Monday, November 30, 2009

ஈரானுக்கு அக்னிப் பரீட்சை!

அரசியல் தலைவர்களைப் பார்ப்பதற்காகவும் அவர்களது பேச்சைக் கேட்பதற்காகவும் தொண்டர்கள் திரளாக வருவது அந்தக் காலம். தற்கால அரசியல் மாநாடுகளுக்கு "தொண்டர்கள்' எப்படித் திரட்டப்படுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அரசியல்வாதிகளின் பொறுமையைச் சோதிக்கும் பேச்சைக் கேட்பதற்காக தொண்டர்களுக்கு பலவகையான கையூட்டுகளைத் தரவேண்டியிருக்கிறது. மேம்பட்ட ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் காட்டிக்கொள்ளும் நாடுகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அகமதிநிஜாத் இந்த அரசியல் விதியைத் தகர்த்திருக்கிறார்.

  இன்று (ஜூன் 12) அதிபர் தேர்தலுக்கான முதல்சுற்று வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் அகமதிநிஜாத் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக தெஹ்ரான் மைய மசூதி வளாகத்தில் பிரமாண்டமான பிரசாரக் கூட்டத்துக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலுமிருந்து தொண்டர்கள் வந்ததால், மைதானம் நிரம்பி வழிந்தது. தெஹ்ரானின் அனைத்துச் சாலைகளும் தொண்டர்களின் வாகனங்களால் திக்குமுக்காடின. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதிநிஜாத் வந்த வாகனம்கூட மேடையை நெருங்க முடியவில்லை. குறித்த நேரம் முடிந்த பிறகும் அவரால் மேடைக்குச் செல்ல முடியாததால், வேறு வழியின்றி வாகனத்திலிருந்தபடியே தொண்டர்களை நோக்கிக் கையசைத்துவிட்டு, வீடுதிரும்பிவிட்டார். இரவு முழுவதுமே தெஹ்ரானில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது. எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லாதபோது, ஒரு அரசியல் தலைவருக்கு இவ்வளவு அதிகமான கூட்டம் கூடியிருப்பது உலகத்தையே திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறது.

  அகமதிநிஜாத்துக்கு அமோகமான ஆதரவு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. மதத் தலைவர் கோமேனியின் பரிபூரண ஆசியும் இவருக்கு இருக்கிறது. அப்படியிருந்தும், தேர்தலில் அகமதிநிஜாத்தான் வெற்றிபெறப் போகிறார் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. இஸ்லாமிய விதிமுறைகளைக் கடுமையாகத் திணிப்பவராகக் கருதப்படும் அவருக்குப் போட்டியாக இன்னும் மூவர் களத்தில் இருக்கின்றனர். அவர்களுள் மிக முக்கியமானவர், முன்னாள் மற்றும் கடைசிப் பிரதமரான மிர் ஹூசைன் மெüசவி. தொடக்கத்தில் முன்னாள் அதிபர் கடாமியும் களத்தில் இருந்தார். பெரும்பான்மை ஆதரவுடன் அகமதிநிஜாத் வெற்றிபெற்றுவிடுவார் என்றுதான் அப்போது கருதப்பட்டது. ஆனால், தமது நீண்டகால நண்பரான மெüசவிக்கு ஆதரவாகப் போட்டியிலிருந்து கடாமி விலகியதும், அகமதிநிஜாத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது.

  அமெரிக்காவுடன் நட்பைப் புதுப்பித்துக் கொள்ளவும், சமூக அமைப்பிலும் சட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவரவும் போவதாக மெüசவி அறிவித்திருக்கிறார். பெண்கள் மத்தியில் இவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது.

  கச்சா எண்ணெய் விலை சரிவு, அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம், வேலையிழப்பு, இரட்டை இலக்கப் பணவீக்கம் ஆகியவை தேர்தலில் அகமதிநிஜாத்துக்கு எதிராக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பில்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரச் சீரழிவை நாடு சந்தித்திருப்பதாக அவரது ஆதரவாளர்களேகூட ஒப்புக் கொள்கிறார்கள். அணுசக்தி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அவரது நெகிழ்வற்ற வெளியுறவுக் கொள்கையால் உலக நாடுகளிலிருந்து ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது.

  இந்தத் தேர்தலில் அகமதிநிஜாத், மெüசவி தவிர மெஹ்தி கரோபி, மோசன் ரேசை ஆகியோரும் போட்டியில் இருக்கின்றனர். எனினும் மெüசவிக்கும் அகமதிநிஜாத்துக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்தவர்களில் இந்த நால்வரைத் தவிர மற்ற அனைவரது மனுக்களையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது.

  ஜூன் 12-ம் தேதி நடக்கும் முதற்சுற்று வாக்குப் பதிவில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவரே அதிபராவார். யாரும் 50 சதவீத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையெனில், அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதற்காக ஜூன் 18-ம் தேதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடத்தப்படும். அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இதுவரை நடந்த தேர்தல்களில் அதிகம் எதிர்பாராத பலர் அதிபர்களாகியிருக்கிறார்கள். 1997-ல் கடாமியும், 2005-ல் அகமதிநிஜாத்தும் வெற்றிபெற்றதுகூட யாரும் எதிர்பார்க்காததுதான்.

  மத்திய கிழக்குப் பிராந்தியத்திலேயே தங்கள் நாட்டில்தான் மேலான மக்களாட்சி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் ஈரானுக்கு இந்தத் தேர்தல் ஓர் அக்னிப் பரீட்சையாகும். ஆனால் அது முறையாக நடப்பதில் பல்வேறு தடைகள் உள்ளன. பத்திரிகை சுதந்திரத்தில் உலக அளவில் கிட்டத்தட்ட கடைசி நிலையில் ஈரான் வைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் தொலைக்காட்சிகளும் அரசுவசம் உள்ளன. போட்டியாளர்களின் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே "ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களை அகமதிநிஜாத் முடக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  எல்லாவற்றுக்கும் மேலாக அரசு ஊழியர்களால் "பல்வேறு' வகையிலும் தமக்கு "உதவ' முடியும் என்பதற்காகவே, அவர் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியாகவும் குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும், அரசுத் தொலைக்காட்சியில் அனைத்து வேட்பாளர்களும் நேருக்குநேர் விவாதிப்பதற்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டது உள்ளிட்ட விஷயங்களைப் பார்க்கும்போது, தேர்தல் நியாயமாக நடக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி நடந்தால் யார் தோற்றாலும் ஈரானுக்கும் ஜனநாயகத்துக்கும் வெற்றிதான்.

No comments: