Saturday, March 12, 2011
தினமலர் செய்திருக்கக் கூடாது!
ஜப்பானில் சுனாமியால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. சுனாமியின் பயங்கரத்தை நேரடியாக அறிந்தவர்கள் என்ற முறையில் ஜப்பான் சுனாமி காட்சிகளைப் பார்த்த தமிழகத்து மக்களுக்கு அனுதாபம் பிறந்திருக்கும். சுனாமியால் சொந்தங்களைப் பறிகொடுத்தவர்களுக்கு கண்ணீரே வந்திருக்கும். சுனாமியில் உயிர் பிழைத்தவர்களுக்கு பழைய பயங்கரமான மரண ஓலங்கள் நினைவுகள் வந்திருக்கும். சுனாமி செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு மார்ச்சுவரியில் கேட்ட அழுகுரல்கள் திரும்பவும் காதுகளில் ஒலித்திருக்கும். சுனாமியில் இறந்தவர்களை மொத்தமாக ஒரே குழியில் போட்டு புதைத்த படங்களை பத்திரிகையில் அப்போது பார்த்தவர்களுக்கு ஜப்பானின் சுனாமி அலைகள் மீண்டும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கும். நமது சொந்தங்களை கடல் அள்ளிச் சென்று 6 ஆண்டுகள்தானே ஆகியிருக்கிறது. அதற்குள் அதை எப்படி மறந்திருக்க முடியும்?
ஆனால், அதிகம் பேர் படிக்கும் ஜனரஞ்சகமான தினமலர் அதை மறந்துவிட்டது போலும். ஒரு இயற்கைச் சீற்றம் நடந்தால் அதை எப்படிச் செய்தியாக்க வேண்டும் என்பது ஒரு சுனாமி வந்து போனபிறகும் நமது பத்திரிகையாளர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்பது வேதனையளிக்கிறது. சுனாமி தாக்கிய நேரத்தில் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த பெண்களிடம் போய் மைக்கை நீட்டி "எப்படி உணர்ந்தீர்கள், இன்னொரு சுனாமி வந்தால் என்ன செய்வீர்கள்" என்று நமது தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் கேட்டார்களாம். அதை விட அருவெறுப்பாக கடந்த 12-ம் தேதியிட்ட தினமலர் முதல்பக்கம் இருந்தது.
சுனாமியால் பாதிக்கப்பட்டு குடிநீருக்காகவும், துணிகளுக்காகவும் கி.மீ. கணக்கில் வரிசையில் நிற்கும் ஜப்பானிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் இருக்கும் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. நெருக்கடியான தருணங்களைக் கடப்பதற்கு அவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
"ஏன் இந்த மக்களையே மீண்டும் மீண்டும் தாக்குகிறாய் இயற்கையே" என்று உலகமே கண்ணீர் வடிக்கிறது. சரி அந்த அளவுக்கு அனுதாபம் இல்லாவிட்டாலும், ஜப்பானில் உள்ள தமிழர்களுக்கு நிலையை நினைத்தாவது சுனாமி செய்தியை கவனமாக பிரசுரித்திருக்கலாம். ஆனால் முதல்வரின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையைும் சுனாமியையும் ஒப்பிட்டு எழுதியது பத்திரிகை தர்மத்தை மீறிய செயல்.
முதல்வரின் குடும்பம் சிபிஐ வளையத்துக்குள் வந்த செய்தி "இவர்களுக்கு நல்லா வேணும்" என்ற எண்ணத்தை பலருக்கு ஏற்படுத்தியிருக்கலாம். ஜப்பானியர்களை கொன்று குவித்த சுனாமி பற்றியும் தமிழன் அப்படித்தான் கேலியாக நினைக்கிறானா? நிச்சயமாக இருக்க முடியாது. தினமலர் மட்டும்தான் அறியாமல் செய்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஜப்பானில் வசிக்கும் தமிழர்களும், தினமலர் செய்தியைப் படித்த தமிழ் தெரிந்த ஜப்பானியர்களும் இந்த செய்திக்காக நம்மை மன்னிக்க வேண்டும்.
..
.
Subscribe to:
Posts (Atom)