Tuesday, December 01, 2009

இலங்கைப் போரும் ஐஎம்எஃப் நிதியும்

இலங்கையில் ஆயுதச் சப்தம் ஓய்ந்து போனதை கொழும்பு பங்குச் சந்தை கொண்டாடியது. பங்குகளின் விலைகள் அசுர வேகத்தில் உயர்ந்தன. டாலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வலுவடைந்தது. இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது. அது சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) சுமார் ரூ. 10,000 கோடி உதவி. அது மட்டும் கிடைத்துவிட்டால், போர் முடிவுக்கு வந்ததன் முழுப் பலனையும் இலங்கை அரசு அடைந்துவிடும்.
  ஆனால், இந்த நிதியை இலங்கை பெறுவதில் சிலர் தடையாக இருக்கின்றனர். அதில் ஒருவர் ராபர்ட் பிளேக். இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக இருந்த இவரை, கடந்த ஏப்ரல் கடைசியில் தெற்காசிய நாடுகளுக்கான விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலராக ஒபாமா நியமித்தார். பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக, இலங்கைக்கு எந்தவிதமான நிதியுதவியும் இப்போதைக்குத் தரக்கூடாது என ஹிலாரிக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையை படித்த ஹிலாரி, "இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதியுதவி வழங்குவதற்கான சூழல் இப்போது இல்லை' என கடந்த 14-ம் தேதி அறிவித்தார். பெரும் பங்காளியான அமெரிக்காவின் அனுமதியில்லாமல் ஐஎம்எஃப் யாருக்கும் நிதியுதவி செய்ய முடியாது.
  இலங்கையில் போர் நடப்பதையோ அல்லது முடிவுக்கு வருவதையோ அமெரிக்கா கொஞ்சம் கூட சட்டைசெய்யவே இல்லை என்பதுதான் உண்மை. புவியியில் அமைவிட ரீதியாக பெரிய முக்கியத்துவமும் இல்லாததும், போர் வேறு எந்த நாட்டுக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுமே இதற்குக் காரணம். அதனால், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டதை இலங்கையில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது. உலகம் எங்கும் இருக்கும் தமிழ் ஆதரவாளர்களும், பிளேக் போன்றோரும்தான் இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதி கிடைப்பதில் தடை ஏற்பட்டதற்குக் காரணம். இந்தப் பட்டியலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடமுண்டு.
  ஹிலாரியின் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாளில் ஐஎம்எஃப் இயக்குநர்களுக்கு மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வராத வரையில் அந்த நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தது. போரால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கான திட்டங்களை முன்வைப்பதுடன், சர்வதேச ஊடகங்களையும் தொண்டு நிறுவனங்களையும் போர்ப் பகுதிக்குள் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
  போர் உச்சகட்டத்தை எட்டியதாக அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது. இலங்கை போர் நடத்தியே மொத்தப் பணமும் கரைந்துபோன சூழலில், ஐஎம்எஃப் நிதியுதவியைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பணமும் கிடைக்கவில்லை என்பது, அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
  அந்த நேரத்தில், நார்வேக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அந்நாட்டு, வெளியுறவுத் துறை அமைச்சரும் இலங்கை அமைதிப் பேச்சுகளில் ஈடுபட்டவருமான எரிக் சோலேம் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். பத்திரிகை சுதந்திரம், போர் நிறுத்தம் பற்றி அவர் கூறிய கருத்துகள் இலங்கை அரசை எரிச்சலடைய வைத்தன. ராஜபட்ச மீது போர்க்குற்றம் சுமத்தவும் அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
  இப்படியொரு இக்கட்டான சூழலில்தான் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக ராஜபட்ச அறிவித்தார். பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் அனைத்துத் தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்தது.
  இலங்கை அரசு வெற்றிச் செய்தியை அறிவித்த ஓரிரு நாள்களிலேயே அதற்கு பெரியதொரு அதிர்ச்சி காத்திருந்தது. கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத, முதலீட்டுக்கு லாயக்கில்லாத நாடுகளுக்கான பட்டியயில் இலங்கை இருப்பதாக எஸ் அண்ட் பி என்ற சர்வதேச கடன்களைப் பொருத்து நாடுகளுக்குத் தரவரிசை வழங்கும் நிறுவனம் அறிவித்தது. நாட்டின் மொத்த வருவாயில் 81% கடன்கள் மூலம் திரட்டப்படுவதையும், அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்துவிட்டதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. வரிகள் மூலம் சொற்ப வருமானமே வருவதாலும், ஏற்றுமதி குறைந்துவிட்டதாலும், இந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமார் ரூ. 5,000 கோடி தவணையைக்கூட இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
  ஐஎம்எஃப் நிதியுதவி உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்றால், இலங்கை அரசு திவால் ஆகும் நிலையில் இருப்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பிளேக், ஹிலாரி போன்றோரை சாடியது போல, எஸ் அண்ட் பி நிறுவனத்தையும் சிங்கள ஊடகங்கள் திட்டியிருக்கின்றன. ஆனால், ஐஎம்ஃப் கடனுக்காக ஆர்வமாகக் காத்திருப்பதிலிருந்தே இலங்கையின் பொருளாதார நிலை வெளிப்படையாகத் தெரிகிறது.
  தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. வடக்குப் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என ஐஎம்எஃப்பிடம் இலங்கை உறுதியளித்திருக்கிறது. ஆனால், கடன் கிடைத்தால் போதும் என்பதற்காக அளிக்கப்பட உறுதிமொழியாக மட்டுமே இது இருக்கக்கூடும்.
  ஏனெனில், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அவசரமாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் பொருளாதார நெருக்கடிதான். ஆனால், சண்டையில் இப்போதைக்கு ராணுவம் வெற்றி பெற்றிருக்கலாம், போர் முடியவில்லை.

No comments: