Tuesday, August 16, 2011

ஊழலை ஒழித்தால் சரக்கு ரேட் குறையுமா?

ஊழல் என்பது என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமலேயே பலர் அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் சாரை சாரையாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழலை மருந்து அடித்து ஒழித்துவிட்டால் என்ன ஆகும் என்பதும் பலருக்குத் தெரியாது. நான் ஊழல்வாதியா, ஊழலுக்குத் துணை போகிறேனா என்று யாரும் தங்களைத் தாங்களே கண்ணாடி முன் கேட்டுக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஏதோ கண்ணுக்குத் தெரியாத, நம்மைத்தவிர பிறர் மட்டுமே செய்யக்கூடிய ஒரு மோசமான செயலாகத்தான் ஊழல் பார்க்கப்படுகிறது. அதனால்தான் போனால் போகட்டும் கொசுவை ஒழிப்பதுபோல ஊழலையும் ஒழித்துவிடலாம் என்று ஹசாரேவுக்குப் பின்னால் மக்கள் திரண்டு விட்டார்கள்.

 2ஜி ராசா ஊழல்வாதி என்றால் அம்பானிகளும் டாடாவும் மட்டும் சுத்தமானவர்களா? அவர்கள் மட்டும் ஏன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையை ஏதோ முப்பாட்டன் சொத்துப்போல வளைத்துப் போட்டிருக்கிறார்களே, அதில் ஏன் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம்?

நாம் மட்டுமல்ல ஊழல் ஒழிப்பு மிஸ்டுகால் அண்ணா ஹசாரேவும் இதில்தான் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை மட்டும் எதிர்க்கும் அவருக்கு பெரு முதலாளிகளெல்லோரும் உத்தமர்களாகத் தெரிகிறார்கள். லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் வர வேண்டும் என்று கேட்கும் அவர், டாடாவையும் அம்பானிகளையும் பற்றிப் பேசுவதில்லை. கார்ப்பரேட்களை மட்டுமே ஆதரிக்கும் மோடியை சிலாகித்துக் கொண்டிருக்கிறார்.

புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு ஊழல் என்பதே பெருமுதலாளிகளிடம் இருந்துதான் தொடங்குகிறது. கட்சி நிதி என்பதுதான் ஒழிக்க வேண்டிய முதலாவது லஞ்சப் பணம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்றால், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளையும் ஒடுக்க வேண்டும். அப்படி ஒடுக்கினால் என்ன ஆகும் தெரியுமா?

 எந்த வேலையும் செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெஞ்ச் தேய்க்கும் பலருக்கு வேலை இருக்காது. சாட்டர்டே பப்கள், பீசா கார்னர்கள் இயங்கும் அளவுக்கு அதீத பணப்புழக்கம் இருக்காது, கட்டட வேலை செய்பவரின் பிள்ளையும், ஐ.டி. அறிவாளியின் பிள்ளையும் ஒரே வகுப்பில் படிக்க வேண்டியிருக்கும், வீட்டில் 10 ஏசியையும் ஆளுக்கொரு காரையும் வைத்துக் கொண்டு  ஏழைகள் பிளாஸ்டிக் பைகள் செல்லக்கூடாது என்று போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வேலை இருக்காது, ஒருவேளை கார்களையும், ஏசிக்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஏழைகள் போராடினாலும் போராடுவார்கள். 

இது மட்டுமல்ல ஊழலை ஒழித்துவிட்டால், எதிர்பார்க்காத, பலருக்கும் கசப்பானதுமான இன்னும் பலதும் நடக்கக்கூடும். ஒன்று ஊழல் அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும், அல்லது ஊழல் ஒழிப்பு சித்துவிளையாட்டை அம்பானியில் இருந்து ஆரம்பியுங்கள். அதைவிட்டுவிட்டு ஊழலை ஒழித்துவிட்டால், இன்கிரீமென்ட் கிடைக்கும், சீஆஃப் கிடைக்கும், சரக்கு ரேட் குறையும் என்று எதிர்பார்த்து யாராவது அண்ணா ஹசாரே பின்னால் கிளம்பியிருப்பீர்கள் என்றால் மிஸ்டுகால் கொடுத்துவிட்டு தயவு செய்து சத்தம்போடாமல் வீட்டுக்கு வந்துவிடுங்கள். 

.
.
.

7 comments:

MUTHU said...

உண்மையிலேயே நீங்கள் அக்னியை கக்கி உள்ளீர்கள். நீங்கள் சொல்வது 100க்கு 100 சதவீதம் உண்மை. என்ன விவரம் என்று தெரியாமலே கூட்டத்தோடு கூட்டமாக கூச்சல் போடும் நம்மவர்கள் திருந்தினால்தான் நாடு உருப்படும். அதை விட்டுவிட்டு நான் அதை திருத்தி விடுவேன். இதை திருத்தி விடுவேன் என்று பினாத்தும் நபர்களின் பின்னால் போனால் நம் நாடும் பின்னால் போவதை தடுக்க முடியாது.

ராஜ நடராஜன் said...

நீங்கள் பொருளாதாரத்தின் அளவுகோல்கள் தெரியாமல் கருத்து தெரிவிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.இந்திய வளத்துக்கும்,முன் செல்லும் ஆசிய பொருளாதாரத்துக்கும் நியாயமான முறையில் வர்த்தகம்,அரசு பணிகள்,மக்கள் மனநிலை மாற்றங்கள் நிகழ்ந்தால் பிசா,KFC,பெப்சி என மக்கள் இன்னும் அதிக நுகர்வோர்களாகவே மாறுவார்கள்.சீனாவுக்கும்,இந்தியாவுக்கும் சம்மான பொருளாதார வாய்ப்புக்கள் இப்போது.ஆனால் உற்பத்தி திறனிலும்,சந்தைப் படுத்தலிலும் இந்தியா பின் தங்கி விடுகிறது.

ராஜ நடராஜன் said...

டாட்டா குழுமத்திற்கு பாரம்பரிய வியாபார அணுகுமுறை உண்டு.முக்கியமாக J.R.D டாட்டா காலம் வரை.அவரது காலத்துக்கு அப்பன் அம்பானி போட்ட குறுக்கு வழிப் போட்டிகளில் அம்பானி மகன்கள் கல்லா கட்டுகிறார்கள்.போட்டி சந்தையில் ரத்தன் டாட்டாவும் இதில் உள் நுழைந்து விட்டார்.தமிழக நில அபகரிப்புக்கு ஆப்பு மாதிரி அம்பானிகளுக்கு நெத்தியடி விழுந்தால் ஏனைய போட்டியாளர்கள் வழிக்கு வந்து விடுவார்கள்.

Surya said...

இதே மாதிரி தான் பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவிலிருந்து ஒழிக்க முடியாது என்றார்கள்.

பெரிய கம்பனி ஆகட்டும் சிறிய கம்பனி ஆகட்டும் ஊழல், குறுக்குவழி என்று தேர்தெடுக்க பயப்பட வேண்டும். அதற்கு ஒரு அமைப்பு அவசியம்.

ஊழலற்ற (குறைந்த அளவில் இருக்கும்) நாடுகள் காஸ் பெட்ரோல் உணவு என பலவித சலுகை விலைகளை (subsidies) அளிக்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள நம்நாட்டில் எதிர்காலத்தில் ஊழலற்ற - மக்களை சீராட்டும் அரசு அமைய வேண்டும்.

நடக்கும் இந்த போராட்டம் ஒரு ஆரம்பம் தான் என்பது என் கருத்து.

Elayaraja Sambasivam said...

பல கோடி இந்திய மக்களை எப்படி மிக சாதரணம இங்கிலாந்துகாரன் ஆண்டான் அப்படின்னு உங்களோட கருத்துக்களே சொல்லுது.

காந்தி மட்டும் இப்ப உண்ணா விருதம் இருந்தார்ன்ன வச்சிக்குங்க, உன்னோட முதல் பிள்ளை ஒரு குடிகாரன் நீ அவன போய் திருத்து..அப்படின்னு சொல்லி அனுப்பி வச்சிருப்பிங்க,

இந்த வயசான காலத்துலயும் அவரால முடிஞ்சத செய்றாரு, அத பாரட்டலனாலும் பரவாயில்ல, அடுத்த வேலைக்கு எந்த ஓட்டல் போகலாம்னு அரை மணி நேரம் கலந்து பேசற நமக்கு, நம்ப நட்ட பற்றிய சிந்தன கொஞ்சமாவது இறுக்கா.

அடுத்தது காங்கிரஸ் மட்டும் தான் ஊழல் செய்றவங்களா மத்தவங்க இல்லையா, அம்பானி என்ன பண்ணினான் இப்படி எல்லாம் பேசறது.
எப்படி இருக்குது, எல்லாரும் போற்ற படுகிறவனா பார்த்தா சில பேருக்கு பொறமை பொத்துக்கிட்டு வரும், அது தான் உங்களுக்கும் வந்துருக்கு, எப்பவும் ரஜினி படம் வரும் போது சில பேருக்கு ஊத்திக்கணும் அப்படின்னு உள்மனசு வேண்டிக்கும், அது தான் உங்க கிட்ட இருக்கற பிரச்சினையே. (இவ்வளவு பேசற நீங்க அம்பானி கம்பெனி பொருள வாங்காம இருங்க)

படிச்சா நம்ப இது மாதிரி குழந்த தனமா பேசலாமா, எப்பவும் அதிகமான எதிரிங்க இருக்கும் போது, பலமானவன முதலா வீழ்த்தனும், அதுக்கு மத்தவங்க யாரும் அவனுக்கு உதவாம பார்துக்க வேண்டியது மிக முக்கியமான வேலை, அப்பதான் நாம எதுலையும் வெற்றி பெற முடியும், காந்தி சத்தியாக்ரகம் பண்ணும் போது, ஆங்கிலேயர போல பல எதிரிங்க இந்திய முழுதும் இருந்தாங்க.

சுதந்திரம் குடுக்கறதுக்கு கால தாமதம் பண்ண, ஆங்கிலேயர்கள் முதலா உங்க கிட்ட இருக்கற பிரச்சினை சரி பண்ணிட்டு வாங்க, நம்ப அப்புறம் பேசி முடிப்போம். ஆனா அன்றைக்கி எங்க பிரச்சினைய நாங்க பாத்துக்கரம் நீங்க கிளம்புங்க அப்படின்னு காந்தி சொல்லலைனா நமக்கு சுதந்திர தினம் எல்லாம் கிடைச்சிருக்காது,

இந்திய வரலாறு மட்டும் இத சொல்லல, உலக தத்துவம், வரலாறு முழுக்க இருக்கறது எல்லாம் பிரித்தாளும் விதி.

Priya said...

பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

www.tamil10.com

நன்றி