Tuesday, November 17, 2009

பொன்சேகாவை நம்பலாமா?

இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.

  இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம்.

   போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒற்றை வரியைக் கொண்டு, தம்மீது இருக்கும் “தமிழின அழிப்பு’ பாவத்தைக் கழுவ அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இதற்கு முந்தைய காலங்களில், அவரது பேச்சுகள் எதுவும் தமிழினத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மை மக்களிடம் கெஞ்சிப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்திருக்கிறது. ராணுவத் தளபதி என்கிற முறையில் சாதாரணமான யுத்த விதிகளைக்கூட மதிக்காமல், இன அழிப்பை நடத்தியதில் மற்றவர்களைக் காட்டிலும் இவருக்குத்தான் அதிகப் பங்கு இருந்திருக்க வேண்டும். இப்படிச் சில நாள்களுக்கு முன்பு வரை ராஜபட்ச சகோதரர்களுடன் கைகோர்த்து, ராணுவ அத்துமீறல்களுக்கு ஆதரவாக இருந்த பொன்சேகாவுக்கு, திடீரென தமிழர்கள் மீது பாசம் பொங்குவதற்கு பொதுநலக் காரணம் ஏதும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

  தமிழ் மக்கள் மத்தியில் அமைதியை உருவாக்காவிட்டால், மீண்டும் அவர்கள் கிளர்ந்து எழக்கூடும் என ராஜிநாமா கடிதத்தில் பொன்சேகா எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியது தாமே என்பதால், ஓய்வுக்குப் பிறகு தமக்குக் குண்டுதுளைக்காத கார், கவச வாகனங்கள் என பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்பதற்கும், தமிழினத்தை இலங்கை ராணுவம் பெருமளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதற்கும் அவரே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.

  ராஜபட்ச மற்றும் அவரது சகாக்களின் போர் உத்திகளும் ராஜதந்திர உத்திகளும் உலகத் தமிழ் சமூகம் எதிர்பார்க்காத அளவுக்கு வலுவானவையாக இருந்திருக்கின்றன என்பதை கடந்த சில மாத நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன. அவர்களது வெளிப்படையான ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பின்னால் மறைமுகக் காரணம் ஏதும் இருக்கலாம். இப்படியொரு சூழலில் பொன்சேகாவும் ராஜபட்சவும் அடித்துக் கொண்டு மாய்ந்து போவார்கள், அதனால் தமிழ்ச்சமூகத்துக்கு நீதிகிடைத்துவிடும் எனக் கருதுவது மிகத் தவறான கண்ணோட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.

   அதிகாரமற்ற பதவி வழங்கப்பட்டது என்பதைத் தவிர, பதவியில் இருந்து விலகுவதற்காக பொன்சேகா தெரிவித்திருக்கும் வேறு காரணங்கள் எவையும் நம்பும்படியாக இல்லை. ராணுவப் புரட்சி ஏற்படும் என அஞ்சி இந்தியாவின் தயவை நாடியதாகக் கூறப்படுவது உண்மையாகவே இருந்தாலும், அதை ராஜிநாமா கடிதத்தில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. “ராஜபட்ச என்னைக் கண்டு அஞ்சினார்’ என்ற கருத்தை ஏற்படுத்துவதற்கான உத்தியாகத்தான் இது கவனிக்கப்படுகிறது. மறுகுடியமர்த்தலில் அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுவதும் அப்பட்டமான அரசியல்தான்.

  உண்மையில், தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் போகிறேன் என்று கூறும் எந்த அரசியல்வாதியையும் சிங்கள மக்கள் ஆதரிக்கப் போவதில்லை. தமிழர்கள் மீது அதிக விரோதப் போக்கைக் கொண்டிருப்பவருக்குத்தான் சிங்களர்களிடையே அதிக ஆதரவு இருக்கும். அந்த அளவுக்கு இரு இனங்களிடையே கசப்புணர்வு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சிங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்போது ஆட்சியிலிருப்போரும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களும் இந்த வெறுப்பைத்தான் சிங்கள வாக்குகளைக் கவரும் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தினர். இனியொரு தேர்தல் வரும்போதுகூட, ராஜபட்ச, பொன்சேகா உள்ளிட்ட என யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் குறைந்தபட்ச செல்வாக்குக்கூடச் செலுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.

 பொன்சேகா ராஜிநாமாவால் தமிழர்களுக்கு ஓரளவு கிடைக்க வேண்டிய ஆதரவும் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிரான பொது வேட்பாளராக பொன்சேகா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க போட்டியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். ராஜபட்ச, பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டியிருக்கும். இந்த இருவரும் சீனா, இந்தியா போன்ற பிராந்தியப் பெருந்தலைகளுடன் மிக நெருக்கமாக இருப்பதால், தமிழர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈழ விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாமல் போகும்.

  ஒருவேளை ராஜபட்ச, பொன்சேகா தவிர ரணில் போன்ற வேறொருவர் களத்தில் இறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் தமிழர்கள் வாக்களிப்பதில் ஒரு அர்த்தமிருக்கும். மற்ற நாடுகளில் இருப்பதைப் போன்று சிறுபான்மை வாக்கு வங்கியை ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தவும் முடியும்.

   இதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. புலிகளுடனான போரில் கிடைத்த வெற்றியின் மூலம் ஏகத்துக்கும் உயர்ந்துபோன தனது செல்வாக்கைக் கொண்டு தேர்தலைச் சந்திப்பதற்கு ராஜபட்ச திட்டமிட்டது என்னவோ உண்மைதான். ஆனால், பொன்சேகா தனது அரசியல் ஆசைகளை அவசரப்பட்டு வெளியிட்டிருப்பதால், இப்போதைய சூழலில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்துவது தேவையற்றது என ராஜபட்ச உணர்ந்திருப்பார். ராஜபட்ச-பொன்சேகா மோதலால் இன்னும் சில உண்மைகள் வெளிவரலாம். ஆனால், நீதி கிடைத்துவிடும் என அப்பாவித்தனமாகக் கூறிக் கொண்டிருக்க முடியாது.

மத்திய கிழக்கில் யுத்த வாசனை!

உலகில் எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு பட்டியல் இருக்கிறது. ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை விவகாரம் வெளியான பிறகு இதுபோன்ற பட்டியலுக்கும் உண்மை நிலைக்கும் தொடர்பே இல்லை என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அண்மையில் ஒரு செய்தி மத்திய கிழக்கில் இருந்து வந்திருக்கிறது.

  சிரியா அதிகாரப்பூர்வமான அணுஆயுத நாடல்ல. ஆனால், இந்த நாட்டில் ஓர் அணுஉலை இருந்ததாகவும், அதனை இரு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை தகர்த்துவிட்டதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. எந்த மாதிரியான உத்திகளைப் பயன்படுத்தி இந்த அணுஉலை தகர்க்கப்பட்டது என்பதும் கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.

  சிரியாவின் உயர் அதிகாரி ஒருவர் ஹோட்டல் அறையில் தனது லேப்டாப் கணினியை விட்டுச் சென்றிருக்கிறார். அதில் "மால்வேர்' எனப்படும் நச்சு நிரல்களைப் பதிவு செய்து சிரியாவின் நடவடிக்கைகளைக் கண்காணித்திருக்கிறது இஸ்ரேலின் மொஸôத். இப்படித் தெளிவான விவரங்கள் கட்டுரையாக வெளியாகி இருப்பதால், சிரியாவில் ஓர் அணுஉலை இருந்ததும், அதை இஸ்ரேலிய விமானங்கள் தரைமட்டமாக்கியதும் உண்மையாகவே கருதப்படுகின்றன.

  அப்படியானால், இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது அணு உலை தகர்க்கப்பட்டபோது சிரியா என்னதான் செய்து கொண்டிருந்தது? நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசியதை சிரியா ஏன் பகிரங்கமாக அறிவிக்கவில்லை? திருடனுக்குத் தேள் கொட்டியது என்பார்களே அதே கதைதான்.

  சிரியா, ஈரான், வடகொரியா ஆகியவை கூட்டாளிகள். இவை மூன்றும் ஏ.க்யூ.கானின் கள்ளச்சந்தை வலையின் அங்கங்கள். அந்த உறவின் அடிப்படையில்தான் 2004-ம் ஆண்டிலேயே வடகொரியாவிலிருந்து அணு மூலப்பொருள்களையும் தொழில்நுட்பங்களையும் சிரியா பெற்றிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய இந்த நடவடிக்கைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகக்தான் சிரியா எந்தப் பதில் தாக்குதலையும் நடத்தவில்லை என்பது தெரிகிறது. ஆனால், இதுபோன்ற வெளிவராத மர்மங்கள் உலகமெங்கும் இருக்கக்கூடும் என்பதுதான் ஆபத்தான விஷயம்.

  ஏற்கெனவே, கசப்பு நிறைந்த மத்திய கிழக்கு உறவுகளில் அணு ஆயுதங்கள் நுழைவது உலகுக்கு உகந்ததல்ல. அதுவும் ஹமாஸýம் ஹிஸ்புல்லாவும் பிராந்திய அரசியல் சூழலை நிர்ணயிக்கும் கருவிகளாக இருக்கும்போது, அணு ஆயுதங்கள் பொறுப்பற்றவர்களின் கைகளுக்குப் போகும் வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு பெரிய அபாயம் இருப்பதால், நட்புறவுடன் இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச அரசியல் உறவுகளையாவது மேம்படுத்த இந்த நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்பதுதான் நடுநிலை அரசுகளின் எதிர்பார்ப்பு. ஆனால், இப்போதைய செய்திகள் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக இல்லை.

  இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என எத்தனையோ முறை ஈரானியத் தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். சிரியா மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் இருக்கும் நெருங்கிய உறவைக் கொண்டு இன்னொரு "யூத அழிப்பை' நடத்துவதற்கு ஈரான் திட்டமிடுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது.

  இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய தரைக்கடலில் ஈரானிலிருந்து சிரியாவுக்கு வந்த "ஆயுதக் கப்பலை' சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறது இஸ்ரேல். அந்தக் கப்பலில் இருந்து நவீன ரக ராக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால், இது வெறும் தானியக் கப்பல் என்று சிரியாவும் ஈரானும் மறுத்திருக்கின்றன.

  இன்னொரு பக்கம், லெபனானில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அரசு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் தோற்றுப்போனார்கள். ஆனாலும், அரசில் தங்களுக்குப் போதிய இடமளித்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என ஹிஸ்புல்லா நெருக்கடி கொடுத்து வந்தது. இதனால், வெற்றி பெற்ற அணியினரால் அரசு அமைக்க முடியவில்லை. இப்போது வேறு வழியின்றி, ஹிஸ்புல்லா அணியினருக்கும் அரசில் இடமளிக்க வெற்றி பெற்ற கூட்டணி ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்த "மிரட்டலுக்கு'ப் பின்னால், சிரியாவும் ஈரானும் இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

  ஹமாஸ் தரப்பிலிருந்தும் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றனர். எல்லையையும், எல்லையோர நகரங்களையும் ராக்கெட் தாக்குதல் நடத்தி இஸ்ரேலைச் சீண்டி வந்த இவர்கள், புதிய வகை ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் சோதனை செய்திருக்கிறார்கள். இந்த ராக்கெட்டுகளைக் கொண்டு, டெல் அவிவ் நகர்வரை தாக்க முடியும். பாலஸ்தீனப் பகுதிகளில் யூதர்களைக் குடியமர்த்துவதை நிறுத்தாவிட்டால், இஸ்ரேலைத் தாக்குவோம் எனவும் ஹமாஸ் எச்சரித்துள்ளது.

  பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ஃபதா கட்சியின் முகமது அப்பாஸ் போட்டியிட மாட்டார் எனத் தெரிகிறது. இஸ்ரேலுடன் ஓரளவு நல்லுறவைப் பேணிவரும் இவர், ஆட்சியிலிருந்து போய்விட்டால், மேற்குக் கரையிலிருந்தும் இஸ்ரேலுக்கு நெருக்கடி வரப்போவது உறுதி.

  ஈரான், சிரியா, லெபனான், காஸô, மேற்குக்கரை எனப் பல பக்கத்திலிருந்தும் நெருக்கடி வந்தால், இஸ்ரேல் தனது மேற்கத்திய தோழமையுடன் கூடிய முழு பலத்துடன் தாக்குதல் நடத்தும். அது பிராந்திய அளவிலான பெரும் போருக்கு வழிவகுக்கும். இன்றைக்கு இந்தப் போர் ஏற்படுவதற்கான எல்லாச் சூழலும் இருப்பதாகவே தெரிகிறது. யாரும் இறங்கி வராத நிலை தொடர்ந்தால், உலகமே நினைத்தால்கூட, பிராந்தியப் பதற்றத்தை மட்டுமல்ல, "யூத அழிப்பை' கூடத் தவிர்க்க முடியாது.