Tuesday, December 01, 2009

திருந்தட்டும் பன்னாட்டு நிறுவனங்கள்!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் ஒன்றுதான் குறி. தங்களுக்கென்று தனியாக ஒரு சட்டத்தையும் நியாயத்தையும் வகுத்துக்கொண்டு, வளரும் நாடுகளை முடிந்த அளவுக்குச் சுரண்டுவார்கள். சுற்றுச்சூழலோ மனித உரிமைகளோ அவர்களுக்கு முக்கியமேயில்லை. அரசியல்வாதிகளையும் அரசையும் சரிக்கட்டிவிட்டு, எந்த இடத்திலும் எதை வேண்டுமானாலும் தயாரிப்பார்கள்.

வெளியேற்றப்படும் மக்களுக்கு நஷ்டஈடு என்ற பெயரில் சொற்பமாகத் தருவார்கள். அரசாங்கமே முன்னின்று நடத்தும் இந்தச் செயல்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது. பயங்கரவாதமும் வன்முறையும் எந்த வகையிலும் நியாயமே இல்லை என்கிற வாதம் இந்தச் சூழலில்தான் எடுபடாமல் போகிறது.

வெளிநாட்டினரைக் கடத்திப்போய் பணம் கேட்டு மிரட்டுவதுதான் நைஜீரியர்களுக்குத் தொழில் என்பதுபோல் இப்போது சித்திரிக்கப்படுகிறது. உண்மையில் அந்நியர் ஆதிக்கத்தின் கீழும் அதற்குப் பிறகும் நைஜீரியா வளம் கொழிக்கும் நாடாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் யாரையும் கடத்த வேண்டிய அவசியம் நைஜீரியர்களுக்கு இருந்ததில்லை. அந்த நாட்டில் எண்ணெய் வளங்கள் இருக்கும் என்பது கண்டறியப்படாத காலத்திலேயே மக்கள் வசதியாக வாழ்ந்தனர். 1958-ல் எண்ணெயைத் தோண்டுகிறோம் என்று கூறிக்கொண்டு ஷெல் நிறுவனம் நைஜர் டெல்டா பகுதிக்குள் நுழைந்த பிறகுதான் பிரச்னை தொடங்கியது.

விவசாயத்துக்குத் தக்க பருவநிலையும், நீராதாரங்களும் நிறைந்திருந்த நிலப் பகுதிகளை ஷெல் ஆக்கிரமித்துக் கொண்டது. எண்ணெயைத் தோண்டி எடுப்பதற்காக போடப்பட்ட பெரிய ஆழ்துளைகள், நிலத்தடியில் நன்னீரையும் உப்புநீரையும் கலக்கச் செய்ததால் குடிநீருக்குக்கூட பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு வழியாக விவசாயம் அழிந்தது. எண்ணெய் வளமே பிரதானமானது. சரி, எண்ணெய் நிறுவனத்திலாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றால், உள்ளூர் மக்களைச் சேர்ப்பதில்லை என்பதில் ஷெல் பிடிவாதமாக இருந்தது. எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜனநாயகம் இருந்தாலும் ராணுவ ஆட்சி நடந்தாலும் அரசை மட்டும் "கவனித்தால்' போதும் என்கிற உத்தியை ஷெல் பயன்படுத்தி வந்தது.

1990-களில் பிரச்னை உச்சகட்டத்தை அடைந்தது. அமைதி வழியில் போராடுவதற்காக தங்களுக்கென்று வாழ்வாதார இயக்கம் என்கிற ஓர் அமைப்பை டெல்டா பகுதியில் வசிக்கும் ஓகோனி இன மக்கள் ஏற்படுத்தினர். இந்த இயக்கத்தின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறை கையாளப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் எண்ணெய் நிறுவனத்துக்காக 30 கிராமங்களை நைஜீரிய ராணுவம் தரைமட்டமாக்கியது. வன்முறையைத் தூண்டியதாக 9 ஓகோனி இனத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களுள் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் கென் சரோ-விவாவும் ஒருவர். அரசின் விசாரணையில் அவர்கள் ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சரோ சொன்னார், "ஷெல் நிறுவனம் ஓகோனி மக்களுக்குச் செய்த கொடுமைகளும், மோசடிகளும் ஒருநாள் உலகத்துக்குத் தெரியவரும்'. ஒரு சமாதான இயக்கம் வன்முறைப் பாதைக்குத் திரும்பிய கதை இது.

போராட்டம் இரண்டு வழியாகப் பிரிந்தது. ஒன்று ஜனநாயக வழி. மற்றொன்று நக்சல் பாதை. பிற போராட்டங்களைப் போல, இரண்டு பிரிவினரும் சண்டையிட்டுக் கொள்வதில்லை. போராட்டத்துக்கு ஜனநாயக வழியில் நிதி திரட்டப்படுவதைவிட, ஆயுதம் தாங்கியவர்கள் மூலம் அதிகமான பணம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு ஜனநாயக வழியிலான மிகப்பெரிய வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. 9 ஓகோனிய தலைவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓகோனியர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. வழக்கை சுமுகமாக முடித்துக் கொள்வதற்காக கொல்லப்பட்ட தலைவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 75 கோடி தர ஷெல் நிறுவனம் முன் வந்திருக்கிறது. இதன் மூலம் 1990-களில் ராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து சதி செய்தது, சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, பிரச்னையை அடக்கி வாசிப்பதற்காக முக்கிய ஊடகங்களை விலைக்கு வாங்கியது போன்ற ஷெல் நிறுவனத்தின் மோசடிகள் அம்பலமாகியிருக்கின்றன.

ஓகோனியர்களின் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி ஒட்டுமொத்தமாக டெல்டாபகுதி நைஜீரியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. எனினும் இந்த இழப்பீடு மட்டுமே நைஜீரிய கடத்தல்களையும் வன்முறைப் போராட்டங்களையும் நிறுத்திவிடப் போவதில்லை. ஓகோனியர்களைப் போல செவ்ரான் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இலேஜா இன மக்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதனால், ஜனநாயக வழியில் போராடுவது மட்டுமே தீர்வாகாது என்றே நைஜீரியர்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எண்ணெய் வருவாயில் ஒரு பகுதியை டெல்டா பகுதியை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது, எண்ணெய் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு இழப்பீடு தருவது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ராணுவ ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலர்ந்த பிறகும்கூட வன்முறைகளும் கடத்தல்களும் குழாய் உடைப்புகளும் முடிவுக்கு வராததற்குஇவைதான் காரணங்கள். ஓகோனி பிரசாரப் பாடல் ஒன்றில் சொல்லப்பட்டது போல, "நம்மை இனியும் உலகம் ஏமாற்ற முடியாது' என்பதை நைஜீரியர்கள் உணர்ந்து விட்டார்கள். புரிந்துகொள்ள வேண்டியது பன்னாட்டு நிறுவனங்களும் அரசும்தான்.

1 comment:

Nalliah said...

உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது. இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை.

இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

உலகம்பூராகவும், அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட சமூகம் உருவாக்கப்படுகின்றது, மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

எண்பதுகளில் மேற்குலகமும், சோவித்யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத்யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத்யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, வேறு பல நாடுகளுக்கும் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாது.

- நல்லையா தயாபரன்