Tuesday, February 14, 2012

அட்னானின் புதிய ஆயுதம்!


அவரது பெயர் காதர் அட்னான். வயது 33. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியுள்ள அராபே என்கிற கிராமத்தில் இருக்கிறது அவருடைய வீடு. ரன்டா என்ற மனைவி, இரண்டு - மூன்று வயதில் ஒரு குழந்தை என எல்லாம் வாய்க்கப் பெற்றவர் அவர்.

 பாலஸ்தீனத்தில் பலருக்கு நேரும் பயங்கரத்தை கடந்த டிசம்பர் 17-ம் தேதி அட்னான் சந்தித்தார். தடதடவென வீட்டுக்குள் புகுந்த இஸ்ரேலிய வீரர்கள், எந்தக் காரணமும் கூறாமல் அவரைக் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
 ராணுவ வாகனத்தின் மீது கல்லெறிவது முதல், கொலை செய்வது வரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் கைது செய்வது வழக்கம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிறகு சிறையில் அடைப்பார்கள்.

 ஆனால், அட்னானைப் பிடித்துச் சென்றபோது ராணுவத்தினர் எந்தக் காரணமும் கூறவில்லை. அவர் என்ன குற்றம் செய்தார் என்றும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்களே தவிர, விசாரணை எதுவும் நடக்கவில்லை. பல நாடுகளில் இருப்பதைப் போல பயங்ரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நிர்வாகத் தடுப்புக் காவல் சட்டத்தின்படி அவரைப் பிடித்திருப்பதாக மட்டும் தெரிவித்தார்கள். இந்தச் சட்டப்படி எந்த விசாரணையும் இன்றி 6 மாதங்கள்வரை சிறை வைக்க முடியும். தேவைப்பட்டால், காலவறையின்றி காவலை நீட்டிக்கவும் முடியும். பயங்கரவாதத்தை ஒழிக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் இதுபோன்ற சட்டங்கள் அவசியம் என்பது இஸ்ரேலின் கருத்து.

 பிடித்துச் செல்லப்பட்ட அட்னான், "இஸ்லாமிய ஜிகாத்' என்கிற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்று இஸ்ரேலிய தரப்பில் சொல்லப்பட்டது. அந்த அமைப்பின் தலைவரே அவர்தான் என்று சிலர் கூறுகின்றனர். செய்தித் தொடர்பாளராக இருந்தார் என்பது இன்னொரு வகையாரின் கூற்று.
 இஸ்ரேலைப் பொருத்தவரை, "இஸ்லாமிய ஜிகாத்' என்பது பயங்கரவாத முத்திரையிடப்பட்ட அமைப்பு. பாலஸ்தீன பிராந்தியத்தில் நடந்த பல்வேறு தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இந்த அமைப்பே காரணம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், அட்னான் அதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்பது தெரியாது.

 இஸ்லாமிய ஜிகாத் போன்ற அமைப்புகளுக்கு பாலஸ்தீனத்தில் குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கிறது. இஸ்ரேல் எதைப் பயங்கரவாதம் என்று சொல்கிறதோ, அதையே விடுதலைப் போராட்டம் என்கிறார்கள் பாலஸ்தீனர்களில் ஒரு பிரிவினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திணிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையில் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும்; பாலஸ்தீனம் சுதந்திர நாடாக இயங்க வேண்டும் என்பதெல்லாம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்களின் கோரிக்கை. பாலஸ்தீன விடுதலை என்று எளிதாகக் கூறிவிட்டாலும், மத ரீதியான, இன ரீதியான சிக்கலான, இந்தச் சிறிய இடத்தில் விவரிக்க முடியாத பல அம்சங்களை அது உள்ளடக்கியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 அட்னான்போல தடுப்புக் காவலில் பிடித்துச் செல்லப்படுபவர்களை வைப்பதற்காவே, மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் 3 சிறைகளை அமைத்திருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கப் படைகளில் சிறார் வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள், அவர்கள் தடுப்பு அரணாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதைப் போல, இந்தச் சிறைகளில் பாலஸ்தீன சிறுவர்கள் பின்புறம் கைவிலங்கிட்டு அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறது.

 இந்தச் சிறைகளில் ஒன்றுதான் ஆபர் சிறை. தடுப்புக் காவலில் பிடித்துச் செல்லப்பட்ட அட்னான் இங்குதான் அடைக்கப்பட்டார். பிடித்துச் செல்லப்பட்டபோது, தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட பிறரைப் போல எந்த எதிர்ப்பும் இல்லாமல் சிறையில் அடைபட்டுக் கிடந்திருந்தால், அவரைப் பற்றி எழுத வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர் இஸ்ரேலுக்கு எதிரான தனது புதிய ஆயுதத்தைக் கையிலெடுத்தார்.

 டிசம்பர் 17-ம் தேதி இஸ்ரேலிய ராணுவத்தினர் பிடித்துச் சென்றபோதே, தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அட்னான். தம்மையும், இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 300-க்கும் மேற்பட்டோரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.

 முதல் சில நாள்களில் இந்த உண்ணாவிரதத்தைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, மேற்குக் கரைப் பகுதியிலும் காஸô பகுதியிலும் இந்த விவரம் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இருபது நாள்களுக்கும் மேலாக அட்னான் தனது போராட்டத்தில் உறுதியாக இருந்ததால், பல இடங்களில் அவருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்தன.

 இப்போது, அட்னானின் உண்ணாவிரதம் இரண்டு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவரது உடல் எடை 27 கிலோ குறைந்துவிட்டதாக அவரது மனைவியும் வழக்கறிஞரும் கூறுகின்றனர். எழுந்து நிற்கவே திறனில்லாத நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், தோலின் நிறம் மாறிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய ராணுவமும் சிறை அதிகாரிகளும் அவரை மருத்துவமனையில் வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.

 அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், கட்டாயப்படுத்தி உணவைச் செலுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதற்கிடையே, சமூக வலைத் தளங்களான டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அட்னானுக்கு ஆதரவான கருத்துகள் குவியத் தொடங்கியிருக்கின்றன. அதே நேரத்தில் "ஒரு பயங்கரவாதி சாகட்டும் விட்டுவிடுங்கள்' என்பது போன்ற கருத்துகளுக்கும் பஞ்சமில்லை.

 பல நேரங்களில் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உண்ணாவிரதமிருந்தவர்கள் இறந்து போனதை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால், அவர்களில் பலர் வரலாற்றில் இடம்பிடித்ததுடன், புதிய போராட்டங்களுக்கும் வித்திட்டனர்.

 அட்னான் இதற்கு முன்பு ஆயுதம் எடுத்தாரோ என்னவோ தெரியாது. அப்படியொரு போராட்டத்தில் வெற்றி கிடைக்குமா என்பதும் நிச்சயமில்லை. இப்போது, நவீன உலகத்தை எதிர்கொள்ளும் வகையில், உண்ணாவிரதம் என்கிற புதிய ஆயுதத்தின் மூலம் இஸ்ரேலை அவர் மிரட்டியிருக்கிறார். உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்திருப்பதன் மூலம் தனது முயற்சியில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டார்.

..

..

1 comment:

Justin said...

Oh,, Ho,,, Appadiya Visayam?????