Monday, November 30, 2009

ஹமாஸை நோக்கி ஒரு கரிசனப் பார்வை!


அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி எந்த அமைப்பும் வெற்றி பெற முடியாது என்பது தற்கால அரசியல் சூழல். அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இயக்கங்களை ஒழிப்பதற்கு அரசுகள் என்ன வேண்டுமானாலும் செய்யும். அதிகமாகப் பயன்படுத்தப்படும் உத்தி, அந்த இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துவது. அடக்கு முறைக்கு எதிராக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அதை சட்டங்களைக் கொண்டு தடுக்கும். ராஜதந்திரமாகக் காய் நகர்த்தி எந்த நாடுகளும் இதுபோன்ற அமைப்புகளுக்கு ஆதரவளிக்கவிடாமல் செய்யும். சில நேரங்களில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள், ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதைக்கூட இந்தக்கால அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். இதையும் மீறி பல அவமானங்களையும் தாண்டி சில இயக்கங்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியிருக்கின்றன. இதற்கு நல்ல உதாரணம், நேபாள மாவோயிஸ்டுகள்.

பயங்கரவாதிகளாக அறியப்பட்டவர்களுக்கு ஒரே நாளில் ஜனநாயக அங்கீகாரம் கிடைத்தது. அதன் தலைவர் நாட்டின் பிரதமராகவே ஆக முடிந்தது. ஆனால், அரசியல் சதிகளால், அவர் தூக்கியெறியப்பட்டார். இன்னொரு போராட்டத்தை நடத்த அவர்கள் தயாராக இல்லையென்றாலும், இந்த நிகழ்வு,  ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப நினைக்கும் பல இயக்கங்களின் எண்ணங்களை மாற்றியிருக்கக்கூடும்.

ஹமாஸும் இப்படியொரு இயக்கம்தான். உலகம் முழுவதுமே ஹமாஸை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் சித்தரிக்கின்றன. அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும் உண்மைதான். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் அந்த இயக்கம் வெற்றி பெற்று பாலஸ்தீனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்கள் என்பதை உலகம் அவ்வப்போது மறந்து விடுகிறது. இன்றைக்கு ஆயுதம் ஏந்து்ம் நிலைமைக்கு அவர்கள் மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஹமாஸ் ஆட்சியில் இருந்தபோது, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பாலஸ்தீனப் பிரச்னையைத் தீர்க்கும் வாய்ப்புக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை உலகம் உதாசீனப்படுத்தியது. விளைவு, இன்று ஹமாஸ் இயக்கம் காஸா பகுதியில் ஆயுதங்களுடன் முடங்கிக் கிடக்கிறது.

சோற்றுக்குக்கூட வழியில்லாத மக்கள் வாழும் பகுதியிது, மின்சாரமும், எரிவாயுவும் பொக்கிஷங்களைப் போன்றவை. இவர்கள் ரயிலைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். பசியும் பட்டினியும் இவர்களது மத உணர்வுகளைக்கூட மழுங்கடிக்கச் செய்திருக்கும். உண்மையில் இவர்களை எந்த மதத்தையும் இனத்தையும் சேர்ந்தவர்களாகப் பார்க்கவே முடியாது. இவர்கள் எந்த அடையாளமும் இல்லாத வெறும் மனிதர்கள். எதுவும் கிடைக்காத ஏழைகள். எந்த நோக்கத்துக்காகச் சண்டை போடுகிறோம் என்ற தெளிவையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தும் அளவுக்குக் கல்வியறிவுகூட இவர்களிடம் இல்லை. இவர்களை மதம் இணைக்கவில்லை புறக்கணிப்புகள்தான் இணைத்திருக்கின்றன.

யாரும் பயங்கரவாதத்தை ஆதரிக்க வேண்டாம். கூடவும் கூடாது. அதேநேரத்தில் பயங்கரவாதிகள் உருவாவதைத் தடுப்பதற்கான பணிகளைச் செய்ய வேண்டும் . கொஞ்சம் கரிசனத்தோடு அணுகினால் ஹமாஸ் போன்ற இயக்கங்கள் ஒரே நாளில் ஜனநாயகப் பாதைக்குக் திரும்பிவிடும். பரந்த விரிந்த அறிவுடைய உலகம் இவர்களைக் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதும், எச்சரிக்கை விடுவதும், தாக்குதல் நடத்துவதும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் எந்த வகையிலும் உதவாது. எல்லோரையும் அழித்துவி்ட்டு சிம்மாசனத்தை எங்குதான் போடப்போகிறார்கள்?

No comments: