Sunday, February 14, 2010

மிஸ்டு கால் கொண்டு வரும் கொலை வழக்கு!

அண்மையில் என் நண்பர் ஒருவருக்கு பதற்றத்தை ஏற்படுத்திய வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஊருக்குள் கொஞ்சம் பிரபலமான அவருக்கு காவல்துறையிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. பேசியது போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒரு மாதத்துக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் செல்போனுக்கு இவர் பேசியிருப்பதாக இன்ஸ்பெக்டர் சொன்னார். அதுவும் கொலை நடந்ததற்கு முந்தைய நாள். விசாரணைக்கு ஒத்துழைப்புத் தரும்படி மிரட்டும் தொனியில் இன்ஸ்பெக்டர் பேசியிருக்கிறார்.

போஸ்ட் பெய்ட் செல்போனை நண்பர் பயன்படுத்தியதால், சம்பந்த மாதத்துக்கான பில்லை சரிபார்த்தோம். இன்ஸ்பெக்டர் சொன்ன அதே நாளில் அதே எண்ணுக்கு நண்பர் பேசியது உறுதியானது. அந்தப் பெண் யாரென்றே தெரியாது என்று நண்பர் உறுதியாகக் கூறியபோதும், அவர் மீது சந்தேகப் படலம் விரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட விசாரணைக் கைதி ரேஞ்சுக்கு நடத்தப்பட்டார்.


ஏன் போன் செய்தார் என்பதை ஆராய்ந்து பார்த்தபோது ஒரு விஷயம் தெரிந்தது. அதாவது, அன்றைய தேதியில் தனது நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள் கேட்டு பத்திரிகைகள் நண்பர் விளம்பரம் செய்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் இருந்த எண்ணைப் பார்த்து அந்தப் பெண் போன் செய்திருக்கிறார். என்ன காரணத்தினாலோ அந்த போனை நண்பர் எடுத்துப் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அதே எண்ணுக்கு இவர் பேசியிருக்கிறார். விவரத்தைத் தெரிந்து கொண்டு பேச்சை முடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைப் பற்றி வேறெதுவும் இவருக்குத் தெரியாது.

இதற்கான ஆதாரங்களையெல்லாம் போலீஸில் கொடுத்த பிறகுதான் நண்பர் மீதிருந்த சந்தேகப் பார்வை நீங்கியது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விசாரித்துப் பார்த்ததில் எந்தத் தவறும் செய்யாத பலபேர் உரிய பதில் சொல்லாததால், போலீஸாரிடம் அடிகளை வாங்கி, சில மாதங்கள்வரை சிறையில் இருந்திருப்பது தெரிய வந்தது. இவர்களெல்லாம் மிஸ்டு கால் வந்து ஓரிரு நிமிடங்கள் பேசியவர்கள்தான். சிலர் பாலுணர்வால் ஈர்க்கப்பட்டு அவ்வப்போது பேசியவர்கள். எதிர்த் தரப்பில் உள்ளவர்களுக்கு ஏதாவது நேர்ந்தாலோ, அவர்கள் குற்றச் செயல்கள் செய்தாலோ இவர்களும் உள்ளே செல்ல வேண்டியதுதான்.

 இரவு நேரங்களில் தெரியாதவர்களுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசுவோருக்கு இதுபோன்ற ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றையச் சூழலில் தற்கொலைகள், கொலைகள், தொழில்நுட்பக் குற்றங்கள் பெருகியிருக்கின்றன. இந்தச் சூழலை ஏற்படுத்தியதில் செல்போனுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதேபோல் விவரம் தெரியாமல் பலவீனங்களுக்கு ஆள்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வோரும் அதிகரித்து வருகின்றனர்.


இந்தக் காலத்தில் உஷாராக இல்லாவிட்டால், ஒரு மிஸ்டு கால்கூட நம்மைக் கொலைக் குற்றவாளியாக்கிவிடும் போலிருக்கிறது.

..
.

1 comment:

வரதராஜலு .பூ said...

//இந்தக் காலத்தில் உஷாராக இல்லாவிட்டால், ஒரு மிஸ்டு கால்கூட நம்மைக் கொலைக் குற்றவாளியாக்கிவிடும் போலிருக்கிறது.//

ஆம். சபலத்திற்கு இடம் கொடுத்தால் சிக்கல் எப்படி வேண்டுமானாலும் வரும்.