Monday, November 30, 2009

வெளியுறவுச் சோதனை...

இந்திய வெளியுறவுத் துறைக்கு இது போதாத காலம். வாரம் தவறாமல் ஏதாவது ஒரு விவகாரம் பூதாகரமாகக் கிளம்பிவிடுகிறது. அந்த வரிசையில் இப்போது பரபரப்பாகியிருப்பது காஷ்மீர் விவகாரம். கொஞ்ச காலமாக சர்வதேச அளவில் அடக்கி வாசிக்கப்பட்ட இந்த விவகாரத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கிளப்பிவிட்டிருக்கிறது.
  இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு கசப்பாகவே தொடங்கியது. இன்றும் அப்படியே தொடர்கிறது. அதற்கு ஒரே காரணம் பாகிஸ்தான்.
  1969-ல் இந்தக் கூட்டமைப்பின் முதல் மாநாடு மொராக்கோவில் நடந்தபோது, இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 1965-ல் நடந்த போரால் ஏக கோபத்தில் இருந்த பாகிஸ்தான், மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதிநிதிகளுக்கு அனுமதியளித்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக மிரட்டியது. இதனால், மொராக்கோவுக்குச் செல்லாமலேயே இந்தியக் குழு திரும்பியது.
  அதன் பிறகும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது. இஸ்லாமிய மக்கள்தொகையில் உலகின் மூன்றாவது பெரிய நாடு என்ற தகுதியின் அடிப்படையிலும், காஷ்மீர் விவகாரத்துக்குப் பயன்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பிலும்தான் இந்தக் கோரிக்கையை இந்தியா முன்வைத்தது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், பாகிஸ்தானின் எதிர்ப்பால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதையாவது அறிவிப்பதை இந்த அமைப்பு வழக்கமாகவே கொண்டிருந்தது. அவற்றிலெல்லாம் காரசாரமாக ஒன்றுமில்லை. இப்போது சர்ச்சைக்குரிய வகையில், "இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர்' பகுதிக்கென சிறப்புத் தூதரை நியமித்திருக்கிறது.
  இஸ்லாமியக் கூட்டமைப்பில் சேராதிருந்ததால், இந்தியாவுக்கு இதுவரை பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், சிறப்புத் தூதர் நியமிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தால், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய பின்னடைவு.
  இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அறிவிப்பு, இரண்டு வகையில் இந்தியாவுக்கு எதிராக அமையக்கூடும். ஒன்று, காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைய புதிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அழைப்பின் பேரில் இஸ்லாமியக் கூட்டமைப்பு மாநாட்டுக்குச் சென்று வந்திருக்கும் பிரிவினைவாதத் தலைவர் மிர்வைஸ் உற்சாகமாக இருக்கிறார். இந்த உற்சாகத்துடன் பிரிவினைப் போராட்டங்களை அவர் முடுக்கிவிடப்போவது உறுதி.
  காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்விவகாரமாகவே இருந்து வருகிறது. எந்த மூன்றாவது நாட்டின் தலையீடும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இப்போதும், சிறப்புப் பிரதிநிதியை நியமிக்க இஸ்லாமியக் கூட்டமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இது ஒரு வகையில் வெற்றிதான் என்பதை மறுப்பதற்கில்லை.
  எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய சூழலால், அமைதிப் பேச்சில் காஷ்மீர் விவகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கை வலுப்பெறும். இது தவிர்க்க முடியாததாகக்கூடப் போகலாம்.
  சில நாள்களுக்கு முன்புதான் காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக விசா வழங்கி சர்ச்சையைக் கிளப்பியது சீனா. இதன் உள்நோக்கம் வெளிப்படை. இந்த நடவடிக்கைகள் மூலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானும் சீனாவும் இப்போது கூட்டமைத்துச் செயல்படுவது போலத் தெரிகிறது.
   இதனால், பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சில் காஷ்மீர் பிரச்னை தவிர்க்க முடியாததாகலாம்.
  திபெத் சுயாட்சி, தைவான் அங்கீகாரம், ஹாங்காங் ஜனநாயகப் போராட்டம் போன்ற விவகாரங்களில் சீனாவுக்கு ஆதரவாகத்தான் இந்தியா நடந்து கொண்டிருக்கிறது.
  அதேபோல், பலுசிஸ்தான் விவகாரத்திலும் இந்தியா ஒதுங்கிவிட்டது. இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்தியா இதுவரை எதுவும் செய்யாமல் நடுநிலைமை வகிப்பது அல்லது மௌனம் காப்பது, தேவைப்பட்டால் உதவுவது என்றுதான் செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்துமே இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன. சர்வதேச அமைப்புகளிலும், விவகாரங்களிலும் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படத் தயங்குவதே கிடையாது.
   இந்தியாவின் அண்டை நாடுகள் நட்பு பாராட்டுவதே அண்டிக் கெடுப்பதற்குத்தானோ எனும் அளவுக்கு அந்த நாடுகளின் செயல்கள் அமைந்திருக்கின்றன.   இந்தியாவின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்ட பொறாமையும் அமெரிக்காவுடனான அதிகப்படியான நெருக்கமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
  ஒன்று மட்டும் தெரிகிறது. நல்லெண்ணம் கொண்டிருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவை 1962-ல் சீனா வஞ்சித்தது. எதிர்பார்க்காத நேரத்தில் இந்தியா மீது படையெடுத்தது.   இந்திரா காந்தி காலத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த அண்டை நாடுகள் இந்தியாவை அவமானப்படுத்த, ஒற்றுமையைக் குலைக்கக் கைகோர்த்துச் செயல்படுகின்றன. நாம் சுதாரித்துக் கொள்ளாவிட்டால், சரித்திரம் நம்மை மன்னிக்காது!

No comments: