Sunday, December 06, 2009

ஒரு நாள் போட்டிக்கு டிராவிட் தேவையா?

99 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தூணாகத் திகழ்ந்தவர் டிராவிட். கன்சிஸ்டன்சி என்று சொல்வார்களே அது அப்போது அவரிடம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்றபோது, டெண்டுல்கரை விட டிராவிட்தான் எங்களுக்கு சவாலாக இருப்பார் என ஸ்டீவ் வாக் சொன்னார். அந்த அளவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வீரராக இருந்து வந்தவர் டிராவிட். அவருடைய கவர் டிரைவின் அழகு அனைவரும் ரசிக்கும் ஒன்று. டிராவிட் ஆட வந்ததிலிருந்து இன்று வரைக்கும் அவரது அதிதீவிரக ரசிகன் நான்.

இன்று அவருக்குப் பெருத்த அடையாளச் சிக்கல். இப்போது இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த சதங்கள், அவருக்கு அணியில் நிலையான இடத்தைப் பெற்றுத் தந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் அவரால் என்ன சாதிக்க முடியும்.

இரு வகையில் அவருடையே தேவை இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஒன்று அவருடையே விக்கெட் காக்கும் திறன்.  அடுத்தடுத்து விக்கெட் விழும் பிட்ச்களில் டிராவிட்டை தவிர வேறு யாராலும் மட்டை போட முடியாது. இரண்டாவது ஸ்லிப் ஃபீல்டிங்.

ஆனால், அணியில் அவரைச் சேர்த்தால், ஒரு அசாதாரண நிலை ஏற்படுகிறது. அவர் மைதானத்துக்குள் நுழைந்ததுமே சராசரி ரன் விகிதம் படுத்து விடுகிறது. இது இருபது ஓவர் யுகம். ஒரு ஓவருக்கு 4 அல்லது 5 ரன்கள் எடுத்து கடத்திக் கொ்ணடடிருக்க முடியாது. அப்படிச் செய்வது அடுத்துவரும் ஆட்டக் காரர்கள் மீது சுமையை ஏற்றுவது போலாகிறது.

தற்போதுள்ள இளம் வீரர்களின் ஸ்டைலோடு ஒத்துப் போகும் ஆட்டமாகவும் டிராவிட்டின் ஆட்டம் இல்லை. சுவர் சுவர் என்று சொல்லியே அவரை அதிரடியாக ஆடவிடாமல் செய்து விட்டார்கள்.

இது போகட்டும், அதான், வரிசையாக சச்சின், கம்பீர், சேவக், தோனி, யுவராஜ் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களே, டிராவிட்டை கொண்டுபோய் எந்த இடத்தில் சேர்ப்பது? மூன்றாவது இடத்தில் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அதைவிட ஒரு பத்து ஓவரை கட் செய்யச் சொல்லிவிடலாம்.

டிராவிட் நல்ல மனிதர், எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர், பந்துகளை செல்லமாகத் தட்டுபவர். ஆனால், ஒருநாள் போட்டியின் வேகத்துக்கு மட்டும் ஈடுகொடுக்க முடியாதவர். என்னைக் கேட்டால், டெஸ்ட் ஆட்டங்களுக்கு மட்டும் அவர் போதுமென்று சொல்வேன். அவர் சிரமப்படுவதைப் பார்க்க என்போன்ற ரசிகர்களால் முடியவில்லையே என்ன செய்வது?




--

2 comments:

பழமைபேசி said...

வட அமெரிக்க வலைஞர் தளபதியோட ஊரா நீங்க?

புளியங்குடி said...

அதேதான் தலைவரே!