கால்பந்து ஆட்டம் ஒரு விளையாட்டு மாத்திரமல்ல. பலருக்கு அதுவே உலகம்; அதுவே மதம். தேசப் பற்றுடனும், அரசியலுடனும் பிணைந்திருக்கும் ஓர் ஆழமான விஷயமும்கூட. சில நாடுகளில் அரசையும் வெளியுறவு உத்திகளையும் நிர்ணயிக்கும் காரணியாகவே கால்பந்து இருந்து வருகிறது.
கால்பந்துப் போட்டியால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்காவின் எல்சால்வடாருக்கும் ஹோன்டூராஸýக்கும் இடையே 4 நாள் யுத்தமே நடந்தது. இதைக் கால்பந்து யுத்தம் என்றார்கள். சில மாதங்களுக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் நடந்த போட்டி, ஸ்பெயினின் கத்தோலினா பிராந்தியத்துக்குத் தன்னாட்சி அளிக்கும் போராட்டத்தை வலுவடையச் செய்தது. இவற்றையெல்லாம் தாண்டிய ஓர் அசாதாரணமான நிகழ்வுதான் இப்போது ஆப்பிரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கண்டத்திலிருந்து இத்தனை நாடுகள்தான் உலகக் கோப்பைப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்று சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் விதிமுறை வகுத்து இருக்கிறது. அந்த வகையில், ஆப்பிரிக்காவிலிருந்து 5 நாடுகள் உலகக் கோப்பைக்குச் செல்லமுடியும். இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் அண்மையில் நடந்து முடிந்துள்ளன.
5 பிரிவுகளாக நடந்த இந்தப் போட்டிகளில் எகிப்தும் அல்ஜீரியாவும் ஒரே பிரிவில் இருந்தன. அப்துல் நாசர் காலத்திலிருந்தே இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான நல்லுறவு இருந்து வந்திருக்கிறது. அல்ஜீரியாவின் விடுதலைப் போராட்டத்துக்கே நாசர் உதவினார் என வரலாறு சொல்கிறது. ஆனால், கால்பந்துப் போட்டிகள் இந்த இருநாட்டு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வாரம் இந்த இரு நாட்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி லீக் போட்டி கெய்ரோவில் நடந்தது. எகிப்துக்கு வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம். அல்ஜீரியா தோற்றால், இன்னொரு முறை ஆட வேண்டும். போட்டிக்காக அல்ஜீரிய அணி கெய்ரோவுக்குள் நுழைந்ததுமே பதற்றமும் கூடவே வந்தது. தங்களது வீரர்கள் தாக்கப்பட்டதாகவும், அதற்கு எகிப்துதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அல்ஜீரியா குற்றம்சாட்டியது. அவர்களே தாக்கிக் கொண்டு எங்கள் மீது பழிசுமத்துகிறார்கள் என எகிப்து அதிரடியாகச் சொன்னது. தங்கள் பங்குக்கு ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். உச்சநிலைப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மிகுந்த பதற்றத்துக்கு இடையே நடந்த இந்தப் போட்டியில் 2-0 என்கிற கோல் கணக்கில் எகிப்து வென்றதால், இன்னொரு போட்டி ஆட வேண்டிய கட்டாயம் வந்தது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டி அது. எகிப்திலோ அல்ஜீரியாவிலோ அந்தப் போட்டியை நடத்தும் சூழல் இல்லாததால் சூடான் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கால்பந்து, எல்லைகளைக் கடந்தது போலும். 45 விமானங்களில் அல்ஜீரியர்களும், 18 விமானங்கள் மற்றும் சாலை மூலமாக ஆயிரக்கணக்கான எகிப்தியர்களும் சூடானை முற்றுகையிட்டனர். வரலாறு காணாத பாதுகாப்பு என்பார்களே, உண்மையிலேயே அப்படியொரு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் போட்டிக்கு முன்னும் பின்னும் ரசிகர்களின் கைகலப்புகளைத் தவிர்க்க முடியவில்லை. போட்டியில் ஒரு கோல் அடித்து அல்ஜீரியா வெற்றி பெற்றது.
இதன் பிறகுதான் கால்பந்துக்கு அரசியல் மெருகேற்றப்பட்டது. கால்பந்து என்கிற வட்டத்தைத் தாண்டி இந்த விவகாரம் உருப்பெருக்கம் அடைந்தது.
கெய்ரோவிலும் சூடான் தலைநகரிலும் அல்ஜீரியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்காக எகிப்து நாட்டுத் தூதரை அழைத்து அல்ஜீரியா விளக்கம் கேட்டது. இதைப் பொறுக்காத எகிப்து, அப்படியொரு தூதரே வேண்டாமெனத் திரும்ப அழைத்துக் கொண்டது. இதனிடையே சூடானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என எகிப்து பத்திரிகைகள் விமர்சித்ததால், அந்த நாட்டுக்கும் கோபம் வந்திருக்கிறது. எகிப்து தூதரை அழைத்து சூடான் தனது கோபத்தைக் கொட்டியிருக்கிறது. இதனால் எகிப்து - சூடான் இடையே புதிய பகை உருவாகியிருக்கிறது. விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை.
அல்ஜீரியாவில் எகிப்தியர்களுக்கு எதிராகவும், எகிப்தில் அல்ஜீரியர்களுக்கு எதிராகவும் வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. நாடுகளைக் கடந்தும், இணையத்திலும்கூட இந்தச் சண்டை நடக்கிறது. பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையேயான கடந்த கால நட்புறவின் அடையாளங்களை நினைவூட்டும் புகைப்படங்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் பதற்றம் இன்னமும் தணிந்த பாடில்லை.
பகை காரணமாக நீண்ட காலமாகவே, எகிப்து -அல்ஜீரிய கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் யுத்தகளங்களாக இருந்து வந்திருக்கின்றன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போட்டியின்போது அல்ஜீரிய கால்பந்து வீரர் ஒருவர், எகிப்து அணி டாக்டரின் முகத்தில் பாட்டிலால் தாக்கி குருடாக்கினார். அந்த அளவுக்கு ஆட்டம் வினையான சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருப்பது முன்னெப்போதும் நடந்திராத அளவுக்கு மோசம்.
அண்மைக்காலங்களில் சர்வதேச அரங்கில் பெரும்பாலான பிரச்னைகளில் அரபு நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அரபு நாடுகளான எகிப்தும் அல்ஜீரியாவும் முறுக்கிக் கொள்வதால் இந்த ஒற்றுமை குலையக் கூடிய ஆபத்து இருக்கிறது.
அல்ஜீரியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளுமே பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பிரச்னைகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவைதான். வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசியும் இந்த நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது இந்த நாட்டு மக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் புதிய பகையுணர்வால் இந்தப் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. வேலைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம், இப்போது அடுத்த நாட்டுத் தேசியக் கொடியை எரித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தானே எதிர்பார்த்தோம் என்பதைப்போல அரசியல்வாதிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பகையுணர்வு அதிகமாக இருந்தால் எதிர்பார்ப்பும் ரசிப்பும் அதிகமாக இருக்கும் என்பது விளையாட்டு நியதி. தொழில்முறையிலும் இந்தப் பகை லாபகரமானதாகவே கருதப்படுகிறது. அதனால்தான் இந்தப் பகையைத் தணிக்கவோ போட்டிகளைத் தவிர்க்கவோ எந்தத் தரப்பும் விரும்புவதில்லை. பகையை வியாபாரமாக்கும் உத்தி இது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விளையாட்டுப் போட்டிகள், ஆஷஸ் கிரிக்கெட் தொடர் போன்றவற்றின் முக்கியத்துவத்துக்கும் இந்த உத்தியே அடிப்படை.
இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் ரீதியான பதற்றத்தைத் தணிப்பதற்காக நல்லெண்ண அடிப்படையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதுதான் காலம்காலமாக இருந்து வரும் வழக்கம். வெற்றிபெறுவோர் அடக்கமாகவும் தோல்வியுறுவோர் அமைதிகாப்பதும்தான் அந்த மாதிரியான நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.
வன்முறை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்ஜீரிய, எகிப்து இடையேயான போட்டிகளின்போது இரு நாட்டு வீரர்களும் கால்பந்து நிர்வாகிகளும் ஊடகங்களும் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்திருக்க வேண்டும். லாபம் கருதி எந்தத் தரப்புமே அதைச் செய்யவில்லை. இரு நாட்டு மக்களும் இந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே விளையாட்டு வினையாவதைத் தடுக்க முடியும்.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம் திரு.மணிகண்டன்.
தினமணியில் வெளியானபொழுதே இந்தக்கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன்.இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே எங்களுக்குத் தெரியாது.ஆனால் தாங்கள் அதன் அனைத்து வரலாறுகளையும் மனத்துள் கொண்டுள்ளீர்கள்.
நெஞ்சார்ந்த பாராட்டு
மு.இளங்கோவன்
புதுச்சேரி
மகிழ்ச்சி. தொடர்ந்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள். நன்றி.
Post a Comment