பஞ்சமும் பட்டினியும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புதிதல்ல. வீங்கிய தலைகளும் ஒட்டிய வயிறுகளும்தான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் அடையாளம். மழை பொய்த்துப் போவதும், அறுவடை குறைவதும், அதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதும் இங்கு சகஜம். அந்த வகையில் இப்போது, சோமாலியாவைச் சுற்றிய ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சோமாலியா தவிர, எரித்திரியா, கென்யா, டிபெüடி, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இதில் அடக்கம்.
இங்கெல்லாம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக கடந்த சில மாதங்களாகவே ஐ.நா. எச்சரித்து வந்தது. இப்போது அந்த நிலை வந்தேவிட்டது. சுமார் 1.4 கோடி பேர் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கர்ப்பிணிகளும் குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற சூடான் வழியாகவும், சோமாலியத் துறைமுகம் வழியாகவும் கூடுதலாக உணவை அனுப்ப ஐ.நா. முயன்று வருகிறது.
உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மழை பொய்த்துப் போவது மட்டுமே காரணமல்ல. அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும் கொள்கைகளும்கூட பஞ்சம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக எத்தியோப்பியாவில் சில இடங்களில்தான் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ஓரளவு மழை பெய்திருந்தும்கூட அறுவடை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் அரசின் கொள்கை.
ஆப்பிரிக்க உணவுத்தட்டுப்பாடு குறித்து எச்சரித்த ஐ.நா.வின் அதே அமைப்பானது, இந்தியாவிலும் ஒரு தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் எடை குறைவாக, ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. அதிலும், 18-வயதுக்கு உள்பட்டோரில் 50 சதவீதம் பேருக்கு போதுமான ஊட்டச்சத்துக் கிடைக்கவில்லை என அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது.
ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும், இந்தியர்கள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் விவசாய உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லை.
மழைநீரைச் சேமிக்கும் குளங்களும் ஏரிகளும் அணைக்கட்டுகளும்கூட குறைவு. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு வலுவான பொருளாதாரக் கட்டமைப்பும் இல்லை.
ஆனால், இந்தியாவில் வறட்சி காரணமாக விவசாய உற்பத்தி குறைந்தாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டைப் போக்கும் அளவுக்கு பொருளாதார வலு இருக்கிறது.
அப்படியிருந்தும் ஒருபகுதி மக்கள் ஊட்டச் சத்து இல்லாமல் வாழ்கிறார்கள் என்றால், உணவுப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்காததுதான் காரணம்.
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லையென்றாலும்கூட, அடித்தட்டு மக்களால் அணுக முடியாத அளவுக்கு விலைவாசி இருந்தால் ஊட்டச்சத்துக் குறைவும் பட்டினியும் இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அந்த நிலையை மாற்ற இந்திய அரசும், மாநில அரசுகள் முயன்று வருகின்றன. ஆனாலும், எல்லா வகையான உணவுப் பொருள்களும் தேவையான அளவுக்குக் கிடைக்கும் வகையில் அந்தத் திட்டம் இன்னும் தீவிரமாக்கப்படவில்லை. வருங்காலத்தில்கூட அது சாத்தியமா என்கிற கேள்வியும் இருக்கிறது.
பட்டினியால் இறப்பவர்கள் பற்றி இந்தியாவில் இப்போது தகவல் இல்லை. ஆனால், பெரும்பாலான மரணங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக இருக்கிறது. இதுவும் பசி, பட்டினியின் இன்னொரு முகம்தான்.
இதைத் தவிர்க்க வேண்டுமானால், நமது புதிய பொருளாதாரக் கொள்கையில் சிக்கி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்.
எல்லா உணவுப் பொருள்களின் விலையும் வெளிச்சந்தையில் விண்ணை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும்போது, பொதுவிநியோகம் குறைந்த விலையில் ஒன்றிரண்டு பொருள்களை மட்டும் தருவது பெரிய பயனைத் தராது. இதற்குப் பதிலாக, மலிவான விலையில் நிறைய உணவுப் பொருள்களை போதுமான அளவுக்குக் கொடுக்கலாம்.
அனைவருக்குமே தரமான உணவு கிடைக்காதவரை இந்தியாவும் ஒரு பட்டினி தேசம்தான். நாட்டில் ஒரு கூட்டம் எலும்பும் தோலுமாகப் பசித்திருக்க, விண்ணில் சந்திரயானை ஏவுவதாலும், அணுகுண்டுகளை வெடிப்பதாலும் மட்டும் நாம் வல்லரசாகிவிட முடியாது. பட்டினி தேசங்களுக்கு சந்திரயானையும் அணுகுண்டுகளையும் விட முதன்மையான தேவை உணவுதான்.
Tuesday, December 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment