Wednesday, February 17, 2010

மியான்மர் ராணுவ அரசின் வாக்கு யுத்தம்!

கடந்த 20 ஆண்டுகளை ராணுவ ஆட்சியின் கீழ் கழித்துவிட்ட மியான்மர் மக்களுக்கு இப்போதுதான் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

நாட்டை மக்களாட்சிப் பாதைக்குத் திருப்பும் வகையில் பொதுத் தேர்தலை நடத்தப் போவதாக சர்வாதிகாரி தான் சுவே அறிவித்திருக்கிறார். இதனால் அதிகாரப்பூர்வமாகத் தேதி குறிக்கப்படும் முன்பே, நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

வறுமையையும் அடக்குமுறையையும் மட்டுமே பார்த்துப் பழகிப் போயிருக்கும் மியான்மர் மக்களுக்குச் சாதகமாக ஏதாவது நடக்குமா என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக வல்லரசு நாடுகளைப் பகைத்துக் கொண்டு, சர்வாதிகார ஆட்சியை நடத்திவந்த மியான்மர் ராணுவத்துக்குத் திடீரென எங்கிருந்து இந்த ஞானோதயம் வந்தது என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது. அனைத்து ஊடகங்களும் சர்வாதிகார அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மியான்மரில் என்ன நடக்கிறது என்பது பற்றி உலகத்துக்குத் தெளிவாகத் தெரியாது. இருப்பினும், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் ஊகங்களுக்கு எட்டாதவையல்ல.

கடந்த 20 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் ஆசியாவிலேயே ஏழ்மையான, வலுவற்ற அரசியல் சூழல் நிலவும் நாடு என்கிற பெயர்தான் மியான்மருக்குக் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளால், பொருளாதாரம் நொறுங்கிக் கிடக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் நடப்பதைப் போல, உள்ளூர் அதிகாரிகளெல்லாம் குறுநில மன்னர்களாக மாறி வணிகர்களையும், தொழிலாளர்களையும் நசுக்குகின்றனர். மற்றபடி ராணுவம் ஊருக்குள் வந்தால் என்னென்ன அட்டகாசங்கள் நடக்கும் என்பது பல்வேறு நாடுகளின் அனுபவங்களில் தெரிந்ததுதான்.

இதுபோன்ற நெருக்கடிகள் ராணுவத்தினரையும் பாதித்திருப்பதுதான், தேர்தல் அறிவிப்புக்கு உடனடிக் காரணம் என்று தெரிகிறது. குறைந்த ஊதியம், அதிக வேலைப்பளு, சலுகைகள் வெட்டு போன்றவற்றால் அதிருப்தியடைந்திருக்கும் ராணுவ வீரர்கள், ஆங்காங்கே கலகத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்தக் கலகங்களால் அரசுக்கு நேரக்கூடிய ஆபத்தை ஒத்திபோடுவதற்காகவே தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

முக்கியமான மற்றொரு அம்சமும் இந்த விவகாரத்தில் அடங்கியிருக்கிறது. மக்கள் மத்தியில் மட்டுமன்றி, உலக நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஆங்-சான் சூ கி 14 ஆண்டுகள் வீட்டுக் காவலை நிறைவு செய்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் இவரை அவ்வப்போது வீட்டுக்காவலில் வைப்பதையே முதல் கடமையாகச் செய்திருக்கிறது ராணுவ அரசு. கடந்த சில ஆண்டுகளாகவே, இவரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப் பெற்றிருப்பதால், அரசுக்கு உச்சநிலைச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலை நடத்துவதால் இந்தச் சூழலை மாற்றிவிட முடியும் என ராணுவ அரசு கருதுகிறது. இதற்கு முன்னோட்டமாகவே சூ கி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை வீட்டுக் காவலில் இருந்து அரசு விடுவித்திருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு மூலம் உடனடியாக ராணுவ நெருக்கடி தீரும் என்பது ஒருபுறம் இருக்க, பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்துக் கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பு ராணுவ அரசிடம் இருக்கக்கூடும். இந்த அறிவிப்பால் கவரப்பட்டிருக்கும் மேற்கத்திய நாடுகள் இப்போதைக்கு பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ளாவிட்டாலும், நிதியுதவிகளை அதிகரித்து மியான்மரைக் காப்பாற்றும் என்று நம்பப்படுகிறது. அண்மையில் நடந்த ஆசியான் மாநாட்டில்கூட இதற்கான கோரிக்கையை மியான்மர் வைத்திருக்கிறது.

உண்மையிலேயே மியான்மரில் மக்களாட்சியைக் கொண்டுவருவதுதான் ராணுவ அரசின் நோக்கமா அல்லது இப்போதைய நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறதா என்கிற பொதுவான சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது. ஒற்றைக் குதிரை ஓடும் பந்தயம் போலத் தேர்தலை நடத்தி, இப்போதைய ராணுவ அரசையே ஜனநாயக அரசாக உருமாற்றிக் கொள்ளவும் ஆட்சியாளர்கள் முயற்சிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தேர்தலில் மோசடிகளை அரங்கேற்றுவதற்காக, அரசுக்கு ஆதரவான வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என தொழிலதிபர்களை ராணுவ அரசு மிரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தலுக்கான சட்டம் எதுவும் இப்போது மியான்மரில் இல்லை. கடைசி நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிட முடியாதபடி விதிமுறைகளை உருவாக்குவதற்கு ராணுவ அரசு திட்டமிட்டிருக்கக்கூடும் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

ஆனால் மோசடி நடக்கும் என்பதால் மட்டுமே, மியான்மரில் தேர்தல் நடத்தப் போவதாக ராணுவ அரசு அறிவித்திருப்பதை வரவேற்காமல் இருக்க முடியாது. தேர்தல் மோசடிகள், பெரிய ஜனநாயக நாடுகளில்கூட தவிர்க்க முடியாதவையாகத்தான் இருந்து வருகின்றன.

இத்தனை ஆண்டுகளில் கொஞ்சம்கூட நெகிழ்ந்து கொடுக்காத ராணுவ அரசு, இந்த அளவுக்கு இறங்கி வந்திருப்பதே ஆக்கப்பூர்வமான விஷயம்தான்.

இந்த 20 ஆண்டுகளில் நாடு ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கண்டிருக்கிறது. ராணுவ ஆட்சியின் அடக்குமுறையால் மக்கள் வெதும்பிப் போயிருக்கிறார்கள். உண்மையான தேர்தல் நடந்தால், ராணுவ அரசு நிச்சயமாக வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தது.  ஆனால், இந்த ராணுவம் நடத்தப்போவது தேர்தலா அல்லது தேர்தல் என்கிற பெயரில் நடத்தப் போகும் யுத்தமா என்பதுதான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வி.

..
.

No comments: