Friday, February 19, 2010

கார் துடைத்து பொருளாதாரப் புரட்சி!

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஸ் ஐபிஎஸ் பதவிகளைப் பிடிக்க வேண்டும் தெற்குப் பக்க கிராமங்களில் இருந்து சென்னைக்குப் படையெடுப்போரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அண்ணாநகரில்தான் அடைக்கலமாவார்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு சென்னை நகரில் வேறு இடங்கள் இருக்கின்றன.

அண்ணாநகரில் தஞ்சம் புகுவோருக்கு மற்றவர்களைக் காட்டிலும் பொருளாதாரப் பிரச்னை அதிகமாகவே எழும். வீட்டு வாடகையிலிருந்து தோசை, இட்லி போன்ற நம்மூர் உணவுகள்வரை எல்லாமே எதிர்பார்க்காத அளவுக்கு விலை அதிகமாக இருக்கும். கிராமத்திலிருந்து வந்தவர்கள் இதில்தான் பீதியடைவார்கள். இதுபோக, படிப்பதற்கான கட்டணம் புத்தகங்கள் வாங்குவது எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கிலியை ஏற்படுத்தும்.

கையில் கொண்டுவந்த சில ஆயிரங்கள் காலியானதும், பகுதி நேர வேலைக்கு முயற்சி செய்வார்கள். காலை நேரத்தில் பேப்பர் போடுவது, ஹோம் ட்யூஷன் வகுப்புகள் எடுப்பது, பிரௌசிங் சென்டரில் வேலைக்குச் செல்வது என எதையாவது செய்து மாதம் ஆயிரம் முதல் 2 ஆயிரம்வரை சம்பாதித்து லட்சியத்தை நோக்கிப் பயணித்த பலரை எனக்குத் தெரியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வருவோரில் முக்கால்வாசிப் பேருக்கு, தொழிற்முறைக் கல்வித் தகுதி இருப்பதில்லை. பிஏ, பிஎஸ்ஸி, பிகாம் போன்றவற்றைத்தான் அவர்கள் படித்திருப்பார்கள். இதனால், சாதாரணமான வேலைகளைத்தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களில் சிலர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று உயரிய இடத்துக்குச் சென்றிருக்கின்றனர். பிஇ போன்ற தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் சிவில் சர்வீஸ் துறைக்கு வருவதும் வெற்றி பெறுவதும் மிகக் குறைவுதான்.

இதுபோல தென்பகுதியிலிருந்து சென்னை வந்தவர்களில் என் நண்பர் ஒருவரும் அடக்கம். அவர் காவல்துறையில் சேருவதை இலக்காகக் கொண்டிருந்தவர். அவர் செய்த பகுதிநேர வேலை வித்தியாசமானது. 4 மணிக்கே எழுந்து வாக்கிங் போகும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவர், சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று அந்த வீட்டுக் கார்களைத் துடைப்பார். அதற்காக கார் ஒன்றுக்கு ரூ.30 வீதம் வசூலிப்பார். பொதுவாக கார் துடைப்பதை பெரிய வேலையாக கருதுவோருக்கு இந்தப் பணம்  பெரிய தொகையாகத் தெரிவதில்லை.

ஒரு நாளில் கிட்டத்தட்ட 4 கார்கள் வரைத் சுத்தம் செய்வார். காலை 7 மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும். இதில் விஷேசம் என்னவென்றால், கார் துடைப்பதை எவ்வளவு கச்சிதமாகச் செய்ய வேண்டும் என்பதை சர்வீஸ் ஸ்டேஷன்களில் கேட்டுத் தெரிந்து அதன்படியே செய்வார். நீரை மிகக் குறைவாகப் பயன்படுத்தி காரைப் பளிச்சென்று ஆக்கும் இவரது உத்தியை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். இவரைப் பின்பற்றி ஒரு பெருங்கூட்டமே இதுபோன்ற பணியைச் செய்யத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் கார் வைத்திருப்போரின் பெரிய டேட்டாபேஸை உருவாக்கி தன்போன்ற பலருக்குக் கொடுத்து அவர்களின் பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்து வைத்தார். அவர்களுக்கு கார்களை வேகமாகவும் நன்றாகவும் கார் சுத்தம் செய்வது பற்றிக் கற்றுக் கொடுத்தார். பலரும் சேர்ந்து செய்யத் தொடங்கியதால் இதுபோன்ற பணியைச் செய்வதில் இருந்த கூச்சமும் நாளடைவில் மறைந்துபோனது. வீட்டுக்கே வந்து சேவை செய்வதால் ரூ.30 என்பதை ரூ.50 ஆக பலர் உயர்த்திக் கொடுத்தனர். சிலர் இவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு புத்தகங்கள் வாங்கப்பணம் கொடுத்தனர். சிலர் வேறு பல உதவிகளையும் செய்தனர்.

அந்த நண்பருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணி கிடைத்தது. பின்னர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகிவிட்டார்.

கல்லூரிகளில் படிப்பதற்காக கிராமங்களிலிருந்து வருவோரில் பலரும் பேப்பர் போடுவது, பெட்ரோல் பங்குகளில் பணியாற்றுவது போன்ற பகுதிநேர வேலைகளைச் செய்து, பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்கிறார்கள். இந்தக் கார் துடைக்கும் பணியையும் அவர்கள் முயற்சிக்கலாம். இது என் சொந்த அனுபவம் மாதிரி.

..
.
.

4 comments:

மீன்துள்ளியான் said...

inspiring !

குப்பன்.யாஹூ said...

inspiring, whats that dsp name

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

புரட்சிகரமான கட்டுரை.விகடனின் குட் பிளாகில் வந்துள்ள இந்த கட்டுரைக்கு ஒரு பூங்கொத்து

புளியங்குடி said...

மகிழ்ச்சி மீன்துள்ளியான்...

கூடிய விரைவில் அவர் பெயரை வெளியிடுகிறேன் குப்பன்.யாஹூ...

தங்கள் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது சாந்திலெட்சுமணன்.