Sunday, July 31, 2011

எகிப்து புரட்சியும் மக்களாட்சியும்

எகிப்து மீண்டும் ஒரு குழப்பமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஹோஸ்னி முபாரக் தப்பி ஓடியதுமே வெற்றி கிடைத்ததாக முழங்கப்பட்டது. ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கு அவகாசம் கேட்டார்கள். அந்த அவகாசம் முடிவடையும் காலம் நெருங்கிவிட்டது.

இப்போது மீண்டும் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. தாஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மனிதத் தலைகள் நிரம்பியிருக்கின்றன. கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன.

சொகுசு மருத்துவமனையில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஹோஸ்னி முபாரக், அவரது இரு மகன்கள் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கைகளில் சுணக்கம் ஏன் என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தலை நடத்துவதில் என்ன தயக்கம் என்று கேட்கிறார்கள்.

நாசர் காலத்து வரலாற்றுப் பாடத்தை இது நினைவூட்டுகிறது. இப்போது ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைதான், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பரம்பரை மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய நாசருக்கும் ஏற்பட்டது. அவர் துணிச்சலாக முடிவெடுத்தார்.

தேர்தலை நடத்தினால் தம்மால் வெற்றி பெற முடியாது; ராணுவ ஆட்சியே தமது கனவுகளைச் செயல்படுத்தும் ஒரே வழி என்று தீர்மானித்தார்; அரசியல் கட்சிகளை ஒழித்தார்; தேர்தல் கூடாதென்றார்; அடிப்படை உரிமைகளை முடக்கினார். ஒரே நாளில் எகிப்து ராணுவ ஆட்சியின் கீழ் வந்தது. சாகும்வரை நாசர் அதிபராக இருந்தார்.

இப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் நாசரைப் போன்று தடாலடியான முடிவெடுக்கக்கூடியவர்கள் அல்லர். ஏற்கெனவே முடிவெடுத்தபடி இன்னும் ஓரிரண்டு மாதங்களில் தேர்தலை நடத்திவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், இந்தத் தேர்தல் மக்களாட்சி கோரி, போராட்டம் நடத்திய எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

மக்களாட்சி என்பதே 49 சதவீதம் பேரின் உரிமையை 51 சதவீதம் பேர் பறிப்பதுதான் என்பார் அமெரிக்காவின் தேசத் தந்தைகளுள் ஒருவரான தாமஸ் ஜெபர்சன். அந்த வகையில், போராட்டம் நடத்திய அனைவருமே தங்களுக்கு ஆதரவான அரசு அமையும் என்று எதிர்பார்க்கக்கூடாதுதான். ஆனால், போராட்டத்தை முன்னின்று நடத்திய எல்பரதே போன்றவர்களின் விருப்பத்துக்கு எதிரான அரசுதான் அமையக்கூடும் என்பது கொஞ்சம் நெருடலானது. அதிபராவார் என்று கருதப்பட்ட எல்பரதேக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

அண்மையில் அல்-ஜசீரா நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இப்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் "பிரதர்ஹுட்' அமைப்பின் சுதந்திர மற்றும் நீதிக் கட்சிக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. சலஃபி கட்சிக்கு 27 சதவீத இடங்கள் கிடைக்கலாம் என்றும் அல்-ஜசீரா கணித்திருக்கிறது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லை, வாக்குரிமை பெற்ற 34 சதவீதம் பேர் படிப்பறிவற்றவர்கள் என்பதெல்லாம் இவர்களுக்குச் சாதகம் என்று கூறப்படுகிறது.

பொதுவான கருத்துப்படி, இரண்டுமே பழமைவாதக் கட்சிகள்தான் என்பதால், கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது. எந்த வகையில் பார்த்தாலும் தேர்தல் நடந்தால், எகிப்தில் அமையப்போவது பழமைவாத அமைப்புகளின் ஆட்சிதான்.

இது மதச்சார்பற்ற இயக்கங்களுக்கு கசப்பான சேதி. மக்களாட்சி வேண்டும் என்று போராட்டம் நடத்திய அவர்கள், பழமைவாத அமைப்புகளின் கையில் ஆட்சிப் பொறுப்பு செல்வதை விரும்பவேயில்லை. இப்படியொரு நிலை ஏற்பட்டால், ஹோஸ்னி முபாரக்கே ஆட்சி செய்துவிட்டுப் போயிருக்கலாம் என்றுகூட அவர்கள் நினைப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இப்போது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தாஹ்ரீர் சதுக்கத்தை முற்றுகையிட்டிருப்போரில் மதச்சார்பற்ற இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரையும் காண முடியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

சலஃபி, நீதிக்கட்சியினர்தான் போராட்டத்தை நடத்துகிறார்களாம். அந்த அளவுக்குத் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளை நினைத்து மதச்சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்போதே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள் போலும்.

அவர்களது அச்சம் ஒருபுறம் இருக்கட்டும். எகிப்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்தால் வேறு மாதிரியான அடையாளச் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நான்காண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு தேர்தல் பாலஸ்தீனத்திலும் நடந்தது. பயங்கரவாதிகள் என்று மேற்கத்திய அரசுகளால் முத்திரை குத்தப்பட்ட "ஹமாஸ்' இயக்கம் அந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை எதிர்பாராத இஸ்ரேலும், அமெரிக்கா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்தை தீண்டத்தகாத நாடாகப் பார்க்கத் தொடங்கின. ஹமாஸ் இல்லாத பாலஸ்தீனத்துடன்தான் பேச்சு என்கிற சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்தன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு புறக்கணிக்கப்பட்டது. ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளெல்லாம் சேர்ந்து மக்களாட்சியைத் தோற்கடித்தன. இது பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. 1990-களின் தொடக்கத்தில் அல்ஜீரியாவிலும் இதுபோன்றே மேற்கத்திய நாடுகளால் மக்களாட்சி முடக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இதே நிலைதான் எகிப்திலும். அடிப்படைவாத அமைப்புகளாகக் கருதப்படும் பிரதர்ஹுட்டும், சலஃபியும் ஆட்சியமைத்தால், அந்த அரசுக்கு நிச்சயமாக மேற்கத்திய ஆதரவு கிடைக்காது. உள்ளூர் "மதச்சார்பற்ற' அமைப்புகளின் ஆதரவும் இருக்காது. ஈரான், வடகொரியா மாதிரியான தேசமாகப் பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

எது எப்படியோ, மக்களாட்சிக்கு வருவது என்பது தீர்மானித்தாகிவிட்டது. முடிவு எப்படியிருந்தாலும் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இன்னொரு சவூதி அரேபியாவோ, துருக்கியோ, இந்தோனேஷியாவோ உருவாவதில் தவறில்லை. ஆனால், அல்ஜீரியாவோ, பாலஸ்தீனமோ வேண்டாம்.

இப்போது மக்களாட்சி வேண்டும் என்று கோரும் பிரதர்ஹுட் அமைப்பு 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே எகிப்தில் தேர்தலை ரத்து செய்ய நாசருக்கு உதவியது. மேற்கத்திய நாடுகள்அல்ஜீரியாவிலும், பாலஸ்தீனத்திலும் இதைச் செய்தன. இன்னொரு முறை அதுபோன்ற வரலாற்றுப் பிழையைச் செய்தால் மக்களாட்சியின் காவலர்கள் என்று கூறிக் கொள்வதில் அர்த்தமேயில்லை.
..

..

Friday, July 29, 2011

சமச்சீர் கல்வியா, சாதா கல்வியா... குழப்பியது யார்?


 சமச்சீர் கல்வியா, சாதா கல்வி வேண்டுமா என்று இப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் போய்க்கேட்டால் வெறுத்துப் போய்... ஏதாவது ஒன்றைக் கொடு என்றுதான் கேட்பார்கள். ஆனால் இந்த இரண்டு மாதங்களும் எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று மாணவர்களையும், எதைச் சொல்லித் தருவது என்று ஆசிரியர்களையும் குழுப்பியது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் குழப்பத்துக்கும் தாமதத்துக்கும் ஜெயலலிதாவை மட்டும் குறை சொன்னால் ஏற்க முடியாது. ஜெயலலிதா பதவிக்கு வரும்போதே அனைவருக்கும் தெரியும் அவர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியை விட்டு வைக்கமாட்டார் என்று.  அரசின் போக்கிலேயே விட்டிருந்தால் இந்நேரம் காலாண்டுப் பரீட்சை போர்ஷன் முடிந்திருக்கும்.
அண்மையில் சமச்சீர் கல்வி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் ஒருவர் பேட்டியளித்திருந்தார். சமச்சீர் கல்வியை ஏன் வலியுறுத்துகிறீர்கள் என்று நமது நட்புவட்டச் செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். "கல்வியில் எதிலுமே இல்லை, புத்தகத்திலாவது சமச்சீர்" இருக்கட்டுமே என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

இது நல்ல நகைச்சுவை. எல்லோரும் சொல்வது போல இது சமச்சீர் கல்வியல்ல சமச்சீர் பாடப்புத்தகங்கள் மட்டுமே. மற்றபடி கல்வியெல்லாம் சாதா கல்விதான். அதாவது அரசுப் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் சாதா கல்வியும் கிடைக்கும். மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் ஸ்பெஷல் சாதா கல்வியும் கிடைக்கும்.

 சமச்சீர் கல்வி என்பதை பாடப்புத்தகத்தில் இருந்தான் தொடங்க வேண்டும் என்று யோசனை சொன்னவருக்கும் இப்போது அதற்காகப் போராடுவோருக்கும் உண்மையிலேயே "சமச்சீர்" அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இருக்க வேண்டும், அவர்கள் இப்போது இருக்கும் பாடத்தை சரியாக நடத்த வேண்டும். கட்டடங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட வேண்டும், கொடுக்கப்படும் மதிய உணவு தரமாக இருக்க வேண்டும், ஆசிரியர்கள் நேரந்தவறாமல் வகுப்புக்குச் செல்ல வேண்டும் இதெல்லாம் சரியாக இருந்தால்தான் பாடப்புத்தகத்தையே மாணவன் திறப்பான்.

 இந்தக் கிராமப்புற மாணவனைப் பற்றியெல்லாம் சமச்சீர் கல்வி வேண்டும் என்போருக்கும், வேண்டாம் என்போருக்கும், போராட்டம் நடத்துவோருக்கும் எந்த அக்கறையும் இல்லை. சமச்சீர் கல்வியின் ஒரே நோக்கம் தனியார் பள்ளிகள் லாபமடைவதை தடுக்க வேண்டும் என்பதுதான். அதனால் ஏழை மாணவனுக்கு என்ன லாபம்?

இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் விற்பனை வரியின் சிறு பகுதியை கல்விக்காகத் திருப்பி விட்டாலே அரசுப் பள்ளிகள் அனைத்தையும்  உலகத் தரத்துக்கு மாற்றிவிடலாம். பிறகு யார் தனியார் பள்ளியைத் தேடிச் செல்லப் போகிறார்கள்.  அடிப்படை அமைப்பிலேயே பிரச்னையை வைத்துக்கொண்டு, புத்தகத்தை மாற்றிக் கொடுத்தால் - அதுவும் மட்டமான -  யாருக்கு என்ன பயன்?

இதற்காகச் ஜெயலலிதாவை எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டுவிட்டு எல்லோரும் கைவைக்கத் தயங்கும், கைநீட்டிப் பேசினாலே விமர்சனத்துக்குள்ளாக வேண்டிவரும் என்று அஞ்சும் பெருமதிப்புக்குரிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் "அதே தரத்துடன்" அப்படியே இருப்பார்களாம்... கட்டடங்கள் அப்படியே இருக்குமாம்...  நிர்வாகமும் "அதே வேகத்துடன்" நடக்குமாம்... புத்தகத்தை மட்டும் மாற்றி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்துவிடுவார்களாம்... ஏனய்யா இந்த தலைகீழ் வளர்ச்சி?

சூ மந்திர காளி!
..
.

Thursday, July 14, 2011

சங்ககராவின் "இனப் படுகொலை'


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை எவ்வளவு கொடூரமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசிக் கொன்றது. பிடிபட்டவர்களையும் சரணடைய வந்தவர்களையும் சித்திரவதை செய்தது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். கண்களைக் கட்டி, நிர்வாணப்படுத்திக் கொன்றது, உடலெல்லாம் கத்தியால் கீறி கழுத்தை அறுத்தது என உச்சகட்ட மனிதஉரிமை மீறல் நடந்திருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் இலங்கை அரசும் அதன் ராணுவமும் தங்களது தவறுகளை நியாயப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.

ராஜதந்திர வளையங்களில் ஒருபக்கம் இவர்களது சதிவேலை நடந்து கொண்டிருக்க, இன்னொருபக்கம் சேனல்-4 தொலைக்காட்சியை மிரட்டுவது, எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது போன்ற பிறவற்றையும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.

எத்தனை ஆதாரங்களை வெளியிட்டாலும் அவையெல்லாம் போலி என்பது போலத் திரித்துப் பேசுகின்றனர். எல்லாம் தேச நலனுக்காகச் செய்யப்பட்டதுதான் என்பதுபோல புனையப்படுகிறது. தேச ஒருமைப்பாடு என்பதை இனப் படுகொலையை மறைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி.

இலங்கையின் இந்த முயற்சிக்கு கிரிக்கெட் வீரர் சங்ககராவும் உதவப் புறப்பட்டிருக்கிறார். அதுவும் சர்வதேச அரங்கில். கிரிக்கெட் தொடர்பான பேச்சு என்கிற போர்வையில். அண்மையில் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெüட்ரி நினைவு கிரிக்கெட் உரையில் தனது விஷமத்தனத்தை வஞ்சகமாக அரங்கேற்றினார் சங்ககரா.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீடித்த அவரது பேச்சு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை குறைகூறுவதாகவே கவனிக்கப்பட்டது. அதை மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் முன்னிலைப்படுத்தின. அதனால், அவரது பேச்சில் ஆங்காங்கே இலங்கை இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வசனங்கள் இருந்தது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றைப் பற்றிப் பேசிய சங்ககரா, கடந்த 30 ஆண்டுகளாக இருந்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது என்று கூறி இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஒரே வரியில் கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஏதோ நியாயமற்ற காரணங்களுக்காகவும் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கிலுமே இந்தப் போராட்டங்களெல்லாம் நடந்ததாகக் கூறுவது போல அவரது பேச்சு இருந்தது.

இலங்கையில் நடந்த உச்சகட்டப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ராணுவம் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்ததாகக் கூறிய அவர், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிடவேயில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை.

போர் நடந்து முடிந்த பிறகும் பல்லாயிரக் கணக்கானோர் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். உணவும், மருத்துவவசதியும் இல்லாமல் அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். மர்மமான வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

போரிலும் போருக்குப் பிந்தைய ராணுவ நடவடிக்கைகளாலும் சொந்தங்களை இழந்தவர்களின் நெஞ்சங்களில் ஆறாத வடு ஏற்பட்டிருக்கிறது. உடல் ஊனமாகி நடைபிணமாக வாழ வேண்டிய நிர்பந்தம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சங்ககராவின் நினைவில் இல்லை போலும்.

போர் நடந்த பகுதிகள் மட்டுமல்லாமல் கொழும்பு போன்ற போர்முனைக்குச் சம்பந்தமில்லாத நகரங்களிலும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; குண்டுகள் போடப்பட்டன என்றுதான் அவர் குற்றம்சாட்டினார்.

அதுபோலவே, பெரும்பாலான இடங்களில் பயங்கரவாதம், "பயங்கரவாதிகள்' என்கிற சொல்லையே இவர் பயன்படுத்தியிருக்கிறார்.

சரி, சங்ககராவிடம் இருந்து இதைத்தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று கேட்கலாம். எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவரது பேச்சுக்கு தமிழர்கள் மத்தியிலிருந்து சலசலப்புகூட கிளம்பவில்லை என்பதுதான் வேதனை.

சங்ககராவின் பேச்சுக்கு மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அவர்கள் கைதட்டியது, கிரிக்கெட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தம் பற்றிய கருத்துகளுக்காக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால், அந்தப் பேச்சில் கூறப்பட்ட தமிழர் இனப்படுகொலை தொடர்பான கருத்துகளுக்கும் கிரிக்கெட் உலகமே ஆதரவு தெரிவித்தது போலல்லவா ஆகியிருக்கிறது. இதுவே இனப் படுகொலைக்கு அங்கீகாரமாயிற்றே!

ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, உலகமே உற்று நோக்கக்கூடிய ஓர் உரையில் இந்த இடைச் செருகல்கள் எப்படி வந்தன? தனது கிரிக்கெட் வாரியத்தையே சர்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டி, இந்தப்பேச்சை சங்ககரா பரபரப்பாக்கியது ஏன் என்பதற்கெல்லாம், "இனப்படுகொலையை நியாயப்படுத்தும் திட்டமிட்ட முயற்சி' என்பதைத் தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும்? இலங்கை ராணுவத்தின் புகழை உயர்த்திவிட்டதாக கோத்தபய ராஜபட்ச பாராட்டியிருப்பதற்கும் அதுதானே காரணம்.

1980-களில் தாம் சிறுவனாக இருந்தபோது வன்முறைகள் நடந்ததாகவும், அதில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தனது வீட்டில் தங்குவதற்கு தனது தந்தை இடமளித்து வந்தார் என்றும் தனது பேச்சில் சங்ககரா குறிப்பிட்டார்.

அந்த மனிதாபிமானம்கூட உங்களிடம் இல்லையே சங்ககரா!

..
.

Saturday, July 09, 2011

சமச்சீர் பாடத்திட்டம்தான் வேண்டும்; இந்த ஜிகினா குப்பையல்ல!

ஜெயலலிதா நல்லவர், சுதந்திரப் போராட்டத் தியாகி. ஊழலைப் பொறுக்க மாட்டாதவர் என்று எழுதலாம். கருணாநிதி அப்பழுக்கற்றவர், மொழிப்போர்த் தளபதி. ஊருக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்றுகூட எழுதலாம். அதையெல்லாம் நாம் கேட்கப்போவதில்லை.  ஊடகங்களில் எழுதுவதைவிடவா பாடப்புத்தகங்களில் மோசமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் எழுதிவிட முடியும்?

பிஞ்சிலேயே நஞ்சை விதைக்கலாமா, மோசமானவர்களை நல்லவர்கள் போல பாடப்புத்தகங்களில் சித்திரிக்கலாமா என்று கூறும் வாதத்தைக்கூட நாம் முன்வைக்கபோவதில்லை. நம்முடைய வாதம், வைக்கப்பட்டிருக்கும் உள்ளடக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி மட்டுமே.

சமச்சீர் கல்வி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டால் வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் கூரைப் பள்ளியிலும் மரத்தடியிலும் போரடிக்கும் பாடத்தைப் படித்து வந்தவன்தான். அப்படியொரு மட்டமான பாடத்திட்டத்தை நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.

இப்போது, சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமாக இல்லை என்று ஒரு பிரிவினரும், தரமாக இருக்கிறது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். சிலர் தரமாக இல்லை என்று கூறுவதன் பின்னணி அதை முடக்கிவிடுவதாகக் கூட இருக்கலாம். அதேபோல் தரமாக இருக்கிறது என்று கூறும் சிலருக்கு அரசியல் சார்பு இருக்கலாம். நமக்கு இந்த இரண்டும் இல்லை. நமக்கு ஒரேயொரு நோக்கம் தரமான கல்வியும் பாடப்புத்தகமும் அரசுப் பள்ளிகளிலேயே இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி என்னதான் அந்தப் பாடப்புத்தகங்களில் சிறப்பாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தைப் புரட்டினேன். அட அசிங்கமே! குழந்தைகளுக்கான பாடப்புத்தகம் எப்படி இருக்கக்கூடாது என்று நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து இத்தனை காலமும் நினைத்து வந்தேனோ அதே புத்தகம்தான் கொஞ்சம் கலர் கலராக மீண்டும். ஜிகினா குப்பை

 ஏனோதானோவென்று வரையப்பட்ட மேப்களைப் பார்க்கும்போது பற்றிக் கொண்டு வருகிறது. அதே பேப்பர், அதே வண்ணங்களைக் கொண்டு,  கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தைகளுக்கு அருமையான மேப்பை தர முடியும் இதைக்கூட அந்தப் புத்தகத்தில் பார்க்க முடியவில்லை. ஒரு மேப் மட்டுமல்ல அந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மேப்களுமே தலைப்பை எந்த வகையிலும் வெளிப்படுத்தாத வகையில்தான் வரையப்பட்டிருக்கின்றன. அதை வரைந்த பிரகஸ்பதியைக் கூப்பிட்டு பெஞ்ச் மேல்தான் ஏற்ற வேண்டும். அல்லது முழங்கால் போடச் சொல்ல வேண்டும்.

 ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விப் பகுதி என்கிற ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் டிட்டோ. அந்தப் பாடத்தை பத்தி பத்தியாக மனப்பாடம் செய்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். பாடத்தை மாணவர்கள் ஆர்வமாகப் படித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருப்பது தெரிகிறது.

என்சிஇஆர்டி புத்தகம்

ஒவ்வொரு பாடமும் ஏதோ ஆய்வுக் கட்டுரை போல "தேமே" என்பது போன்ற தூக்கம்தரும் நடையில் எழுதப்பட்டிருக்கிறது. ரஷிய மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதைப் போன்ற ஒரு உணர்வு. கொஞ்ச நஞ்சம் வரலாறு படிக்கும் ஆர்வமுள்ள மாணவனைக்கூட இந்தக் கட்டுரை நடையிலான பாடங்கள் தடுத்துவிடும் என்பதில் துளிகூட சந்தேகமேயில்லை.

எடுத்துக் காட்டுக்கு ஜெர்மனியில் நாசிஸம் பரவுவதைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் வரும் பாடம். இந்தப் பாடத்தையும் என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு பாடத்தின் 3-வது பாடத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சமச்சீர் லட்சணம் புரியும்.  சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் தரமானவை என்று குரல் கொடுத்து வரும் அனைவரும் இந்த இரு பாடங்களையும் படிக்க வேண்டும். அப்புறம்தான் வினவ வேண்டும்.எவ்வளவு வேண்டுமானாலும் வினவுங்கள். போராடுங்கள்.


சமச்சீர் கல்வி சமூக அறிவியல் முதல் பாகம்

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு ஹிட்லர் பாடம்


திறமையே இல்லாத ஒருவர் ஐஐடியில் பணியாற்றலாம். குப்பம்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் காரிப் சுழற்சியை பிரித்து மேய்பவராக இருக்கலாம். அந்த வகையில், இப்போதிருக்கும் குழுவே கூட திறமையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால், அவர்களது திறமை சமூக அறிவியல் பாடத்தில் வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னொரு உறுத்தலும் இருக்கிறது. சமூக அறிவியலின் அனைத்துப் பாடங்களிலும் ஈ.வே.ரா. பெரியார் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். இது வெறும் எழுத்துப் பிழைதானே என்று எடுத்துக் கொண்டு போவோர்கள், இதே பாடப்புத்தங்களையே இன்னும் நூற்றாண்டுகளுக்கும் வைத்திருக்கட்டும். இப்போது மெட்ரிக் பள்ளிகள் வைத்திருப்போரெல்லாம் சிபிஎஸ்சிக்கும் ஐசிஎஸ்சிக்கும் மாறட்டும்.  ஜிகினா குப்பையில் இருந்து விடுபடுவதற்காகவும் தரமான கல்விக்காகவும் மாதச் சம்பளத்தையெல்லாம் தனியாரிடம்  கொட்டி, விதியே என நாம் அழுதிருப்போம்.

.

.
.

Sunday, July 03, 2011

பத்மநாபர் கோயில், ஆதிக்க சாதியின் சுவிஸ் வங்கி!

முன்குறிப்பு: இங்கே ஆதிக்க சாதி என்று குறிப்பிடப்படுவது அந்தக் காலத்தைப் பற்றி மட்டுமே. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது. 
 --------------

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள சுரங்க அறைகளின் மர்மம் விலக்கப்பட்டிருக்கிறது. தங்கம், வைரம் என என ரூ.50 ஆயிரம் கோடி அந்த அறைகளில் இத்தனை காலமும் பூட்டிக் கிடந்திருக்கிறது. நம் மக்கள் வழக்கம்போல் இன்னும் ஆச்சரியத்திலிருந்து விடுபடவில்லை.இது யாருக்குச் சொந்தம் என்று இப்போது கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை கோடியைக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிலர் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று "மதச்சார்பற்றவர்கள்" பேசுகிறார்கள். "மதவாதிகளுக்கு" கோயிலைப் பற்றிப் பேசினாலே கோபம் வரும். இந்தப் பணத்தைக் கொண்டு கோயிலை தங்கத்தால் இழைக்க வேண்டும் என்பார்கள். சர்ச்சுக்கும் மசூதிக்கும் ஒரு நியாயம் எங்கள் கோயிலுக்கு ஒரு நியாயமா என்று நடக்காத வேலைபற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். காசுள்ள கோயிலாகிவிட்டதால், ஏகே 4 சகிதம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுவிட்டது. இத்தனைகாலம் இத்தனை கோடிகளை பாதுகாத்து வந்த திருவிதாங்கூர் பரம்பரை பற்றியும் சிலர் சிலாகிக்கிறார்கள்.
 இந்த சிலாகிப்புகளால் அந்தப் பணம் திருவிதாங்கூர் பரம்பரைக்கே சொந்தம் என்கிற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மகாராஜாக்கள் தங்களது கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கி போலத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. திருவிதாங்கூர் ராஜாக்களின் காலத்தில் தாலிக்கு வரி, ஜாக்கெட்டுக்கு வரி, நின்றால் வரி, நடந்தால், வரி என மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை வரலாறு கூறுகிறது. தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டுமானால், மன்னருக்கு வரி செலுத்த வேண்டும். ஜாக்கெட் அணிய வேண்டுமென்றாலும் வரி உண்டு. இந்த வரிகளும் பொதுவானவையாக இருக்கவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு வரிவிலக்கும், ஒடுக்கப்பட்ட சாணார், பரவர், மூக்குவர் போன்ற 18 சாதிகளுக்கு கூடுதலாகவும் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

அய்யாவழிக்காரர்கள் கூறும் இந்தச் சொற்கள் அதற்கு ஒரு சாம்பிள்.

“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”

வரிகள் அனைத்தும் எப்படிக் கொடுமையாக வசூலிக்கப்பட்டன என்பதற்கும் பதிவுகள் இருக்கின்றன. இப்படி வசூலிக்கப்பட்ட வரிப்பணம்தான் கோயில்களிலும் அரண்மணைகளிலும் முடக்கிவைக்கப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பத்மநாபர் கோயிலும் அதில் ஒன்று. ஆதிக்க சாதியினரின் சுவிஸ் வங்கி போலச் செயல்பட்டது. இப்போது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுவோர், அந்தக் காலச் சுவிஸ் வங்கி பற்றி எதுவும் பேசுவதில்லை. சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று சொல்ல முடியும். ஆனால் பத்மநாபர் கோயிலில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசுக்கு சொந்தமானதில்லை. அந்தப் பணம் நம் அனைவருக்கும் பொதுவானதும் இல்லை. அது குமரி மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மூதாதையர் சொத்து. இதை மனதில் கொண்டு மேற்கொண்டு பேசலாம்.

..
..

..