Thursday, March 21, 2013

கொண்டாடவில்லையா?



இது நீர்த்துப் போன தீர்மானம்...

இந்தத் தீர்மானத்தால் எந்தப் பயனுமில்லை...

இது இலங்கைக்கு எதிரானது அல்ல...


சீனாவை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம்..

இந்தியா ஏமாற்றிவிட்டது...

இனப்படுகொலை என்ற சொல் இல்லை...

இப்படிக் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது...

இப்போது ஒருபடி மேலேறி, அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்கப் போகிறார்களாம்...

அமெரிக்கப் பொருள்களின் சில பட்டியல் இதோ. புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கலாம்... ஃபேஸ்புக், கூகுள், ஜிமெயில், விண்டோஸ், ஆண்ட்ராய்டு... அவ்வளவு ஏன்? இன்டர்நெட் முகவரிகளையே அவன்தான் தருகிறான். முடியுமா?


அப்படியே இலங்கைக்கு ஆதவாக தொடர்ந்து இயங்கிவரும் சீனாவையும், பிடல் காஸ்ட்ரோவையும், ரஷியாவையும், வெனிசுலாவையும் புறக்கணிக்க முடியுமா?

ஏன் இந்தக் குழப்பம்?

இலங்கை மீது புகார் தெரிவிக்கும் ஒரு தீர்மானம் உலக அரங்கில் அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தமிழர்களுக்கு ஆறுதல் ஏதுமில்லை இல்லை என்று பிரசாரம் செய்யப்படுவதைப் போல அறியாமை இருக்கவே முடியாது...

எல்லா நாட்டுக்கும் ஒரு சுயநலம் இருக்கும்... அதையும் கடந்துதான் நீதியைத் தேட வேண்டும்.

இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும், ராஜபட்ச சகோதரர்களை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. சரி. ஆனால் உடனடியாக அது சாத்தியமா?போராட்டங்கள் காரணமாக இந்தியாவே அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தால், அது வெற்றி பெற்றிருக்குமா? உண்மையில், இனப்படுகொலை என்ற வாசகத்தைச் சேர்திருந்தால், 10 நாடுகளின் ஆதரவு கூடக் கிடைத்திருக்காது... முட்டி முட்டித் தோல்வியைத்தான் சந்தித்திருக்க வேண்டும்...

இலங்கை தனிமைப்படுத்தப்படுவதாக சமரசிங்க தன் வாயாலேயே ஒப்புக்கொண்டார்... ஒருவேளை, கடுமையான தீர்மானம்தான் வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்திருந்தால், அதே சொல்லை தமிழர்கள்களை பயன்படுத்த வேண்டிய நிலை வந்திருக்கும்... இது உண்மையா இல்லையா?

அதன் பிறகு,  யாருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியும்?

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து கேட்ட மாத்திரத்திலேயே விசாரணை நடத்த ஐ.நா. உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஏன் தமிழர்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை என்று கேட்கிறார்கள்... அங்கே விசாரணை கோரியது இரு தரப்பும்தான்.. அதிலும் குறிப்பாக அரசுத் தரப்பு... அங்கே ஆட்சியில் இருப்பது சிறுபான்மை இனம்... போராடுவது பெரும்பான்மை இனம்... அதையும் இலங்கையையும் எப்படி ஒப்பிட முடியும்?

வேண்டுமென்றால், 5 நாடுகளிடமிருந்து விடுதலை கேட்கும் குர்திஷ்தானுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்...

பாலஸ்தீனம் நீண்டகாலமாக தனி நாடு என்ற அங்கீகாரம் கேட்டு வந்தது. கடைசியில், பார்வையாளர் அந்தஸ்து என்ற நிலைக்கு இறங்கி வந்ததும், மதம், இனம் என்று பாராமல், உலகமே அந்த நாட்டின் பின்னால் அணிவகுத்து நின்றது... லட்சக்கணக்கானோர் கொண்டாடினார்கள்... அடுத்த நிலைப் போராட்டத்தையும் தொடர்கிறார்கள்...

அந்தக் கொண்டாட்ட உணர்வு ஏன் தமிழர்களிடம் இல்லை... சிறு வெற்றிகளைக் கொண்டாடுவதும் போராட்டத்துக்கு ஊக்கமளிக்குமே?