Tuesday, November 17, 2009

விவசாயிகளுக்கு நன்றி சொல்லுங்கள்!

விவசாயம் என்பது தெரிந்தே நஷ்டப்படும் தொழில் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் நிலையைப் பார்த்தால் அது ஓரளவுக்கு உண்மைதான்.  கிராமங்களும் விவசாய நிலங்களும் இப்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன. கலாசாரம் திரிந்து போயிருக்கும் சமூகம், விவசாயிகளை வேண்டாதவர்களாகப் பார்க்கிறது. பயிர்த் தொழிலைக்கூட பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துவிட இன்றைய உலகம் முயன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலிலும் விவசாயத்தை விடாப்பிடியாகக் கட்டிக் காப்பவர்கள் உலகமெங்கிலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் அப்படிச் சிலர் சேர்ந்து விவசாய சேவா சங்கம் என்கிற அமைப்பை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்கள். இன்றைக்கும் தீவிரமாகச் செயல்பட்டுவரும் இந்தச் சங்கம், கடன் கேட்பது, உரங்களுக்கு மானியம் கோரிப் போராடுவது என்ற வழக்கமான வேலைகளைச் செய்வதில்லை. பாரம்பரியம் மாறாத அறிவுசார்ந்த தொழில்நுட்பமே விவசாயத்தை வலுப்படுத்த முடியும் என்பது இந்தச் சங்கத்தின் நம்பிக்கை. யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருப்பது இந்தச் சங்கத்தின் சிறப்பு.

இந்தச் சங்கத்தின் மூத்த உறுப்பினரான கோமதி நாயகம், ரசாயன உரங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதுடன், அதன்படியே விவசாயம் செய்தும் வருகிறார். இடுபொருள்களுக்காக உர நிறுவனங்களையும் அரசையும் நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதே விவசாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்; விவசாயிகள் யாரையும் சாராதவர்களாக இருந்தால்தான் விவசாயத்தைத் தொடர முடியும் என்னும் கருத்தை இவர் வலியுறுத்துகிறார். தமிழகத்தின் பல இடங்களுக்கும் பயணம் செய்து இயற்கை விவசாயத்தைப் பரப்பும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

கால்நடைப் பண்ணையில், சாண எரிவாயுக் கலன்கள் அமைத்து அதன் மூலம் கிடைக்கும் எரிவாயுதான் இவரது வீட்டுக்குப் பயன்படுகிறது. இதனால் சமையல் எரிவாயுவுக்கு அரசு வழங்கும் மானியம் மிச்சமாகிறது. கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு, உரமும் பூச்சிக் கொல்லிகளும் தயாரித்து தனது வயலுக்கு அதைப் பயன்படுத்துகிறார். இது போன்று வெளி இடுபொருள்களை எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நின்றால் மட்டுமே விவசாயத்தை லாபகரமாக நடத்த முடியும் என்பது இவரது அனுபவப் பாடம்.

கூட்டுக் குடும்பத்தைப் பராமரிக்கும் இவருக்கு வெளிநாட்டினர் மத்தியிலும் மிகுந்த மரியாதை இருக்கிறது. இவரது வீட்டில் தங்கி, கூட்டுக் குடும்ப நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளவும், இயற்கை விவசாய உணவுகளை உண்ணவும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள்.

இயற்கைவழி விவசாயம் கட்டுபடியாகாது, விளைச்சல் குறைவாக இருக்கும் என்கிற வழக்கமான கருத்தையெல்லாம் மறுக்கிறார் இந்தச் சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த உறுப்பினர் அந்தோனிசாமி. ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக பஞ்சகவ்யம், பசுந்தாள் உரம், பூச்சி விரட்டி என இவரும் இயற்கை வழி வேளாண்மையையே தேர்ந்தெடுத்திருக்கிறார். எலுமிச்சையில் புதிய ரகம் கண்டுபிடித்ததற்காக மத்திய அரசு இவருக்கு "சிருஷ்டி சன்மான்' என்கிற விருதை வழங்கியிருக்கிறது.

இந்தச் சங்கத்தில் எழுபது வயதைத் தாண்டிய வேலு என்கிற பெரியவர் ஒருவர் இருக்கிறார். மரங்களை அடிப்படையாக கொண்ட தோட்டத்தை உருவாக்கியவர் இவர். வயதான காலத்தில் மரங்களைக் கொண்ட தோட்டத்தை அமைப்பதற்கு மிகப் பரந்த மனம் வேண்டும். ஏனெனில் இந்த மரங்கள் பிற்காலத்தில் தரப்போகும் பலன் இவருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். இப்படித் தமது வாழ்நாளில் எந்தப் பலனும் கிடைக்காது எனத் தெரிந்தும் தரிசு நிலங்களில் இவர் மரங்களை வளர்த்தார். இந்தத் தன்னலமற்ற சேவைக்காக மத்திய அரசின் விருட்ச மித்ரா விருது இவருக்குக் கிடைத்தது.

விவசாயம் தவிர, நகரைப் பசுமையாக்கும் பணிகளையும் இந்தச் சங்கம் செய்து வருகிறது. தன்னார்வ அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஆண்டுக்கு 5000 மரக்கன்றுகளை தெருவெங்கும் நடும் பணிகளை இந்தச் சங்கம் மேற்கொண்டிருக்கிறது.

No comments: