமல் பின்னூட்டங்கள் மூலம் பேசும் டாக்டரும் பதிவெழுதியிருக்கிறார்கள். மேலோட்டமாக இருவரின் கருத்தும் கிட்டத்தட்ட ஒன்று. இது ஆச்சரியமான ஒற்றுமை. ஆழத்தில் என்ன உள்குத்து இருக்கிறது என்பது இங்கு தேவையற்றது. எனக்குப் புரிந்தவரையில், ஹுசைன் வேற்றுநாட்டுக்கு அனுப்பப்படுவதையும், நிர்வாண ஓவியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையும் முட்டாள்தனங்கள் என்று இருவருமே சொல்லியிருக்கிறார்கள்.


இந்த விவகாரத்தின் பின்னாலிருக்கும் அரசியலை இலக்கியவாதி தவிர்த்துவிட்டார். டாக்டர் கொஞ்சம் தொட்டார். தாமும் ஒரு ஓவியர் என்பதால் அவர் ஒரு சார்புநிலை எடுக்கச் சாத்தியமிருக்கிறது. அல்லது நான் ஒரு ஓவியனில்லை என்பதால் அவரது உக்கிரப் பார்வையிலுள்ள நியாயம் எனக்குப் புரியாமல் போகவும் சாத்தியமிருக்கிறது.  ஆனால் விவகாரத்தை முழுமையான அரசியல் ரீதியாக அணுகாமல் வெறும் கலை, மதம் என அணுகினால் ஒன்றுமே வெறும் ஆத்திரம் மட்டுமே மிஞ்சும்.

தமிழ்நாட்டில் முதல்வர் தலைமையில் நடந்த விழாவில் சொல்லிக் கொடுக்கப்பட்டவற்றைத் தாண்டி சிலவற்றை அஜீத்குமார் பேசினார். அவருக்கு என்னவாயிற்று. கண்டிப்பாக ஒரு வாரம் தூங்கியிருக்க மாட்டார். நடிப்பை வேண்டுமானாலும் விட்டுவிடுகிறேன் என்று அவர் கூறுமளவுக்கு நிலைமை போனது. கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் முதல்வரின் வாயில் மைக்கைத் திணித்து கேள்வி கேட்பார்கள்.

மகாராஷ்டிரத்தில் ஒரு நடிகரின் படத்தைத் திரையிடவிடமாட்டோம் என்று ஒரு கும்பல் சொல்லியது. ஆனாலும் அந்த நடிகர் தொடர்ந்து அந்தக் கும்பலை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் ஒரு நடிகர் இப்படி நடந்து கொள்ள முடியுமா? தமிழக அரசியல் மோசம், மற்ற மாநில அரசியல் நன்று என்று நான் ஒப்பிடவரவில்லை. ஆனால், இமேஜ் பாருங்கள். யாருக்கு நல்ல இமேஜ். யாருக்கு மோசமான இமேஜ். அதுதானே நுண்ணரசியல்.

தஸ்லிமாவையும் ஹுசைனையும் ஒப்பிடமுடியாது. தஸ்லிமாவின் எழுத்து அவ்வளவு சிறந்ததல்ல. ஆனாலும் வேற்று நாட்டிலிருந்து இங்கு வந்து ஒட்டிக் கொண்டவர். இந்திய விசா பெற்ற ஒருவரை இந்தியாவுக்குள் பாதுகாக்க முடிந்ததா? இதை ஒப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.

ஹுசைனுக்கு இப்போது கத்தார் குடியுரிமை வழங்கியிருக்கிறது. நிர்வாணப் படங்களுக்குத் தடை விதித்திருக்கும், அடுத்த மதங்களைத் தூற்றுவதைக் குற்றமாகக் கருதும் ஒரு நாடு, எப்படி ஹுசைனைக்கு விசா வழங்கியது? அல்லது இந்தப் படங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த அனுமதி வழங்கிவிடுமா? அங்குதான் நடக்கிறது சர்வதேச நுண்ணரசியல்.

கலை உரிமையையும், ஊடக சுதந்திரத்தைப் பேசுபவர்களெல்லாம் சாதாரண மக்களிடமிருந்து மிகத் தூரத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருப்பவர்கள். பின்னால் வரும் மக்களின் கையைப் பிடித்து அறிவுரை சொல்ல அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் சொல்லும் தூரத்தை வைத்து நாடு பொருளாதார, சமூக அடிப்படையில் முன்னேறிவிட்டது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் பொய். நம் மக்கள் பின்தங்கியிருப்பவர்கள். கொஞ்சமே புரிந்துகொள்ளும் திறனுள்ள இவர்களிடம், நீ கும்பிடும் தெய்வத்தை நிர்வாணமாக வரைகிறேன் என்று அதிரடியாகச் செயல்படுவது, மக்களாட்சி சமநிலையுடன் நடக்க உதவுமா? அதற்கெல்லாம் இன்னும் மக்கள் தயாராகவில்லையே. கத்தாரில்கூட இதுதான் நிலை. இந்த நிலையில் நம் மக்கள் எம்எஃப் ஹுசைனையும், தஸ்லிமா நஸ்ரினையும் இப்போதையச் சூழலில் ஏற்கவே மாட்டார்கள். அதனால் டாக்டரும் எழுத்தாளரும் சொல்லும் நியாயங்கள் வீண்.

-----------------

இதே போன்ற இன்னொரு விவகாரத்திலும் இந்த இருவரும் பதிவெழுதியிருக்கின்றனர். ஒருவருக்கொருவர் முரணாக. அது நித்தியானந்தர். இங்கும் எல்லாவற்றையும் அறம், துறவு எனப் பேசிய இவர்கள் அரசியலைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அல்லது இங்கும் தவிர்த்துவிட்டனர். அந்தப் பதிவுகளின் உஷ்ணத்தை இந்தப் பதிவு தாங்காது. அந்த உஷ்ணத்தைக் குறைத்திருக்கலாம்.

----------------

டாக்டர் ஒருபுத்தகத்தின் முதல்பக்கத்தில் சொல்வார். குமுதமும் ஆனந்தவிகடனும் சொன்னால்தான் உங்களுக்கெல்லாம் தெரியும் தாஜ்மஹாலின் அழகு என்று. அந்தமாதிரியான அறிவுப்படிதான் இதை எழுதியிருக்கிறேன்.

...
.

Monday, March 08, 2010

தகவல் வேணுமாம்ல... தகவலு!

தகவல் சட்டம்: மக்களுக்கு நல்லதா?

எவ்வளவு ஜாலியாக இருந்தது அந்தக் காலம், எங்களமாதிரி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும். இப்ப அப்படியா? நின்னது, நடந்தது, பிரெஞ்சு லீவு போட்டு மப்புல கிடந்ததையெல்லாம் ஒன்சைடு பேப்பர்ல எழுதித் தகவல்னு கேட்டுர்றாங்க. இவங்களுக்குப் பதில் சொல்லியே பேக்ல பலருக்குக் கொட்டிப்போச்சு. சொந்தக்காரனுக்கு வேலை போட்டுக் கொடுத்தாலும், வீடு வாங்கிக் கொடுத்தாலும் விலாவாரியாத் தெரிஞ்சு போகுது. நாடு இப்படிப் போனா, அரசியல்வாதியாவோ அதிகாரியாவோ இருந்து என்ன புண்ணியம்? படுத்தறாங்களே..!

மக்களுக்கு இது நல்லதாய்யா? சொல்லுங்கய்யா! குளம் வெட்டின கணக்கக் கேட்டு பெரிசு ஒன்னு மனுப்போட்டுது. அத்தோட போயிருக்கலாம்ல. குளத்தப் பாக்கணுமாம். ஊர் புல்லாத் தேடி... குளத்தையே காணாமா மாரடைப்பு வந்து தர்மாஸ்பத்திரில செத்துப் போச்சு.. இத மாதிரி அமைச்சர் சொத்து விவரம் வேணும்னு மதுரக்காரி ஒருத்தி மனுப்போட்டா. நாங்க அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது மீறியும் கேட்டா கையக்கால வாங்கிடுவோம்னு அடக்க ஒடுக்கமா பதில் சொன்னோம். இதவிட அஹிம்சையா எப்படிய்யா நடந்துக்கறது. அவ இதையெல்லாம் கேக்காமா கோர்ட்டுக்குப் போனா. எல்லாம் படிச்ச திமிர். போ... யார் வேண்டாம்னா. இப்ப என்னாச்சு உசிரு போச்சுல்லா. எல்லாத்துக்கும் இந்தச் சட்டம்தான காரணம். இப்பச் சொல்லுங்கய்யா மக்களுக்கு இது நல்லதாய்யா?


இன்னொருத்தன் ரொம்ப விவரமா, ஹவுசிங் போர்டுல எந்தெந்தவீடு அரசியல்வாதிக்கு கொடுத்திருங்கான்னு கேட்டான். முட்டாப்பய. என்னிக்காவது ஹவுசிங் போர்டுல உன்னமாதிரி ஆளுங்களுக்கு வீடு கொடுத்திருக்காங்களா? அப்புறம் என்னடா கேள்வி.  எல்லாவீடும் அரசியல்வாதிகளுக்குத்தான். என்ன பண்ணுவ. லைட்டா மண்ணு லாரிய விட்டு உரசிப் பாத்தோம். கால் ஒடிஞ்சதோட தப்பிச்சிட்டான். சரி இது ஏன் நடந்தது யார் செஞ்சிருப்பான்னு யோசிக்கணுமா இல்லியா. அந்த மரமண்டைல ஏறல. மண்ணு லாரியக் கொண்டு உங்க மாமன் மச்சானா விளையாடுவான். புரிஞ்சிக்கோடான்னு வீட்டுலேயே போய் சொல்லிப் பாத்தோம். கடைசில வேற வழியில்லாமா அவன் குடியிருந்த வீட்டயே வெளிவட்டச் செயலாளரோட அந்தரங்கச் செயலாளர் பேர்ல நாங்களே பத்திரம் தயாரிச்சிட்டோம். இப்ப அவன் வீட்டக் கேட்டு கோர்ட்டுல கெடக்கான். பொதுவா நாங்கள்லாம் நல்லவங்கதான். இப்படி அநியாயமாச் சீண்டினாத்தான் கோவம் வந்து போட்ருவோம்.


இந்தத் தகவல் சட்டத்தால பல பேரோடு உசிரு போயிருக்கு. பலர் நடுத்தெருவுக்கு வந்திருக்காங்க. வேலை பறிகொடுத்திருக்காங்க. சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமா ஆகியிருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு சட்டம் நல்லதாய்யா. நீங்களே யோசிங்கய்யா.

தகவல் சட்டத்தால பேப்பர் பேனா விலைஏறினது, டிடிபி சென்டர்ல பிரிண்டவுட் எடுக்க மதிய சோத்தக் கட்டிக்கிட்டுப் போயி வரிசையில நிக்கறது, டிடி கமிஷனுக்கே பெர்சனல் லோன் போட்டதுதாங்க நடந்திருக்கு. வேற உருப்படியா ஒன்னக் காட்டுங்க பாப்போம். இல்ல உருப்படியா ஒன்னு கெடச்சிருமா. நாங்க குடுத்திருவமா. அப்புறம் எதுக்குய்யா இந்தச் சட்டம்.

எங்களக் கேட்டா இந்தச் சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதுங்கய்யா . காத பக்கத்துல கொண்டுவாங்கய்யா... பாகிஸ்தான்காரங்க நம்ம நாட்டுத் தகவலையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நம்மேல போர் தொடுத்தா என்னய்யா பண்ணுவீங்க. ஆங்....இப்ப புரியுதா... நாங்க ஏன் தகவலத் தரமாட்டோங்கறது.... எல்லாம் நாட்டுப் பற்றுய்யா... நாட்டுப் பற்று....தகவல் வேணுமாம்ல. தகவலு...

...

..

மகளிர் மசோதாவுக்கு எதிராகக் கூட்டுச் சதி?

என் நண்பன் ஒருவன் சர்ச்சைகளை உருவாக்குபவன். அவன் என்னைச் சந்திக்க வருகிறான் என்றாலே லேப்டாப்பில் கூகுளை ஓபன் செய்து வைத்துக் கொள்வேன். அந்த அளவுக்கு என் மூளைக்கு எட்டாதவற்றை கேட்டு டப்பாவாக்குவான். இன்னைக்கு என்னவோ "எளவோ" என்று காத்திருந்தபோது, கேள் பிரண்டோடு வந்தான். அவன் வாசலுக்கு வரும்போதே, சேனலை சுட்டி டிவியிலிருந்து என்டிடிவிக்கு மாற்றினேன். அங்குதான் தொடங்கியது ஏழரை. டிவியில் ராஜ்யசபா அடிதடிக் கும்மியில் ஹமீத் அன்சாரி சிக்கியிருந்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

"என்னடா கருமம் இது. பொம்பளைங்களுக்கு எதுக்குடா இடஒதுக்கீடு" இது நானல்ல அவன்.

"..!" சர்ச்சை வேண்டாமென மௌனம் காத்தேன். "சன் நியூஸ்ல பாப்போமோ" பேச்சைத் திருப்ப முயன்றேன்.

அவன் விடுவதாக இல்லை. " பொம்பளைங்க எந்தக் காலத்துலடா நாட்ட ஒழுங்கா ஆண்டிருக்காங்க"

"..................!"    பெண்ணியவாதிகளை நினைத்து மனது படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

"ஏன்டா, எதாவது சொல்லுடா. உனக்கு தெரிஞ்ச பெண் அரசியல்வாதிங்க பேரெல்லாம் சொல்லு பாப்போம்"

".......................!"

" சரி நானே சொல்றேன்! இந்திரா காந்தி, பாகிஸ்தான்ல பெனாசிர், வங்கதேச ஷேக் ஹசீனாவும் அவரது எதிரி கலீதா ஜியாவும், பிலிப்பைன்ஸ்ல முன்னாள் இமெல்டாவும் இன்னாள் அரோயோவும், இங்கிலாந்து தாட்சர், இலங்கையில பண்டாரநாயகேகள், நம்மூர் ஜெயலலிதா, உ.பி. மாயாவதி, பிகார் ராப்ரி இப்படி நமக்கு ஓரளவுக்குத் தெரிஞ்ச எல்லோருமே நாட்டச் சீரழிக்கத்தான் பார்த்தாங்க. இதுல இன்னும் ஏண்டா இட ஒதுக்கீடு"


"...................!"

அவன்கூட வந்த பெண் ஆவேசமாக எழுந்தாள்.

"ஏய் என்ன ரொம்ப அடுக்கிக்கிட்டே போற. நான் இங்க இருக்கறத மறந்திட்டியா. ஜெர்மனி ஏஞ்சலா மெர்கல், சிலி பேக்லெட்டெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதோ. நீ சொன்னவங்களெல்லாம்கூட ஆம்பிளைங்களவிட கொஞ்சம் நல்லாத்தான் ஆட்சி பண்ணாங்க" சூடாகக் கொடுத்தாள்.  அவனுக்கு ஈக்வலாக இருப்பாள் போல.

"ஆமாமா நீ சொல்றது சர்தான்" வழிந்தான். நான் பொதுவாச் சொன்னேன். நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும். கரெக்ட்தான். புல்லா புரிஞ்சிடுச்சி. நாந்தான் தப்பாப் பேசிட்டேன். சாரி. நாங்க நாட்ட ஆண்டாலும் வீட்ல நீங்கதான் எஜமான். அப்படீன்னா நீங்கதான நாட்ட ஆளுறமாதிரி. இதுல இடஒதுக்கீடு வேற தேவையான்னு... அந்த டென்ட்ல சொன்னேன்" பேயடித்தது போலப் பேசினான்.

"புரிஞ்சா சரி" அவள் முகத்தைக் கோணிக்கொண்டு உட்கார்ந்தாள்.

"டேய்! லேடீஸுக்கு ரிசர்வேசன் கொடுக்க விடமாட்டாங்க போலிருக்கே" பல்டியடித்தான்.

"ஆமாடா. யாரோ நாலஞ்சு பேரு மட்டும்தான பிரச்னை பண்றாங்க. அவங்கள வெளிய தூக்கிப் போட்டுட்டு வேலையப் பாக்க வேண்டியதுதான" இப்பதான் எனக்கு வாய் திறந்தது.

"இந்த கவர்மெண்டு வேணும்னே இத வேடிக்கை பாக்கறாங்க போலடா"

"தெரியலடா"

"அந்தக் கட்சிக்காரன் சொன்னான்டா. வலியப் போயி ஆதரவு குடுத்தும், காலைலேருந்து அந்தக்கட்சிக்காரன் ஒருத்தனும் எங்களுக்கு போன் பண்ணலன்னு சொன்னான்டா. ஏதோ உள்குத்து இருக்கும்போல" 

"தெரியலடா"

"எல்லாரும் கூட்டுச் சேர்ந்து பண்றாங்க போலடா"

அப்போ அவள் குறுக்கிட்டாள்.

"அய்யா ரொம்ப யோசிக்காதீங்க. எப்படியும் நடக்கப்போறதில்ல. அப்படியே தந்தாலும்  இதென்ன வேலை வாய்ப்பிலயும் படிப்பிலயுமா கொடுக்கறாங்க. அரசியல்ல. இதனால என்ன ஆகப்போகுது. ஏற்கெனவே அரசியல்ல இருக்கற ஆம்பிளைங்கதான் பொண்டாட்டி புள்ளைங்கள பொம்மைகளா வெச்சு பயன்படுத்திக் போறாங்க.  அது இன்னும அசிங்கம். நாங்க சுயம்பாவே வந்துக்கறோம்."

"சர்தான்..!"

"சர்தான்..!"


.
..

Wednesday, March 03, 2010

சாமியார்: சில குறிப்புகள்

1. ஒரு தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படும்போது, யாருக்குக் குறி வைக்கப்பட்டது என்ற குழப்பம் ஏற்படும். அதிகப் புகழ்பெற்றவர் யாரோ அவரே டார்கெட் என பொதுவான முடிவு பெரும்பாலும் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

2. அம்மாவின் விழுப்புரம் ஆர்ப்பாட்டமும் அவரது பேச்சும் முன்னணி தொலைக்காட்சியில் தலைப்புச்  செய்தியாகச் சொல்லப்பட்டது. அதே நாளில் முதல்வரின் அறிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டது.

3. துணை முதல்வரின் புத்தக வெளியீட்டு விழா எதிரணித் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஊடகம் என்ற முறையில் முன்னணித் தொலைக்காட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

4. சாமியாருக்கு எதிரான போராட்டங்களில் வெறும் நான்கைந்து பேரே கலந்து கொண்டபோதும் க்ளோசப் டெக்னிக் மூலம் பெரிய கொந்தளிப்பு போலக் காட்டப்பட்டன. படுக்கையறை விடியோவை உன்னிப்பாகப் பார்த்த அன்பர்கள், போராட்டங்கள் தொடர்பான விடியோவையும் கவனித்தால் இது தெரியும்.


5. சம்பந்தப்பட்ட நடிகை தற்போது நெருக்கமாக இருக்கும் எதிரணித் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

6. வேறொரு பெரிய பிரச்னை எழும்போது அதிலிருந்து திசை திருப்ப இந்தமாதிரியான உத்திகளைப் பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றுதான்.

7. ஆல்பமாக வெளியிட்ட புலனாய்வுப் பத்திரிகை கடந்த ஆண்டே சாமியாருக்கு எதிராக சில புலனாய்வுகளைச் செய்திருக்கிறது.

8. முன்னணித் தொலைக்காட்சியின் தலைவர் தேவையேயில்லாமல் திருச்சியில் நடந்த முதல்வரின் கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.

9. இருபது முப்பது வயதுகளில் பாலியல் ஆசைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை. சாமியார்கள் என்று கூறுவோர் அனைவருமே மனிதர்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர்களல்லர். தாய், தந்தையரையும் நலம் விரும்பிகளையும் தவிர வேறு யாரிடமும் ஆசி பெற வேண்டியதில்லை.

10. புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் சில அரசியில் கட்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்தும் உள்ளூரிலும் பண வசூலாகிக் கொண்டிருக்கிறது.

11. சேவை செய்வது என்பது இந்தக் காலத்தில் போலியாகத்தான் இருக்க முடியும். சாதாரண மனிதர்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டுடனோ அல்லது மதங்கள் கூறுவதுபோல கடவுளுக்குப் பயந்தோ நியாயமாக நடப்பதே போதுமானது.  சேவைகளை அரசு பார்த்துக் கொள்ளும்.

12. இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல சொந்தக்காரர்களுக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மட்டும் உதவி செய்தாலே சமூக சேவைக்கும் மத சேவைக்கும் எந்தத் தேவையும் இருக்காது.

...
.