Monday, November 30, 2009

ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தேசம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தந்தையும் மூதாதையர்களும் வாழ்ந்த நாடு கென்யா. அவரது உறவினர்கள் பலர் இன்னமும் அங்குதான் இருக்கிறார்கள். 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "எனது தந்தையின் கனவுகள்' என்கிற சுயசரிதைப் புத்தகத்தில் தமக்கும் கென்யாவுக்கு உள்ள உறவைப் பற்றி ஒபாமா உணர்ச்சிமயமாக எழுதியிருக்கிறார். அதிபரான பிறகு முதன்முறையாக ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்குச் சுற்றுப் பயணம் செய்வது என்று ஒபாமா முடிவு செய்துவிட்டால், அவர் செல்ல வேண்டிய முதல் நாடு கென்யாதான். அந்த அளவுக்கு ஒபாமாவுக்கும் கென்யாவுக்கும் ரத்தப் பிணைப்பு இருக்கிறது. ஆனால், இது கென்யாவின் தேசப்பிதா ஜோமோ கென்யாட்டா காலமல்ல. சீனியர் ஒபாமாவும் இப்போது உயிருடன் இல்லை.

  தேர்தல் வெற்றிகளைத் திருடும், இனப் பிரச்னையைக் கொண்டு அரசியல் நடத்தும், முடிந்தவரை மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்தான் கென்யாவில் தற்போது நிறைந்திருக்கிறார்கள். இப்படியாக, முன்பிருந்த பெருமையை கென்யா இழந்துவிட்டதாக ஒபாமா கருதியிருக்கக்கூடும். அதனால், அங்கு செல்வதை அவர் தவிர்த்துவிட்டார்.

  கென்யாவை விட்டால், ஒபாமா சென்றிருக்க வேண்டிய நாடு நைஜீரியா. காரணம் எண்ணெய். அமெரிக்காவின் பெட்ரோலிய இறக்குமதியில் முக்கியப் பங்களிப்பு நைஜீரியாவுக்கு இருக்கிறது. இதுபோக, ஆப்பிரிக்க நாடுகளைப் பொருத்தவரை, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நைஜீரியாவில் அமெரிக்கா முதலீடு செய்திருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும், பணியாளர்களும் நைஜீரியாவில் முகாமிட்டிருப்பது இன்னொரு சிறப்பு. அந்த வகையில், ஒபாமா விஜயம் செய்து சிறப்பிக்க வேண்டிய தகுதி நைஜீரியாவுக்கு இருக்கிறது. ஆனால், அரசு?

  பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு மக்களையும், இயற்கையையும் நசுக்குவதாக நைஜீரிய அரசு மீது குற்றச்சாட்டு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறை மிக்கவை. பணத்துக்காக வெளிநாட்டினரைக் கடத்துவது சர்வசாதாரணம். ஒபாமாவின் பயணத்துக்கு இவையெல்லாம் சாதகமான அம்சங்கள் இல்லை. அதனால், ஒபாமாவின் பயணத்துக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து நைஜீரியா நீக்கப்பட்டது. இதன் பிறகுதான் ஒபாமாவின் முதல் ஆப்பிரிக்கப் பயணத்துக்காக கானா தேர்ந்தெடுக்கப்பட்டது.

  ஒபாமாவின் வருகைக்காக பல ஆப்பிரிக்க நாடுகள் காத்திருந்தது உண்மைதான். ஆப்பிரிக்கா முழுவதுமே மண்ணின் மைந்தராக ஒபாமா பார்க்கப்படுவதே இதற்குக் காரணம். கானாவுக்கு ஒபாமா வருகிறார் என்பது உறுதியானதும் சில நாடுகள் ஏமாற்றமடைந்தன. சில நாடுகளின் தலைவர்கள் அதை வெளிப்படையாகவே சொன்னார்கள். தந்தை பிறந்த நாட்டையும், அதிக வர்த்தகத் தொடர்பு உள்ள நாட்டையும் தவிர்த்துவிட்டு கானாவுக்கு ஒபாமா சென்றதற்கு அங்குள்ள மக்களாட்சியும், பொருளாதார வளர்ச்சியும்தான் காரணங்கள்.

  இது தவிர, ஒபாமாவின் கானா விஜயத்துக்கு வரலாற்றுக் காரணமும் ஒன்று உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் "ஆப்பிரிக்க அடிமை வியாபாரம்' நடந்தது.  மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் அடிமைகளை அடைத்து வைப்பதற்காக கானாவில் உள்ள கேப் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் சிறிய இருட்டு அறைகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது. இந்தப் பகுதியை ஆப்பிரிக்காவின் அடிமை வியாபார மையமாக பிரிட்டிஷார் பயன்படுத்தினர்.

  அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வரும்வரையில் இந்தக் கட்டடத்தில் ஆண்களும் பெண்களும் அடைத்து வைக்கப்படுவார்கள். இருட்டு அறைகளிலும் இருட்டுச் சுரங்கப் பாதைகளிலும் மூச்சுத் திணறி நூற்றுக் கணக்கானோர் மாண்டதாக வரலாறு கூறுகிறது. ஒரு காலத்தில் தம்மைப் போன்ற பலர் அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டடம் ஒபாமாவுக்குள் ஒரு உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

  பிரிட்டிஷாரிடமிருந்து 1957-ல் விடுதலையானபோது, ஆப்பிரிக்காவின் பிற நாடுகளைப் போலவே கானாவிலும் அரசியல் ஸ்திரமற்ற நிலைதான் இருந்தது. ராணுவ ஆட்சியும் மக்களாட்சியும் மாறிமாறி நடந்தன. பொருளாதாரமும் வீழ்ந்து கிடந்தது. ஆனால், 1992-ல் பெரிய அளவிலான மாற்றம் நடந்தது. ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களாட்சி மலர்ந்தது. சிறப்பான நிர்வாகமும் சுதந்திரமான நீதித்துறையும் இப்போது கானாவுக்குச் சிறப்புச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்புகளையும் வன்முறைகளையும் ஊழல் அரசியல்வாதிகளையும் பஞ்சத்தையும் பார்த்துப் பழகிப்போயிருக்கும் பிற நாட்டு ஆப்பிரிக்க மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் தேசமாக கானா உருவெடுத்திருக்கிறது. இவை போதுமே அமெரிக்க அதிபரின் விஜயத்துக்கு.

  பிற நாட்டுத் தலைவர் ஒருவரின் சாதாரணப் பயணமாக ஒபாமாவின் வருகையை கானா அரசும், மக்களும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது வருகைக்குச் சில நாள்களுக்கு முன்பிருந்தே கானாவில் கொண்டாட்டம் தொடங்கியது. ஒபாமாவின் முகம் பொறித்த ஆடைகளுக்கு மவுசு அதிகரித்தது. மேலை நாடுகளுக்கும் ஆப்பிரிக்காவும் புதிய உறவு ஏற்பட்டதைப் போன்ற உணர்வு மக்களுக்குள் இருந்தது.

  அண்மையில் ஒபாமா சென்றார். சொந்த ஊருக்குச் சென்ற உற்சாகத்திலிருந்த அவர், கானா நாடாளுமன்றத்தில் நண்பர்களுடன் உரையாடுவதைப் போல எளிமையாகப் பேசினார். ஆப்பிரிக்காவுக்கு வலிமையான தலைவர்கள் தேவையில்லை; வலுவான அரசு அமைப்புகளே தேவையென்றார். நீங்கள் நினைத்தால் நோய்களை ஒழிக்க முடியும், நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நம்பிக்கையூட்டினார்.  அவரது கானா பயணமும், பேச்சும் ஆப்பிரிக்கர்களுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்றில் கிடைத்தற்கரிய ஒபாமா என்ற வாய்ப்பை, ஆப்பிரிக்க நாடுகள் பயன்படுத்திக் கொண்டால் அவர் சொல்வதைப் போல நல்ல விதமான மாற்றம் வந்தே தீரும். நம்பலாம்.

No comments: