Saturday, July 10, 2010
ஸ்பெயினின் வெற்றி ரகசியம்!
கால்பந்து ஆட்டம் உணர்வுகளால் நிரம்பியது. ஆனந்தமும் துக்கமும் வந்து வந்து போகும். ஸ்பெயின் இப்போது ஆனந்த உணர்வில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த ஆனந்தம் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்துவிடவில்லை. அதற்குப் பின்னால் அவர்களது மிகப் பெரிய உழைப்பும் கண்டுபிடிப்பும் இருக்கின்றன.
வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் ஆகிய இரண்டுமே ஸ்பெயின் அணியின் பலம். ஆனால் இந்த இரண்டையும் செயல்படுத்துவதில் ஒரு அடிப்படையான தத்துவத்தைக் கொண்டே ஸ்பெயின் அணி இந்தக் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆடி வருகிறது. அதுதான் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி.
"பந்து உனது கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி உன்னைத் தேடிவரும்' என்பதுதான் ஸ்பெயின் கால்பந்து அணி வீரர்கள் ஆடுகளத்தில் இயங்குவதற்காக வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாடு. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
மைதானத்தில் இந்த உத்தியைச் செயல்படுத்துவதற்குப் பல திறன்கள் தேவை. குறுகிய தூரத்தில் அடுத்தவருக்குப் பந்தைக் கடத்துதல், வியூகம் அமைத்தபடியே முன்னோக்கி நகர்வது போன்றவை இதற்கு மிகவும் அவசியம். இவை ஸ்பெயினுக்கு அத்துப்படி. இந்த உலகக் கோப்பை போட்டியில், ஸ்பெயினைத் தவிர வேறு எந்த அணிக்கும் பந்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரம் தெரியவில்லை என கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஒரேயொரு கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரேயொரு கோல்தான் என்பதால் அது ஒன்றும் பெரிய வெற்றியில்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில், இந்த வெற்றி ஸ்பெயினின் பிரத்யேகத் திறமைக்கும் திட்டமிடலுக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்ஜென்டினாவை 4 கோல் அடித்து வெற்றி பெற்ற அணியா இது என்று ஜெர்மனியைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த நாட்டு வீரர்களை முடக்கிப் போட்டது, ஸ்பெயின் வீரர்களின் ஆட்டம்.
ஸ்பெயினின் நடுக்கள மற்றும் முன்கள வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே ஆட்டம் முழுவதும் இருந்தது. சேவி, இனியெஸ்டா, பெட்ரோ ரொட்ரிகோ, அலோன்சோ ஆகியோர்தான் எந்த வழியாக, எந்த நேரத்தில் எதிரணியின் பாதுகாப்பு அரணைத் தகர்ப்பது என்பதை முடிவு செய்தார்கள். அதற்கேற்றபடி மற்ற முன்கள வீரர்களை தொடர்ச்சியாக நகரச் செய்வதும், எதிரணியினர் ஊகிக்க முடியாத அளவுக்கு திடீர் தாக்குதல் நடத்துவதும்தான் ஸ்பெயினின் உத்தியாக இருந்தது.
உண்மையில் ஸ்பெயினின் பந்து கடத்தும், மற்றும் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன்களைக் கண்டு ஜெர்மனி வீரர்களே அதிர்ச்சியாகி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டம் முடிந்த பிறகு ஜெர்மன் பயிற்சியாளரும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் பாணி ஆட்டத்தை வேறு நாடுகள் காப்பியடிப்பதெல்லாம் அத்தனை எளிதானதல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
அதே நேரத்தில், பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தந்துவிடாது. யார் அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. எத்தனை கோல் அடிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். பந்தைக் கடத்திக் கொண்டுபோய் கோல் போட முடியாமல் போனால் தோற்றுப் போக வேண்டியதுதான்.
இதற்கு நல்ல உதாரணம் ஜெர்மனி - ஆர்ஜென்டினா இடையிலான காலிறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவசம்தான் பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால், ஜெர்மன் தடுப்பாட்டக்காரர்களை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெர்மனியின் திடீர் தாக்குதல் ஆட்டத்தையும் தடுக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் அவமானகரமாகத் தோற்றார்கள். ஸ்பெயினுக்கும் இந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த அணி வீரர்கள் பந்தைக் கடத்திச் சென்று கடைசிவரை கோல் எதுவும் அடிக்கவில்லை. அவர்கள் பந்தைக் கடத்தி ஜெர்மனியின் கோல் நோக்கி வந்தபோதெல்லாம், வலைக்கு மேல்புறத்திலும் இரு பக்கங்களிலும்தான் பந்து சென்றது. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி வேறு வகையில் ஸ்பெயினுக்கு உதவியது.
முற்பாதி ஆட்டத்தின் போதும், பிற்பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் வரையிலும் பெரும்பான்மை நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தார்கள். எப்போதும் ஜெர்மனியின் கோல் கம்பத்தைச் சுற்றியே பந்து வந்து கொண்டிருந்தது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டது.
தற்காப்பு ஆட்டத்திலேயே ஜெர்மனி வீரர்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், தங்களது பாணி ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியாமலேயே போனது. இப்படி எதிரணியை முடக்குவதில்தான் ஸ்பெயினின் "பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்' உத்தியின் வெற்றி அடங்கியிருக்கிறது.
இந்த ஆட்டத் திறன்களெல்லாம் கிளப் ஆட்டங்களில் பரிசோதனை செய்யப்பட்டவைதான் என்றாலும் ஸ்பெயின் மட்டும்தான் இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஸ்பெயின் வீரர்களைக் கேட்டால், எங்களுக்கு "வேறு எந்த வகையாகவும் ஆடத் தெரியாது' என்கிறார்கள் மிக அடக்கமாக. அப்படியென்றால், இறுதிப் போட்டியிலும் இதை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.
..
.
.
Labels:
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல ஆய்வு நண்பா..
super appu...........
super appu...........
super appu...........
super appu...........
very gud research
keep it up
Post a Comment