இந்திய, பாகிஸ்தான் உறவில் "ஹாட் நியூஸ்' பலுசிஸ்தான் விவகாரம். அணிசாரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற மன்மோகனும், கிலானியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பிறகே, இரண்டு நாடுகளுக்கு இடையேயும், இந்தியாவுக்குள்ளும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.
இந்தக் கூட்டறிக்கை பலுசிஸ்தான் பற்றி விவகாரமாக எதையும் கூறிவிடவில்லை. "இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது, பலுசிஸ்தானுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என பாகிஸ்தானுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மன்மோகனிடம் கிலானி கூறினார்' என்கிறது அந்த சர்ச்சைக்குரிய வாசகம். எங்கேயும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பழிபோடும் முயற்சிதான்.
1970-களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதி, தனி நாடாக சுதந்தரித்துக்கொள்ள இந்தியா வெளிப்படையாக உதவி செய்தது. அப்போதைய சூழலில் அது நியாயமாகவே கருதப்பட்டது. பலுசிஸ்தான் தொடர்பாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அது அந்தக் காலம். இந்தியா இப்போது பலுசிஸ்தானை மறந்துவிட்டது. இன்றைய சூழலில், பலுசிஸ்தானை சுட்டிக்காட்டுவதை இந்தியா அனுமதித்தது மாபெரும் தவறுதான். அதற்குக் காரணம் அலட்சியம். அந்த அலட்சியம்தான் இப்போது விபரீதமாகியிருக்கிறது.
வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் இன்னொரு விஷயத்திலும் இந்திய அரசு அலட்சியமாகவே இருக்கிறது. அது கிரிக்கெட் வாரியம். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. இப்படியொரு பயங்கரமான சந்தேகம் எழுந்ததற்கான அடிப்படைக் காரணம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான்.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 49 போட்டிகளில் இந்தியாவுக்கு 21 போட்டிகளும், பாகிஸ்தானுக்கு 14 போட்டிகளும், இலங்கைக்கு 8 போட்டிகளும், வங்கதேசத்துக்கு 6 போட்டிகளும் ஒதுக்கப்பட்டன. நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு வாய்ப்பாகவே கருதப்பட்டன.
இந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைக் காரணம்காட்டி, பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் முடிவுக்கு ஐசிசி வந்தது. போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கப்பட்டது.
போட்டிகளை துபை, சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடத்துகிறோம் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையும் எடுபடவில்லை. இந்த இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை; நிர்வாகச் சிக்கலும் இல்லை. அப்படியிருந்தும் இந்தக் கோரிக்கையை ஏற்காததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏக அதிருப்தி.
இறுதியில், பாகிஸ்தானில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட 8 போட்டிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகளின் தலைமையிடம் லாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு நோஞ்சான் கிரிக்கெட் வாரியத்தை எல்லோருமாகச் சேர்ந்து நசுக்கினார்கள்.
இதெல்லாம் ஐசிசியின் முடிவு என்று கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை. உண்மையில் ஐசிசியின் எந்தவொரு முடிவையும் மாற்றும் வலு இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. சைமண்ட்ஸ்-ஹர்பஜன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போதும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பேசியது என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் சூழ்நிலை மாறக்கூடும். ஒரே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும் என்றால், சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச காலம் கழித்து முடிவெடுக்கலாமே? அப்படியில்லாமல், அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு கொழுத்த லாபம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிச் சந்தேகப்படுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடமும் கசப்புணர்வு அதிகரிக்கும்.
இப்படி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்க, அதற்கு நேரெதிர் பாதையில் கிரிக்கெட் வாரியம் சென்று கொண்டிருக்கிறது. உரிய கட்டுப்பாடுகளை விதிக்காதவரை, விளையாட்டு என்கிற பெயரில் வெளியுறவுக் கொள்கையுடன் இவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் அலட்சியமாக இருந்தால், நாட்டுக்கு ஆகாது.
Monday, November 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment