Monday, February 22, 2010

தகவல்களைத் திருட டீம் வ்யூவர்!

ஒரு நல்ல வசதியை நம் மக்கள் எப்படியெல்லாம் மோசடிக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு டீம் வ்யூவர் ஒரு நல்ல உதாரணம்.

டீம் வ்யூவர் பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். பயன்படுத்தியும் இருப்பார்கள். சிலர் கேள்விப் பட்டிருக்கலாம், ஆனால் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். சிலர் கேள்விப்பட்டே இருக்க மாட்டார்கள். ஆனாலும் இதை எழுதுவது பொதுவானதொரு அறிமுகத்துக்காக.

ரிமோட் சப்போர்ட் என்பார்களே, அதற்காகப் பயன்படுவதுதான் டீம் வ்யூவர்.  உலகின் ஒரு மூலையில் இருந்தபடி வேறெங்கோ ஒரு கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த டீம் வ்யூவர் பயன்படுகிறது. பைல்களை மாற்றிக் கொள்வது, பிரசண்டேஷன் செசன்களை நடத்துவது போன்றவையும் சாத்தியம்.

வெறும் இரண்டரை எம்பி அளவுள்ள ஒரு பைலை தரவிறக்கம் செய்தால் போதும். நமது வேலையைத் தொடங்கி விடலாம். நமது கணினியில் நிறுவ வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. அட்மினிஷ்ட்ரேட்டர் அதிகாரங்களும் தேவையில்லை. ஒரு நொடியில் இங்குள்ள திரை உலகின் வேறொரு மூலையில் உள்ள கணினித் திரையில் அப்படியே தெரியும். இங்கிருந்தபடியே ரிமோட் கண்ட்ரோல் மாதிரி அந்தக்கணினியை இயக்கலாம்.  இரு கணினிகளும் இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

கொஞ்சகாலத்துக்கு முன்பே விஷுவல் பேசிக் மூலமாக உளவு நிரல்களை எழுதி மற்றவர்களின் கணினிகளை சகாக்கள் சிலர் கண்காணிப்பதைக் கவனித்திருக்கிறேன். இதில் பலரது அந்தரங்கங்கள் அம்பலமாகிச் சர்ச்சை ஏற்பட்டது.

அதுபோன்ற உளவுப் பயன்பாடுகளுக்கும் டீம் வ்யூவர் பயன்பட்டு வருவது நாமெல்லாம் உஷாராக இருக்க வேண்டிய விஷயம். ஏற்கெனவே பல உளவு மென்பொருள்களை இயக்கி வரும் பிரவுசிங் சென்டர்கள் டீம் வ்யூவரை கொஞ்சம் வலுவாகவே பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் சாட் செய்வதைக்கூட இவர்கள் காப்பி செய்வார்கள். இ-மெயில் பாஸ்வேட் முதல் ஆன்-லைன் பேங்கிக் பாஸ்வேட்வரை  திருடுவார்கள். அதாவது ஏற்கெனவே இயக்கப்பட்டிருக்கும் கணினியில் டீம் வ்யூவர் இயக்கப்பட்டிருக்கும். அதில் வழங்கப்பட்டிருக்கும் பாஸ்வேட் ஏற்கெனவே காப்பி செய்யப்பட்டு இந்தக் கணினி வேறொரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆன்லைன் பேங்கிக் வசதியில் உள்ள விர்சுவர் கீபேட் வசதியால் கூட பாஸ்வேட் திருடுவதைத் தடுக்க முடியாது. கீலாக்கர் உள்ளிட்ட பல்வேறு நச்சு நிரல்களின் வேலையை டீம் வ்யூவர் மட்டுமே செய்துவிடும்.

இவ்வளவு ஏன், நமது அலுவலகத்தில் சகாக்கள் கூட உளவு வேலை செய்வதற்கு இந்த மென்பொருள் பயன்படக்கூடும் உஷார்!

தொடுப்பு...

http://www.teamviewer.com/download/index.aspx
..
.

Friday, February 19, 2010

கார் துடைத்து பொருளாதாரப் புரட்சி!

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஸ் ஐபிஎஸ் பதவிகளைப் பிடிக்க வேண்டும் தெற்குப் பக்க கிராமங்களில் இருந்து சென்னைக்குப் படையெடுப்போரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அண்ணாநகரில்தான் அடைக்கலமாவார்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு சென்னை நகரில் வேறு இடங்கள் இருக்கின்றன.

அண்ணாநகரில் தஞ்சம் புகுவோருக்கு மற்றவர்களைக் காட்டிலும் பொருளாதாரப் பிரச்னை அதிகமாகவே எழும். வீட்டு வாடகையிலிருந்து தோசை, இட்லி போன்ற நம்மூர் உணவுகள்வரை எல்லாமே எதிர்பார்க்காத அளவுக்கு விலை அதிகமாக இருக்கும். கிராமத்திலிருந்து வந்தவர்கள் இதில்தான் பீதியடைவார்கள். இதுபோக, படிப்பதற்கான கட்டணம் புத்தகங்கள் வாங்குவது எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கிலியை ஏற்படுத்தும்.

கையில் கொண்டுவந்த சில ஆயிரங்கள் காலியானதும், பகுதி நேர வேலைக்கு முயற்சி செய்வார்கள். காலை நேரத்தில் பேப்பர் போடுவது, ஹோம் ட்யூஷன் வகுப்புகள் எடுப்பது, பிரௌசிங் சென்டரில் வேலைக்குச் செல்வது என எதையாவது செய்து மாதம் ஆயிரம் முதல் 2 ஆயிரம்வரை சம்பாதித்து லட்சியத்தை நோக்கிப் பயணித்த பலரை எனக்குத் தெரியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வருவோரில் முக்கால்வாசிப் பேருக்கு, தொழிற்முறைக் கல்வித் தகுதி இருப்பதில்லை. பிஏ, பிஎஸ்ஸி, பிகாம் போன்றவற்றைத்தான் அவர்கள் படித்திருப்பார்கள். இதனால், சாதாரணமான வேலைகளைத்தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களில் சிலர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று உயரிய இடத்துக்குச் சென்றிருக்கின்றனர். பிஇ போன்ற தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் சிவில் சர்வீஸ் துறைக்கு வருவதும் வெற்றி பெறுவதும் மிகக் குறைவுதான்.

இதுபோல தென்பகுதியிலிருந்து சென்னை வந்தவர்களில் என் நண்பர் ஒருவரும் அடக்கம். அவர் காவல்துறையில் சேருவதை இலக்காகக் கொண்டிருந்தவர். அவர் செய்த பகுதிநேர வேலை வித்தியாசமானது. 4 மணிக்கே எழுந்து வாக்கிங் போகும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவர், சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று அந்த வீட்டுக் கார்களைத் துடைப்பார். அதற்காக கார் ஒன்றுக்கு ரூ.30 வீதம் வசூலிப்பார். பொதுவாக கார் துடைப்பதை பெரிய வேலையாக கருதுவோருக்கு இந்தப் பணம்  பெரிய தொகையாகத் தெரிவதில்லை.

ஒரு நாளில் கிட்டத்தட்ட 4 கார்கள் வரைத் சுத்தம் செய்வார். காலை 7 மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும். இதில் விஷேசம் என்னவென்றால், கார் துடைப்பதை எவ்வளவு கச்சிதமாகச் செய்ய வேண்டும் என்பதை சர்வீஸ் ஸ்டேஷன்களில் கேட்டுத் தெரிந்து அதன்படியே செய்வார். நீரை மிகக் குறைவாகப் பயன்படுத்தி காரைப் பளிச்சென்று ஆக்கும் இவரது உத்தியை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். இவரைப் பின்பற்றி ஒரு பெருங்கூட்டமே இதுபோன்ற பணியைச் செய்யத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் கார் வைத்திருப்போரின் பெரிய டேட்டாபேஸை உருவாக்கி தன்போன்ற பலருக்குக் கொடுத்து அவர்களின் பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்து வைத்தார். அவர்களுக்கு கார்களை வேகமாகவும் நன்றாகவும் கார் சுத்தம் செய்வது பற்றிக் கற்றுக் கொடுத்தார். பலரும் சேர்ந்து செய்யத் தொடங்கியதால் இதுபோன்ற பணியைச் செய்வதில் இருந்த கூச்சமும் நாளடைவில் மறைந்துபோனது. வீட்டுக்கே வந்து சேவை செய்வதால் ரூ.30 என்பதை ரூ.50 ஆக பலர் உயர்த்திக் கொடுத்தனர். சிலர் இவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு புத்தகங்கள் வாங்கப்பணம் கொடுத்தனர். சிலர் வேறு பல உதவிகளையும் செய்தனர்.

அந்த நண்பருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணி கிடைத்தது. பின்னர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகிவிட்டார்.

கல்லூரிகளில் படிப்பதற்காக கிராமங்களிலிருந்து வருவோரில் பலரும் பேப்பர் போடுவது, பெட்ரோல் பங்குகளில் பணியாற்றுவது போன்ற பகுதிநேர வேலைகளைச் செய்து, பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்கிறார்கள். இந்தக் கார் துடைக்கும் பணியையும் அவர்கள் முயற்சிக்கலாம். இது என் சொந்த அனுபவம் மாதிரி.

..
.
.

அத்து மீற வேண்டாம் செந்தழல் ரவி! கவனியுங்கள் தமிழ்நதி!

ஈழத்தமிழர்கள் எவ்வளவு தாக்கினாலும் என்போன்றோருக்கு வெறுப்போ எரிச்சலோ வருவதில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கோபம் நிரந்தரமானதல்ல என்ற நம்பிக்கை இன்னும் என்போன்றோருக்கு இருப்பதுதான் அதற்குக் காரணம். ஈழத்துக்காரர்களின் கோபம் எத்தகைய நியாயமானது என்பதை என்போன்றோர் புரிந்து கொள்கிறோம். ஆனால், தமிழ்நாட்டுக்காரர் அனைவரும் எல்லோரும் என்போன்றோரல்லவே.

போராட்டம் வலுப்பெற வேண்டுமானால் அது மனிதர்களை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும், ஆதரவைப் பெருக்கிக்கொள்ள அரவணைத்துச் செல்லுதல் அவசியம் என்பன போன்ற அடிப்படைகளைக்கூட ஈழத்தின் அடுத்த தலைமுறைக்காரர்கள் புரிந்து கொள்ள இன்னும் காலம் தேவைப்படும் போலிருக்கிறது. எல்லோரையும் பகைத்துக் கொண்டால் ஈழப் போராட்டம் அடுத்த நிலை நோக்கிச் செல்வதெப்படி? சேகுவேரா, சைமன் பொலிவர், மார்ட்டின் லூதர் கிங், காந்திஜி ஆகியோரெல்லாம் என்ன செய்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம்தானே? அல்லது போராட்டம் முடிந்துவிட்டது இனியொன்றுமில்லை என்கிற முடிவுக்கு ஈழத்துக்காரர்களில் பலர் வந்துவிட்டார்களா என்றும் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, துரோகிகள் என்று ஒட்டுமொத்தமாக எவ்வளவு தாக்கினாலும் அதையும் தாண்டி ஈழப்போராட்டங்களை ஆதரிக்கும் பெருங்கூட்டம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவை அழிப்பேன் தமிழ்நாட்டைத் தகர்ப்பேன் என்று கூறுவது இந்தக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திக் கலைக்கும் என்பதை ஈழத்துக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே "ஈழத்தில் இருக்கும்" தமிழர்கள் மீது அக்கறையிருந்தால் கொஞ்ச காலத்துக்கு இந்த மாதிரியான பேச்சுக்களைக் குறைக்கலாம். நமது குடும்பங்கள் எதிரியிடம் சிக்கியிருக்கும்போது ஆவேசப் பேச்சுக்கள் எந்த வகையில் பலனளிக்கும்?

------------

தமிழ்நதியைத் தனிப்பட்ட முறையில் தாக்கி தரக்குறைவாக எழுதப்பட்டிருந்த பதிவைச் சுட்டிக்காட்டிக் குறைபட்டு இந்த வலைப்பூவில் ஒரு பதிவை எழுதினேன். இதே போன்றதொரு சிந்தனை செந்தழல் ரவியின் வலைப்பூவிலும் எழுதப்பட்டிருப்பதாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். போய்ப் படித்துவிட்டு வந்துதான் இதை எழுதுகிறேன்.

குறிப்பிட்ட அந்த இடுகை தமிழ்நதியைத் தாக்கி எழுதியிருந்த அந்தப் பதிவைக் காட்டிலும் மிக மோசமான தனிநபர் விமர்சனத்தில் ஆர்வங்காட்டுவதாக அமைந்திருந்தது. புதிதாக எழுத வந்திருக்கும் பெண்பதிவரை நாகரீகமற்ற முறையில் தாக்குவது சரியானதாக இருக்காது என்பது எனது கருத்து. தமிழ்நதி போன்றோரும் செந்தமிழ் ரவியின் பதிவை ஊக்கப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன்.

டாக்டர். ருத்ரன் கூறியது போல வெறும் நகைச்சுவைக்காக அந்தப் பெண் பதிவர் தமிழ்நதியைத் தாக்கி எழுதினார் என்று நான் கருதவில்லை. ஆனால் ருத்ரன் கூறியதற்கு கிட்டதட்ட ஒத்திருக்கும் மனநிலையில் அவர் இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் குழந்தைத்தனமான தாக்கு என்று எழுதினேன். இது எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடியதா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் கூட்ட நெரிசலில் காலை மிதித்துவிட்டதற்காக மரணதண்டனை விதிப்பது நீதியாகாதே!

-------------

இந்த வலைப்பூவில் பின்னூட்டுகள் அனைத்தும் தானாகவே பிரசுரமாகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தயவு செய்து கவனமாக எழுதவும்.
..

..
.

Wednesday, February 17, 2010

மியான்மர் ராணுவ அரசின் வாக்கு யுத்தம்!

கடந்த 20 ஆண்டுகளை ராணுவ ஆட்சியின் கீழ் கழித்துவிட்ட மியான்மர் மக்களுக்கு இப்போதுதான் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

நாட்டை மக்களாட்சிப் பாதைக்குத் திருப்பும் வகையில் பொதுத் தேர்தலை நடத்தப் போவதாக சர்வாதிகாரி தான் சுவே அறிவித்திருக்கிறார். இதனால் அதிகாரப்பூர்வமாகத் தேதி குறிக்கப்படும் முன்பே, நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

வறுமையையும் அடக்குமுறையையும் மட்டுமே பார்த்துப் பழகிப் போயிருக்கும் மியான்மர் மக்களுக்குச் சாதகமாக ஏதாவது நடக்குமா என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக வல்லரசு நாடுகளைப் பகைத்துக் கொண்டு, சர்வாதிகார ஆட்சியை நடத்திவந்த மியான்மர் ராணுவத்துக்குத் திடீரென எங்கிருந்து இந்த ஞானோதயம் வந்தது என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது. அனைத்து ஊடகங்களும் சர்வாதிகார அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மியான்மரில் என்ன நடக்கிறது என்பது பற்றி உலகத்துக்குத் தெளிவாகத் தெரியாது. இருப்பினும், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் ஊகங்களுக்கு எட்டாதவையல்ல.

கடந்த 20 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் ஆசியாவிலேயே ஏழ்மையான, வலுவற்ற அரசியல் சூழல் நிலவும் நாடு என்கிற பெயர்தான் மியான்மருக்குக் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளால், பொருளாதாரம் நொறுங்கிக் கிடக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் நடப்பதைப் போல, உள்ளூர் அதிகாரிகளெல்லாம் குறுநில மன்னர்களாக மாறி வணிகர்களையும், தொழிலாளர்களையும் நசுக்குகின்றனர். மற்றபடி ராணுவம் ஊருக்குள் வந்தால் என்னென்ன அட்டகாசங்கள் நடக்கும் என்பது பல்வேறு நாடுகளின் அனுபவங்களில் தெரிந்ததுதான்.

இதுபோன்ற நெருக்கடிகள் ராணுவத்தினரையும் பாதித்திருப்பதுதான், தேர்தல் அறிவிப்புக்கு உடனடிக் காரணம் என்று தெரிகிறது. குறைந்த ஊதியம், அதிக வேலைப்பளு, சலுகைகள் வெட்டு போன்றவற்றால் அதிருப்தியடைந்திருக்கும் ராணுவ வீரர்கள், ஆங்காங்கே கலகத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்தக் கலகங்களால் அரசுக்கு நேரக்கூடிய ஆபத்தை ஒத்திபோடுவதற்காகவே தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

முக்கியமான மற்றொரு அம்சமும் இந்த விவகாரத்தில் அடங்கியிருக்கிறது. மக்கள் மத்தியில் மட்டுமன்றி, உலக நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஆங்-சான் சூ கி 14 ஆண்டுகள் வீட்டுக் காவலை நிறைவு செய்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் இவரை அவ்வப்போது வீட்டுக்காவலில் வைப்பதையே முதல் கடமையாகச் செய்திருக்கிறது ராணுவ அரசு. கடந்த சில ஆண்டுகளாகவே, இவரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப் பெற்றிருப்பதால், அரசுக்கு உச்சநிலைச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலை நடத்துவதால் இந்தச் சூழலை மாற்றிவிட முடியும் என ராணுவ அரசு கருதுகிறது. இதற்கு முன்னோட்டமாகவே சூ கி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை வீட்டுக் காவலில் இருந்து அரசு விடுவித்திருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு மூலம் உடனடியாக ராணுவ நெருக்கடி தீரும் என்பது ஒருபுறம் இருக்க, பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்துக் கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பு ராணுவ அரசிடம் இருக்கக்கூடும். இந்த அறிவிப்பால் கவரப்பட்டிருக்கும் மேற்கத்திய நாடுகள் இப்போதைக்கு பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ளாவிட்டாலும், நிதியுதவிகளை அதிகரித்து மியான்மரைக் காப்பாற்றும் என்று நம்பப்படுகிறது. அண்மையில் நடந்த ஆசியான் மாநாட்டில்கூட இதற்கான கோரிக்கையை மியான்மர் வைத்திருக்கிறது.

உண்மையிலேயே மியான்மரில் மக்களாட்சியைக் கொண்டுவருவதுதான் ராணுவ அரசின் நோக்கமா அல்லது இப்போதைய நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறதா என்கிற பொதுவான சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது. ஒற்றைக் குதிரை ஓடும் பந்தயம் போலத் தேர்தலை நடத்தி, இப்போதைய ராணுவ அரசையே ஜனநாயக அரசாக உருமாற்றிக் கொள்ளவும் ஆட்சியாளர்கள் முயற்சிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தேர்தலில் மோசடிகளை அரங்கேற்றுவதற்காக, அரசுக்கு ஆதரவான வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என தொழிலதிபர்களை ராணுவ அரசு மிரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தலுக்கான சட்டம் எதுவும் இப்போது மியான்மரில் இல்லை. கடைசி நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிட முடியாதபடி விதிமுறைகளை உருவாக்குவதற்கு ராணுவ அரசு திட்டமிட்டிருக்கக்கூடும் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

ஆனால் மோசடி நடக்கும் என்பதால் மட்டுமே, மியான்மரில் தேர்தல் நடத்தப் போவதாக ராணுவ அரசு அறிவித்திருப்பதை வரவேற்காமல் இருக்க முடியாது. தேர்தல் மோசடிகள், பெரிய ஜனநாயக நாடுகளில்கூட தவிர்க்க முடியாதவையாகத்தான் இருந்து வருகின்றன.

இத்தனை ஆண்டுகளில் கொஞ்சம்கூட நெகிழ்ந்து கொடுக்காத ராணுவ அரசு, இந்த அளவுக்கு இறங்கி வந்திருப்பதே ஆக்கப்பூர்வமான விஷயம்தான்.

இந்த 20 ஆண்டுகளில் நாடு ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கண்டிருக்கிறது. ராணுவ ஆட்சியின் அடக்குமுறையால் மக்கள் வெதும்பிப் போயிருக்கிறார்கள். உண்மையான தேர்தல் நடந்தால், ராணுவ அரசு நிச்சயமாக வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தது.  ஆனால், இந்த ராணுவம் நடத்தப்போவது தேர்தலா அல்லது தேர்தல் என்கிற பெயரில் நடத்தப் போகும் யுத்தமா என்பதுதான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வி.

..
.

தமிழ்நதி மீது குழந்தைத்தனமான தாக்கு!

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் முக்கால்வாசி, வணிக நோக்கத்துடன்தான் செயல்படுகின்றன. வெளிநாட்டுக் கரன்சிகளைக் குவிப்பது மட்டுமே அவர்களது நோக்கம். இது புதுவிதமான வணிக உத்தி. மிக உயர்வாகப் புகழப்பட்டுக் கொண்டிருக்கும் சில தொண்டு நிறுவனங்கள்கூட குழந்தைகளை விற்பதிலும் வேறு மாதிரியான சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. ஆனாலும் மிகச் சில தொண்டு நிறுவனங்கள் உண்மையாக இருக்கின்றன. பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறார் தொழிலாளர் கல்வி போன்றவற்றையும் மேற்சொன்ன தொண்டு நிறுவன மாதிரியுடன் நேர்கொள்ளலாம்.

பெரியார் காலத்தில் பெண்ணியம் பேசுவதும் பார்ப்பன எதிர்ப்பும் ஆலய நுழைவு போன்ற தலித் ஆதரவு நடவடிக்கைகளும் வரவேற்கத் தக்கவையாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் அவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லை. ஆனாலும் அவர் நியாயமென நினைத்ததையெல்லாம் செய்தார். அதுதான் புரட்சி. இப்போது நிலை மாறியிருக்கிறது. இப்போது பெண்ணியம் பேசுவது எதிர்ப்புக்குரியதல்ல. பெரிய வரவேற்புக் கிடைக்கும். புத்திசாலிகள் அதை விற்றுக் கொழிக்கவும் வழியிருக்கிறது. அரைப் பக்கக் கட்டுரைக்கே லட்சக் கணக்கில் அவார்டு பணம் கிடைக்கும். ஒரு பேச்சுக்குச் சொல்வதென்றால், இந்தச் சூழலில் பெண்ணிய எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு போன்றவைதானே பெரியார் போராட்டங்களுடன் ஒப்பிடக் கூடிய புரட்சிகளாக இருக்க முடியும்?

பெண்ணியம் பேசுவதும், தலித் ஆதரவு நடவடிக்கைகளும் இன்றைக்கும் தேவைதான். அவைகளால்தான் சமூகம் சமநிலையுடன் இருக்கும். ஆனால், இந்தக் காலத்துப் புரட்சிகளெல்லாம் வணிக நோக்கத்துடனும், விளம்பரக் கலப்புடனும்தான் இருக்கின்றன. மோசடிகளும் போலிகளும்கூட உண்டு. உண்மைகளைவிட போலிகள் மிக நேர்த்தியாகத் தெரியும். இதனாலேயே சமூகத் தொண்டு நிறுவனங்களையும், பெண்ணியம் போன்றவை பேசி பெரியார் வழி வந்தவர்களாகக் காட்டிக் கொள்வோர் பலரையும் பற்றி எனக்குள் அதிருப்தி இருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் உண்மையிலேயே உண்மையான பெண்ணியவாதியாகவும் சமூகப் பொறுப்புள்ளவராகவும் தமிழ்நதியை நான் கருதுவதுண்டு.

-------------

தமிழ்நதியைத் தாக்கி வலைப்பதிவு ஒன்றில் பொறுப்பற்றதனமாக எழுதப்பட்டிருந்ததைப் படித்தபோதுதான், வலைப்பதிவு சுதந்திரம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எழுதியிருப்பவரும் ஒரு பெண்தான். கிண்டல் என்கிற பெயரில் ஈழக் கொலைகளையும், தமிழ்நதியின் பெயரையும் அருவருக்கத் தக்க பொருள்படும்படி அவர் எழுதியிருப்பது அபத்தம் மட்டமல்ல ஆபத்தானதாகவும் தெரிகிறது. அதுவும் தமிழ்நதியின் படத்தையெல்லாம் போட்டு தமிழக புலனாய்வுப் பத்திரிகைகளை மிஞ்சிவிட்டார்.

தமிழ்நதியை விமர்சிக்கக்கூடிய அளவுக்கு அந்தப் பெண் பதிவருக்கு போதிய அனுபவம் இல்லையென்பது அவரது எழுத்துக்களிலேயே தெரிந்தது. அவர் குழந்தைத் தனமாக அறிமையாமையில்தான் இப்படி எழுதினார் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், எப்படியாவது புகழ்பெற வேண்டும் என்கிற ஆசையையும் யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்கிற துடுக்குத் தனத்தையும் ஊக்கப்படுத்த முடியாது. இதைப் பார்க்கும்போது, ஒரு விவகாரம் தொடர்பாக ஓரளவுக்காவது தெரியாதவரை அதைப் பற்றி எழுதுவது தவறு என்கிற அடிப்படையைக் கூட நமது வலைப் பதிவர்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

ஒரு கண்ணியமான பத்திரிகையாளனுக்குரிய எல்லா வரையறைகளும் நமக்கும் பொருந்தும் என்பதை வலைப்பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறாகச் செய்தியையும் கட்டுரையையும் வழங்கினால் பலருக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்கிற பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும். புகழ்பெற்றவர்கள் தங்களுக்குள் போலியாகச் சண்டையிட்டுக் கொண்டு புகழை அதிகரித்துக் கொள்வதும், வளரும் பதிவர்கள் பலர், புகழ் பெற்றவரைத் தாக்கி அதன் மூலம் புகழ் பெறுவதும் வலைப்பதிவுகளில் அதிகரித்து வரும் நிலையில் இதெல்லாம் சாத்தியம்தானா என்கிற கவலை நியாயமானதுதானே?

-----------------------

தமிழ்நதி போன்ற புகழ்பெற்றவரின் பெயரைத் தலைப்பில் இட்டு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் சிறிதும் எனக்குக் கிடையாது. ஆனால் அப்படிக் கருதப்படுவேனோ என்கிற கூச்சம் இருக்கிறது.

..
.

Sunday, February 14, 2010

எனது நண்பர்கள் - 5: எளிமையிலும் எளிமை - ம. ரெங்கநாதன்

ரெங்கநாதன் குக்கிராமத்தில் இருந்து வந்தவர். பத்திரிகைதுறையில் எனக்கு சீனியர். எந்த மாதிரியான குணம் படைத்தவருடனும் ஒத்துப் போகக்கூடிய எளிமையான பழக்க வழக்கங்கள், பேச்சுக்களைக் கொண்டவர். திருமணத்துக்கு முன் பேச்சலர் வாழ்க்கையின்போது நாங்கள் ஒரே வீட்டில் அடைந்திருந்தோம். அலுவலகப் பணிகளுக்கு மத்தியிலும், வீட்டில் சமையல் செய்வது, ஒட்டடை அடிப்பது, துணி துவைப்பது என ஆச்சரியப்படுத்துவார்.

எவ்வளவு காரசாரமான விவாதமாக இருந்தாலும் உணர்ச்சி வசப்படாமல் சமாளிப்பதில் வல்லவர்.யார் எப்படிக் கோபப்பட்டாலும் சிரித்துக் கொண்டே தட்டிக் கழிப்பார். சென்னை நகர நெருக்கடிகளில் நான் சிக்கிக் கொண்டிருந்தபோது, என்னைத் தாங்கிப் பிடித்தவர்களில் இவரும் ஒருவர்.


எவ்வளவு சிறிய சந்தேகமானாலும் ஜூனியர், சீனியர் வித்தியாசம் பார்க்காமல் யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பாங்கை இவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொள்ள முயற்சித்தேன். கருத்துக்களை அறிந்து கொள்வதிலும் இதுபோன்ற முறையைத்தான் அவர் பின்பற்றுவார்.


இவருடன் நண்பராக இருந்து, பின்பு கருத்து வேறுபாட்டால் சண்டையிட்டுப் பிரிந்து போனதாக ஒருவரைக்கூடக் காட்ட முடியாது. எல்லா நிலைகளிலும் நண்பர்களை வைத்திருக்கும் இவரது நண்பர்கள் வட்டத்தில் எனக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதே பெருமைக்குரிய விஷயம்தான்.


புரட்சிகரமாகத் திருமணம் செய்து கொண்டிருக்கும் ரெங்கநாதன், இன்று ஊடகத்துறையில் முக்கிய இடத்தில் இருக்கிறார்.நள்ளிரவுக்  கனவு, அம்பத்தூர் சினிமாக்கள், வீடு தேடும் படலம், பென்டகன் ட்ரீட் என நாங்கள் அசைபோட நிறையவே இருக்கின்றன.

அடுத்தது: ரௌத்ரம் பழகும் ஜீனியஸ்: சுப்ரமணிய பாரதி


முந்தையவை:

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்

 எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்

எனது நண்பர்கள் - 3: ஜெபஸ்டின் காசிராஜன் - எ கம்ப்ளீட் மேன்

 எனது நண்பர்கள்-4: சமூக எல்லைகளைக் கடந்தவர்- அ. செல்வதரன்


 ..
..

மிஸ்டு கால் கொண்டு வரும் கொலை வழக்கு!

அண்மையில் என் நண்பர் ஒருவருக்கு பதற்றத்தை ஏற்படுத்திய வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஊருக்குள் கொஞ்சம் பிரபலமான அவருக்கு காவல்துறையிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. பேசியது போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒரு மாதத்துக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் செல்போனுக்கு இவர் பேசியிருப்பதாக இன்ஸ்பெக்டர் சொன்னார். அதுவும் கொலை நடந்ததற்கு முந்தைய நாள். விசாரணைக்கு ஒத்துழைப்புத் தரும்படி மிரட்டும் தொனியில் இன்ஸ்பெக்டர் பேசியிருக்கிறார்.

போஸ்ட் பெய்ட் செல்போனை நண்பர் பயன்படுத்தியதால், சம்பந்த மாதத்துக்கான பில்லை சரிபார்த்தோம். இன்ஸ்பெக்டர் சொன்ன அதே நாளில் அதே எண்ணுக்கு நண்பர் பேசியது உறுதியானது. அந்தப் பெண் யாரென்றே தெரியாது என்று நண்பர் உறுதியாகக் கூறியபோதும், அவர் மீது சந்தேகப் படலம் விரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட விசாரணைக் கைதி ரேஞ்சுக்கு நடத்தப்பட்டார்.


ஏன் போன் செய்தார் என்பதை ஆராய்ந்து பார்த்தபோது ஒரு விஷயம் தெரிந்தது. அதாவது, அன்றைய தேதியில் தனது நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள் கேட்டு பத்திரிகைகள் நண்பர் விளம்பரம் செய்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் இருந்த எண்ணைப் பார்த்து அந்தப் பெண் போன் செய்திருக்கிறார். என்ன காரணத்தினாலோ அந்த போனை நண்பர் எடுத்துப் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அதே எண்ணுக்கு இவர் பேசியிருக்கிறார். விவரத்தைத் தெரிந்து கொண்டு பேச்சை முடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைப் பற்றி வேறெதுவும் இவருக்குத் தெரியாது.

இதற்கான ஆதாரங்களையெல்லாம் போலீஸில் கொடுத்த பிறகுதான் நண்பர் மீதிருந்த சந்தேகப் பார்வை நீங்கியது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விசாரித்துப் பார்த்ததில் எந்தத் தவறும் செய்யாத பலபேர் உரிய பதில் சொல்லாததால், போலீஸாரிடம் அடிகளை வாங்கி, சில மாதங்கள்வரை சிறையில் இருந்திருப்பது தெரிய வந்தது. இவர்களெல்லாம் மிஸ்டு கால் வந்து ஓரிரு நிமிடங்கள் பேசியவர்கள்தான். சிலர் பாலுணர்வால் ஈர்க்கப்பட்டு அவ்வப்போது பேசியவர்கள். எதிர்த் தரப்பில் உள்ளவர்களுக்கு ஏதாவது நேர்ந்தாலோ, அவர்கள் குற்றச் செயல்கள் செய்தாலோ இவர்களும் உள்ளே செல்ல வேண்டியதுதான்.

 இரவு நேரங்களில் தெரியாதவர்களுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசுவோருக்கு இதுபோன்ற ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றையச் சூழலில் தற்கொலைகள், கொலைகள், தொழில்நுட்பக் குற்றங்கள் பெருகியிருக்கின்றன. இந்தச் சூழலை ஏற்படுத்தியதில் செல்போனுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதேபோல் விவரம் தெரியாமல் பலவீனங்களுக்கு ஆள்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வோரும் அதிகரித்து வருகின்றனர்.


இந்தக் காலத்தில் உஷாராக இல்லாவிட்டால், ஒரு மிஸ்டு கால்கூட நம்மைக் கொலைக் குற்றவாளியாக்கிவிடும் போலிருக்கிறது.

..
.

புதிய பனிப்போர்!

புதியதோர் அரசியல் ஒழுங்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நவீன உலகில்,​​ ​ அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான முறுக்கல் சாதாரணமாகத் தளர்ந்துவிடக் கூடியதாகத் தெரியவில்லை.​ அண்மையில் ஊடகம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் சீன மக்கள் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தார்கள்.​ இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் மூளும் அபாயம் இருப்பதை நிராகரித்துவிட முடியாது என பெரும்பான்மையான மக்கள் தெரிவித்திருந்தனர்.​ அவர்களது எண்ணம் முன்பைவிட இப்போது பொருத்தமானதாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கு நிகரான வல்லமை கொண்டிருந்த சோவியத் யூனியன் சரிந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தனது வேகமான பொருளாதார வளர்ச்சியால் இட்டு நிரப்பியிருக்கிறது சீனா.​ இந்த வளர்ச்சியே அமெரிக்காவுடனான பகைக்கும் அடிப்படை.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு எந்தக் காலத்திலும் மெச்சத்தக்கதாக இருந்ததில்லை.​ தைவான் அங்கீகாரம்,​​ டாலருக்கு நிகராக செயற்கையான மதிப்பு,​​ திபெத் விவகாரம்,​​ பருவநிலை மாற்றம்,​​ அணு ஆயுதப் பரவல் போன்ற பல விவகாரங்களில் இரு நாடுகளும் உரசிக் கொண்டிருக்கின்றன.​ இந்த உரசல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்து இப்போது உச்சத்தை எட்டியிருக்கின்றன.

திபெத்,​​ ஹாங்காங்,​​ மக்காவோ போல தைவானும் தங்கள் நாட்டின் அங்கம் என்கிறது சீனா.​ பிரிந்துபோயிருக்கும் பகுதியாக அதைக் கருதலாமேயொழிய,​​ தனி நாடாக அங்கீகரிக்கக் கூடாது என உலக நாடுகளை சீனா மிரட்டி வைத்திருக்கிறது.​ தைவானுக்குத் தனிநாட்டுக்குரிய அனைத்து மரியாதைகளையும் அளித்து வந்த அமெரிக்கா,​​ இப்போது ஒருபடி மேலே போய் பெரிய அளவிலான ஆயுத விற்பனைக்கு ஆயத்தமாகியிருக்கிறது.​ அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு விட்டது.

6.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,​​ அதாவது கிட்டத்தட்ட ரூ.​ 30 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஆயுதக் கொள்முதலில் இதுவரை இல்லாத அளவுக்கு நவீன ஆயுதங்கள் தைவானுக்குக் கிடைக்க இருக்கிறது.​ நவீன ஹெலிகாப்டர்கள்,​​ ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள்,​​ சுரங்கங்களை அழிக்கும் விமானங்கள் போன்றவை இதில் அடக்கம்.​ பெரிய அளவில் அண்டைநாடுகளின் அச்சுறுத்தல் இல்லாதபோது,​​ இத்தனை பிரம்மாண்டமான ஆயுதங்களை தைவான் வாங்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் சீனாவின் கேள்வி.​ சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

இந்த ஆயுத ஒப்பந்தத்துக்குப் பதிலடி தரும் வகையில்,​​ ஈரான்,​​ வடகொரியா,​​ சிரியா,​​ கியூபா,​​ வெனிசூலா போன்ற நாடுகளுக்கு ஆயுதங்களைச் சப்ளை செய்து அமெரிக்காவுக்கு நெருக்கடி தர முடியும் என சீனா எச்சரித்திருக்கிறது.​ இந்த நாடுகளுக்கு சீனா ஆயுதச் சப்ளை செய்கிறதோ இல்லையோ,​​ தார்மிக ஆதரவை ஏற்கெனவே வழங்கிவிட்டது என்பதுதான் உண்மை.

வருங்காலத்தில் உலகம் இரு சம அணிகளாகப் பிளவுபடும் சூழல் ஏற்படும்போது இந்த நாடுகள் சீனாவுக்குப் பின்னால் திரளக்கூடும் என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது.​ அமெரிக்காவில் அதிக அளவு அன்னியச் செலாவணியைக் குவித்து வைத்திருக்கும் நாடு சீனா.​ அமெரிக்க நிதித்துறையின் கடன் பத்திரங்களில் சீனா அதிகமாக முதலீடு செய்திருக்கிறது.​ ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவை மிரட்ட இந்தக் கடன் பத்திரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும்.​ இது இரு தரப்புக்கும் பாதகமான அம்சம் என்பதால்,​​ வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே சீனா இந்த ஆயுதத்தைக் கையிலெடுக்கும்.

சீன -​ அமெரிக்க உறவு சூடாகியிருப்பதற்கு இன்னொரு காரணம் சீனாவின் இண்டர்நெட் தணிக்கை.​ தனது கொள்கைக்கு ஏற்றபடி இணையதளங்களைத் தணிக்கை செய்வதுடன்,​​ அரசுக்கு எதிரானவர்களின் இணையக் கணக்குகளைத் திருடுவதாகவும் புகார் எழுந்தது.​ சீனாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அண்மையில் அறிவித்ததற்கும் இதுதான் பின்னணி.​ கறைபட்டுப் போயிருந்த அமெரிக்காவுடனான சீனாவின் உறவு,​​ இதனால் மேலும் மோசமானது.​ இருதரப்பும் மோசமான சொற்களைப் பரிமாறிக்கொள்ள நேரிட்டது.

இப்போதைய நிலையைப் பார்க்கும்போது,​​ இரு நாடுகளுக்கு இடையேயான பகையைத் தாண்டி ஒபாமா -​ ஹு ஜிண்டாவ் இடையே உருவாகியிருக்கும் தனிப்பட்ட நட்பினால்கூட இந்த விஷயத்தில் நல்படியாக ஏதும் நடக்காது என்றே தெரிகிறது.​ சீனாவின் வளர்ச்சியால் பொறாமை கொண்டதாலோ என்னவோ அமெரிக்காவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.​ ​

சீனாவைப் பொறுத்தவரை பிரிவினைவாதியாகக் கருதப்படும் திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவை இன்னும் சிலநாள்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க இருக்கிறார்.​ திபெத் விடுதலைப் போராட்டங்களுக்கு அமெரிக்கா அளிக்கும் அங்கீகாரமாகவே இது கவனிக்கப்படுகிறது.​ ஏற்கெனவே நாள்குறிக்கப்பட்ட இந்தச் சந்திப்பு,​​ தள்ளிப்போடப்பட்டு வந்தது.​ இப்போது இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் பதற்றம் அதிகமாகியிருக்கிறது.​ எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதுதான் இது.

பதற்றத்தின் காரணமாக முக்கியமான வர்த்தகப் பேச்சுகளையும்,​​ ராணுவ ரீதியான பேச்சுகளையும் சீனா முடக்கியிருக்கிறது.​ புதிய போருக்கான அறிகுறிதான் இது.​ ஆயினும் படைகளை மோதவிட்டு,​​ ​ ஆயுத பலத்தைக் காட்டிக் கொள்ளும் வழக்கமான போராக இது இருக்கும் என்று தோன்றவில்லை.

..
.

Wednesday, February 03, 2010

ஏமனைக் குறிவைக்கும் அமெரிக்கா

கிறிஸ் து​மஸ் நாளன்று அமெ​ரிக்க விமா​னத்​தைக் குண்டு வைத்​துத் தகர்க்க நடந்த முயற்சி முறி​ய​டிக்​கப்​பட்​டது.​ குண்டு வைத்​தா​கக் கரு​தப்​ப​டும் இளை​ஞ​ரைப் பிடித்து விசா​ரித்​த​தில்,​​ ஏம​னில் இருந்​து​தான் தனக்கு வெடி​பொ​ருள் வழங்​கப்​பட்​ட​தா​கத் தெரி​வித்​தார்.​ உலகை உலுக்​கிய இந்​தச் சதி​யில் தனக்கு இருக்​கும் தொடர்பை அல்-​காய்தா இயக்​க​மும் ஒப்​புக்​கொண்​டி​ருப்​ப​தால் மேற்​கத்​திய நாடு​க​ளின் பார்வை இப்​போது ஏமன் மீது திரும்​பி​யி​ருக்​கி​றது.​

அ​ரபு நாடு​க​ளி​லேயே மிக​வும் ஏழ்​மை​யான ஏமன்,​​ பொரு​ளா​தார நிலை​யில் மிக​வும் பின்​தங்​கி​யி​ருக்​கி​றது.​ உள்​கட்​ட​மைப்​பும்,​​ வளங்​க​ளும் தேவைக்​கேற்ப இல்லை.​ ஆப்​பி​ரிக்​கா​வி​லுள்ள பின்​தங்​கிய நாடு​க​ளைப் போன்றே வறு​மை​யால் வலு​வி​ழந்து போயி​ருக்​கி​றது ஏமன்.​ அரே​பிய தீப​கற்​பத்​தில் பொது​வா​கக் கிடைக்​கும் பெட்​ரோ​லிய வள​மும்,​​ ஏமனை ஏமாற்​றிக் கொண்​டி​ருக்​கி​றது.​ இத்​து​டன் பக்​கத்தி​லி​ருக்​கும் பொரு​ளா​தார வல்​ல​ர​சான சவூதி அரே​பி​யா​வைப் பகைத்​துக் கொண்​டி​ருப்​ப​தால் ஏற்​பட்​டி​ருக்​கும் இழப்​பு​கள் வேறு.​ ​

இ​ தைத்​த​விர,​​ 20 ஆண்​டு​க​ளில் இரட்​டிப்​பா​கும் மக்​கள்​தொகை,​​ 40 சத​வீத வேலை​வாய்ப்​பின்மை,​​ தனி​ந​பர் வரு​மா​னத்​தில் 175-வது இடம்,​​ 50 சத​வீ​தக் கல்​வி​ய​றிவு என தோல்வி அடைந்து,​​ அண்​டை​நா​டான சோமா​லியா போல் ஆவ​தற்​கான எல்​லாத் தகு​தி​க​ளும் ஏம​னுக்கு இருக்​கின்​றன.​ ஆனா​லும் தோல்வி அடைந்த நாடு​க​ளின் பட்​டிய​லில் ஏமன் இன்​னும் சேர்ந்​து​வி​ட​வில்லை.​

இ​ராக்​கில் இருப்​ப​தைப் போன்ற மதப் பிரி​வு​கள் ஏம​னி​லும் இருக்​கின்​றன.​ கிட்​டத்​தட்ட சரி​பாதி அள​வுக்கு இருக்​கும் இந்த இரு பிரி​வு​க​ளுக்கு இடையே மிக அண்​மை​யில் கூட கடு​மை​யான மோதல் நடந்​தி​ருக்​கி​றது.​ இ​ராக்​கைப் போன்று இரு பிரி​வு​க​ளுக்​கும் மிக வலு​வான பிளவு இல்லை என்​றா​லும்,​​ நாட்​டின் சம​நி​லைக்கு இந்​தப் பிளவு பெரிய அச்​சு​றுத்​தல்​தான்.​ சவூதி அரே​பி​யாவை ஒட்​டி​யுள்ள பகு​தி​க​ளில் ஷியா பிரி​வி​னர் நடத்தி வரும் கல​க​மும் ஏம​னுக்​குப் பெரிய தலைவ​லி​யா​கத் தொடர்​கி​றது.​

ஆப்​கா​ னிஸ்​தா​னு​ட​னும்,​​ பாகிஸ்​தா​னின் வட​மேற்​குப் பகு​தி​யு​ட​னும் ஏமனை ஒப்​பிட முடி​யும்.​ அங்​கெல்​லாம் எப்​படி மத்​திய அர​சின் ஆட்​சிக்கு வாய்ப்​பில்​லா​மல் உள்​ளூர் மதத் தலை​வர்​க​ளின் கெடு​பிடி அர​சி​யல் நடக்​கி​றதோ,​​ அதைப் போன்​ற​தொரு நிலை​தான் ஏம​னின் பெரும்​பான்​மை​யான பகு​தி​க​ளில் நடக்​கி​றது.​

  அல்-​காய்தா போன்ற பயங்​க​ர​வாத அமைப்​பு​கள் தங்​க​ளது நட​வ​டிக்​கை​களை ஏம​னில் வலுப்​ப​டுத்​தி​யி​ருப்​ப​தற்​கும் இது​தான் முக்​கி​யக் கார​ணம்.​ ​

பின் ​தங்​கிய நாடு​க​ளுக்​கே​யு​ரிய நிர்​வா​கச் சீர்​கே​டு​க​ளும் ஊழ​லும் ஏம​னில் மலிந்​தி​ருக்​கின்​றன.​ இதற்​குச் சிறந்த உதா​ர​ணம் டீசல் ஊழல்.​ பெட்​ரோ​லி​யத்தை ஏற்​று​மதி செய்​யும் ஏமன்,​​ டீசலை இறக்​கு​மதி செய்ய வேண்​டிய நிலை​யில்​தான் இருக்​கி​றது.​ மின் தயா​ரிப்​புக்கு டீசலை மட்​டுமே நம்​பி​யி​ருப்​ப​தால்,​​ இந்த இறக்​கு​ம​தி​யைத் தவிர்க்​க​வும் வழி​யில்லை.​ ​

இ​த​னால்,​​ உல​கச் சந்​தை​யில் அதிக விலைக்கு டீசலை வாங்​கும் அரசு,​​ மானிய விலை​யில் மின் தயா​ரிப்பு நிறு​வ​னங்​க​ளுக்​கும்,​​ சில தனி​யா​ருக்​கும் விற்​கி​றது.​ இதில் நுழை​யும் மூத்த அதி​கா​ரி​கள்,​​ மானிய விலை​யில் கிடைக்​கும் டீசலை,​​ கிட்​டத்​தட்ட உல​கச் சந்தை விலைக்கே வெளி​நா​டு​க​ளுக்கு கடத்தி விற்​றுக் கொள்ளை அடிக்​கின்​ற​னர்.​ இப்​ப​டிப் பல நிலை​க​ளி​லும் ஏமன் சீர்​தி​ருத்​தப்​பட வேண்​டி​யி​ருக்​கி​றது.​

கி​றிஸ்​து​மஸ் நாள் சம்​ப​வத்​துக்​குப் பிறகு,​​ பயங்​க​ர​வா​தத்​தின் இருப்​பி​ட​மாக மாறு​வ​தற்கு வாய்ப்​புள்ள இட​மாக இப்​போது உலக நாடு​கள் ஏம​னைக் கரு​தத் தொடங்​கி​யி​ருக்​கின்​றன.​ இராக்,​​ ஆப்​கா​னிஸ்​தான் போன்ற நாடு​க​ளுக்​குள் மேற்​கத்​தி​யப் படை​கள் நுழை​யும்​போது ஏற்​பட்​டி​ருந்த நிலையே இப்​போ​தும் இருப்​ப​தால்,​​ ஏமன் கலங்​கிப் போயி​ருக்​கி​றது.​ தனது ராணு​வத்​தைக் கொண்டு பயங்​க​ர​வா​தி​களை ஒடுக்​கும் பணி​யைத் தொடங்​கி​யி​ருக்​கி​றது.​ ஆனா​லும் ஆப்​க​னுக்​கும் இராக்​குக்​கும் நேர்ந்​தது,​​ ஏமனை எட்​டு​வ​தற்​கான அச்​சு​றுத்​தல் இப்​போது நீங்​கி​வி​ட​வில்லை.​

  ஆப்​கன் விவ​கா​ரம் தொடர்​பாக லண்​ட​னில் நடந்த மேற்​கத்​திய நாடு​கள் நடத்​திய மாநாட்​டின்​போது,​​ ஏம​னுக்​கென்​றும் தனி​யாக ஒரு சிறிய மாநாடு நடத்​தப்​பட்​டதே இதற்கு சாட்சி.​

ஏ​ம​னின் கலக்​கத்​துக்கு இன்​னொரு கார​ண​மும் உண்டு.​ 1991-ம் ஆண்​டில் சதாம் ஹு​சைன் குவைத்தை ஆக்​கி​ர​மித்​த​போது,​​ அவ​ருக்கு ஆத​ர​வாக இருந்த ஒரே அரபு நாடு ஏமன்​தான்.​ இத​னால்,​​ மற்ற வளை​குடா நாடு​க​ளில் இருந்த ஏம​னைச் சேர்ந்​த​வர்​கள் அனை​வ​ரும் விரட்​டி​ய​டிக்​கப்​பட்​ட​னர்.​

   சதாம் ஹு​சைன் இருக்​கும்​வ​ரை​யில் இது​போன்ற சிக்​கல்​க​ளை​யெல்​லாம் சமா​ளித்​துக் கொள்​ள​லாம் என்​கிற எண்​ணத்​தில் இருந்த ஏம​னுக்கு,​​ இராக்​கின் தோல்வி பெரிய பின்​ன​டை​வாக அமைந்​து​விட்​டது.​

ச​தாம் ஹு​சை​னுக்கு ஆத​ர​வ​ளித்​தது,​​ மற்ற அர​பு​நா​டு​க​ளு​டன் பகை,​​ சட்ட ஒழுங்​கற்ற சோமா​லி​யா​வு​டன் நிபந்​த​னை​யற்ற நட்பு,​​ பொரு​ளா​தா​ரச் சீர​ழிவு,​​ உள்​நாட்​டுக் கசப்பு போன்​ற​வற்​று​டன் இப்​போது அல்-​காய்​தா​வின் இருப்​பி​ட​மென்​ப​தும் உறுதி செய்​யப்​பட்​டு​விட்​ட​தால்,​​ ஏம​னுக்கு ஆபத்து அதி​க​மா​கி​யி​ருக்​கி​றது.​

  மக்​க​ளைக் காக்க வேண்​டு​மென்​றால்,​​ மேற்​கத்​திய விருப்​பத்​துக்கு ஏற்ப நடந்து கொள்​வ​தைத் தவிர ஏமன் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்கு வேறு வழி​யில்லை என்​ப​து​தான் வேதனை.​