Saturday, November 28, 2009

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்

எல்லோரையும் போல நட்பு கொள்ள எனக்கும் பிடிக்கும். பரந்து விரிந்ததாக இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் பெரிய நட்பு வட்டம் எனக்கும் உண்டு. சிலர் என்னை வெறுமனே கடந்து சென்றிருக்கிறார்கள். சிலர் தொட்டபடியும், சிலர் தழுவியும் சென்றிருக்கிறார்கள். நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பலரது தாக்கம் என்னுள் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் எனது நண்பர்களை அறிமுகம் செய்கிறேன். இங்கு அறிமுகப்படுத்தப்படும் வரிசைக்கும் நட்பின் தரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதன் விளைவுகள் என்னவாக இருக்குமென இதுவரையில் எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தன்னம்பிக்கை ஏணி: என். ராஜாராமன்

உறவிலும், நடப்பிலும், எண்ணங்களிலும், பிறவற்றிலும் பல போலிகளை எனக்கு அடையாளம் காட்டியவர் ராஜாராமன். உண்மையான யதார்த்தவாதி. புளியங்குடி முதன்மைச் சாலையில் பல ஆண்டுகளாக தேநீர்க் கடை நடத்தி வருகிறார். தந்தையின் மரணத்துக்குப் பிறகு சகோதரிகளையும் சகோதரர்களையும் தோள் மீது சுமந்த இவரது பொறுப்புணர்வை எண்ணி நான் எப்போதும் வியப்பதுண்டு.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கத்தின்போது இவரது கடையின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது. ஒரே இரவில் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் நெருக்கடி. அந்தச் சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மீண்டு வருவது கடினம் எனப் பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் ஒரே வாரத்தில் இடிந்திருந்த கடையே மீட்டெழுப்பி தனது பணியைத் தொடக்கினார். இன்றைக்கும் நான் தளர்வுற்றிருக்கும்போது இந்த நிகழ்வை நினைத்துக் கொண்டால் என்னால் புத்தாக்கம் பெற முடிகிறது.

தீவிர இசைப் பிரியர். குறைந்த படிப்பிருந்தாலும் உலகளாவிய ஞானம் கொண்டவர். நசரத் பதே அலிகான் போன்றோரின் இசையையும், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான்.

நான் மட்டுமல்ல, இவரது நண்பர்கள் யாரைக் கேட்டாலும் இதையேதான் ஒப்பிப்பார்கள்.


அடுத்தது: 
ஆழ்கடலின் அமைதி கொண்டவன் 
- எம். பாலசுப்பிரமணியன் 

.................................




4 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம் மணிகண்டன்
எனக்கு ஓர் இடம் உங்கள் உளத்தில் பிடிக்கமுடியாமல் போனேன்.
தொடர்க உங்கள் நன்றிபாராட்டும் பணி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

நிகழ்காலத்தில்... said...

\\பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான்.\\

பொருத்தமானவரையே அறிமுகப்படுத்தி இருக்கிறார், தொடருங்கள் நண்பரே

வாழ்த்துகள்

புளியங்குடி said...

வணக்கம் முனைவர் மு.இளங்கோவன்.

ஐயா, உங்கள் அறிமுகம் கிடைத்ததற்காகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

புளியங்குடி said...

நிகழ்காலத்தில்...

தங்களது வாழ்த்துக்கு நன்றி