Tuesday, December 22, 2009

எனது நண்பர்கள்-4: சமூக எல்லைகளைக் கடந்தவர்- அ. செல்வதரன்

நான் பள்ளியில் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே புத்தகங்களை எழுதி வெளியிட்டவர் செல்வதரன். நானும் எனது ஊர்க்காரர்கள் பலரும் அவரது உயரத்தைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறோம். சிற்றிதழ் நடத்தியது, மாவட்ட ஆட்சியரை அழைத்து விழா நடத்தியது என இருபது வயதுக்குள்ளாகவே, பெரிய மனிதருக்குரிய செல்வாக்கு அவருக்கு சுயமாகவே கிடைத்தது.

செயல்களை உரிய நேரத்தில் முடிப்பதில் அவர் காட்டும் அக்கறையும், தோல்விகளையும் இழப்புகளையும் பக்குவமாகக் கையாளும் அணுகுமுறையும் வியப்புக்குரியவை. எல்லா விஷயங்களிலும் நூறு சதவீத நேர்மை இவரிடம் உண்டு. உறவு முறிந்தாலும் கோடிகள் இழந்தாலும் நேர்மையைக் கைக்கொண்டிருப்பவர்.  அநீதிகளை நோக்கி இப்பவும் அக்கினிப் பார்வை பார்க்கக் கூடியவர். முகத்துக் நேரே இவர் கூறும் விமர்சனங்களால் போலியானவர்கள் பொசுங்கிப் போவார்கள். அந்த உக்கிரத்தையும் தாண்டி இவருக்கு மிகப் பெரிய நட்பு வட்டம் உண்டு. உள்வட்டத்தில் நான் இருப்பது எனது இப்போதைய வாழ்நாள் சாதனைகளுள் ஒன்று.

திருமணத்தைக்கூட இலக்கியச் சங்கமமாக நடத்திய இவருக்கு, தமிழால் எந்த வகையான பொருளாதார வலுவும் கிடைக்கவில்லை. அவர் அதையெல்லாம் எதிர்பார்த்ததாகவும் தெரியவில்லை. புத்தகங்களையும் வேறு வகையான படைப்புகளையும் உருவாக்குவதற்காக அவர் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கும்போதெல்லாம், நான் நிஜமாகவே வேதனைப்படுகிறேன். இவருடன் ஒப்பிடுகையில் ஊதியத்துக்காக எழுத்துப் பணியில் இருக்கும் எனக்கு கடும் வலியுடன் அவமான உணர்ச்சி மிகும்.

ஜேசீஸ் என்னும் இளைஞர் அமைப்பில் நான் தலைவராக இருந்த காலத்தில், அந்த அமைப்பு  சார்பில் லெமனா என்கிற பெயரில் தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தினோம். இந்தப் புத்தகம் வெளிவருவதற்காக விடிய விடிய உழைத்தவர் செல்வதரன். இத்தனைக்கும் அந்தப் புத்தகத்தில் அவர் எந்தப் பொறுப்பிலும் இருக்கவில்லை. நானும் இன்னொருவரும்தான் முக்கியப் பொறுப்பிலிருந்தோம். அப்போதெல்லாம் இந்த இதழ் தயாரிப்பு பணியில் அசட்டையாகத்தான் நான் இருந்தேன். இன்றைக்கு அந்த இதழை எடுத்துப் படிக்கும்போதுதான் எவ்வளவு பெரிய இலக்கியப் பணியைத்  தவற விட்டிருக்கிறேன் எனத் தெரிகிறது.

அவருடைய எல்லாப் பண்புகளையும் கற்றுக்கொள்ள முயற்சித்து, இன்று வரைக்கும் எனக்குத் தோல்விதான்.

அடுத்தது: எளிமையிலும்  எளிமை - ம. ரெங்கநாதன்


முந்தையவை:

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்

 எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்

எனது நண்பர்கள் - 3: ஜெபஸ்டின் காசிராஜன் - எ கம்ப்ளீட் மேன்


1 comment:

ரோஸ்விக் said...

உங்கள் நண்பர்களில் இத்தனை சிறந்த மனிதர்கள். நல்ல விஷயம் தான்.

இப்படியொரு நட்பு வட்டம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் நண்பர்கள் யாரென நீங்கள் கூறியதிலிருந்து... நீங்கள் எப்பேர்ப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ள முடிறது. மகிழ்ச்சி.