Monday, May 10, 2010

பிரிட்டன்: திரும்பும் வரலாறு!


1970-களின் தொடக்கத்தில் பிரிட்டனின் தொழில்துறை முடங்கிப் போயிருந்தது. இதனால்,  வேலை வாய்ப்பில்லாத ஜனத்தொகை பெருகியது. வாரத்துக்கு 3 நாள்கள் வேலை கிடைப்பதே பெரும் பாக்கியம் என்கிற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.

அந்தச் சூழலில் 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொழிலாளர் கட்சியும் டோரி கட்சியும் பெரும்பான்மைக்குப் பக்கத்தில் இருந்தன. அப்போது பிரதமராக இருந்த டோரி கட்சியின் எட்வர்ட் ஹீத், சிறுபான்மை அரசை அமைத்தார்.

கூட்டணிப் பேரமும், குதிரைப் பேரமும் படியாததால் அந்த அரசு சில நாள்களிலேயே கவிழ்ந்தது. பிறகு லேபர் கட்சி தலைமையில் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்டு அதுவும் ஓரிரு மாதங்களிலேயே கவிழ்ந்ததால் நாடு இன்னொரு தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தல் லேபர் கட்சிக்கு ஒற்றை இலக்கப் பெரும்பான்மையைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டில், வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் போன்ற பிரச்னைகளில் பிரிட்டன் சிக்கியிருக்கிறது.

1974-ல் இருந்ததைப் போலவே இரு பெரிய கட்சிகளின் மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அந்த ஆண்டைப் போலவே மூன்றாவது கட்சி வாக்குகளைப் பிரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டுத் தேர்தல் 1974-ம் ஆண்டை ஒத்திருக்கிறது.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று எல்லோரும் கணித்திருந்தார்கள். அது நடந்திருக்கிறது. மக்கள் தெளிவான முடிவைத் தரவில்லை. பெரும்பான்மைக்குத் தேவையான 326 இடங்களை எட்டுவதற்கு டோரி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 20 இடங்கள் தேவை.

மொத்தமுள்ள 650 இடங்களில் அந்தக் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்திருக்கின்றன. ஆளும் லேபர் கட்சி 257 இடங்களில் வென்றிருக்கிறது, ஒன்றுக்கு மேற்பட்டோரைக் கூட்டுச் சேர்த்தால் தான் கார்டன் பிரெüன் மீண்டும் டவுனிங் தெருப்பக்கம் போக முடியும்.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட லிபரல் டெமாக்ரெட் கட்சி 57 தொகுதிகளில்தான் வென்றிருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பிரெüனையும், கேமரூனையும் பின்னுக்குத் தள்ளி, ஹீரோவாக வலம் வந்த லிபரல் டெமாக்ரேட் கட்சியின் தலைவர் க்ளெக்,  தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்.

இருந்தாலும், தமது தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்கிற பெருமையுடன், இரு அணிகளுடனும் பேரம் பேசுவதில் இப்போது மும்முரமாகியிருக்கிறார்.

க்ளெக் எந்தப் பக்கம் சாய்கிறாரோ அந்தக் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கேமரூன், அமைச்சரவையில் இடம்தருவதாகக் கூறி க்ளெக்கை அழைத்திருக்கிறார். க்ளெக்கும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், லேபர் கட்சியுடன் பேசப்போவதில்லை எனவும் அவர் கூறிவிடவில்லை. இந்த விஷயத்தில் அவர் பக்குவமாகக் காய் நகர்த்துகிறார். டோரிக்கள் என்ன தருகிறார்கள் என்பதைப் பார்த்த பிறகு, பிரெüன் அணியுடன் பேசலாம் என்பதே அவருடைய திட்டம்.

பிரசாரத்தில் கூறியபடி, தேர்தலில் விகிதாசார வாக்கு முறையை அமல்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை க்ளெக் முன்வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கன்சர்வேட்டிவ்  எம்பிக்களில் பெரும்பாலானோர் இதை ஏற்க மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. இதனால், குறைந்தபட்சம், விகிதாசார வாக்கு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்தறியும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதிலாவது க்ளெக் கடைசிவரை உறுதியாக இருப்பார்.

ஆனால் ஒப்பந்தம் என்னவாக இருந்தாலும், க்ளெக்கும் கேமரூனும் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுத்து விடமுடியாது. மேம்பட்ட ஜனநாயகவாதிகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பிரிட்டனில் கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோரால் ஒப்புக் கொள்ளப்படும் முடிவையே எடுக்க முடியும். அதற்கென பிரத்யேகமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுபோக, விகிதாசார வாக்கு முறையை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த லிபரல் கட்சியை மக்கள் புறக்கணித்திருக்கும்போது, அதே விஷயத்தை ஏற்கலாமா எனவும் டோரிக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆக, லிபரல் டெமாக்ரெட் - கன்சர்வேட்டிவ் இடையே இணக்கம் ஏற்படுவது என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுபோல மிக எளிதானது அல்ல.

பிரிட்டன் மரபுப்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சியில் இருக்கும் கட்சியைத்தான் மீண்டும் அரசமைக்கும்படி அரசி அழைப்பு விடுப்பார்.

தங்களால் முடியாது என்று அந்தக் கட்சி கூறினால்தான் அடுத்த கட்சிக்கு வாய்ப்பு. பிரெüனுக்கு அப்படியொரு வாய்ப்பு வழங்கப்பட்டால், ஆட்சி அமைத்துக் கொண்டு வேறு சில கூட்டல் கழித்தல் கணக்குகளுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவர் முயற்சிக்கூடும்.

ஆனால், இதற்கெல்லாம் வெகு முன்பாகவே, டோரி கன்சர்வேட்டிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரேட் கட்சியும் இறுதி ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டால், தார்மிக அடிப்படையில் பிரெüன் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்தக் கணிப்புகளையெல்லாம் தாண்டி, பெரிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, லிபரல் டெமாக்ரெட் கட்சியே ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனநாயகத்தில் நடக்க முடியாததென்றோ ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றோ ஏதாவது இருக்கிறதா என்ன?

..
..

No comments: