Sunday, February 14, 2010

புதிய பனிப்போர்!

புதியதோர் அரசியல் ஒழுங்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நவீன உலகில்,​​ ​ அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான முறுக்கல் சாதாரணமாகத் தளர்ந்துவிடக் கூடியதாகத் தெரியவில்லை.​ அண்மையில் ஊடகம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் சீன மக்கள் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தார்கள்.​ இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் மூளும் அபாயம் இருப்பதை நிராகரித்துவிட முடியாது என பெரும்பான்மையான மக்கள் தெரிவித்திருந்தனர்.​ அவர்களது எண்ணம் முன்பைவிட இப்போது பொருத்தமானதாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கு நிகரான வல்லமை கொண்டிருந்த சோவியத் யூனியன் சரிந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தனது வேகமான பொருளாதார வளர்ச்சியால் இட்டு நிரப்பியிருக்கிறது சீனா.​ இந்த வளர்ச்சியே அமெரிக்காவுடனான பகைக்கும் அடிப்படை.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு எந்தக் காலத்திலும் மெச்சத்தக்கதாக இருந்ததில்லை.​ தைவான் அங்கீகாரம்,​​ டாலருக்கு நிகராக செயற்கையான மதிப்பு,​​ திபெத் விவகாரம்,​​ பருவநிலை மாற்றம்,​​ அணு ஆயுதப் பரவல் போன்ற பல விவகாரங்களில் இரு நாடுகளும் உரசிக் கொண்டிருக்கின்றன.​ இந்த உரசல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்து இப்போது உச்சத்தை எட்டியிருக்கின்றன.

திபெத்,​​ ஹாங்காங்,​​ மக்காவோ போல தைவானும் தங்கள் நாட்டின் அங்கம் என்கிறது சீனா.​ பிரிந்துபோயிருக்கும் பகுதியாக அதைக் கருதலாமேயொழிய,​​ தனி நாடாக அங்கீகரிக்கக் கூடாது என உலக நாடுகளை சீனா மிரட்டி வைத்திருக்கிறது.​ தைவானுக்குத் தனிநாட்டுக்குரிய அனைத்து மரியாதைகளையும் அளித்து வந்த அமெரிக்கா,​​ இப்போது ஒருபடி மேலே போய் பெரிய அளவிலான ஆயுத விற்பனைக்கு ஆயத்தமாகியிருக்கிறது.​ அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு விட்டது.

6.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,​​ அதாவது கிட்டத்தட்ட ரூ.​ 30 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஆயுதக் கொள்முதலில் இதுவரை இல்லாத அளவுக்கு நவீன ஆயுதங்கள் தைவானுக்குக் கிடைக்க இருக்கிறது.​ நவீன ஹெலிகாப்டர்கள்,​​ ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள்,​​ சுரங்கங்களை அழிக்கும் விமானங்கள் போன்றவை இதில் அடக்கம்.​ பெரிய அளவில் அண்டைநாடுகளின் அச்சுறுத்தல் இல்லாதபோது,​​ இத்தனை பிரம்மாண்டமான ஆயுதங்களை தைவான் வாங்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் சீனாவின் கேள்வி.​ சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

இந்த ஆயுத ஒப்பந்தத்துக்குப் பதிலடி தரும் வகையில்,​​ ஈரான்,​​ வடகொரியா,​​ சிரியா,​​ கியூபா,​​ வெனிசூலா போன்ற நாடுகளுக்கு ஆயுதங்களைச் சப்ளை செய்து அமெரிக்காவுக்கு நெருக்கடி தர முடியும் என சீனா எச்சரித்திருக்கிறது.​ இந்த நாடுகளுக்கு சீனா ஆயுதச் சப்ளை செய்கிறதோ இல்லையோ,​​ தார்மிக ஆதரவை ஏற்கெனவே வழங்கிவிட்டது என்பதுதான் உண்மை.

வருங்காலத்தில் உலகம் இரு சம அணிகளாகப் பிளவுபடும் சூழல் ஏற்படும்போது இந்த நாடுகள் சீனாவுக்குப் பின்னால் திரளக்கூடும் என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது.​ அமெரிக்காவில் அதிக அளவு அன்னியச் செலாவணியைக் குவித்து வைத்திருக்கும் நாடு சீனா.​ அமெரிக்க நிதித்துறையின் கடன் பத்திரங்களில் சீனா அதிகமாக முதலீடு செய்திருக்கிறது.​ ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவை மிரட்ட இந்தக் கடன் பத்திரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும்.​ இது இரு தரப்புக்கும் பாதகமான அம்சம் என்பதால்,​​ வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே சீனா இந்த ஆயுதத்தைக் கையிலெடுக்கும்.

சீன -​ அமெரிக்க உறவு சூடாகியிருப்பதற்கு இன்னொரு காரணம் சீனாவின் இண்டர்நெட் தணிக்கை.​ தனது கொள்கைக்கு ஏற்றபடி இணையதளங்களைத் தணிக்கை செய்வதுடன்,​​ அரசுக்கு எதிரானவர்களின் இணையக் கணக்குகளைத் திருடுவதாகவும் புகார் எழுந்தது.​ சீனாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அண்மையில் அறிவித்ததற்கும் இதுதான் பின்னணி.​ கறைபட்டுப் போயிருந்த அமெரிக்காவுடனான சீனாவின் உறவு,​​ இதனால் மேலும் மோசமானது.​ இருதரப்பும் மோசமான சொற்களைப் பரிமாறிக்கொள்ள நேரிட்டது.

இப்போதைய நிலையைப் பார்க்கும்போது,​​ இரு நாடுகளுக்கு இடையேயான பகையைத் தாண்டி ஒபாமா -​ ஹு ஜிண்டாவ் இடையே உருவாகியிருக்கும் தனிப்பட்ட நட்பினால்கூட இந்த விஷயத்தில் நல்படியாக ஏதும் நடக்காது என்றே தெரிகிறது.​ சீனாவின் வளர்ச்சியால் பொறாமை கொண்டதாலோ என்னவோ அமெரிக்காவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.​ ​

சீனாவைப் பொறுத்தவரை பிரிவினைவாதியாகக் கருதப்படும் திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவை இன்னும் சிலநாள்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க இருக்கிறார்.​ திபெத் விடுதலைப் போராட்டங்களுக்கு அமெரிக்கா அளிக்கும் அங்கீகாரமாகவே இது கவனிக்கப்படுகிறது.​ ஏற்கெனவே நாள்குறிக்கப்பட்ட இந்தச் சந்திப்பு,​​ தள்ளிப்போடப்பட்டு வந்தது.​ இப்போது இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் பதற்றம் அதிகமாகியிருக்கிறது.​ எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதுதான் இது.

பதற்றத்தின் காரணமாக முக்கியமான வர்த்தகப் பேச்சுகளையும்,​​ ராணுவ ரீதியான பேச்சுகளையும் சீனா முடக்கியிருக்கிறது.​ புதிய போருக்கான அறிகுறிதான் இது.​ ஆயினும் படைகளை மோதவிட்டு,​​ ​ ஆயுத பலத்தைக் காட்டிக் கொள்ளும் வழக்கமான போராக இது இருக்கும் என்று தோன்றவில்லை.

..
.

No comments: