Sunday, October 30, 2011

போதிதர்மனுடன் பிரபாகரனையும் விற்றவர்கள்!

ரோஜா படத்தில் இந்தியனை விற்று வியாபாரம் செய்தார் மணிரத்னம். எரியும் தேசியக் கொடியை அணைப்பதாக ஒரு காட்சி வைத்தார். கல்லாகட்டியது. இப்போது அந்த சீனை நம்மூரில் போட முடியாது. அதனால் இவர்கள் வியாபாரத்துக்கு எடுத்திருப்பது தமிழை. கூடவே தமிழனையும். 

தமிழைப் பற்றி உனக்கு என்ன தெரியும், தமிழ்னா இளக்காரமா என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்ததைப் போன்றே கதாநாயகி வசனம் பேசினாலும்கூட தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது. அந்தக் கணத்திலேயே கொடுத்த காசுக்கான ஆத்ம திருப்தியடைந்து விடுகிறான் தமிழன். எட்டு நாடுகள் சேர்ந்து ஒருத்தனை கொன்றதுக்குப் பேர் துரோகம் என்று பல்லை நறநறவெனக் கடித்து கதாநாயகன் ஆவேசப்படும்போது, நக்சலாக மாறி அந்த எட்டு நாடுகளையும் அழித்துவிடலாமா என்று கூட சாதாரணத் தமிழனுக்குத் தோன்றும்.

 பொதுவாக மணிரத்னம், விஜயகாந்த் போன்றவர்கள் தங்கள் படங்களில் இந்தியாவை மட்டும்தான் விற்பார்கள். தேவைக்காகப் பாகிஸ்தானைக் கொஞ்சம் இழுப்பார்கள். அல்லது தமிழனைப் பற்றி மட்டும் பேசுவார்கள். அதைக் காசாக்கிக்கொள்வார்கள்.

ஆனால் ஒரேபடத்தில் இரண்டையும் காட்டி எனது 120 ரூபாய் உள்பட தமிழனின் கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கும் தந்திரம் இந்தப்படத்தை உருவாக்கியவர்களுக்குத்தான் வாய்த்திருக்கிறது. ஒருபக்கம் சீனா, போதி தர்மன் என தேசப்பற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குக் குறுக்கு நெடுக்காக தமிழன் என்கிற இனப்பற்றையும் ஓட்டுகிறார்கள். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு உணர்வும் எழுந்தால் அந்த எட்டு நாட்டு கணக்கை எங்கு போய் எழுதுவீர்கள் என்கிற கேள்வியை சத்யம் ஏசியில் நமக்குக் கேட்கத் தோன்றவில்லை.

தமிழில் உலக சினிமா என்று விளம்பரப்படுத்தினார்கள். அதை நம்பித்தான் மொழிமாற்ற டிவிடிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு கார்னர் சீட் வாங்கி போனோம். ஆனா அவங்க நோக்கு வர்மத்தை நம்மிடமே காட்டிவிட்டார்கள். இப்போதுதான் தெரிகிறது. தமிழில் இது உருப்படாத சினிமா என்று. 

ஒழுங்கா ஜட்ஜ்மென்ட் டே படத்தை ரீப்ளே பார்த்திருக்கலாம். அதிலாவது அர்னால்டு அழகா தமிழ்ல பேசுவான். வில்லன் இதைவிட வேகமான நடந்து போவான். டிரைலர் லாரி இதைவிட பிரமாண்டமாக இருக்கும்.



..

2 comments:

வவ்வால் said...

ஹி..ஹி ரொம்ப நொந்துட்டிங்களோ!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!