Thursday, November 18, 2010

செல்டிக் புலியின் வீழ்ச்சி!

சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும்.

 1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது கட்டுமானத்துறை.

 நவீனகால பொருளாதாரக் கொள்கைப்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு பெருகியது. வீடுகள், மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்தது.

 1995-ல் தொடங்கிய பொருளாதார ஓட்டம், 2000-க்குப் பிறகு உச்சநிலையை அடைந்தது. வழக்கம்போல மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, நுகர்வுச் சந்தையும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசியப் புலிகள் என்கிற பெயரைப் போன்று "செல்டிக் புலி' என்கிற பெயரை தமது பொருளாதார ஓட்டத்தைப் பிரதிபலிப்பதற்காக அயர்லாந்து வைத்துக் கொண்டது.

 ஆனால், 2007-க்குப் பிறகு சரிவு தொடங்கியது. அமெரிக்காவில் உலகப் பொருளாதார மந்தத்தின் அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே அயர்லாந்தின் பொருளாதார மகிழ்ச்சிக் காலம் முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவை ஏமாற்றிய அதே கட்டுமானத்துறை அயர்லாந்தையும் ஏமாற்றியது. வீடுகள், மனைகளின் விலைகள் சரிந்தன. கடன் கொடுத்த முக்கியமான 9 வங்கிகள் திவாலாகின. உதவி கேட்டு அரசிடம் கையேந்தின. அவ்வளவுதான் செல்டிக் புலியின் பாய்ச்சல் நின்று போனது.

 இப்போது நிலைமை இன்னும் மோசம். கடன் பத்திரங்களுக்கு உரிய வட்டியையும் அசலையும் அரசால் திருப்பித் தர முடியுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. நாளுக்குநாள் கடன்பத்திரங்களின் விலை சரிந்து, அதற்கான வட்டிவிகிதம் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க வேண்டுமென்றால் வெளிநாடுகளில் கையேந்துவதைத் தவிர வேறு வழியேயில்லை.

 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பியக் கூட்டமைப்பிலும், 16 நாடுகள் அடங்கிய "யூரோ ஸோன்' எனப்படும் யூரோவை நாணயமாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பிலும் அயர்லாந்து அங்கமாக இருக்கிறது.

 யூரோஸோன் உறுப்பினர் என்பதால் நினைத்த மாத்திரத்தில் அயர்லாந்தால் தன்னிச்சையாக பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து நெருக்கடியைச் சமாளிக்க முடியாது. யூரோஸோன் பொருளாதாரக் கொள்கைகளுடன் இசைந்துதான் செயல்பட முடியும்.

 அதேபோல், யூரோஸோன் நாடுகளும், அதில் அங்கம் வகிக்காத பிற ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும் நமக்கென்ன என்று ஒதுங்கியும் இருந்துவிட முடியாது. ஒரு நாட்டை பாதிக்கும் பொருளாதாரப் பிரச்னைகளை ஒரே நாணயத்தையும் இணையான பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றும் அடுத்தடுத்த நாடுகளையும் பாதிக்கும் என்பதால், அயர்லாந்தை நெருக்கடியிலிருந்து மீட்கவே மற்ற நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

 சில மாதங்களுக்கு முன்பு கிரேக்கம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலாகும் தருணத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கூட்டமைப்பும், யூரோஸோன் நாடுகளும் உதவிக்கு வந்தன. பன்னாட்டு நிதியத்திடமும் உதவி கோரப்பட்டது. நெருக்கடியிலிருந்து கிரேக்கம் முழுமையாக மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்று கருதப்படும் நிலையில், அடுத்ததாக அயர்லாந்து அதே நிலைக்கு வந்திருக்கிறது.

 கிரேக்கம் வீழ்ந்தபோதே, அடுத்ததாக பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நாடுகளை மீட்பதற்காக ஐஎம்எஃப் நிதியுதவியுடன் ஐரோப்பிய நிதிநிலைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஐரோப்பாவில் கடைநிலை பொருளாதாரத்தில் இருக்கும் அயர்லாந்து போன்ற நாடுகளைக் காப்பாற்றும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. யூரோஸோனில் இல்லாத பிரிட்டன் கூட உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி பெருமளவு நிதியுதவி செய்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஆனால், அயர்லாந்துதான் உதவி பெறும் மனநிலையில் இல்லை. இந்த நெருக்கடியை நாங்களே சமாளித்துக் கொள்கிறோம் என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. சுயமரியாதையைக் காப்பாற்றுவதே அயர்லாந்துக்கு முதல் குறிக்கோள் என்பதுதான் அவர்களது நிலை.

நிதியுதவியை ஏற்றுக்கொண்டால், ஆளும் கூட்டணி மீது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கக்கூடும் என்பது போன்ற அரசியல் காரணங்களும் இதற்குப் பின்னணியில் இருக்கின்றன. இதனால் நிதி உதவி செய்ய விரும்பும் அமைப்புகள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன.  அதேநேரத்தில், பிற நாடுகளின் உதவியில்லாமல் அயர்லாந்தால் நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஒருவேளை உதவியே வேண்டாம் என்பதில் அயர்லாந்து உறுதியாக இருந்துவிட்டால், அடுத்த ஆண்டில் சில லட்சம் கோடி வரைக்கும் பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். வரி வருவாயை பலமடங்கு உயர்த்த வேண்டும். ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான அறிவிப்புகளை வரும் 7-ம் தேதி தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும். அந்த வகையில், அயர்லாந்து வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வரி விதிப்பு பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும்.

 ஏற்கெனவே, நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வோர் அதிகரித்திருக்கும் நிலையில், கடுமையான வரிவிதிப்பு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

 அயர்லாந்துடன் பிரச்னை முடிந்துவிடவில்லை. அடுத்ததாக போர்ச்சுகல் இருக்கிறது. அயர்லாந்தில் ஏற்பட்டிருக்கும் அதே நெருக்கடி அங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி நெருக்கடியில் சிக்கும் யூரோஸோனில் உள்ள நாடுகள் யூரோ நாணயத்தைக் கைவிட்டு சொந்த நாணயத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால் பிரச்னையிலிருந்து கொஞ்சம் மீள முடியும். அப்படி ஒவ்வொரு நாடும் யூரோவைத் துறந்து வெளியேறினால், டாலருக்கு எதிரான கரன்சி யுத்தத்தில் யூரோ தோற்றுப் போகும். ஏஞ்சலா மெர்கல் கூறுவதைப் போல, யூரோவுக்குத் தோல்வி என்றால் அது ஐரோப்பாவுக்கே தோல்விதான்!

..
..
.

Wednesday, November 17, 2010

யுவராஜ் சிங்குக்கு முடிவுரை!

கிரிக்கெட்டில் நிரந்தரப் புகழுடன் இருக்கும் பெருமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சச்சின் மாதிரி மிகச் சிலர்தான் அதைப் பெற முடிகிறது. இன்றைய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்துக்கு ஒரு காலத்தில் அடிதடி வரவேற்புக் கிடைத்திருக்கிறது. இன்று வர்ணணையில் வீரர்களை விமர்சனம் செய்யும் ரவி சாஸ்திரிக்கு செருப்பு மாலையே கிடைத்திருக்கிறது. கபில்தேவ் ஒரு தொடரில் தேவையேயில்லை என்று வெளியே வைக்கப்பட்டார். அதெல்லாம் அவர்களது அஸ்தமனத்தின் அறிகுறிகளாக அறியப்பட்டன.

இப்போது இந்த நிலைமை யுவராஜ் சிங்குக்கு வந்திருக்கிறது. 20 ஓவர் போட்டிகளின் முக்கியத்துவம் உணராத அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட்  முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தார். யாரை கேப்டனாக்கலாம் என்கிற கேள்வி. முறைப்படி அந்தப் பதவி யுவராஜ் சிங்குக்குதான் வந்திருக்க வேண்டும். ஆனால் தோனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு யுவராஜ் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவரது தந்தை மீடியாவிடம் கோபத்தைக் காட்டினார். ஒன்றும் பலனளிக்கவில்லை.

அன்றைக்கே தொடங்கிவிட்டது யுவராஜின் அஸ்தமனம். தலைமைப் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் அவர் தோனியுடன் பனிப்போரைத் தொடங்கினார். அதன் விளைவைத்தான் அவர் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் சென்னை அணியின் தோஸ்துகளான ரெய்னா, முரளி விஜயையும் டெஸ்ட் அணியில் இருக்கும்போது யுவராஜுக்கு இடம் மறுக்கப்பட்டது. அதற்கு முந்தைய இலங்கையுடனான தொடரில் யுவராஜ் மோசமாக ஒன்றும் ஆடவில்லை. அதையெல்லாம் கேட்டுப் பயனில்லை. சீனிவாசனும் தோனியும் யுவராஜைப் பழிவாங்கவில்லை என்று சொன்னால் அதை நம்ப முடியாது.

இதிலேயே யுவராஜ் நொறுங்கிப் போனார். ஏற்கெனவே, ஐபிஎல் அரசியல் படுத்தும்பாட்டுடன், தோனியுடனான பனிப்போரில் அவரது கடைசி அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. அணியின் ஏ கிரேடு மெம்பரான அவர் பி கிரேடுக்கு இறக்கப்பட்டிருக்கிறார். சம்பளம் பாதியாகியிருக்கிறது.

யுவராஜ் கொஞ்சம் மோசமான பார்மில் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் அற்புதமான ஆட்டக்காரர். அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இப்போது கிரிக்கெட்டை விட்டே ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது யாரென்பது புரிந்துகொள்ள முடியாததல்ல.
..

..
.

Wednesday, November 10, 2010

எம்ஜிஆர் ஹீரோ, நம்பியார் வில்லன், மோகன்ராஜை என்ன சொல்லலாம்?

மக்களின் மனத்திசையில் நம்மூர் ஊடகங்கள் செல்கின்றனவா அல்லது  ஊடகங்கள் காட்டும் வழியில் செல்ல மக்கள் முடிவெடுக்கிறார்களா என்கிற விவாதத்துக்கு இதுவரை முற்றுப்புள்ளி இல்லை. இரு குழந்தைகளை திட்டமிட்டுக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட கோவை மோகன்ராஜ் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதும் இந்த விவாதம்தான் நினைவுக்கு வந்தது. கொடூரமாக் கொலை செய்த மோகன்ராஜ் என்று பெரும்பாலான ஊடகங்கள் எழுதின; பேசின. வழக்கு விசாரணையே முடியவில்லை. என்ன நடந்தது, பின்னணி என்பன போன்ற கேள்விகள் விடையளிக்கப்படாமல் இருக்கின்றன. இந்த தருணத்தில் முக்கியக் குற்றவாளி கொல்லப்பட்டுவிட்டது ஏன் என்ற எந்த ஊடகமும்  கேள்வி எழுப்பவில்லை. 1500 பேர் பின்னூட்டங்களில் காவல்துறையைப் பாராட்டினார்கள் என்று ஒரு பத்திரிகை தன்முதுகையே சொறிந்து கொண்டது.

எத்தனையோ கல்லூரிகளில், பள்ளிகளில் அவ்வப்போது மர்ம மரணங்கள் நடக்கின்றன. பலசம்பவங்களில் சந்தேகத்தின் பேரில்கூட நமது காவல்துறை யாரையுமே கைது செய்ததில்லை. பத்திரிகை அலுவலக எரிப்பிலும் கல்லூரி வாகன எரிப்பிலும் யாருமே இப்படிக் கொல்லப்படவில்லை. அவையெல்லாம் ஹை புரொபைல் வன்முறைகள் போல நாசூக்காகக் கையாளப்பட்டன.

லட்சம் கோடி அலைக்கற்றை ஊழலை மறந்து கொண்டிருக்கிறோம். சேது சமுத்திரம் கப்பல் கணக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. காமன்வெல்த் ஊழல் சுபமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.  கேமரா முன்னால் நன்கொடை வாங்கிய கல்லூரிக்காரர்கள் அதிகாரத்தில் தொடர்கிறார்கள். ஆண்டர்சன் ஆட்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பல்லிளித்தோம். லட்சம் பேரைக் கொன்றவனுக்கு கார் கதவைத் திறந்து விடுகிறோம். தேடும் குற்றவாளியை உள்துறை அமைச்சர் கட்டித் தழுவுகிறார். இப்படி பெரும்பாலான நிகழ்வுகளில் நாமெல்லாம் வேடிக்கை பார்க்கும் கும்பலாகத்தான் இருந்து வந்திருக்கிறோம்.

இப்போது ஏன் திடீர் கொந்தளிப்பு?

கெட்டவர்கள் ஒழிக்கப்பட்டதால் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு நேர்ந்தால் இப்படி மனித உரிமை வியாக்கியானம் பேசுவீர்களா என்றும் கேட்கிறார்கள். இந்த அபவாதங்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

இன்னொரு குரூப் இருக்கிறது. இந்த என்கவுன்டரை மோடிக்கும் அமீத் ஷாவுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்கிறது.  அதாவது சொராபுதீன் மாதிரி ஆட்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது மட்டும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறதென்றால், மோகன்ராஜ் கொல்லப்பட்டதற்கும் சிபிஐ விசாரணை தேவையாம். ஓஹோ...

இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். ஊடகங்கள்.... செய்திகளில் கருத்துகளைத் திணித்து துப்பும் வேலையைச் செய்யும் ஊடகங்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பு. அரசு ஜோடிக்கும் பொம்மையை நிஜமென்று ஒத்து ஊதுவது ஊடகங்களே.  இந்த ஊடகங்களின் உதவியுடன் அரச சர்வாதிகாரத்துக்கு ஆதரவாக,  உணர்ச்சி வசப்பட்ட மக்கள் செல்வாக்கும் திரட்டப்பட்டிருக்கிறது.

பிராய்டு விதிப்படி நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாய் ஆக்கப்பட்டிருக்கிறோம். வழக்கம்போல் தேர்தல் வருகிறது.

...

...
..