எஸ்.இ.ஓ. கீ வேர்ட்ஸ் போல தலைப்பு வைப்பதுதான் பதிவெழுதுவதில் இன்றைய பேஷன். இந்தத் தலைப்புக்கு இதுதான் முக்கியக் காரணம். மற்றபடி கூகுள் இந்தப் பக்கத்தை முதலில் காட்டுவதற்கு எந்தச் சிரமும் ஏற்பட்டுவிடக்கூடாது; தமிழ்மணம், தமிழிஷ் போன்றவற்றில் படிப்பவர்களுக்கு பதிவு யாரைப்பற்றியது என்பதில் தெளிவு கிடைக்க வேண்டும்; மக்களனைவரும் காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பன போன்ற உயர்ந்த லட்சிகளுக்காகவும் மேற்படி தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டாமை பண்ணியோ, கட்டப்பஞ்சாயத்து நடத்தியோ மொய் பெற வேண்டும் என்கிற எண்ணம் ஏதும் இல்லை. அதேபோல உளவுத்துறை ரேஞ்சுக்குக்கும் இங்கு ஒன்றுமில்லை. ஆகையால் சிக்கிட்டான்யா என்ற ஆர்வத்தில் படிக்க வந்த உளவுத்துறைக்காரர்கள் மேலே படிப்பதை விட்டுவிட்டு வேறு பதிவில் யாராவது எதையாவது பேசி சிக்குகிறார்களா என்று பார்க்கவும்.
-----------
ஹுசைன் சிறந்த ஓவியர். நவீன கால ஓவியங்கள் வரைவதில் கில்லாடி. மாதுரி, சரஸ்வதி எனப் புகழ்பெற்றவர். இவரைப் பற்றி மூத்த இலக்கியவாதி ஒருவரும், நம்மிடையே எந்தவித கெத்தும் பார்க்காமல் பின்னூட்டங்கள் மூலம் பேசும் டாக்டரும் பதிவெழுதியிருக்கிறார்கள். மேலோட்டமாக இருவரின் கருத்தும் கிட்டத்தட்ட ஒன்று. இது ஆச்சரியமான ஒற்றுமை. ஆழத்தில் என்ன உள்குத்து இருக்கிறது என்பது இங்கு தேவையற்றது. எனக்குப் புரிந்தவரையில், ஹுசைன் வேற்றுநாட்டுக்கு அனுப்பப்படுவதையும், நிர்வாண ஓவியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையும் முட்டாள்தனங்கள் என்று இருவருமே சொல்லியிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தின் பின்னாலிருக்கும் அரசியலை இலக்கியவாதி தவிர்த்துவிட்டார். டாக்டர் கொஞ்சம் தொட்டார். தாமும் ஒரு ஓவியர் என்பதால் அவர் ஒரு சார்புநிலை எடுக்கச் சாத்தியமிருக்கிறது. அல்லது நான் ஒரு ஓவியனில்லை என்பதால் அவரது உக்கிரப் பார்வையிலுள்ள நியாயம் எனக்குப் புரியாமல் போகவும் சாத்தியமிருக்கிறது. ஆனால் விவகாரத்தை முழுமையான அரசியல் ரீதியாக அணுகாமல் வெறும் கலை, மதம் என அணுகினால் ஒன்றுமே வெறும் ஆத்திரம் மட்டுமே மிஞ்சும்.
தமிழ்நாட்டில் முதல்வர் தலைமையில் நடந்த விழாவில் சொல்லிக் கொடுக்கப்பட்டவற்றைத் தாண்டி சிலவற்றை அஜீத்குமார் பேசினார். அவருக்கு என்னவாயிற்று. கண்டிப்பாக ஒரு வாரம் தூங்கியிருக்க மாட்டார். நடிப்பை வேண்டுமானாலும் விட்டுவிடுகிறேன் என்று அவர் கூறுமளவுக்கு நிலைமை போனது. கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் முதல்வரின் வாயில் மைக்கைத் திணித்து கேள்வி கேட்பார்கள்.
மகாராஷ்டிரத்தில் ஒரு நடிகரின் படத்தைத் திரையிடவிடமாட்டோம் என்று ஒரு கும்பல் சொல்லியது. ஆனாலும் அந்த நடிகர் தொடர்ந்து அந்தக் கும்பலை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் ஒரு நடிகர் இப்படி நடந்து கொள்ள முடியுமா? தமிழக அரசியல் மோசம், மற்ற மாநில அரசியல் நன்று என்று நான் ஒப்பிடவரவில்லை. ஆனால், இமேஜ் பாருங்கள். யாருக்கு நல்ல இமேஜ். யாருக்கு மோசமான இமேஜ். அதுதானே நுண்ணரசியல்.
தஸ்லிமாவையும் ஹுசைனையும் ஒப்பிடமுடியாது. தஸ்லிமாவின் எழுத்து அவ்வளவு சிறந்ததல்ல. ஆனாலும் வேற்று நாட்டிலிருந்து இங்கு வந்து ஒட்டிக் கொண்டவர். இந்திய விசா பெற்ற ஒருவரை இந்தியாவுக்குள் பாதுகாக்க முடிந்ததா? இதை ஒப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.
ஹுசைனுக்கு இப்போது கத்தார் குடியுரிமை வழங்கியிருக்கிறது. நிர்வாணப் படங்களுக்குத் தடை விதித்திருக்கும், அடுத்த மதங்களைத் தூற்றுவதைக் குற்றமாகக் கருதும் ஒரு நாடு, எப்படி ஹுசைனைக்கு விசா வழங்கியது? அல்லது இந்தப் படங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த அனுமதி வழங்கிவிடுமா? அங்குதான் நடக்கிறது சர்வதேச நுண்ணரசியல்.
கலை உரிமையையும், ஊடக சுதந்திரத்தைப் பேசுபவர்களெல்லாம் சாதாரண மக்களிடமிருந்து மிகத் தூரத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருப்பவர்கள். பின்னால் வரும் மக்களின் கையைப் பிடித்து அறிவுரை சொல்ல அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் சொல்லும் தூரத்தை வைத்து நாடு பொருளாதார, சமூக அடிப்படையில் முன்னேறிவிட்டது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் பொய். நம் மக்கள் பின்தங்கியிருப்பவர்கள். கொஞ்சமே புரிந்துகொள்ளும் திறனுள்ள இவர்களிடம், நீ கும்பிடும் தெய்வத்தை நிர்வாணமாக வரைகிறேன் என்று அதிரடியாகச் செயல்படுவது, மக்களாட்சி சமநிலையுடன் நடக்க உதவுமா? அதற்கெல்லாம் இன்னும் மக்கள் தயாராகவில்லையே. கத்தாரில்கூட இதுதான் நிலை. இந்த நிலையில் நம் மக்கள் எம்எஃப் ஹுசைனையும், தஸ்லிமா நஸ்ரினையும் இப்போதையச் சூழலில் ஏற்கவே மாட்டார்கள். அதனால் டாக்டரும் எழுத்தாளரும் சொல்லும் நியாயங்கள் வீண்.
-----------------
இதே போன்ற இன்னொரு விவகாரத்திலும் இந்த இருவரும் பதிவெழுதியிருக்கின்றனர். ஒருவருக்கொருவர் முரணாக. அது நித்தியானந்தர். இங்கும் எல்லாவற்றையும் அறம், துறவு எனப் பேசிய இவர்கள் அரசியலைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அல்லது இங்கும் தவிர்த்துவிட்டனர். அந்தப் பதிவுகளின் உஷ்ணத்தை இந்தப் பதிவு தாங்காது. அந்த உஷ்ணத்தைக் குறைத்திருக்கலாம்.
----------------
டாக்டர் ஒருபுத்தகத்தின் முதல்பக்கத்தில் சொல்வார். குமுதமும் ஆனந்தவிகடனும் சொன்னால்தான் உங்களுக்கெல்லாம் தெரியும் தாஜ்மஹாலின் அழகு என்று. அந்தமாதிரியான அறிவுப்படிதான் இதை எழுதியிருக்கிறேன்.
...
.
Tuesday, March 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த இடுகை ரொம்ப பிடிச்சிருக்கு.
well written. best wishes.
Post a Comment