கிறிஸ் துமஸ் நாளன்று அமெரிக்க விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. குண்டு வைத்தாகக் கருதப்படும் இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், ஏமனில் இருந்துதான் தனக்கு வெடிபொருள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். உலகை உலுக்கிய இந்தச் சதியில் தனக்கு இருக்கும் தொடர்பை அல்-காய்தா இயக்கமும் ஒப்புக்கொண்டிருப்பதால் மேற்கத்திய நாடுகளின் பார்வை இப்போது ஏமன் மீது திரும்பியிருக்கிறது.
அரபு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையான ஏமன், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. உள்கட்டமைப்பும், வளங்களும் தேவைக்கேற்ப இல்லை. ஆப்பிரிக்காவிலுள்ள பின்தங்கிய நாடுகளைப் போன்றே வறுமையால் வலுவிழந்து போயிருக்கிறது ஏமன். அரேபிய தீபகற்பத்தில் பொதுவாகக் கிடைக்கும் பெட்ரோலிய வளமும், ஏமனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கத்திலிருக்கும் பொருளாதார வல்லரசான சவூதி அரேபியாவைப் பகைத்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் வேறு.
இ தைத்தவிர, 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் மக்கள்தொகை, 40 சதவீத வேலைவாய்ப்பின்மை, தனிநபர் வருமானத்தில் 175-வது இடம், 50 சதவீதக் கல்வியறிவு என தோல்வி அடைந்து, அண்டைநாடான சோமாலியா போல் ஆவதற்கான எல்லாத் தகுதிகளும் ஏமனுக்கு இருக்கின்றன. ஆனாலும் தோல்வி அடைந்த நாடுகளின் பட்டியலில் ஏமன் இன்னும் சேர்ந்துவிடவில்லை.
இராக்கில் இருப்பதைப் போன்ற மதப் பிரிவுகள் ஏமனிலும் இருக்கின்றன. கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்கு இருக்கும் இந்த இரு பிரிவுகளுக்கு இடையே மிக அண்மையில் கூட கடுமையான மோதல் நடந்திருக்கிறது. இராக்கைப் போன்று இரு பிரிவுகளுக்கும் மிக வலுவான பிளவு இல்லை என்றாலும், நாட்டின் சமநிலைக்கு இந்தப் பிளவு பெரிய அச்சுறுத்தல்தான். சவூதி அரேபியாவை ஒட்டியுள்ள பகுதிகளில் ஷியா பிரிவினர் நடத்தி வரும் கலகமும் ஏமனுக்குப் பெரிய தலைவலியாகத் தொடர்கிறது.
ஆப்கா னிஸ்தானுடனும், பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியுடனும் ஏமனை ஒப்பிட முடியும். அங்கெல்லாம் எப்படி மத்திய அரசின் ஆட்சிக்கு வாய்ப்பில்லாமல் உள்ளூர் மதத் தலைவர்களின் கெடுபிடி அரசியல் நடக்கிறதோ, அதைப் போன்றதொரு நிலைதான் ஏமனின் பெரும்பான்மையான பகுதிகளில் நடக்கிறது.
அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்களது நடவடிக்கைகளை ஏமனில் வலுப்படுத்தியிருப்பதற்கும் இதுதான் முக்கியக் காரணம்.
பின் தங்கிய நாடுகளுக்கேயுரிய நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழலும் ஏமனில் மலிந்திருக்கின்றன. இதற்குச் சிறந்த உதாரணம் டீசல் ஊழல். பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் ஏமன், டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. மின் தயாரிப்புக்கு டீசலை மட்டுமே நம்பியிருப்பதால், இந்த இறக்குமதியைத் தவிர்க்கவும் வழியில்லை.
இதனால், உலகச் சந்தையில் அதிக விலைக்கு டீசலை வாங்கும் அரசு, மானிய விலையில் மின் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், சில தனியாருக்கும் விற்கிறது. இதில் நுழையும் மூத்த அதிகாரிகள், மானிய விலையில் கிடைக்கும் டீசலை, கிட்டத்தட்ட உலகச் சந்தை விலைக்கே வெளிநாடுகளுக்கு கடத்தி விற்றுக் கொள்ளை அடிக்கின்றனர். இப்படிப் பல நிலைகளிலும் ஏமன் சீர்திருத்தப்பட வேண்டியிருக்கிறது.
கிறிஸ்துமஸ் நாள் சம்பவத்துக்குப் பிறகு, பயங்கரவாதத்தின் இருப்பிடமாக மாறுவதற்கு வாய்ப்புள்ள இடமாக இப்போது உலக நாடுகள் ஏமனைக் கருதத் தொடங்கியிருக்கின்றன. இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குள் மேற்கத்தியப் படைகள் நுழையும்போது ஏற்பட்டிருந்த நிலையே இப்போதும் இருப்பதால், ஏமன் கலங்கிப் போயிருக்கிறது. தனது ராணுவத்தைக் கொண்டு பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும் ஆப்கனுக்கும் இராக்குக்கும் நேர்ந்தது, ஏமனை எட்டுவதற்கான அச்சுறுத்தல் இப்போது நீங்கிவிடவில்லை.
ஆப்கன் விவகாரம் தொடர்பாக லண்டனில் நடந்த மேற்கத்திய நாடுகள் நடத்திய மாநாட்டின்போது, ஏமனுக்கென்றும் தனியாக ஒரு சிறிய மாநாடு நடத்தப்பட்டதே இதற்கு சாட்சி.
ஏமனின் கலக்கத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. 1991-ம் ஆண்டில் சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்தபோது, அவருக்கு ஆதரவாக இருந்த ஒரே அரபு நாடு ஏமன்தான். இதனால், மற்ற வளைகுடா நாடுகளில் இருந்த ஏமனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர்.
சதாம் ஹுசைன் இருக்கும்வரையில் இதுபோன்ற சிக்கல்களையெல்லாம் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இருந்த ஏமனுக்கு, இராக்கின் தோல்வி பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.
சதாம் ஹுசைனுக்கு ஆதரவளித்தது, மற்ற அரபுநாடுகளுடன் பகை, சட்ட ஒழுங்கற்ற சோமாலியாவுடன் நிபந்தனையற்ற நட்பு, பொருளாதாரச் சீரழிவு, உள்நாட்டுக் கசப்பு போன்றவற்றுடன் இப்போது அல்-காய்தாவின் இருப்பிடமென்பதும் உறுதி செய்யப்பட்டுவிட்டதால், ஏமனுக்கு ஆபத்து அதிகமாகியிருக்கிறது.
மக்களைக் காக்க வேண்டுமென்றால், மேற்கத்திய விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்வதைத் தவிர ஏமன் ஆட்சியாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதுதான் வேதனை.
Wednesday, February 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment