சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த நாடுகளில் வண்ணப் புரட்சிகள் மிகப் பிரபலம். ஜார்ஜியாவின் ரோஸ் புரட்சியும், உக்ரைனின் ஆரஞ்சுப் புரட்சியும் அந்தந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தின. ஆசியாவுக்கு வெளியே செக்கோஸ்லாவியாவில் நடந்த வெல்வெட் புரட்சியும் இந்த வரிசையில் சேரும். பொதுவாக அமைதியாகத் தொடங்கும் இந்தப் புரட்சிகள் சில நேரங்களில் வன்முறையாகவும் உருமாறியிருக்கின்றன. ஆயினும் பொதுமக்களின் பேராதரவு இந்தப் புரட்சிகளுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது.
கிர்கிஸ்தானிலும் இப்படியொரு புரட்சி கடந்த 2005-ம் ஆண்டில் நடந்தது. அப்போதைய அதிபர் அஸ்கார் அகயேவ் மீதான ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள்தான் புரட்சிக்கு அடிப்படைக் காரணம். அது தேர்தல் ஆண்டு என்பதால், எப்படியும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன. பெரும்பாலான தேர்தல் கணிப்புகளுக்கு மாறாக மீண்டும் அகயேவே வெற்றி பெற்றார். தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்தார் என எதிர்க்கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் குற்றம்சாட்டின. இப்படிப்பட்ட அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஏற்பட்டதுதான் ட்யூலிப் புரட்சி.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களான ரோஸô ஒடுன்பேவா, குர்மன்பேக் பாகியேவ் ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தப் புரட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாத அகயேவும் அவரது குடும்பத்தினரும் அண்டை நாடான கஜகஸ்தானுக்குப் பறந்தனர். அதே ஆண்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. புரட்சியை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவரான பாகியேவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "மக்களாட்சி மீட்டெடுக்கப்பட்டுவிட்டது; இனியெல்லாம் சுபமே' என்று அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகமே நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கையை நீண்டகாலம் நீடிக்கவிடும் நல்ல அரசியல்வாதிகள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என்ன?
ஒரே ஆண்டுதான் அந்த ஆட்சிக்குத் தேனிலவு. அதன் பிறகு, யார் புரட்சியாளராளராகவும் ஜனநாயகப் பாதுகாவலராகவும் கருதப்பட்டாரோ, அதே தலைவரின் ஆட்சி மக்களுக்குக் கசக்கத் தொடங்கியது. எதிர்க்கட்சித் தலைவர்களையும், அரசியல் கைதிகளையும் படுகொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மகனுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியதும், பினாமிகளின் பெயரில் சொத்துகளைக் குவித்ததும் அவருக்கு இருந்த நல்ல பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தின. முன்பிருந்ததைவிட நிர்வாகம் சீர்கெட்டது. வேலையில்லாத் திண்டாட்டமும், உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்தன. இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆட்சியைக் குறைகூறிய ஊடகங்கள் தடை செய்யப்பட்டன.
2009-ல் அடுத்த அதிபர் தேர்தல் வந்தது. அதிருப்தியடைந்திருந்த மக்கள், ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போலவே அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. 78 சதவீத வாக்குகளைப் பெற்று பாகியேவ் மீண்டும் வெற்றிபெற்றார். வெற்றி பெற்ற கையுடன், பெட்ரோல், டீசல் விலையையும் மின் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார். அதுவரை உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த மக்களை இந்த விலையேற்றம் போராடத் தூண்டியது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே, அரசுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின. படிப்படியாகச் சில ஆயுதக் குழுக்களும் களத்தில் இறங்கின. மார்ச் இறுதியில் இந்தப் புரட்சி இறுதிக் கட்டத்தை எட்டிய ஒரு சில நாள்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த முறை புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் ரோஸô ஓடுன்பேவா. 5 ஆண்டுகளுக்கு முன் பாகியேவுடன் சேர்ந்து புரட்சி செய்தாரே அதே தலைவர்தான். இப்போது பாகியேவுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். அரசுக் கட்டடங்கள் அனைத்தும் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும். வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட பாகியேவ், வழக்கம்போல கஜகஸ்தானுக்குப் பறந்தார். இப்போது ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது. நாட்டின் தலைமைப் பொறுப்பை ரோஸô ஏற்றிருக்கிறார்.
இப்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம், ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிரந்தரமான வெற்றி என உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு முந்தைய கால அரசியல் மாற்றங்கள் அமைந்திருக்கின்றன. அந்நாட்டு மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, புதிய ஆட்சியாளர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்று கருத முடியாது.
இதுபோன்ற அரசியல் சூழலை மத்திய ஆசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடலாம். ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள்தான் இந்த நாடுகளின் அடையாளம். குடும்ப உறுப்பினர்களை அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதுடன், முக்கியத் தொழில்களையும் கைப்பற்றுவது தங்களது பிறப்புரிமை என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். ஒருங்கிணைக்கப்பட்ட வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் ஆட்சியாளர்களைத் தட்டிக்கேட்கவும் ஆளில்லாமல் போகிறது.
இவற்றால் விரக்தியடையும் மக்கள், தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். இதெல்லாம் மத்திய ஆசியா முழுமைக்கும் பொருந்தும் என்பதால், கிர்கிஸ்தானின் இப்போதைய அரசியல் புரட்சிகூட துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பரவக்கூடும் என அரசியல் நிபுணர்கள் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
கிர்கிஸ்தானின் ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் பரபரப்பாகியிருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு. ஆப்கானிஸ்தான் போருக்கான அமெரிக்க விமானப்படைத்தளம் கிர்கிஸ்தானில் இருப்பதுதான் அந்த முக்கியக் காரணம். ஆப்கன்போர் முடிந்துவிட்ட பிறகும், ரஷியா, சீனாவின் எதிர்ப்பையும் மீறி இந்தத் தளம் தொடர்ந்து இயங்கி வருவதும், ஆட்சிகள் பல மாறினாலும் இந்த படைத்தளத்துக்கான வாடகை ஒப்பந்தத்தை மட்டும் தடைபடாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதும்தான் உலக அரசியலில் சாமான்யர்களுக்குப் புரியாத ரகசியங்கள்.
..
.
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment