Wednesday, December 16, 2009

காலம் கடந்து உனக்கொரு காதல் கவிதை!





நீ பூக்களை விற்றுக் கொண்டிருந்தாய்
நான் மீனுக்கு விலை பேசினேன்.

பறக்க வேண்டிய காலம் வந்த பின்னும்
முட்டைச் சிறைக்குள்
ஒளிந்திருந்த என்னை
பூக்கொடுத்து அழைத்தாய்

என் குரல்வளைக் கொப்புளங்கள் வெடித்து
தனித்தனித் தீவுகளாய்
நான் பேசிய வாக்கியங்களை
உன் பூக்களால் கவிதைகளாக்கினாய்.

இதயத்தில் முட்களை
நிரப்பியிருந்த எனக்கு
பூக்களின் மொழியைக்
கற்றுக்கொடுத்தாய்

நான் நடக்க வேண்டும் என்பதற்காகவே
தெருவெங்கும் பூக்களைப் பரப்பினாய்.

அப்போதெல்லாம் பூக்களின் மணம்
எனக்குத் தெரியவில்லை.
கூடையையும் நான் தொட்டதில்லை.

முடிவு சமீபித்த வேளையில்தான்
நான் நுகரவே கற்றுக் கொண்டேன்.

வாய்திறந்து பூக்களை யாசிக்கிறேன்
நீ கூடையை யாருக்கோ விற்றுவிட்டு
பாலைவனத்தின் வெப்பநிலையைப் பேசுகிறாய்.


..

No comments: