Saturday, January 23, 2010

பாதை திரியுது காம்ரேட்!

வெனிசூலா அதிபர் ஹுகோ சாவேஸுக்கு கடந்த ஆண்டும் இந்தப் புத்தாண்டும் மகிழ்ச்சிகரமாக இல்லை. அவரைச் சுற்றியுள்ள பிரச்னைகள் நாள்தோறும் முற்றிக்கொண்டே போகின்றன. லத்தீன் அமெரிக்கா முழுவதையும் செங்கொடி ஆக்கிரமித்திருக்கும் என்கிற கர்ஜனையுடன் இந்த நூற்றாண்டைத் தொடங்கியவருக்கு, இப்போது சொந்த நாடான வெனிசூலாவே கைநழுவிப் போய்விடுமோ என்பது மாதிரியான அச்சம் ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. சிலகாலமாக அவர் வெளியிட்டு வரும் அறிவிப்புகளும் அதிரடி நடவடிக்கைகளும் அதைத்தான் காட்டுகின்றன.


தென் அமெரிக்காவிலேயே மிக மோசமான பொருளாதாரம் வெனிசூலாவுடையது. 25 சதவீத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். வறட்சியின் காரணமாக கோகா உள்பட எதுவுமே போதுமான அளவு விளையவில்லை. மின்உற்பத்தித் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக தலைநகர் கராகஸ் முழுவதும் நாள்தோறும் 4 மணி நேரம் மின்தடை அறிவிப்பு வெளியானதை பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை இந்த மின்தடை உலகுக்கே எடுத்துக் காட்டியது.

இப்படியொரு சூழலில் நாட்டின் நாணயமான பொலிவரின் மதிப்பைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எண்ணெய் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சாவேஸ் கூறியுள்ளார். அந்தவகையில் அமெரிக்க டாலருக்கு நிகராக இருவேறு மாற்று மதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கார் போன்ற இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைவாகவும், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு அதைவிட உயர்வாகவும் பொலிவரின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த மாற்று மதிப்புக் குழப்பத்தால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பொலிவருக்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பொலிவரின் மதிப்புக் குறைக்கப்பட்டதையடுத்து, வெனிசூலாவில் கடை விரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகப் பொருள்களின் விலையைக் கடுமையாக உயர்த்திவிட்டன. மாற்று மதிப்புக் குறைவு தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களெல்லாம் புரியாத மக்களுக்கு, இந்த விலையேற்றம்தான் உண்மையை உணர வைத்தது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பை சாவேஸின் அரசியல் எதிரிகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

தனது 12 ஆண்டுகால ஆட்சியில் அதிரடி முடிவுகள் பலவற்றை எடுத்த சாவேஸ், நாணய மதிப்புக் குறைப்பு தொடர்பாகவும் சில துணிச்சல் முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் ஒருகட்டமாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்ததையும் மீறி அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்திய பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனமான எக்ஸிடோவை தேசியமயமாக்கிவிட்டார். பிரெஞ்சு-கொலம்பியக் கலப்பு நிறுவனமான எக்ஸிடோ, இப்போது வெனிசூலா அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

பதவியேற்றது முதலாக, எண்ணெய், சுரங்கம், வங்கி, தொலைத் தொடர்பு போன்ற துறைகளை தேசியமயமாக அறிவித்த சாவேஸ், தற்போது புதிதாக சூப்பர் மார்க்கெட்டையும் கையில் எடுத்திருக்கிறார். நாடு முழுவதும் அரசு சார்பில் சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு மானிய விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது என்பதை அரசே இந்த நடவடிக்கையின் மூலமாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரம் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையாகக் கூறப்பட்டாலும், வெனிசூலாவை பொதுவுடைமை நாடாக மாற்றுவதற்கான சாவேஸின் அடுத்த நிலை முயற்சி இதனுள் பொதிந்திருப்பதையும் மறுக்க முடியாது. சாவேஸின் இந்த முயற்சி சரியானதா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் கூறுவதற்கில்லை. அதே நேரத்தில், இதே நோக்கத்துக்காக மக்களின் அடிப்படைப் பிரச்னைக்குத் தொடர்பே இல்லாத விஷயங்களில் அதிரடி அறிவிப்புகளையும் கருத்துகளையும் வெளியிடுவது தேவையற்றதாகத் தோன்றுகிறது.

வெனிசூலாவை பொதுவுடைமைப் பாதையில் அழைத்துச் செல்லும் சாவேஸின் முயற்சிகளைக் குறை சொல்ல முடியாது. அதற்காக ஏஞ்சல் நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மொழியில் பெயர் வைப்பதும் விடியோ கேம்களுக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவிப்பதும் எந்த வகையில் பொதுவுடைமைக்கு உதவும் என்பது தெரியவில்லை.

அதேபோல, பார்பி பொம்மைகள் நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அவற்றுக்குப் பதிலாக உள்நாட்டுப் பொம்மைகளை உற்பத்தி செய்வதும் இப்போது தேவையற்றது. அது மக்களின் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே, சாவேஸின் காலை வாரிவிடச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியப் பத்திரிகைகள், இந்த மாதிரியான விஷயங்களில்தான் சாவேûஸ நையாண்டி செய்து கொண்டிருக்கின்றன.

1998-ல் சாவேஸ் ஆட்சிக்கு வந்தபோது லத்தீன் அமெரிக்காவில் இருந்த நிலை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது. வெனிசூலாவில் சாவேஸýம், பொலிவியாவில் அவரது தோழர் ஈவோ மாரல்ஸýம் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்ததால் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அணி வலுப்பெற்றது. பிரேசில், சிலி, ஈக்வடார், உருகுவே, பராகுவே என எல்லோருமாகச் சேர்ந்து சாவேஸின் கரத்தை வலுப்படுத்தினர்.

இப்போதைய நிலை வேறு. சிலியின் மிச்சல் பேக்லெட்டுக்குப் பதிலாக முதலாளித்துவக் கொள்கை கொண்ட புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வளரும் நாடுகளின் முன்னோடியாகக் கருதப்படும் பிரேசிலிலும் இதுபோன்றதொரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொலம்பியா போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளின் கூட்டணியும் லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. இது சாவேûஸ நிச்சயமாகப் பலவீனமடையச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

நிலைமை தலைகீழாக மாறியிருப்பதால், ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய நிலையில் சாவேஸ் இருக்கிறார். இதை மறந்து அமெரிக்க எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்பதற்காக தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு உள்நாட்டு மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தால், சாவேஸை தோழர்களே புறக்கணித்தாலும் ஆச்சரியமில்லை.



..
.


No comments: