Thursday, November 26, 2009

அசாருதீனை அனுமதிக்கலாமா?


எண்பதுகளில் கிரிக்கெட்டை கவனிக்கத் தொடங்கியவர்களுக்கு அசாருதீனின் அதிரடி பற்றித் தெரிந்திருக்கும். குச்சி போல மட்டைப் பிடித்துக் கொண்டு அவர் மைதானத்துக்குள் நுழைவதே தனி அழகுதான். ஜான்டி ரோட்ஸ் போன்றவர்களின் வருகைக்கு முன்பு, ஃபீல்டிங் என்றாலே அசாருதீனைத்தான் உதாரணமாகக் காட்டுவார்கள். தன்னை நோக்கி வரும் பந்தை கால்களால் தடுத்து எடுக்கும் முறையை அவர்தான் அறிமுகப்படுத்தினார்.


ஆனால், தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்தே அவரது ஆட்டத்திறன் மங்கியது. வெறும் அலங்கார கேப்டனாகவே அவர் இருந்து வந்தார். ஆனாலும், அவரது தலைமைப் பண்புக்கு இந்திய அணி தலை வணங்கியிருந்தது. கபில்தேவ், ரவிசாஸ்திரி போன்றோர் அணியில் இருந்தாலும் அசாருதீனின் தலைமைப் பண்பு வேறு யாருக்கும் வாய்க்கவில்லை.

சூதாட்டப் புகார்தான் அவருக்கு ஏற்பட்ட களங்கம். இதனால், அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஒருமுறை கிரிக்கெட் ரேட்டிங் தொடர்பான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அசாருதீன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையேறினால், நாங்கள் இருக்க மாட்டோம் என கபில்தேவ், ரவிசாஸ்திரி, வெங்சர்க்கார் உள்ளிட்டோர் மிரட்ட, கூனிக் குறுகி வெளியேறினார் அசார்.இன்று நிலைமை மாறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார். ஒரு வகையில் அவருக்கு மக்கள் வழங்கியிருக்கும் அங்கீகாரம்தான் இது.

இப்போது அவருக்கு இன்னோர் ஆசை வந்திருக்கிறது. கிரிக்கெட்டில் தமக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என அவர் கோரியிருக்கிறார். இதன் மூலம், பயிற்சியாளராகவோ, வர்ணணையாளராகவோ, ஐபிஎல் அணியின் உரிமையாளராகவோ மாற அவர் முயற்சிக்கிறார் எனத் தெரிகிறது.அசாருதீனின் இந்த முயற்சி பலிக்கக்கூடும். அது அரசியல் பலம். ஆனால், கிரிக்கெட் உலகம் அவரை வரவேற்கத் தயாராக இல்லை. இப்போதைக்கு கிரிக்கெட்டுக்கு அவரால் எந்த வகையிலும் சேவை செய்யவும் முடியாது. அவரைத் திரையில் பார்க்கும்போதெல்லாம், அவரது அதிரடிகள் நினைவுக்கு வரப்போவதில்லை. வேலையையும், படிப்பையும் ஏன் தேர்வையும்கூட விட்டுவிட்டு இந்திய அணியின் வெற்றிக்காக வேண்டிக் கொண்டிருந்த பல கோடி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர் செய்த துரோகம்தான் நினைவுக்கு வரும்.

5 comments:

வந்தியத்தேவன் said...

மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் மந்திரிகளாகவும் முதலமைச்சர்களாகவும் இருக்கும் போது ஏன் அசார் மட்டும் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரக்கூடாது? அசாரின் சூதாட்டப் புகார்கள் முறைப்படி விசாரிக்கப்படவில்லை. ஒரு சில குள்ள நரிகளால் அசார் பழிவாங்கப்பட்டார் என்பது மட்டும் உண்மை.

குடுகுடுப்பை said...

இவன் கிரிக்கெட்டை விற்றவன். இவனைப்பற்றிய கட்டுரை அதற்கு பின்னூட்டம் போடவே அசிங்கமாக இருக்கிறது

puliangudi said...

வந்தியத்தேவன், தங்களது கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் வாதம் சரியானது. ஆனால், துரோகம் செய்பவர்கள் பெரிய பதவிகளில் இருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தனது தவறை அசார் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

வந்தியத்தேவன் said...

//puliangudi said...
வந்தியத்தேவன், தங்களது கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் வாதம் சரியானது. ஆனால், துரோகம் செய்பவர்கள் பெரிய பதவிகளில் இருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தனது தவறை அசார் ஒப்புக்கொண்டிருக்கிறார்.//

இல்லை துரோகம் செய்பவர்கள் ஒதுக்கப்படவேண்டும். அதே நேரம் அசாரைச் சுற்றி ஒரு சதிவலை பின்னப்பட்டதாக சில செய்திகள் வந்தன. தவறிழைத்தவர்கள் பெரிய பதவியில் இருக்கும்போது அசாரையும் மீண்டும் கிரிக்கெட்டில் நுழைக்கலாம்.

இன்னொரு சந்தேகம், நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட அசார் எப்படி தேர்தலில் போட்டியிட்டார்? இது சட்டப்படி தவறு அல்லவா?

puliangudi said...

அசாருதீன் மீது எநதக் கிரிமினல் குற்றமும் இல்லை என்பதால், தேர்தலில் போட்டியிடுவதை நமது சட்டம் அனுமதித்தது.