இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம்.
போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒற்றை வரியைக் கொண்டு, தம்மீது இருக்கும் “தமிழின அழிப்பு’ பாவத்தைக் கழுவ அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இதற்கு முந்தைய காலங்களில், அவரது பேச்சுகள் எதுவும் தமிழினத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மை மக்களிடம் கெஞ்சிப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்திருக்கிறது. ராணுவத் தளபதி என்கிற முறையில் சாதாரணமான யுத்த விதிகளைக்கூட மதிக்காமல், இன அழிப்பை நடத்தியதில் மற்றவர்களைக் காட்டிலும் இவருக்குத்தான் அதிகப் பங்கு இருந்திருக்க வேண்டும். இப்படிச் சில நாள்களுக்கு முன்பு வரை ராஜபட்ச சகோதரர்களுடன் கைகோர்த்து, ராணுவ அத்துமீறல்களுக்கு ஆதரவாக இருந்த பொன்சேகாவுக்கு, திடீரென தமிழர்கள் மீது பாசம் பொங்குவதற்கு பொதுநலக் காரணம் ஏதும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் அமைதியை உருவாக்காவிட்டால், மீண்டும் அவர்கள் கிளர்ந்து எழக்கூடும் என ராஜிநாமா கடிதத்தில் பொன்சேகா எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியது தாமே என்பதால், ஓய்வுக்குப் பிறகு தமக்குக் குண்டுதுளைக்காத கார், கவச வாகனங்கள் என பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்பதற்கும், தமிழினத்தை இலங்கை ராணுவம் பெருமளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதற்கும் அவரே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.
ராஜபட்ச மற்றும் அவரது சகாக்களின் போர் உத்திகளும் ராஜதந்திர உத்திகளும் உலகத் தமிழ் சமூகம் எதிர்பார்க்காத அளவுக்கு வலுவானவையாக இருந்திருக்கின்றன என்பதை கடந்த சில மாத நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன. அவர்களது வெளிப்படையான ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பின்னால் மறைமுகக் காரணம் ஏதும் இருக்கலாம். இப்படியொரு சூழலில் பொன்சேகாவும் ராஜபட்சவும் அடித்துக் கொண்டு மாய்ந்து போவார்கள், அதனால் தமிழ்ச்சமூகத்துக்கு நீதிகிடைத்துவிடும் எனக் கருதுவது மிகத் தவறான கண்ணோட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.
அதிகாரமற்ற பதவி வழங்கப்பட்டது என்பதைத் தவிர, பதவியில் இருந்து விலகுவதற்காக பொன்சேகா தெரிவித்திருக்கும் வேறு காரணங்கள் எவையும் நம்பும்படியாக இல்லை. ராணுவப் புரட்சி ஏற்படும் என அஞ்சி இந்தியாவின் தயவை நாடியதாகக் கூறப்படுவது உண்மையாகவே இருந்தாலும், அதை ராஜிநாமா கடிதத்தில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. “ராஜபட்ச என்னைக் கண்டு அஞ்சினார்’ என்ற கருத்தை ஏற்படுத்துவதற்கான உத்தியாகத்தான் இது கவனிக்கப்படுகிறது. மறுகுடியமர்த்தலில் அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுவதும் அப்பட்டமான அரசியல்தான்.
உண்மையில், தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் போகிறேன் என்று கூறும் எந்த அரசியல்வாதியையும் சிங்கள மக்கள் ஆதரிக்கப் போவதில்லை. தமிழர்கள் மீது அதிக விரோதப் போக்கைக் கொண்டிருப்பவருக்குத்தான் சிங்களர்களிடையே அதிக ஆதரவு இருக்கும். அந்த அளவுக்கு இரு இனங்களிடையே கசப்புணர்வு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சிங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்போது ஆட்சியிலிருப்போரும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களும் இந்த வெறுப்பைத்தான் சிங்கள வாக்குகளைக் கவரும் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தினர். இனியொரு தேர்தல் வரும்போதுகூட, ராஜபட்ச, பொன்சேகா உள்ளிட்ட என யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் குறைந்தபட்ச செல்வாக்குக்கூடச் செலுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.
பொன்சேகா ராஜிநாமாவால் தமிழர்களுக்கு ஓரளவு கிடைக்க வேண்டிய ஆதரவும் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிரான பொது வேட்பாளராக பொன்சேகா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க போட்டியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். ராஜபட்ச, பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டியிருக்கும். இந்த இருவரும் சீனா, இந்தியா போன்ற பிராந்தியப் பெருந்தலைகளுடன் மிக நெருக்கமாக இருப்பதால், தமிழர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈழ விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாமல் போகும்.
ஒருவேளை ராஜபட்ச, பொன்சேகா தவிர ரணில் போன்ற வேறொருவர் களத்தில் இறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் தமிழர்கள் வாக்களிப்பதில் ஒரு அர்த்தமிருக்கும். மற்ற நாடுகளில் இருப்பதைப் போன்று சிறுபான்மை வாக்கு வங்கியை ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தவும் முடியும்.
இதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. புலிகளுடனான போரில் கிடைத்த வெற்றியின் மூலம் ஏகத்துக்கும் உயர்ந்துபோன தனது செல்வாக்கைக் கொண்டு தேர்தலைச் சந்திப்பதற்கு ராஜபட்ச திட்டமிட்டது என்னவோ உண்மைதான். ஆனால், பொன்சேகா தனது அரசியல் ஆசைகளை அவசரப்பட்டு வெளியிட்டிருப்பதால், இப்போதைய சூழலில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்துவது தேவையற்றது என ராஜபட்ச உணர்ந்திருப்பார். ராஜபட்ச-பொன்சேகா மோதலால் இன்னும் சில உண்மைகள் வெளிவரலாம். ஆனால், நீதி கிடைத்துவிடும் என அப்பாவித்தனமாகக் கூறிக் கொண்டிருக்க முடியாது.
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment